கருத்து – சூரபன்மன், மாயை நீக்கம் பெற்ற பின் முருகப் பெருமானின் தோற்றப் பொலிவை உரைத்து இது பல காலம் செய்த தவப்பயன் என்று கூறும் பாடல்.
பதவுரை
நான், எனது எனும் அகங்காரம் கொண்டிருந்த எனது அகந்தை போனது; அதன் காரணமாக என்னுள் பேரறிவாகிய ஞானம் புகுந்தது; வலப்பக்கத்தில் இருக்கக்கூடிய தூய்மையான தோளும், வலது கண்ணும் துடித்தன; புவனம் முழுமைக்கும் சஞ்சரிக்கும் பொருள்களின் மாயைத் தன்மை நீங்கி தேவர்களுக்கு எல்லாம் நாயகன் ஆன நாயகன் வடிவம் கண்டேன்; இது பலகாலம் நல்ல தவம் செய்து அதனால் பெறுவதற்குரிய நற்தவத்தின் பயன் அல்லவா இது? என்று சூரபத்மன் உரைத்தான்
விளக்கஉரை
யுத்த காண்டம் , சூரபன்மன் வதைப் படலத்தில் வரும் பாடல்
எம்பெருமான் தன்னுடைய பேரெழில் கொண்ட திருக்கோலத்தினைக் காட்டிக்கொண்டு முன்வந்து நிற்கும் பாக்கியம் அவனுடைய பகைவனாகிய, மாபாவியாகிய எனக்கும் கிடைத்ததே” என்று இறைவனுடைய கருணையை எண்ணி ஆச்சரியம் கொள்கிறான்.
போதம் – ஞானம், அறிவு
மேய்தல் – விலங்கு முதலியன உணவுகொள்ளுதல், பருகுதல், கெடுத்தல், அபகரித்தனுபவித்தல், மேற்போதல், சஞ்சரித்தல், விடனாய்த் திரிதல்
கருத்து – முருகப் பெருமானின் வடிவே தாமும் எய்தி வாழ்வதாகிய சாரூப வடிவம் வேண்டுதல்.
பதவுரை
சிலம்பு அணிந்த வீரக் கழல்களின் ஒலிகள் எட்டு திசைகளிலும் இருப்பவர்களின் செவிகளில் படும்படியாக ஒலிக்க, பிரமன், ருத்திரன், திருமால் ஆகிய முத்தேவர்களும், பழமையான வேதங்களும் பணிந்து போற்ற, கைகளில் ஏந்திய சூலம், மழு, மான் ஆகிய மூன்றும் பக்குவமாகச் சுழல, ஆதிசேஷனின் படமுடிகள் நெறு நெறு என்று முறிய, நந்தியாகிய வாகனத்தில் திருவடிகளை வைத்திருக்காமல், நடனம் செய்து, அடியார்கள் அரகர என்றும் மனம் உருகி ஜெய ஜெய என்றும் போற்ற, பார்வதியுடன் இணைந்து ஆனந்த நடனக் காட்சியைத் தந்தருளும் பாகராக இருப்பவரான சிவ பெருமான் ஈன்றருளிய குழந்தையே, மலர் அணிந்த கூந்தலை உடைய அழகிய பாவை ஆன லக்ஷ்மியின் மகளுமான வள்ளியின் நாயகனே, ஆராவாரத்துடன் போர் செய்து வெற்றி கொண்டவனாகிய இராவணின் ஆணவம் அழியுமாறு செய்தவனும் கயிலைமலையில் வீற்றிருப்பவனும் ஆன சிவனுடன் இணைந்து வீற்றிருப்பவனே! தவ நெறிப் பயனாய் பெறப்படுவதும் இருளும் ஒளியும் இல்லாத அழகிய நிலம் எனப்படுவதும் ஒளி வீசும் ஜோதி போன்றதுமான இடமானதும் மூலாதாரம் எனப்படும் ஆகி இடத்தில் இருந்து பிராணன் எனப்படும் இடகலை, பிங்கலை மார்க்கங்கள் அடைபடும்படி செய்து சுழுமுனை வழியாக மூச்சை ஓட்டி, சிவ நெறியில் நின்று, தனித்து நிற்கும் மேலிடத்தே புறத்தில் கூடுதலை நிகழ்த்துதல் போல் அகத்தில் சிவ ஜோதியுடம் கூடி, அவ்வாறு விளங்கும் திருக்கோலத்தில் ஆணவம், மாயை,கண்மம் ஆகிய மும்மலங்களும் உனது புன்னகையில் விளைந்த தீயில் எரிபட்டு அழிய, எனது நல்வினை, தீவினை ஆகிய இரண்டு வினைகளும் தீய்ந்து சாம்பலாக, அதனால் அழகிய உனது திருவருளாகிய உருவத்தில் ஈடுபட்டு, நீயும் நானும் ஒன்றுபடக் கலந்து, அதனால் இவ்வுடல் நிலைபட்டது எனக் கருதும் படியாகப் பொருந்தி, இவன் முருகனுக்கு இளையவன் என்று என்னை விரிந்து கூறும்படியான பெரும் பேற்றை அருள்வாயாக.
