அமுதமொழி – விளம்பி – சித்திரை – 4 (2018)

பாடல்

மழுங்கலா நீறாடும் மார்பர் போலும்
     மணிமிழலை மேய மணாளர் போலும்
கொழுங்குவளைக் கோதைக் கிறைவர் போலும்
     கொடுகொட்டி தாள முடையார் போலும்
செழுங்கயி லாயத்தெஞ் செல்வர் போலும்
     தென்னதிகை வீரட்டஞ் சேர்ந்தார் போலும்
அழுங்கினா ரையுறவு தீர்ப்பார் போலும்
     அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

ஒளி குறையாத மணியுடன் கூடிய திருநீற்றைப் மார்பினில் பூசியவரும், அழகியதான திருவீழி மிழலையில் திருமணக் கோலத்தினை கொண்டவரும், குவளை மலர் மாலையை அணிந்த உமை அம்மைக்குத் தலைவர் ஆனவரும், கொடு கொட்டி ஆடும் ஆடலுக்கு ஏற்ற தாளம் உடையவரும். செழுமை உடைய கயிலாயத்தில் உள்ள எம் செல்வரும், தென் திசையில் உள்ள அதிகை வீரட்டத்தை உகந்து அவ்விடம் சேர்ந்தவரும், (துன்பத்தினால்) ஒளி குறைந்து வருந்துபவர்களைக் காப்பாற்ற மாட்டாரோ என்ற ஐயம் அனைத்தும் தீர்த்து அவர்களை ஆட்கொள்ளுபவராகிய எமது  ஆமாத்தூர்த் தலைவர் எல்லா வகையிலும் அழகியரே.

விளக்க உரை

  • அழுங்குதல் – அழுங்கல் – அரவம் (ஒலி) ,இரக்கம், கேடு, அச்சம், சோம்பல், பேரிரைச்சல், நோய்
  • ஐயுறவு தீர்ப்பார் – `துன்பங் களைவரோ களையாரோ` என்னும் ஐயம். இத்திருப் பாடலின் இறுதியில் ` ஐயுறவு தீர்ப்பார்` என்றதால், நிச்சயம் நிறைவேற்றுவார் என்பது உரை பொருள். மேலும், அடியவர்களை மாயையில் ஆழ்த்தும் ஐம்புலன்களது உறவை அறுப்பவர் என்றும் பொருள் கொள்ளலாம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 3 (2018)

பாடல்

வேதங்கள் நான்குங் கொண்டு விண்ணவர் பரவி யேத்தப்
பூதங்கள் பாடி யாட லுடையவன் புனித னெந்தை
பாதங்கள் பரவி நின்ற பத்தர்க டங்கண் மேலை
ஏதங்க டீர நின்றா ரிடைமரு திடங்கொண் டாரே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

நான்கு வேதங்களையும் ஒலித்துக்கொண்டு, தேவர்கள் முன்நின்று போற்றிப் புகழ,  பூதங்கள் எனப்படும் உயிர்வர்க்கங்கள் பாட, கூத்தாடுதலை உடைய தூயவனாகிய எம் தலைவர், தம் திருவடிகளை முன்நின்று துதித்த அடியார்களுடைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளையும், பிராப்தம் ஆகிய நிகழ்கால வினைகளையும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகளையும் தீர்ப்பவராக இடைமருதூர் எனும் திருவிடைமருதூர் திருத்தலத்தை இடமாக கொண்டுள்ளார்.

விளக்க உரை

  • ஏதம் –  துன்பம், குற்றம், கேடு, தீமை

 

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 2 (2018)

பாடல்

சூக்கும வாக்க துள்ளோர் சோதியாய் அழிவ தின்றி
ஆக்கிடும் அதிகா ரத்திற் கழிவினை தன்னைக் கண்டால்
நீக்கமில் அறிவா னந்தம் முதன்மைநித் தியமு டையத்தாய்ப்
போக்கோடு வரவி ளைப்பும் விகாரமும் புருட னின்றாம்.

