‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – பத்திமை
பொருள்
- தெய்வபத்தியுடைமை
- காதல்
- அன்பு
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
பத்திமையும் பரிசுமிலாப்
பசுபாசம் அறுத்தருளிப்
பித்தன்இவன் எனஎன்னை
ஆக்குவித்துப் பேராமே
சித்தமெனுந் திண்கயிற்றால்
திருப்பாதங் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல்
விளங்குதில்லை கண்டேனே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்க வாசகர்
கருத்து உரை
அன்புடைமையும், நல்லொழுக்கமும் இல்லாமைக்கு காரணமானதும் ஆன பசு, பாசத்தை அறுத்து அருளி, அடியேனை, ‘இவன் பித்தன்’ என்று கண்டோர் கூறும்படி செய்து, தமது திருவடிகளை விட்டு அகலாமல், வலிமையும், உறுதியும் ஆன சித்தம் என்கிற கயிற்றால் கட்டுண்டு கிடக்கும்படி செய்த திறமை மிக்கவனாகிய சிவபெருமானது திருவிளையாடலைத் தில்லையம்பலத்தில் கண்டேன்.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
உருவத்திருமேனியின் வேறு பெயர்கள் யாவை?
சகளத் திருமேனி, வியத்த லிங்கம்