விளக்கஉரை
அலர் அணி குழல் பொன் பாவை திரு மகள் அமளிப் போரொடு – மலர் அணிந்த கூந்தலை உடைய அழகிய பாவையும், லக்ஷ்மியின் மகளுமான வள்ளியின் மஞ்சத்திலே இன்பப் போரிடுதலை விரும்புவதோடு என்று சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ‘அமளிப் போரொ டடியவர் கயிலைக் கான‘ எனும் வரிகளே பொருத்தமாக இருக்கும் என்பதாலும், வள்ளி நாச்சியார் இச்சா சக்தி, முருகப் பெருமான் ஞான மூர்த்தி என்பதாலும் பொருள் விலக்கப்பட்டுளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
இருவரும் உருகிக் காய(ம்) நிலை என மருவி – முருகப் பெருமானின் வடிவே தாமும் எய்தி வாழ்வதாகிய சாரூப வடிவம் கொள்ளுதல்
சிவ சுடர் அதனைப் பாவை மணம் என மருவி – சிவ ஜோதியை பொம்மைக் கல்யாணம் போலக் கூடி” என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. மூலாதாரம் பற்றி குறிப்பிட்டு இருப்பதாலும், தவ நெறியால் பெறப்படுவது பற்றி குறிப்பிடப்பட்டு இருப்பதாலும், தவநெறியின் பயன் சிவசக்தி ரூபம் காணல் என்பதாலும் இப்பொருள் விலக்கப்பட்டுள்ளது.
பணாமுடி – பாம்பின் படமுடி; பணாமுடி தாக்க – ‘அநந்தன் பணாமுடி தாக்க அதிர்ந்து அதிர்ந்து‘ எனும் கந்தர் அலங்கார பாடலுடன் ஒப்பு நோக்கி அறிந்து உய்க.
தேவ ரிளையவ னெனவித் தார – முன்னர் கூறப்பட்ட மும்முனை நாடிகள் கொண்டும் ,
சீர்க்கும ரேசன் கொண்ட திருப்பெரு வடிவந் தன்னில் ஏர்க்குறும் ஒளியுஞ் சீரும் இளமையும் எழிலும் எல்லாம் ஆர்க்குள வுலகில் அம்மா அற்புதத் தோடும் பல்காற் பார்க்கினுந் தெவிட்டிற் றில்லை இன்னுமென் பார்வை தானும்
பதப்பிரிப்பு
சீர்க் குமரேசன் கொண்ட திருப்பெரு வடிவந் தன்னில் ஏர்க்குறும் ஒளியும் சீரும் இளமையும் எழிலும் எல்லாம் ஆர்க்குஉள உலகில் அம்மா! அற்புதத் தோடும் பல்கால் பார்க்கினும் தெவிட்டிற்று இல்லை இன்னும்என் பார்வை தானும்
கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்
கருத்து – சூரபன்மன், மாயை நீக்கம் பெற்ற பின் முருகப் பெருமானின் தோற்றப் பொலிவை உரைத்து மேலும் உரைக்க இயலாமை குறித்து உரைத்தப் பாடல்.
பதவுரை
நன்மை, பெருமை, புகழ் ஆகியவற்றை இயல்பாக உடைய குமரேசன் அழகிய பெரியதான வடிவம் கொண்டவனானாகவும், தோற்றப் பொலிவு உடைய ஒளி கொண்டவனாகவும், இளமையும், அழகு எல்லாம் உடையவனாகவும் உள்ளான்; இந்த அழகிற்கு ஈடாக உலகில் எவன் உளான்; அம்மாடி! இந்த அற்புதத் தோற்றம் கொண்டவனை எத்தனைக் காலம் பார்த்தாலும் அந்தத் தோற்றப் பொலிவானது எனக்குத் திகட்டவில்லை.
