சைவத் திருத்தலங்கள் 274 – திருநெல்வேலி


தல வரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருநெல்வேலி

  • பஞ்ச சபைகளில் தாமிர சபை
  • ஈசனாரின் நிவேதனத்திற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த நெற்களஞ்சியத்தை வெள்ளம் அடித்துப்போகாமல் வேலிகட்டி காத்த தலம்
  • தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள தலம்
  • மண்டபங்கள் கொண்ட கோயில் – ஊஞ்சல் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வசந்த மண்டபம், சங்கிலி மண்டபம், சோமவார மண்டபம், நவக்கிரக மண்டபம், மகா மண்டபம்
  • வேதங்கள் மூங்கில் மரங்களாக இருக்க, ஈசனார் அவற்றின் அடியில் லிங்கத் திருமேனியராக அருள்பாலிக்கும் தலம்
  • ஈசன், அம்பாள் இருவரும் கிழக்கு நோக்கி திருக்காட்சி
  • காந்திமதியம்மைக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்பட்டு மறுநாள் காலை பூஜை வரை அதே கோலத்தில் திருக்காட்சி
  • வழிபாட்டு முறைகள் – காந்திமதி அம்மைக்கு காரண ஆகமம், நெல்லையப்பருக்கு காமீகஆகமம்
  • சிவன் சந்நிதிக்கு செல்லும் வழியில் கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள அற்புதமான இசை தரவல்ல இசைத்தூண்கள்
  • அபிஷேகத்தின்போது காணக் கூடியது – மிருத்யுஞ்சயமூர்த்தியாக திகழும் லிங்கத் திருமேனியின் மேற்புறம் வெட்டுப்பட்ட தழும்புடன் திருக்காட்சி. சிவனாரின் திருமேனியில் அம்பிகையின் திருவடிவம்.தற்போதுள்ள ஆவுடையார் 21 ஆவுடையார், மீதமுள்ளவை பூமியில் புதைந்திருக்கின்றன
  • மூலவர்கள் – மகாவிஷ்ணு வழிபட்ட சிவலிங்கத்திருமேனி, நெல்லையப்பர் சந்நிதி அருகில் சற்று தாழ்வான சந்நிதியில் அமைந்துள்ள ஆதி மூல சிவலிங்கத்திருமேனி
  • சிவனின் அபிஷேக தீர்த்தம் விழும் கோமுகி தனித்துவமாக மேற்கு நோக்கி
  • பஞ்ச தட்சிணாமூர்த்திகள்
  • சிவனாரின் சந்நிதி வலப்புறம் உள்ள கோவிந்தராஜப் பெருமாள் பெருமாள் கிடந்த கோலத்தில் சேவை. பெருமாளின் வலது கை சிவலிங்க வழிபாடு செய்யும் அமைப்பு. மார்பில் சிவலிங்கம் அடையாளம் உள்ள உற்சவ பெருமாளின் கையில் தாரைப் பாத்திரத்துடன் காட்சி
  • கார்த்திகை மாதத்தில் அதிகாலை நான்கு மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு அனைத்து தெய்வங்களுக்கும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன
  • அனவரத லிங்கம் – இஸ்லாமியர் அன்வர்கான் என்பவரால் வழிபடப்பட்டது.
  • உச்சிகால பூஜையின் போது காந்திமதியம்மையே நேரில் வந்து சிவனாருக்கு அமுது பரிமாறி உபசரிப்பதும், பின் அந்த அமுதே அம்மைக்கும் நிவேதனமாக படைக்கப்படுவதும் இத்தலத்தில் தினமும் நடக்கும் சிறப்பான உற்சவம்..
