பாடல்
ஊறுடை வெண்டலை கையிலேந் திப்பல வூர்தொறும்
வீறுடை மங்கைய ரையம்பெய்யவிற லார்ந்ததோர்
ஏறுடை வெல்கொடி யெந்தைமே யவிரா மேச்சுரம்
பேறுடை யான்பெயர் ஏத்துமாந் தர்பிணி பேருமே.
தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
பதவுரை
திருக்கையால் தொட்டுப் பறிக்கப் பெறும் பொறி ஆகிய ஐந்தனுள் ஒன்றாகிய கையினால் பறித்த பிரமனது தலையை ஏந்தி ஊர்கள் தோறும் சென்று, பெருமை பொருந்திய மங்கையர்கள் இட்ட பிச்சையை ஏற்றவனாய், காளை வடிவம் பொறிக்கப்பட்ட வெற்றிக் கொடியுடைய எம் தந்தையாகிய சிவபெருமான், இராமேச்சுரத்தில் வீற்றிருந்து அருளுகின்றான். வீடுபேற்றை அளிக்கும் அவன் திருப்பெயரை ஏத்தும் மாந்தர்களின் பிறவிப்பிணி நீங்கும்.