ஆவிக்கு மோசம் வருமாறு அறிந்து உன் அருட்பதங்கள் சேவிக்க என்று நினைக்கின்றிலேன் வினைதீர்த்து அருளாய் வாவித் தடவயல் சூழும் திருத்தணி மாமலைவாழ் சேவற் கொடியுடையானே அமர சிகாமணியே
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
கருத்து – இரு வினைபட்டு திருவடி வணங்கா தன்மையும், அதனை தீர்த்து அருள் புரிய வேண்டியும் முருகனிடம் விண்ணப்பித்தது.
பதவுரை
ஆறுகளும், தடாகங்களும் சூழ்ந்திருக்குமாறு அமையப்பெற்றதும், பரந்த வயல்கள் சூழ்ந்துள்ளதும், பெருமைக்குரியதும் ஆன திருத்தணி மலைமீது எழுந்தருளி சேவற்கொடியை உடையவரே, தேவர்களுக்கு முடிமணியாகத் திகழ்பவரே! இரு வினைகளின் விளைவாக வெளிப்பட்டு பிறவிநோய்க்கு காரணமான உயிருக்குக் கேடு உள்ளது என்பதை அறிந்த போதிலும் தேவரீருடைய அருளை வழங்கக் கூடியதான திருவடிகளை வணங்குவதை எக்காலமும் சிந்திக்கவில்லை. அவ்வாறான அடியேனுடைய வினைகளையும், அதன் விளைவையும் தீர்த்து அருள் புரிவீராக.
அண்டர்கள் முனிவர் ஏனோர் அகிலமும் காட்டி அண்ணல் கொண்டிடு படிவ முற்றும் குறித்தி யார் தெரிதற் பாலார் எண்டரு விழிகள் யாக்கை எங்கணும் படைத்தோர்க்கு ஏனும் கண்டிட அநந்த கோடி கற்பமும் கடக்கும் அன்றே
கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்
கருத்து – சூரபன்மன், மாயை நீக்கம் பெற்ற பின் முருகப் பெருமான் பல பிரம்மாக்களை கண்ட திறம் பற்றி உரைத்தப் பாடல்.
பதவுரை
தேவர்களும், முனிவர்களும் மற்றைய அகிலங்கள் அனைத்தும் (தன்னில்) காட்டி அவைகள் வாழ்ந்தற்கான எச்சங்களும் காட்டிய பாலனானவன், இயல்பின் இருந்து மீறிய கண்கள், உடல் மற்றும் எங்களையும் படைத்திட்ட பிரம்மனும் கண்டிடுமாறு கடவுள் தன்மை கொண்டு பிரமனுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் ஆகிய நானூற்று முப்பத்திரண்டுகோடி வருடம் கொண்ட பிரமனது ஒருநாள் கடந்து பல பிரம்மன்களைக் கண்டவனாகவும், எவரும் எளிதில் அறிய இயலாதவனாகவும் தோன்றினான்.
விளக்கஉரை
யுத்த காண்டம் , சூரபன்மன் வதைப் படலத்தில் வரும் பாடல்
கற்பம் – இருத்தற்கு ஏற்படுத்தப் பட்ட இடம், நானூற்று முப்பத்திரண்டுகோடி வருடம் கொண்ட பிரமனது ஒருநாள், பிரமனுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள், இந்திரன் முதலிய தேவர்க்குரிய வாழ்நாளளவு, ஆயுளை நீடிக்கச் செய்யும் மருந்து, இலக்ஷங்கோடி, தேவர் உலகம், பசுவின் சாணத் தைக் கையாலேந்தி ஆகமப்படி உண்டாக்கிய திருநீறு, கற்பகம்
பல பிரம்மன்களைக் கண்ட பின்னும் இன்னும் பாலனாகவே இருக்கிறான் என்பது வியப்பு
ஒற்றென முன்னம் வந்தோன் ஒருதனி வேலோன் தன்னைப் பற்றிக லின்றி நின்ற பராபர முதல்வன் என்றே சொற்றனன் சொற்ற எல்லாந் துணிபெனக் கொண்டி லேனால் இற்றையிப் பொழுதில் ஈசன் இவனெனுந் தன்மை கண்டேன்
பதப்பிரிப்பு
ஒற்று என முன்னம் வந்தோன் ஒரு தனி வேலோன் தன்னைப் பற்றி இகல் இன்றி நின்ற பராபர முதல்வன் என்றே சொற்றனன் சொற்ற எல்லாந் துணிபு எனக் கொண்டிலேன் ஆல் இற்றை இப் பொழுதில் ஈசன் இவன் எனும் தன்மை கண்டேன்
கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்
கருத்து – மாயை நீக்கம் பெற்ற பின் முருகனும் ஈசனும் வேறு வேறு அல்ல எனும் உண்மைத் தன்மையை கண்டதை சூரபன்மன் உரைத்தது
பதவுரை
போர் புரிவதற்காக முன்வந்த தனி வேலவன் தன்னை உளவு செய்வதன் பொருட்டு வந்தவன் என்று எண்ணி இருந்தேன். வலிமை மாறாதவரும், அந்த வலிமையில் மாறுபாடு இல்லாதவரும், எவரோடும் வலிமையில் ஒப்பு நோக்க இயலாதவரும் நின்ற முழுமுதற்கவுளும், இறைவனும் ஆன பரம்பொருளும் ஆன முதல்வன் என்று உணர்வில் பதியுமாறு எவரும் உரைக்கவில்லை. அவ்வாறு அதற்கு நிகராக உரைக்கப்பட்ட சொற்களின் உண்மைத் தன்மை கொண்டு மன உறுதியும் யான் கொள்ளவில்லை. ஆனால் முருகனும் ஈசனும் வேறு வேறு அல்ல எனும் உண்மைத் தன்மையை இந்தக் கணப்பொழுதில் யான் கண்டேன்.
