பாடல்
இப்பாரில் உடல்ஆவி பொருளும்உன்பாற்
கொடுத்தேன்மற் றெனக்கென் றிங்கே
எப்பாலும் சுதந்தரம்ஓர் இறையும்இலை
அருட்சோதி இயற்கை என்னும்
துப்பாய உடலாதி தருவாயோ
இன்னும்எனைச் சோதிப் பாயோ
அப்பாநின் திருவுளத்தை அறியேன்இவ்
வடியேனால் ஆவ தென்னே.
திருஅருட்பா – வள்ளலார்
பதவுரை
அப்பனே, இவ்வுலகில் ஸ்தூலச் சரீரம் ஆகிய உடலென்றும், சூட்சும சரீரம் ஆகிய பொருளென்றும், காரணச் சரீரம் ஆகிய உயிரென்றும் பருத்துக் காணப்படும் இம்மூன்றையும் உனக்கு உரியவை என உணர்ந்து கொண்டப்பின், எனக்குரியது எனக் கருதுவதற்கு எனக்கு உரிமை சிறிதும் இல்லை; இந்த ஏழை அடியவனாகிய என்னால் ஆவது ஒன்றும் இல்லை எல்லாம் நின்னுடைய அருட் சோதியின் இயற்கை தன்மை ஆகும் என்று அறிந்த பின்னும் இனி எனக்குப் போக நுகர்ச்சிக்கு உரிய உடல் முதலியவற்றைத் தருவாயோ? மேலும் துன்பத்தைத் தந்து சோதனை செய்வாயோ? உன்னுடைய திருவுளக் குறிப்பை அறிய வல்லவன் அல்லன்.
விளக்க உரை
- ஆன்மா சுதந்தரமின்மை கொண்டு இருக்கும் நிலையை விளக்கும் பாடல்
- இறைவன் திருவருள் வடிவானவன் என்பதால் “அருட் சோதி”, அத்திருவருள் துணைகொண்டு ஒவ்வொரு சிற்றணுவும் இயங்குவதால், “அருட் சோதி இயற்கை”
- துப்பாய உடல் – சிவ போகத்தை நுகர்வதற்குரிய ஞான உடம்பு.
- உடலாதி – ஞான உடம்பும் ஞானப் பொருளும் பெற்று இன்னும் ஞான போகம் பெறா நிலை குறிக்கும்