திருநெறி 2 – சிவஞான சித்தியார்

பதவுரை

தான் அழிவது மட்டும் அல்லாமல், தனது தன்னதிகாரத்திற்கும் அழிவை உண்டாகும் சிவதத்துவமான சுத்த மாயையின் வழியில் வினைகள் முற்றிலும் அழிக்கப்பட்ட பிறகே ஆராய்வதற்கு எதும் இல்லாமலும், காட்சி அளவை எவ்வாறு இயல்பானதோ அது போல அதி சூக்கும வாக்கினை உடையவன் தன்னைக் கண்டு இனி புறக்காட்சி இல்லை எனும் நிலையில்,  குண சரீரம், கஞ்சுக சரீரம், காரண சரீரம் ஆகிய இம்மூன்றன் தொகுதி ஆன பர சரீரம் அல்லது அதி சூக்கும சரீரத்தின் உள்ளே விளங்கும் நாதத்திற்கு இலக்கணத்தையுடையதுமான சூக்கும வாக்கானது தன்நிலை அழிந்தப்பின் பைசந்தி, மத்திமை, வைகரியாய் வெளிப்படும். பெரும் தவத்தினால் அதனை அனுபவ வாயிலாக காணப்பெறுவார்க்குச் சுத்தமாயா புவனத்தின் கண் எனப்படும் அபரமுத்தி இயல்பாக உண்டாகும்.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

யோக வடிவம் என்பது என்ன?
தட்சிணா மூர்த்தி போல் உயிர்களுக்கு ஞானத்தை வழங்கும் திருமேனி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 1 (2018)

பாடல்

கூடுவது லகுவல்ல வாய்ப்பேச்சல்ல
கோடியிலே ஒருவனடா குறியைக் காண்பான்
ஆடுவது தில்லையிலே காலைத் தூக்கி
அம்பரமாமாம்பலத்தில் ஆட்டைப் பார்த்து
நாடுவது சதாகாலம் நாட்டம்பாரு
நமனேது நமனேது நாசமாகும்
பாடுவது அனுராக மனந்தங்கேட்கப்
பச்சை மயிலேறியுந்தான் பாய்ந்தேன் பாரே

சுப்ரமணியர் ஞானம்

பதவுரை

இறைவனுடன் ஒன்றாகி கலத்தல் என்பது எளிதான செயலல்ல; அது பேச்சால், வெறும் ஞானத்தால் வருவது அல்ல; கோடியிலே ஒருவன் மட்டுமே அதை குறிக்கோளாகக் கொண்டு அந்த நோக்கத்தை அடைவான்; ஆன்மாக்களின் ஆணவத்தை அழிப்பதை குறிக்கும், காலை தூக்கி ஆடும்  தில்லை நடனம் எனும்  தில்லைக் கூத்தினை ஆகாயம் எனும் வெட்ட வெளியில் பார்த்து அதை நாடு; எல்லா காலங்களிலும் அதை விரும்பிக் கொள்;  அவ்வாறு கொண்டப்பின் எமன் ஏது? அனைத்து வினைகளும் நாசமாகும். மனதில், அனுராகம் என்றும் அன்பு என்றும் பொருள்தரும்  மிக உயர்ந்த உச்ச நிலை ஆகிய அன்புநிலை கொள்ளும் போது, பச்சை மயில் ஏறி, வாசியின் மூலம் பரவினேன்.

விளக்க உரை

  • சுப்ரமணியர்  அகத்தியருக்கு உபதேசம் செய்தது
  • இறைவனின் தில்லை நடனம் அவனது ஐந்தொழில்களை, படைப்பு, காப்பு, லயம், மறைப்பு, அருளல், என்ற ஐந்து செயல்களை சிவானந்தக் கூத்து, சுந்தரக் கூத்து, பொன் பதிக் கூத்து, பொன் தில்லைக் கூத்து, அற்புதக் கூத்து எனும் கூத்து வடிவில் குறிக்கிறது. 
  • இத் தில்லைக் கூத்தை குண்டலினி யோகத்தின் உச்சிநிலையில் காண்பதைக் குறிக்கும்.
  • வாலை அல்லது குண்டலினியின் நிறம் பச்சை என்றும், குண்டலினி யோகத்தின்போது மூச்சு சுழுமுனையில் பயணிப்பதால் அவ்வாறு பச்சை நிறம் தோன்றும் என  சித்தர்கள் குறிப்பிடுகிறார்கள்.  (மேல் விபரங்கள் குருமுகமாக அறிக)

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

போக வடிவம் என்பது என்ன?
கல்யாண சுந்தரர் போல் உயிர்களுக்கு இன்பத்தை வழங்கும் திருமேனி

 

(சித்தர்கள் பாடல் என்பதால் இப் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – ஹேவிளம்பி – பங்குனி – 30 (2018)

பாடல்

ஆமே அனைத்துயிர் ஆகிய அம்மையும்
தாமேசகலமும் ஈன்றஅத் தையலும்
ஆமே அவளடி போற்றி வணங்கிடில்
போமே வினைகளும் புண்ணிய னாகுமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் -திருமூலர்

பதவுரை

அம்மையானவள், அனைத்து உயிர்களாக நிற்கின்றவளும், எல்லாப் பொருள்களிலும் அதன் தன்மையில் தானே ஆகி நிற்பவளும், தம் இயல்பு தன்மையினால் எங்கும் நிறைந்திருந்து ஈன்றவளாகவும்  நிற்பாள். ஆகையால் பக்குவம் உடையவன் அவளை வணங்கி அவ்வழியே வினை நீக்கமும், தவப் பேறும் ஆன பயன்களை எய்துவான்.