• சூரபன்மனுக்கு அவன் மகன் இரணியன் அறிவுரையாக கந்தக் கடவுள் பற்றிக் கூறியது. • வன்மை – வலிமை, கடினம், வன்சொல்,கடுஞ்சொல், ஆற்றல், வன்முறை; வலாற்காரம், சொல்லழுத்தம், கோபம், கருத்து, வல்லெழுத்து
அருவமும் உருவம் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகிக் கருணைசேர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய
கந்தபுராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்
கருத்து – அருவம், உருவம், அருவுருவம் ஆகிய வடிவம் கொண்ட சிவபெருமானே முருகனாக அவதாரம் செய்ததை கூறும் பாடல்.
பதவுரை
நிட்களம், நிட்களத் திருமேனி என்று அறியப்படுவதும் விந்து, நாதம், சக்தி, சிவம் எனும் நான்கினைக் குறிப்பதானதும், உறுப்புகள் எதுவும் இல்லாத அருவ வடிவம் கொண்டும், சகளத் திருமேனி, சகளம் என பலவாறு அறியப்படுவதும், பிரம்மன், திருமால், உருத்திரன், மகேசன் எனும் நான்கு தெய்வ வடிவங்களைக் குறிப்பதானதும், தலை, உடல், கை, கால் என உறுப்புகள் அமைந்த சிவ வடிவங்கள் ஆனதுமான உருவ வடிவம் கொண்டும், சதாசிவ வடிவமாக இருப்பதும், காலங்களால் அறிய முடியாததான அநாதியாய் அருவுருவ வடிவம் கொண்டும், பல பொருளாகவும், ஏகத்தினை உரைக்கும் ஒரு பொருளாகவும், பிரம்ம வடிவம் கொண்டும் நிற்கும் சோதியினை ஒத்த வடிவம் கொண்டு, கருணையை பொழிவதான அறுமுகங்களுடனும், திருக்கரங்கள் பன்னிரண்டுடனும் போற்றத் தக்கதாகிய முருகன் இந்த உலகம் உய்ய வந்து உதித்தான்.
‘இல்லாதவை தோன்றாது; இருப்பவை உருமாறி தோன்றும்’ எனும் சைவ சித்தாந்தக் கருத்துப்படியும், பெம்மான் முருகன் பிறவான் இறவான் எனும் அருணகிரி நாதரின் கருத்துப்படியும் ஒப்புமை கொண்டு சிவனே முருகனாக தோன்றினான் எனும் பொருள் அறிக.
கருத்து – முருகன் என பெயர் பெற்றதை தன்நிலை விளக்கமாக அருளும் பாடல்.
பதவுரை
அப்பொழுது யானும் சிலம்பொலியினைக் கேட்டேன்; அதன் காரணத்தால் காது இரண்டும் அடைத்துப் போனது; ரோசம், வெட்கம் ஆகியவை விட்டகன்றது; இரக்கம் தருவதான மயில் மீது ஏறி பறந்து சென்றேன்; வாசி வழி பற்றி நின்றதால் மனம் மயங்கி நின்றது. வைரம் போன்ற தன்மை உடைய மெய்ப்பொருளின் வகையினைக் கண்டேன்; மெய்ப் பொருளை உணர்ந்தவர்கள் தன்னிலையை உணர்ந்திடுவார் என்பதாலும். தன்னை முழுமையாக அறிந்து மெய்ஞான வடிவாக நிறைந்து, மூம்மூலம் உரைத்து அதை உணர்வதால் பொய்மை விலகி உண்மை நிலை விளங்கிக் கொண்டவர் என்பதாலும், கொள்ளத்தக்க தேவை என்பது ஏதும் இல்லை என்பதாலும் எனக்கு முருகன் என்று பெயர் ஆனது.
