அமுதமொழி – பிலவ – பங்குனி – 24 (2022)


பாடல்

ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்து மாறுபோல்
மாடுகாட்டி என்னைநீ மதிமயக்கல் ஆகுமோ,
கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா,
வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே

அருளியச் சித்தர் : சிவவாக்கியர்

கருத்து – செல்வம் போன்ற இகலோக விஷயங்களில் மனதைச் செலுத்தாமல் தனக்கு மெய்வீட்டினை காட்டி அருள வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

தாருகாவனத்து முனிவர்களின் ஆணவம் அழியச் செய்வதற்காக அவர்கள் செய்த யாகத்தில் இருந்து தோன்றிய யானையை   கொன்று அதன் தோலை ஆடையாக அணிந்து பிட்சாண்டவர் வடிவம் கொண்டவனே! வலை விரித்து வேங்கைப் புலியை பிடிப்பதற்காக ஆட்டை கட்டி வைத்து பிடிப்பது போல இகலோக வாழ்வில் உழலச் செய்வதற்காக உறவுகள், செல்வம் போன்றவற்றைக் கொண்டு என்னுடைய மதியினை மயக்குதல் முறையோ? மெய்யான வீட்டை எனக்குக் காட்டி அந்த வழியிலே நிலைபெறுமாறு செய்து உன்னை அடையும் வழியைக்காட்டி என்னை வெளிப்படுத்த வேண்டும்.

விளக்க உரை

  • பதி, பசு, பாசம் என்ற சைவத்தின் மூன்று பெரும் பகுப்புகளில் மாடு எனும் பசுவானது அளவுக்கு உட்பட்டதாகிய ஜீவனைக் குறிக்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.