விளக்க உரை

  • புண்ணியன் ஆகுதல் – தவம் உடையவன் ஆகுதல்

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவடுகூர்

தல வரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருவடுகூர்

  • மூலவர் லிங்கத்திருமேனியில் வடுக்களுடன் இடதுபுறம் சற்றே சாய்ந்தவாறு திருக்காட்சி.
  • அஷ்ட பைரவர்களில் ஒருவரான சம்ஹார பைரவர் எனும் வடுக பைரவர், முண்டகன் என்னும் அசுரனைக்கொன்ற பழிதீர ஈசனை வழிபட்டத் தலம்.
  • பிரம்மாவின் சிரத்தை சிவனார் கொய்த தலம் – மற்றொரு தல வரலாறு
  • கருவறை விமானம் தஞ்சை பெரிய கோவில் பாணி அமைப்பு

 

தலம் திருவடுகூர்
பிற பெயர்கள் வடுகூர், ஆண்டார்கோயில், ஆண்டவனார் கோயில், திருவாண்டார் கோயில்
இறைவன் வடுகீஸ்வரர், பஞ்சநதீஸ்வரர் , வடுகநாதர் , வடுகூர் நாதர்
இறைவி திரிபுர சுந்தரி, வடுவகிர்க்கண்ணி
தல விருட்சம் வன்னிமரம்
தீர்த்தம் வாமதேவ தீர்த்தம்
விழாக்கள்

கார்த்திகை அஷ்டமி, சித்திரைப் பெருவிழா ஏக தின உற்சவம், வைகாசி விசாகம், மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, கந்தசஷ்டி, தைப்பூசம்

மாவட்டம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 7 மணி முதல் 10 மணி வரை
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரைஅருள்மிகு பஞ்சநாதீஸ்வரர் திருக்கோவில்
திருவாண்டார் கோவில் அஞ்சல்
வழி கண்டமங்கலம், புதுச்சேரி – 605102
வழிபட்டவர்கள்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், ,அருணகிரிநாதர், வள்ளலார்
நிர்வாகம் தொல் பொருள் ஆய்வுத் துறை
இருப்பிடம் விழுப்புரம் – பாண்டிச்சேரி ரயில் பாதையில் உள்ள சின்னபாபு சமுத்திரம் ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மி. தொலைவு
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 206 வது தலம்

நடு நாட்டுத் தலங்களில்  16    வது தலம்.

 

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை         1
பதிக எண்          87
திருமுறை எண் 1            

பாடல்

 

சுடுகூ ரெரிமாலை யணிவர் சுடர்வேலர்
கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர்
கடுகூர் பசிகாமங் கவலை பிணியில்லார்
வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூ ரடிகளே

பொருள்

சுடும் தன்மை மிக அதிகமாக இருக்கும் தீபமாலையை அணிபவரும், ஒளி பொருந்திய சூலத்தினை உடையவரும், கொடிய மழு ஆயுதம் ஒன்றைக் கையில் உடையவரும், காளை மேல் ஊர்ந்து வருபவரும், மிக்க பசி காமம் கவலை பிணி ஆகியன இல்லாதவரும், நீர் வளம் மிக்க வடுகூர்  எனும் தலத்தில் உறையும் இறைவர் ஆவார்.

 

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை         1
பதிக எண்          87
திருமுறை எண் 8

பாடல்

பிறையு நெடுநீரும் பிரியா முடியினார்
மறையும் பலபாடி மயானத் துறைவாரும்
பறையு மதிர்குழலும் போலப் பலவண்டாங்
கறையும் வடுகூரி லாடும் மடிகளே

பொருள்

அதிர்வுகளைத் தரும் பறையும், வேய் குழல் போலப் பல வண்டுகள் ஒலிக்கும் சோலைகளை உடைய வடுகூரில் ஆடும் அடிகளானவர், இளம்பிறை மற்றும் பெருகும் கங்கை நீர் ஆகியன பிரியாத திருமுடியை உடையவர். வேதங்களில் உள்ள சந்தங்கள் பலவற்றையும் பாடிக்கொண்டு இடுகாட்டில் உறைபவர்.

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – ஹேவிளம்பி – பங்குனி – 29 (2018)

பாடல்

எட்டு மிரண்டையும் ஓர்ந்து – மறை
     எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து – ஆனந்த
     வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து.