  • அகத்தியர் சிவனாரின் திருமணக்கோல திருக்காட்சி தரிசித்த தலங்களில் இத்தலமும் ஒன்று
  • அகத்தியர் பிரதிஷ்டை செய்தது சால்வடீஸ்வரர் சிவனாரின் சந்நிதி
  • இத்தல விநாயகர் முக்குறுணி விநாயகரின் வலது கையில் மோதகம்; இடது கையில் தந்தம் என மாற்றி வைத்து அருள்பாலிப்பு
  • வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள தாமிரத்தகடுகளால் வேயப்பட்டுள்ள தாமிரச்சபையின் மேற்கூரை
  • தலமரமான மூங்கில் தாமிரச்சபைக்கு அருகில்
  • அற்புத வேலைப்பாடுகள் நிறைந்த, கீழே மரத்தாலும், மேலே தாமிரத்தாலும் செய்யப்பட்டு ஏழு அடுக்குகளுடன் திகழும் தாமிர சபை.
  • நடராஜர் தாமிர சபாபதி. சபையின் பின்னால் உள்ள நடராஜர் திருவடிவம் சந்தன சபாபதி. சபையின் உள்ளே ருத்ரவிஷ்ணு , பேதங்கள் , ரிஷிகளின் வடிவங்கள்.
  • இரு துர்க்கையம்மன் சந்நிதிகள். மான் , சிங்கம் மற்றும் தோழியுடன் கூடிய மகிஷாசுரமர்த்தினி தெற்கு நோக்கியும், பண்டாசுரமர்த்தினி மஞ்சன வடிவாம்பிகை என்ற பெயருடன் அம்பாள் சந்நிதியில் வடக்கு நோக்கியும் திருக்காட்சி
  • இருபத்தி ஐந்து மூர்த்தத்தில் ஒரு வடிவமான ஜ்வரஹரேஸ்வரருக்கு தனி சந்நிதி
  • பிள்ளைத்துண்ட விநாயகர் எனும் பொல்லாப்பிள்ளையாருக்கு தனி சந்நிதி
  • நாயன்மார்கள் சந்நிதி அருகில் தாமிரபரணி நதியின் பெண் வடிவம். சித்ரா பௌர்ணமி , ஆவணி மூலம் , தைப்பூசம் ஆகிய நாட்களில் திருமஞ்சனத்திற்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் கொண்டு செல்லப்படுகிறது
  • சிவகாமியுடம் கூடிய அக்னி சபாபதி என்று போற்றப்படும் நடராஜர் சந்நிதி (மற்றொன்று)
  • நவக்கிரக சந்நிதியில் வடக்கு நோக்கி காட்சி தரும் புதன்.
  • வியாழன்தோறும் தங்கப்பாவாடை சார்த்தப்படும் காந்திமதியம்மை தனிச்சன்னதியில் நின்ற கோலத்தில் திருக்காட்சி.
  • அம்பாள் சந்நிதி முன்புள்ள மண்டபத்தில் உள்ள இரு தூண்கள் இசைத்தூண்களான அமைப்பு.
  • அம்பாள் சந்நிதி முன்பு கங்கையும், யமுனையும் துவாரபாலகிகளான வடிவமைப்பு
  • வேத கால ரிஷியும், உத்தாலக ஆருணியின்(தத்துவமசி என்ற மகாவாக்கியத்திற்கு விளக்கும் அளித்தவர்) மகனும் சீடரும் ஆனவரும், பிரம்ம வித்தையை குரு மூலம் உணர்ந்து கொள்ள வேண்டும் என உண்மையை உலகிற்கு உணர்த்தியவரும் ஆன சுவேதகேது தனது எமபயம் நீங்கப்பெற்ற தலம்
  • ஆயர்குல ராமகோனாரும், முழுதும் கண்ட ராமபாண்டியனும் சிவனாரின் திருக்காட்சி பெற்ற தலம்
  • உலகமாந்தர் கடைபிடிக்கவேண்டிய 32 அறங்களை உலகுக்கு உணர்த்திய தலம்
  • சக்தி பீடங்களில் இத்தலம் காந்திசக்தி பீடம்
  • பிரதோஷத்தின் போது அபிஷேக ஆராதனைகள் ஈசன் மற்றும் அம்பாள் இருவரின் சந்நிதிகளின் முன்புள்ள நந்திகளுக்கும் செய்யப்படுவது தனி சிறப்பு

