‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – மா
பொருள்
- ஓர் உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ)
- 1/20 எனும் பின்ன எண் – ஒருமா
- குதிரை, யானை , பன்றி ஆகியவற்றின் ஆண் இனம்
- சிம்மராசி
- வண்டு
- அன்னம்
- விலங்கு வடிவமாய்ப் பிறக்கும் மானுடம்
- மாமரம்
- அழைக்கை
- சீலை
- ஆணி
- துன்பம் பொறுக்கை
- ஓர் அசைச்சொல்
- திருமகள்
- செல்வம்
- கலைமகள்
- மாற்று
- கீழ்வாயிலக்கத்துள் ஒன்று
- நிலவளவைவகை
- வயல்
- நிலம்
- வெறுப்பு
- கானல்
- ஆகாது என்னும் பொருளில் வரும் ஒரு வடசொல்
- பெருமை
- வலி
- அழகு
- மாமைநிறம்
- அரிசி முதலியவற்றின் மாவு
- துகள்
- நஞ்சுக்கொடி
- அளவை
- இயற்சீர் இறுதியிலுள்ள நேரசையைக் குறிக்கும் சொல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்தரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.
தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
கருத்து உரை
பூம்பாவாய்! இளம் பெண்கள் வாழும் விழாக்கள் நிறைந்ததும், விழாக்கள் இடையறாது நிகழ விளங்கும் வீதிகளைக் கொண்டதுமான பெரியதும், பெருமைக்கு உரியதுமான மயிலையில் திருவருள் எழுச்சியை விளைக்கும் கபாலீச்சரம் என்னும் திருக்கோயில் திருவிழாக்களைக் கண்டு, திசைதோறும் இடும் பலியாகிய உருத்திரபலி எனும் பங்குனி உத்தரநாளில் நிகழும் ஆரவாரமான விழாவைக்காணாது செல்வது முறையோ?
விளக்க உரை
- பங்குனி உத்தர விழாச் சிறப்பினை உணர்த்தும் பாடல்
- மலிவிழா வீதி – விழாக்கள் இடையறாது நிகழ விளங்கும் வீதி
- கலிவிழா – திருவருள் எழுச்சியை விளைக்கும் திருக்கோயில் விழாக்கள்
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
நவம் தரு பேதங்கள் எவை?
சிவம், சக்தி, நாதம், விந்து, சதாசிவம், மகேஸ்வரன், உருத்திரன், விஷ்ணு, பிரம்மன்