கடுவெளிச் சித்தர்

பதவுரை

தமிழில்,  ‘அ’ என்றும் சிவம் என்றும் குறிக்கப்படும் எட்டும்,   ‘உ’ என்றும் சக்தி என்றும் குறிக்கப்படும் இரண்டும் பற்றி சிவசக்தி ரூபமாய் ஆராய்ந்து, சாத்திரங்கள் அனைத்தையும் தன்னுள்ளே ஆராய்ந்து முடிவான ஒன்றைத் தேர்ந்தெடுத்து, கடுவெளி  என்றும்  வெட்டவெளி எனவும் அழைக்கப்படும் ப்ரம்மம் சார்ந்து ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி மகிழ்ச்சி பொங்க ஆனந்த களிப்பு கொள்.

விளக்க உரை

  • எட்டு மிரண்டையும்  –  பத்து –  அஃதாவது, ய – உயிர் என்றும் பொருளாகிய ஆன்மா இயல்பை அறிந்து எனவும் கொள்ளலாம்
  • ‘கட்ட றுத்தெனை … எட்டி னோடிரண்டும்அறி யேனையே’ எனும் மாணிக்கவாசகரின் திருவாசகம் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

உருவத்திருமேனிகளில் மூன்று வகை யாவை?
போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – ஹேவிளம்பி – பங்குனி – 28 (2018)

அமுதமொழி – ஹேவிளம்பி – பங்குனி – 28 (2018)

பாடல்

ஈசனடியார் இதயங் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசம தாயிடும் நம்நந்தி யாணையே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

ஈசனை வணங்கிடும் அடியாரது உள்ளம் எந்தவகையிலேனும் வருந்துமாயின், அதற்குக் காரணமாய் உள்ள மண்ணுலக தேசமும், அது சார்ந்த நாடும் அதன் சிறப்புக்களும் அழிந்திடும்; விண்ணுலக வேந்தனாகிய இந்திரன் ஆட்சி பீடம் மற்றும் மண்ணுலக மன்னன் ஆட்சி பீடமும் அழிந்து ஒழியும். இஃது நமது நந்திபெருமான்மேல் ஆணையாகச் சொல்லத்தக்க உண்மை.

விளக்க உரை

  • மாகேசுர நிந்தையால் விளையும் கேடு பற்றியும் சிவனடியாரது மனம் வருந்தாமல் காத்தல் நாடாளும் அரசர்க்கு முதற்கடமையாதல் என்பது பற்றியும் விளக்கும் பாடல்

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

அருவுருவத் திருமேனியின் வேறு பெயர்கள் எவை?
சகளநிட்களத் திருமேனி, வியத்தாவியத்த லிங்கம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – ஹேவிளம்பி – பங்குனி – 27 (2018)

பாடல்

இப்பாரில் உடல்ஆவி பொருளும்உன்பாற்
     கொடுத்தேன்மற் றெனக்கென் றிங்கே
எப்பாலும் சுதந்தரம்ஓர் இறையும்இலை
      அருட்சோதி இயற்கை என்னும்
துப்பாய உடலாதி தருவாயோ
      இன்னும்எனைச் சோதிப் பாயோ
அப்பாநின் திருவுளத்தை அறியேன்இவ்
      வடியேனால் ஆவ தென்னே.

திருஅருட்பா – வள்ளலார்

பதவுரை

அப்பனே, இவ்வுலகில் ஸ்தூலச் சரீரம் ஆகிய உடலென்றும், சூட்சும சரீரம் ஆகிய பொருளென்றும், காரணச் சரீரம் ஆகிய உயிரென்றும் பருத்துக் காணப்படும் இம்மூன்றையும் உனக்கு உரியவை என உணர்ந்து கொண்டப்பின், எனக்குரியது எனக் கருதுவதற்கு எனக்கு உரிமை சிறிதும் இல்லை; இந்த ஏழை அடியவனாகிய என்னால் ஆவது ஒன்றும் இல்லை எல்லாம் நின்னுடைய அருட் சோதியின் இயற்கை தன்மை ஆகும் என்று அறிந்த பின்னும் இனி எனக்குப் போக நுகர்ச்சிக்கு உரிய உடல் முதலியவற்றைத் தருவாயோ? மேலும் துன்பத்தைத் தந்து சோதனை செய்வாயோ? உன்னுடைய திருவுளக் குறிப்பை அறிய வல்லவன் அல்லன்.