விளக்கஉரை
பல விளக்கங்கள் குரு மூலமாக அறியக்கூடியவை. உ.ம் சிலம்பொலி. ‘சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை‘ எனும் பாடல் வரிகொண்டும், வள்ளலார் பாடல்கள் மூலமும், தச தீட்சை மூலமாகவும் பல விளக்கங்கள் அளிக்க இயலும். குருவருள் பெற்று குரு மூலமாக பொருள் அறிக.
சொக்குதல்-மயங்குதல், மனம் பிறர்வசமாதல், பிறரை மயங்குமாறு ஒழுகுதல்
கருத்து – சூரபன்மன் பரமேஸ்வரனும் முருகப்பெருமானும் ஒன்றே என உணர்ந்ததை கூறும் பாடல்.
பதவுரை
அழகிய மயிலின் மீது அமர்ந்த குமரன் ஆகிய முருகப் பெருமானை சாதாரண சிறுவன் என்று எண்ணி இருந்தேன். முந்தைய காலத்து பரமேஸ்வரன் என்று உணரவில்லை. விஷ்ணு, பிரம்மாவிற்கும் ஏனைய வானத்தில் உறையும் தேவர்களுக்கும் மூல காரணமாக இருக்கும் பரமேஸ்வரனும் இவனும் ஒன்றன்றோ?
கருத்து – சரீரம் விடும் நேரத்திலும் முருகனை புகழ்ந்து உரைக்கும் சொற்கள் உதவும் என்பது பற்றியப் பாடல்.
பதவுரை
போரில் தோல்வி என்பதையே அறியாது எப்பொழுதும் வெற்றியைப் பெறும் போர் வீரா, மணம் வீசும்படியான மாலைகள் அணிந்த தோளை உடையவனே, கிரெளஞ்ச மலையை தனது வேலாயுதத்தால் துளைத்தவனே, சூழ்ச்சியினால் எட்டுத் திக்கும் பொருந்தி நின்ற வஞ்சனை பொருந்தியவனான சூரன் மாமரமாக நின்ற போது அவன் அஞ்சுமாறு போரிட்ட வேலனே, சிறப்புகள் உடைய கொன்றை மாலை மார்பில் திகழுமாறு ரிஷபத்தில் ஏறும் தந்தை ஆகிய சிவனுக்கு இனியவனே, தேன் போன்றவனே, அன்பர்களுக்கு என்றும் இனிய சொற்கள் வழங்கும் சேயே, மலைபோன்றதும், செம்மையானதும், அழகியதும் ஆன தோளை உடையவனே, திருச்செந்தூரில் உறையும் செந்தில் பெருமாளே! மெய்யானது எது என்ற ஒன்றை ஆராய்ந்து அறியாமலும், அதில் பொருந்தி இருக்கும் உண்மையைப் பார்க்காமலும், உயிரானது சோர்ந்து போகும்படி ஊடல் செய்து, தங்களுக்கு நல்லது என்று எதும் இல்லாதவர்கள் போல நின்று, அளவற்ற காம மயக்கத்தைத் தந்து திரிகின்ற பெண்களின் கூரியதான பொய்யான அன்பில் சோர்வடைந்து, எலும்போடு கூடியதான இந்த சரீரம் ஓய்ந்து உள்ளம் குலைந்து போன போதும், உன்னைப் பற்றி புகழ்ந்து உரைக்கும் சொற்கள் நின்று உதவும் என்று உலகத்தார் கூறும்வண்ணம் திருவருள் தந்தருள்க.
வழுத்துகிறேன் என்மகனே மாணா கேளு வல்லவர்க்குப் பிள்ளை என்றவகையும் சொல்வேன் அழுத்துகிற ஆத்தாளை அவர்க்கே ஈந்தேன் அதனாலே அரனுக்குப் பிள்ளை என்றார் தொழுத்துகிற அவரையுந்தா நின்று யானும் துய்யவெளி உபதேசம் துரந்து சொல்லி வழுத்துகிறேன் அதனாலே ஆசானென்று அல்லோரும் எனைத் தானும் அருளினாரே
சுப்ரமணியர் ஞானம்
கருத்து – சிவன் தனக்கு தந்தையாகவும், மகனாகவும் ஆன ரகசியத்தை முருகப் பெருமான் அகத்தியர் கேட்டதற்கு இணங்க அவருக்கு கூறியது.
