பாடல்
ஓவு நாள்உணர் வழியும்நாள் உயிர்
போகும் நாள்உயர் பாடைமேல்
காவு நாள்இவை என்ற லாற்கரு
தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்
சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
மேலான ஒளிவடிவமாய் ஆனவனே, மிகுந்து வருகின்றதும், பரந்த வெள்ளம் வந்து பாய்கின்றதும் ஆன நீரையுடைய காவிரியாற்றின் கரையில் அமைந்திருக்கும் `திருப் பாண்டிக் கொடுமுடி` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற நாவலனே, அடியேன் உன்னை நினையாத நாள்களை, என் உணர்வு அழிந்த நாளாகளாகவும், உயிர்போன நாளாகளாகவும், தன்னை விட உயரமாக தோளின் மேல் உயரத்தோன்றும் படி பாடையின்மேல் வைத்துச் சுமக்கப்படும் நாள்களாகவும் கருதுதல் அன்றி வேறு நல்ல நாளாகக் கருதமாட்டேன்; ஆதலினால் உன்னை நான் மறந்தாலும், என் நாவானது உனது திருப்பெயராகிய ` நமச்சிவாய` என்பதனை இடையறாது சொல்லும்.
விளக்க உரை
- நாவலன் – மறைகளையும் , மறைகளின் பொருளையும் பற்றி சொல்பவன்
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
அருவத் திருமேனியின் வேறு பெயர்கள் எவை?
நிட்களத் திருமேனி, அவ்வியத்த லிங்கம்