விளக்க உரை

  • ஆன்மா சுதந்தரமின்மை கொண்டு இருக்கும் நிலையை விளக்கும் பாடல்
  • இறைவன் திருவருள் வடிவானவன் என்பதால் “அருட் சோதி”, அத்திருவருள் துணைகொண்டு ஒவ்வொரு சிற்றணுவும் இயங்குவதால், “அருட் சோதி இயற்கை”
  • துப்பாய உடல் – சிவ போகத்தை நுகர்வதற்குரிய ஞான உடம்பு.
  • உடலாதி –  ஞான உடம்பும் ஞானப் பொருளும் பெற்று இன்னும் ஞான போகம் பெறா நிலை குறிக்கும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – ஹேவிளம்பி – பங்குனி – 26 (2018)

பாடல்

ஓவு நாள்உணர் வழியும்நாள் உயிர்
   போகும் நாள்உயர் பாடைமேல்
காவு நாள்இவை என்ற லாற்கரு
   தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்
   சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ்
   சொல்லும்நா நமச்சி வாயவே.

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

மேலான ஒளிவடிவமாய் ஆனவனே, மிகுந்து வருகின்றதும், பரந்த வெள்ளம் வந்து பாய்கின்றதும் ஆன  நீரையுடைய காவிரியாற்றின் கரையில் அமைந்திருக்கும் `திருப் பாண்டிக் கொடுமுடி` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற நாவலனே, அடியேன் உன்னை நினையாத நாள்களை, என் உணர்வு அழிந்த நாளாகளாகவும், உயிர்போன நாளாகளாகவும், தன்னை விட உயரமாக தோளின் மேல்  உயரத்தோன்றும் படி பாடையின்மேல் வைத்துச் சுமக்கப்படும் நாள்களாகவும் கருதுதல் அன்றி  வேறு நல்ல நாளாகக் கருதமாட்டேன்; ஆதலினால் உன்னை நான் மறந்தாலும், என் நாவானது உனது திருப்பெயராகிய ` நமச்சிவாய` என்பதனை இடையறாது சொல்லும்.

விளக்க உரை

  • நாவலன் – மறைகளையும் , மறைகளின் பொருளையும் பற்றி சொல்பவன்

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

அருவத் திருமேனியின் வேறு பெயர்கள் எவை?
நிட்களத் திருமேனி, அவ்வியத்த லிங்கம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – ஹேவிளம்பி – பங்குனி – 25 (2018)

பாடல்

ஊறுடை வெண்டலை கையிலேந் திப்பல வூர்தொறும்
வீறுடை மங்கைய ரையம்பெய்யவிற லார்ந்ததோர்
ஏறுடை வெல்கொடி யெந்தைமே யவிரா மேச்சுரம்
பேறுடை யான்பெயர் ஏத்துமாந் தர்பிணி பேருமே.

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

திருக்கையால் தொட்டுப் பறிக்கப் பெறும் பொறி ஆகிய  ஐந்தனுள்  ஒன்றாகிய கையினால் பறித்த பிரமனது தலையை ஏந்தி ஊர்கள் தோறும் சென்றுபெருமை பொருந்திய மங்கையர்கள் இட்ட பிச்சையை ஏற்றவனாய், காளை வடிவம் பொறிக்கப்பட்ட வெற்றிக் கொடியுடைய எம் தந்தையாகிய சிவபெருமான், இராமேச்சுரத்தில் வீற்றிருந்து அருளுகின்றான். வீடுபேற்றை அளிக்கும் அவன் திருப்பெயரை ஏத்தும் மாந்தர்களின் பிறவிப்பிணி நீங்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – ஹேவிளம்பி – பங்குனி – 24 (2018)

பாடல்

அல்ல லென்செயும் அருவினை யென்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே.

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

தில்லைமாநகரிலே திருக்கூத்து ஆடி அருருளும் திருச்சிற்றம்பலம் ஆனவர்க்கு அளவில்லாத அடிமைபூண்ட எனக்கு  இப்பிறப்பிலே செய்யும் புண்ணியபாவங்கள் ஆகிய ஆகாமியமாகிய எதிர்வினையும், நுகர்ந்தாலன்றித் தீர்த்தற்கரிய பிராரத்தவினை எனப்படும் நுகர்வினையும், தொந்தம் எனப்படும் பழைய பழைய வினைகளும் எனக்கு என்ன துன்பம் செய்யக் கூடியவை?