பதவுரை
என் மகனாகவும், என் மாணவன் ஆனவனாகவும் ஆன உன்னை வாழ்த்துதல் செய்கின்றேன். வலிமை உள்ளவனும் சமர்த்தவனும் ஆகியவருக்கு எவ்வாறு மகன் ஆனேன் என்று உரைக்கிறேன். தனது ஆத்தாள் ஆகிய பார்வதி தேவியை அவள் விரும்பியவாறு ஈசனாருக்கு கொடுத்தேன். அதனாலே ஈசனார் ஆகிய அவரை விட இளமை உடைய இளைஞன் ஆனேன். தனக்கு ஞான உபதேசம் செய்யும் படி விரும்பி நின்ற அவரை, தூயவெளி என்பதும், வெட்டவெளி என்பதும் ஆகாசம் என்பதும் ஆன இடம் காட்டி உபதேசம் காட்டி அருளியதால் அவருக்கு ஆசான் ஆனதால் அவருக்கு மெய்ஞானத் தந்தை ஆனேன் என்று அல்லாதவர்களும் கூறியது குறித்து தன்னைப்பற்றி அருளினார்.
கருத்து – போகர், முருகப் பெருமான் வயதினை கணித்து கூற இயலாமை குறித்தப் பாடல்.
பதவுரை
இவ்வாறான மெய்யறிவுப் பொருளாகியனும், அவன் பற்றிய மார்க்கத்தினையும் சொன்னேன்; சிறப்பான இன்னொரு வேதம் போன்றதான மற்றொரு வசனத்தினைச் சொல்கிறேன்; தூமணி போன்றவரான வடிவேலர் முருகப் பெருமானே ஆவார்; அப்படிப்பட்டவரான முருகனுக்கான வயது எதுவென்றால், சர்வ நிச்சயமாக வயதினைக் கணித்துக் கூற இயலாது. அவனைப் பற்றிய நூல்களிலும் அதுபற்றி உரைக்கப்படவில்லை. முக்தி அருளக் கூடியவனும், பேரறிவாக இருந்து, அந்த அறிவுடைப் பொருளாகவும் ஆகி, பரமான்மாவாகவும் ஆகி, அட்டமாசித்தி பெற அருள்வோனுமாய், ஞான வழி அருள்பவனுமாய் இருப்பது சிறப்பான சுப்ரமணியர் என்று (மட்டும்) கூறலாம்.
பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழிவிட்டவா! செம் சடா அடவிமேல் ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே
அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு வட அருகில் சென்று கண்டுகொண்டேன் வருவார் தலையில் தடபட எனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக் கடதட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
பதவுரை
திருவிநாயகப் பெருமானை வழிபடுவதற்கு வருபவர்கள் “தட, பட” என்ற ஒலியுடன் தங்கள் தலையில் குட்டிக் கொண்டு, அவர்கள் படைக்கும் சர்க்கரையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை தம் துதிக்கையால் ஏற்றுக் கொள்பவரும், “இச்சை, கிரியை, ஞானம்” என்னும் மும்மதங்களையும் கும்பத்தலங்களாக கொண்டிருப்பவருமான யானை முகத்தினை உடையவரான திருவிநாயகப் பெருமானின் இளையோனும், களிறு போன்றவனும் ஆகிய திருமுருகப் பெருமானின் தரிசனத்தை வலிமை உடைய அருணை என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை கோயிலின் கோபுர வாயிலுக்கு வடக்குப் பக்கத்தில் சென்று கண்டுகொண்டேன்.