காந்திமதியம்மை உடனாகிய நெல்லையப்பர்

தலம்

திருநெல்வேலி

பிற பெயர்கள்

தென்காஞ்சி, வேணுவனம், நெல்வேலி, நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலிநகர், பிரம்மவிருந்தபுரம், தாருகாவனம்

இறைவன்

நெல்லையப்பர், வேய்முத்தநாதர், நெல்வேலிநாதர், சாலிவாடீசர், வேண்டவளர்ந்த நாதர், வேணுவனநாதர், வேணுவனேஸ்வரர், வேணுவனமகாலிங்கேஸ்வரர் )

இறைவி

காந்திமதியம்மை ( வடிவுடையம்மை )

தல விருட்சம்

மூங்கில் ( வேணு  வேய்)

தீர்த்தம்

பொற்றாமரைக்குளம் எனும் ஸ்வர்ண புஷ்கரணி, கருமாரித் தீர்த்தம், சிந்து பூந்துறை முதலான 32 தீர்த்தங்கள்

விழாக்கள்

ஐப்பசி – திருக்கல்யாணம், ஆனி – பிரம்மோற்சவம் மண்டலாபிஷேகத்துடன் 41 நாட்கள், அம்பாள் – ஆடிப்பூர உற்சவம் 1௦ நாட்கள் திருவிழா, மார்கழி திருவாதிரை, தைப்பூச உற்சவம் , பங்குனி உத்திரத்தில் செங்கோல் உற்சவம், மாசி மகம் – அப்பர் தெப்பத்திருவிழா, வைகாசி விசாகம் – சங்காபிஷேகம், மகா சிவராத்திரி , மார்கழித் திருவாதிரை , ஐப்பசி அன்னாபிஷேகம் 

மாவட்டம்

திருநெல்வேலி

திறந்திருக்கும் நேரம் / முகவரி

காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை

அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில்
திருநெல்வேலி. PIN – 627001

வழிபட்டவர்கள்

அகத்தியர், திருமால், பிரம்மன், ராமர், கருவூர் சித்தர் , நின்றசீர் நெடுமாறன்

பாடியவர்கள்

திருஞானசம்பந்தர் 1 பதிகம் (3ம் திருமுறை – 92 வது பதிகம்)

நிர்வாகம்

 

இருப்பிடம்

திருநெல்வெலி நகரில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருப்பிடம்

இதர குறிப்புகள்

தேவாரத் தலங்களில் 204 வது தலம்
பாண்டியநாட்டுத் தலங்களில் இத்தலம் 14 வது தலம்

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை           3
பதிக எண்           92
திருமுறை எண் 1

பாடல்

மருந்தவை மந்திர மறுமைநன் னெறியவை மற்றுமெல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதரத் துன்றுபைம்பூம்
செருந்திசெம் பொன்மலர் திருநெல்வேலி யுறை செல்வர்தாமே

பொருள்

நல்லனவற்றை விரும்பும் நன்நெஞ்சமே! இறைவனின் திருநாமத்தைச் சிந்தனை செய்வாயாக; அந்த திருநாமமானது மருந்தாக இருந்து நோயைத் தீர்க்கும்; மந்திரமாக விளங்கி அச்சத்தைப் போக்கும்;. மறுமையில் நற்கதி தரும்; மற்றும் உயிர்களின் துயர் கொடுமாறு  அதன் பயன்கள் யாவும் தரும்; போக்கமுடியாத துன்பத்தைப் போக்கும்; அப்படிப்பட்ட அத்திரு நாமத்திற்குரிய இறைவன் குளிர்ச்சிமிக்க சோலையில் கொன்றை மரங்கள் பொன்னிறப் பூக்களை உதிர்க்கக்கூடியதும், நெருங்கியுள்ளதும், பசுமையான அழகிய செருந்தி மரங்கள் செம்பொன் போன்ற மலர்களைப் பூக்கின்றதும் ஆன திருநெல்வேலியில் வீற்றிருந்து அருள்கிற அருட்செல்வர் ஆவார்.

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை           3
பதிக எண்           92
திருமுறை எண் 8

பாடல்

முந்திமா விலங்கலன் றெடுத்தவன் முடிகடோ ணெரிதரவே
உந்திமா மலரடி யொருவிர லுகிர்நுதி யாலடர்த்தார்
கந்தமார் தருபொழின் மந்திகள் பாய்தர மதுத்திவலை
சிந்துபூந் துறைகமழ் திருநெல்வேலி யுறை செல்வர் தாமே

பொருள்

நறுமணம் கமழும் சோலைகளில் பெண் குரங்குகள் தாவுதலால் தேன்துளிகள் சிந்துகின்றதும், பூக்களைக் கொண்ட நீர்த் துறைகளை உடையதும் ஆன திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வராகிய சிவபெருமான், பெருமையையுடைய  கயிலை மலையை அந்நாளில் பெயர்த்தெடுத்த இராவணனின் தலைகளும், தோள்களும் நெரியும் வண்ணம், சிறந்த மலர் போன்ற திருவடியின் ஒரு விரல் நக நுனியை ஊன்றி வருத்தினார். அவரை வழிபடுவீர்களாக.

 (இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!