விளக்க உரை

  • அவ்வினைகள் ஒரு துன்பமும் செய்யாது என்பது மறை பொருள்.
  • துவந்துவம் – நல்வினை, தீவினை எனும் இரட்டைகளை உடைய வடமொழிச் சொல். தமிழில் தொந்தம்
  • இருவினை இறைவன் ஆணையின் படி வரும் என்பது சாத்திரம். பரமுத்தியில் ஆன்மா முதல்வனுக்கு அடிமையாக ஆவதால் வினை அழியும்.
  • ‘மீளா அடிமை’ என்னும் சுந்தரின் தேவாரம் ஆகிய வாய்மொழி ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – ஹேவிளம்பி – பங்குனி – 23 (2018)

அறிவதற்கு அரியவராய், அனைத்திலும் நிறைந்தவராய், கருணை உருவானவராய்,  கணப் பொழுதும் சிந்தையில் சிவம் பிறழா நிலைப்பவராய் ஆன என் குரு நாதரின் உத்தரவின் பேரில் இன்று முதல் ‘அமுதமொழி ‘ என்ற தலைப்பில் இனி இப்பணி தொடரும்.

அமைப்பில் இருக்கும் மாறுதல்களும் குருநாதரின் கருணையின் அடிப்படையில் அருளப்பட்டவை.

எப்பொழுதும் போல் தொடர என் குருநாதரின் அன்பினையும் ஆசிகளையும் வேண்டி தொடங்குகிறேன்.

———————————————————————————————————————————–

பாடல்

ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி
மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி
சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

தன்னிடத்தில் அன்பு வைத்த அன்பர்களிடத்தில் ஒன்றி அவர்களுடன் இசைந்து, அவர்களது உள்ளத் தாமரையிலே நிற்கின்றவளும்,  அவ்வாறு நிற்கும் தன்மையில் உயர்ந்தவனும், பெரிய தலைவனாகவும் ஆன சிவனிடத்தில் நிறைந்து நிற்பவளும், மனோன்மனி தாயாகவும், என்றும் மங்களமானவளும் ஆகிய திரிபுரை நாயகி பல வகைச் சித்துக்களையும் உயிர்களிடத்தில் எவ்வாறு புரிந்து  நிற்கின்றாள் என்ற முறையை உலகர் ஆராய்ந்து அறியவில்லை.

விளக்க உரை
மத்து – நிறைவை உணர்த்தும் வடசொல்.
சித்து – அதிசயச் செயல்கள்
வழி – சிவத்தொடு நின்றே செய்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – ஏமுறல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  ஏமுறல்

பொருள்

  • ஏக்கமடைதல்
  • மயங்கல்
  • பித்து கொள்ளுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அன்றியும் நின்
   வரவினை ஆதரித்து,
இன்றுகாறும் நின்று
   ஏமுறுமால்; அவற்
சென்று சேருதி;
   சேருதல், செவ்வியோய்!
நன்று தேவர்க்கும்; யாவர்க்கும்
   நன்று எனா,

கம்பராமாயணம்

கருத்து உரை

அதுமட்டும் இல்லாமல்*, உன்னுடைய வருகையை விரும்பி இன்று வரையிலும் எதிர்பார்த்து இருக்கும் அந்த அகத்திய முனிவர் மகிழ்ச்சி அடைவார். ஆதலால் நீ சென்று அகத்தியரை அடைவாயாக; சிறந்தவனே! அகத்தியரை அடைதல் விண்ணவர்க்கும் நல்லதே;  மற்ற எல்லார்க்கும் நல்லதே ஆகும் என்று கூறினார் சுதீக்கணர்.

விளக்க உரை

  • * நல்லதே நினைந்தாய்…இல்லை நின்வயின் எய்தகில்லாதவே – அம்முனிவனை அடைந்த பின்னர் உன்னிடத்தில் அடையாத பேறுகள் ஒன்றுமில்லை என்று முதல் பாடல் முடிகிறது. அதனை விரித்துக் கூறும் இப்பாடல்
  • இராமன் வருகை உணர்ந்து ‘எப்போது வருவான்’ என எதிர் பார்த்து ஏங்கினார் என்றும் பொருள் உரைப்பர்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பத்திமை

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பத்திமை

பொருள்

  • தெய்வபத்தியுடைமை
  • காதல்
  • அன்பு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பத்திமையும் பரிசுமிலாப்
   பசுபாசம் அறுத்தருளிப்
பித்தன்இவன் எனஎன்னை
   ஆக்குவித்துப் பேராமே
சித்தமெனுந் திண்கயிற்றால்
   திருப்பாதங் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல்
   விளங்குதில்லை கண்டேனே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்க வாசகர்