வேதத்தை ஓதும் பிரமனும், திருமாலும் சூரனுக்கு அஞ்சாமல் இருக்கும் படி செய்து, அவர்கள் வாழும்படியாக விண்ணுலகை ஆளும் மேம்பாடு உடையவனே! கடுமையான விஷம் நீங்காத கழுத்தை உடைய திருநீலகண்ட உருவத்தாரும், நடனங்களை அற்புத வகையில் செய்யும் மேன்மையாளரும், பகைவர்களாகிய திரிபுராதிகள் தீ மூண்டு அழியும்படியாக செய்ய, அவர்களோடு சண்டையிட்ட கடவுள் ஆனவரும், ரிஷப வாகனத்தின் மேல் ஏறி வருபவரும் ஆன சிவபெருமானின் புதல்வனே! எல்லாவற்றுக்கும் காரணமான மூல காரணனே! வேதப் பொருளாகி அதன் வடிவானவனே! உயிர்களிடத்தில் கருணை செய்வதில் பெருமலை போன்றவனே! தேவர்களின் பெருமாளே! வேதத்தின் உட் பொருளைக் கூற வல்லவர்களாலும் விளக்கமாகச் சொல்வதற்கு இயலாதவனாய், விருப்பத்துக்கு உரிய கடவுளாகவும், ஒப்பற்ற ஒரே பரம் பொருளாக நிற்பவனாகவும்,அவத்தைகளுக்கு உட்பட்டதாகிய விழிப்பு, உறக்கம், கனவு ஆகிய மூன்று நிலைகளுக்கும் அப்பால் இருப்பவனாகவும், யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை ஆகிய துரியமாகவும், அந்த நிலைகளில் இருந்து வேறுபட்டவனாகவும், மெய் அறிவு வடிவம் கொண்டவனாகவும், அன்பு செய்தல் தவிர்த்து வேறு வகையில் அடைவதற்கு முடியாதவனாய், மாய மலம் கொண்டவர்களால் நேராக அதன் உருவத்தைக் காணுதற்குக் கிட்டாதவனாய், விருப்பத்துக்கு உரிய கடவுளாகவும், நிகரில்லாத ஒப்பற்ற ஒரே பரம் பொருளாக நிற்பவனாகவும், அவத்தை நிலைகளில் கூடியதான விழிப்பு, உறக்கம், கனவு ஆகிய மூன்று நிலைகளுக்கும் அப்பால் இருப்பவனாகவும், அதில் இருந்து றுபட்டவனாகவும் பேரறிவு உடையவனாகவும், நீண்ட கால், கை ஆகியவற்றொடு நடமாடும் இந்த உடலில் இடம் கொண்டு, நீ என்றும், நான் என்றும் துவைதமாக நூல்களால் கூறப்படும் நிலைமையும், அதனால் நிரம்ப ஏற்படும் மாயமான உணர்ச்சி யாது என்பதையும், ஒப்பில்லாத யமன் ஏவ, அதை நிறைவேற்ற ஆரவாரத்துடன் வருகின்ற தூதர்கள், மறக்காமல் உயிரைப் பிரிக்க வருகின்ற ஒரு நீதி யாது என்பதையும் எனக்கு விளங்கச் சொல்லி அருள மாட்டாயோ?
முதன்மை பெற்ற மாபெரும் தாயாரும், அம்பாளும், தேவியும், சிவபிரான் மகிழ்கின்ற ஆவுடையாள்* என்ற பெயர் கொண்டவளுமான உமாதேவியார் பெற்றருளிய குமாரக் கடவுளே, புவி முதல் ஆகாயம் வரையிலான ஐந்து பூதங்களின் மாறுபாட்டால் உண்டாகிய இந்த உடம்போடு நிலை இல்லாமல் அலைந்து, நிறைவான சிவ ஆகமங்களைத் தெரிந்துகொள்ளாமல், நகைகள் அணிந்த மார்புடைய பெண்களின் விதவிதமான சைகளையே நினைந்து, இன்பம் சுகிக்கவே விரும்பும் என்னை நீ மிக்க கருணை கொண்டு இரக்கப்பட்டு அன்போடு திருவருள் புரிந்து, சைவ நீதியும் சன்மார்க்க நெறியும் விளங்குமாறு எனக்கு உபதேசம் செய்த தன்மையானது, சிவபிரானின் விளங்கும் காதில் உரைத்த ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரப் பொருளே ஆகும்; அவ்வாறு எனக்கு உபதேசிக்க நீலமயிலில் ஏறி வந்தருளிய, கூர்மையான வேலாயுதத்தைக் கொண்ட கடவுளே, ஓதப்படும் வேதங்கள், ஆகமங்கள் ஆகியவை கூறும் சிவயோகத்தையே செய்து, விதியின் வழியை நன்கு உணரும் பெரியோர்களின் வினைகள் தீருமாறு அவர்களின் உடலோடும் உயிரோடும் கலந்து வளர்ந்து கீர்த்தியுடன் சிவானுபவ வாழ்வைத் தந்த ஊதிமலை மேல் உள்ளம் உவந்து வாழும் பெருமாளே! அன்புடன் மனம் கசிந்து உருகி முழுமுதலாகிய செம்பொருள் ஈசனே என்று துதித்து, ஆட்கொள்கின்ற உன்னை வணங்க அருள்வாய்.
