அமுதமொழி – ஹேவிளம்பி – பங்குனி – 28 (2018)
பாடல்
ஈசனடியார் இதயங் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசம தாயிடும் நம்நந்தி யாணையே.
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
ஈசனை வணங்கிடும் அடியாரது உள்ளம் எந்தவகையிலேனும் வருந்துமாயின், அதற்குக் காரணமாய் உள்ள மண்ணுலக தேசமும், அது சார்ந்த நாடும் அதன் சிறப்புக்களும் அழிந்திடும்; விண்ணுலக வேந்தனாகிய இந்திரன் ஆட்சி பீடம் மற்றும் மண்ணுலக மன்னன் ஆட்சி பீடமும் அழிந்து ஒழியும். இஃது நமது நந்திபெருமான்மேல் ஆணையாகச் சொல்லத்தக்க உண்மை.
விளக்க உரை
- மாகேசுர நிந்தையால் விளையும் கேடு பற்றியும் சிவனடியாரது மனம் வருந்தாமல் காத்தல் நாடாளும் அரசர்க்கு முதற்கடமையாதல் என்பது பற்றியும் விளக்கும் பாடல்
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
அருவுருவத் திருமேனியின் வேறு பெயர்கள் எவை?
சகளநிட்களத் திருமேனி, வியத்தாவியத்த லிங்கம்