கருத்து உரை

அன்புடைமையும், நல்லொழுக்கமும் இல்லாமைக்கு காரணமானதும் ஆன பசு, பாசத்தை அறுத்து அருளி, அடியேனை, ‘இவன் பித்தன்’ என்று கண்டோர் கூறும்படி செய்து, தமது திருவடிகளை விட்டு அகலாமல்,  வலிமையும், உறுதியும் ஆன சித்தம் என்கிற  கயிற்றால் கட்டுண்டு கிடக்கும்படி செய்த திறமை மிக்கவனாகிய சிவபெருமானது திருவிளையாடலைத் தில்லையம்பலத்தில் கண்டேன்.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

உருவத்திருமேனியின் வேறு பெயர்கள் யாவை?
சகளத் திருமேனி, வியத்த லிங்கம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – புகல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  புகல்

பொருள்

  • புகுகை
  • இருப்பிடம்
  • துணை
  • பற்றுக்கோடு
  • தஞ்சம்
  • உடம்பு
  • தானியக்குதிர்
  • வழிவகை
  • போக்கு
  • சொல்
  • விருப்பம்
  • கொண்டாடுகை
  • பாடும்முறை
  • வெற்றி
  • புகழ்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கல்லார் சிவகதை நல்லார் தமக்குக் கனவிலுமெய்
சொல்லார் பசித்தவர்க் கன்னங் கொடார் குருசொன்னபடி
நில்லார்அறத்தை நினையார்நின்னாமம் நினைவிற்சற்றும்
இல்லார் இருந்தென் இறந்தென் புகல் கச்சி ஏகம்பனே

பட்டினத்தார்

கருத்து உரை

கச்சி ஏகம்பனே, சிவனாகிய உன்னைப் பற்றிய கதைகளை கற்க மாட்டார்கள்; நல்லவர்களாக இருப்பவர்களுக்கு கனவிலும் உண்மையைச் சொல்ல மாட்டார்கள்; பசித்து வருபவர்களுக்கு அன்னம் இடமாட்டார்கள்; குரு சொன்ன சொல்படி நிற்கமாட்டார்கள்; அறவழியினை பின்பற்ற மாட்டார்கள்; பெருமைக்கு உரித்தான உனது திருநாமங்களை நினைவில் கொள்ள மாட்டார்;  இப்படிபட்ட இவர்கள் இருந்தாலும், இறந்தாலும் என்ன என சொல்வாயாக

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

நவந்தரு பேதங்களுள் உருவத்திருமேனி எது?
மகேஸ்வரன், உருத்திரன், மால், அயன்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பொருவிலி

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பொருவிலி

பொருள்

  • ஒப்பிலி
  • ஒப்பார் இல்லாதவன்
  • சிவபிரான்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

உருவிலி யூனிலி யூனமொன் றில்லி
திருவிலி தீதிலி தேவர்க்குந் தேவன்
பொருவிலி பூதப் படையுடை யாளி
மருவிலி வந்தென் மனம்புகுந் 1தானே.

 

உருவிலி ஊனிலி ஊனம்ஒன்று இல்லி
திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்
பொருவிலி பூதப் படையுடை யாளி
மருவிலி வந்துஎன் மனம்புகுந் தானே

திருமந்திரம் – பத்தாம் திருமுறை – திருமூலர்

கருத்து உரை

சிவபெருமான், வினைகள் பற்றிவரும் உருவத்தை உடையவன் அல்லன்; பிறப்பில்லாதவன்; இயல்பாகவே மலமில்லாதவன்; தேடிச் சென்றடைக்கூடிய அளவிற்கு செல்வம் இல்லாதவன் அல்லன்; குற்றம்  அற்றவன்; தேவர்களுக்கும் தேவனாக உள்ளவன்; தனக்கு யாரும் ஒப்பில்லாதவன்;  பூதப் படைகளை உடைமையாகக் கொண்டு ஆள்பவன்;  தான் எல்லாப் பொருட்கும் சார்பாக இருப்பது மட்டுமல்லாமல் தான் எந்த ஒன்றையும் சார்ந்திருக்கும் தன்மை இல்லாதவன்; இத் தன்மைகளை உடைய ஒப்பில்லாத பண்புகளை வாய்ந்த அவன் வலியவந்து அடியேன் உள்ளம் புகுந்தான்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பாராதி

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பாராதி

பொருள்

  • நில உலகம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பாராதி ஐந்துக்கும் பன்னும்அதி தெய்வங்கள்
ஆரார் அயனாதி ஐவராம் – ஓரோர்
தொழிலவர்க்குச் சொல்லுங்கால் தோற்றமுதல் ஐந்தும்
பழுதறவே பண்ணுவர்காண் பார்.

