‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – வீறு
பொருள்
- பொருள்
- பெருமை
- கம்பீரம்
- வீறாப்பு
- சிறப்பு
- கிளர்ச்சி
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன்
உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய்ப்பதம் அறியா வீறிலி யேற்கு
விழுமிய தளித்ததோ ரன்பே
செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெரு மானே
எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து உரை
ஒப்புமை படுத்த உனக்கு ஒருவரும் இல்லாமலும் நிகரில்லாததுமான ஒருவனே! அருட் செல்வமே! சிவபிரானே! அடியேனது மனத்தில் ஒளிர்கின்ற ஒளியே! உனது உண்மையான நிலைப் பதத்தினை அறியாத பெருமையில்லா எனக்கு மேன்மையான பதத்தைக் கொடுத்தவனாகிய ஒப்பற்ற அன்பானவனே! வார்த்தைகளால் வர்ணனை செய்து சொல்வதற்கு இயலாத வளமையான சுடர் வடிவினனே! சோர்வுற்ற நேரத்தில் உன்னை உறுதியாகப் பற்றினேன். இனிமேல் நீ எழுந்து அருளிச் செல்வது எவ்விடத்தில்?
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
நவந்தரு பேதங்களுள் அருவத்திருமேனி யாவை?
சிவம், சக்தி, நாதம் மற்றும் விந்து