அறிவதற்கு அரியவராய், அனைத்திலும் நிறைந்தவராய், கருணை உருவானவராய், கணப் பொழுதும் சிந்தையில் சிவம் பிறழா நிலைப்பவராய் ஆன என் குரு நாதரின் உத்தரவின் பேரில் இன்று முதல் ‘அமுதமொழி ‘ என்ற தலைப்பில் இனி இப்பணி தொடரும்.
அமைப்பில் இருக்கும் மாறுதல்களும் குருநாதரின் கருணையின் அடிப்படையில் அருளப்பட்டவை.
எப்பொழுதும் போல் தொடர என் குருநாதரின் அன்பினையும் ஆசிகளையும் வேண்டி தொடங்குகிறேன்.
———————————————————————————————————————————–
பாடல்
ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி
மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி
சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே.
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
தன்னிடத்தில் அன்பு வைத்த அன்பர்களிடத்தில் ஒன்றி அவர்களுடன் இசைந்து, அவர்களது உள்ளத் தாமரையிலே நிற்கின்றவளும், அவ்வாறு நிற்கும் தன்மையில் உயர்ந்தவனும், பெரிய தலைவனாகவும் ஆன சிவனிடத்தில் நிறைந்து நிற்பவளும், மனோன்மனி தாயாகவும், என்றும் மங்களமானவளும் ஆகிய திரிபுரை நாயகி பல வகைச் சித்துக்களையும் உயிர்களிடத்தில் எவ்வாறு புரிந்து நிற்கின்றாள் என்ற முறையை உலகர் ஆராய்ந்து அறியவில்லை.
விளக்க உரை
மத்து – நிறைவை உணர்த்தும் வடசொல்.
சித்து – அதிசயச் செயல்கள்
வழி – சிவத்தொடு நின்றே செய்தல்