திருநெறி 4 –  உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்

கருத்து உரை

பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் ஆகிய பஞ்சபூதங்கள் அல்லது ஐம்பூதங்கள் ஆகியவைகளின் சேர்கையினால் ஆன இப் பிரபஞ்சத்திற்கு அவர்கள் செய்யும் தொழிலை வைத்து அதிதெய்வங்கள் யாவர் எனின், முறையே பிரமா, விஷ்ணு, உருத்திரர், மகேசுவரர், சதாசிவர் என ஐந்து பேர்கள். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளல் ஆகிய ஐந்து தொழிலையையும் குற்றமில்லாதவாறு செய்வார்களென்று அறிவாயாக.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

நவந்தரு பேதங்களுள் அருவுருத்திருமேனி எது?
சதாசிவம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – வீறு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  வீறு

பொருள்

  • பொருள்
  • பெருமை
  • கம்பீரம்
  • வீறாப்பு
  • சிறப்பு
  • கிளர்ச்சி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன்
     உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய்ப்பதம் அறியா வீறிலி யேற்கு
     விழுமிய தளித்ததோ ரன்பே
செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தீ
     செல்வமே சிவபெரு மானே
எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
     எங்கெழுந் தருளுவ தினியே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து உரை

ஒப்புமை படுத்த உனக்கு ஒருவரும் இல்லாமலும் நிகரில்லாததுமான ஒருவனே! அருட் செல்வமே! சிவபிரானே! அடியேனது மனத்தில் ஒளிர்கின்ற ஒளியே! உனது உண்மையான நிலைப் பதத்தினை அறியாத பெருமையில்லா எனக்கு மேன்மையான பதத்தைக் கொடுத்தவனாகிய ஒப்பற்ற அன்பானவனே! வார்த்தைகளால் வர்ணனை செய்து சொல்வதற்கு இயலாத வளமையான சுடர் வடிவினனே! சோர்வுற்ற நேரத்தில் உன்னை உறுதியாகப் பற்றினேன். இனிமேல் நீ  எழுந்து அருளிச் செல்வது எவ்விடத்தில்?

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

நவந்தரு பேதங்களுள் அருவத்திருமேனி யாவை?
சிவம், சக்தி, நாதம் மற்றும் விந்து

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – மா

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  மா

பொருள்

  • ஓர் உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ)
  • 1/20 எனும் பின்ன எண் – ஒருமா
  • குதிரை, யானை , பன்றி ஆகியவற்றின் ஆண் இனம்
  • சிம்மராசி
  • வண்டு
  • அன்னம்
  • விலங்கு வடிவமாய்ப் பிறக்கும் மானுடம்
  • மாமரம்
  • அழைக்கை
  • சீலை
  • ஆணி
  • துன்பம் பொறுக்கை
  • ஓர் அசைச்சொல்
  • திருமகள்
  • செல்வம்
  • கலைமகள்
  • மாற்று
  • கீழ்வாயிலக்கத்துள் ஒன்று
  • நிலவளவைவகை
  • வயல்
  • நிலம்
  • வெறுப்பு
  • கானல்
  • ஆகாது என்னும் பொருளில் வரும் ஒரு வடசொல்
  • பெருமை
  • வலி
  • அழகு
  • மாமைநிறம்
  • அரிசி முதலியவற்றின் மாவு
  • துகள்
  • நஞ்சுக்கொடி
  • அளவை
  • இயற்சீர் இறுதியிலுள்ள நேரசையைக் குறிக்கும் சொல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்தரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

பூம்பாவாய்! இளம் பெண்கள் வாழும் விழாக்கள் நிறைந்ததும், விழாக்கள் இடையறாது நிகழ விளங்கும் வீதிகளைக் கொண்டதுமான பெரியதும், பெருமைக்கு உரியதுமான மயிலையில் திருவருள் எழுச்சியை விளைக்கும் கபாலீச்சரம் என்னும் திருக்கோயில் திருவிழாக்களைக் கண்டு, திசைதோறும் இடும் பலியாகிய உருத்திரபலி எனும் பங்குனி உத்தரநாளில் நிகழும் ஆரவாரமான விழாவைக்காணாது செல்வது முறையோ?

விளக்க உரை

  • பங்குனி உத்தர விழாச் சிறப்பினை உணர்த்தும் பாடல்
  • மலிவிழா வீதி – விழாக்கள் இடையறாது நிகழ விளங்கும் வீதி
  • கலிவிழா – திருவருள் எழுச்சியை விளைக்கும் திருக்கோயில் விழாக்கள்

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

நவம் தரு பேதங்கள் எவை?
சிவம், சக்தி, நாதம், விந்து, சதாசிவம், மகேஸ்வரன், உருத்திரன், விஷ்ணு, பிரம்மன்

Loading

சமூக ஊடகங்கள்