விளக்கஉரை
ஆவுடையாள் – பசு ஏறும் பிராட்டி – திருப்பரங்குன்றத்தில் உள்ள பார்வதி தேவிக்கு ஆவுடை நாயகி எனப் பெயர்.
போர் செய்வதற்கு ஏதுவான உடலை உடைய கூட்டமான குதிரைகளும், யானைகளும் நிரம்பியதும், அசுரர்களின் பிணங்கள் குப்பை போன்று தோற்றம் உடையதாகி, எட்டுத் திசைகளையும் மூடி இரத்தத்தால் திசைகள் எல்லாம் சிவக்க, எட்டுத் திக்குகளிலும் உள்ள ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபெளமம், சுப்ரதீபம் ஆகிய யானைகள் அசைந்து ஆடவும், சிற்சில பறை வகைகள் தத்தன தானத் தடுடுடு என்று முழங்கவும், தாளங்கள் செய்யும் ஒலி தகு தொகு என்று ஒலிக்கவும், சில முரசு வாத்தியங்கள் மின்னல் மின்னுவது போலவும், இடி இடிப்பது போலவும் தோன்ற, அற்புதமான விண்ணுலகத்து தேவர்களின் ஊரானதும், பொன்னால் ஆனதுமான பொன்னுலகத்தைத் திரும்பப் பெற்று, செல்வங்களை அடைந்து, பொன் மலர்களைச் சிந்தும் படியாக வேலாயுதத்தைச் செலுத்திய வேலனே! மெய்ப் பொருளை அறிந்த ஞானி வடிவாகிய குறமகள் வள்ளியும், ஐராவதம் எனும் யானையால் வளர்க்கப்பட்ட அழகிய தேவயானையும், மேம்பட்ட வாகனமான மயிலும் விளங்கப் பெற்று, உத்தர கோச மங்கை எனும் திருதலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே! வேண்டுவோர்க்கு வேண்டியதைத் அருளும் கற்பக மரம் போன்ற ஞான மூர்த்தியாகிய கடவுளே, முன்பு விண்ணுலகத்தில் வளர்ந்த தேவயானைக்குத் தலைவனே, இன்பம் தரத்தக்கதான தேன் சுவை கொண்ட கரும்பு, வெல்லம், அன்னம், வெள்ளைச் சர்க்கரை, பால், தேன், நிரம்பிய இளநீர், மா, பலா மற்றும் வாழை என்னும் மூன்று வகையான பழங்கள், பயறு ஆகிய இவைகளை அழகிய பொலிவுள்ள வயிற்றில் ஏற்றுக் கொண்டு அருளும் யானையாகிய கணபதியின் வலிமை நிறைந்த தம்பியே, எழில்மிகு திருவடியை முற்பிறப்பில் வணங்கியதால், உனக்கு வாகனமாக இப்பிறவியில் அமைந்த அழகிய மயிலை உடையவனே, திரளாக உள்ளதும், உருளும் தன்மை உடையதுமான ரத்தினம் பதித்த தண்டையையும், அழகிய சந்த நாதத்தோடு ஒலிக்கின்ற சிலம்புகளையும் அணிந்தவனே, என்றெல்லாம் அழகாக உன்னை உள்ளக் கசிவோடு மனம் கசிந்து தியானித்து, நன்றாக யான், உனது அழகிய திருப்புகழைப் பாடி சிவ பதத்தையும் பெற்று, மெய் ஞானப் பெரு வெளியாகிய சிதாகாச உயர் நிலையைப் பெற்று, அதனால் உண்டாகும் ஞான அமுதை உண்ணப் பெறுவேனோ?
விளக்கஉரை
உற்பனம் – விரைவில் அறிகை, உத்தமம், தோன்றியது, உற்பத்தி செய்தது, பிறப்பு, ஞானம், கல்வி, நிமித்தம்.
சபதம் செய்து இந்த ஆட்டை* அடக்குவேன் என்று உரைத்து, ஆட்டின் மீது ஏறி அதனை வாகனமாகச் செலுத்தியவனே! காணாபத்தியம், கௌமாரம், சௌரம், சைவம், வைணவம், சாக்தம் என வழங்கப்பெறும் ஆறு வகை சமயத்தவராலும் காணுதற்கு அரியவனே! சிவனின் புத்திரனாகிய சிவகுமாரனே! உன்னிடத்தில் அன்பு கொண்டு உன்னை நெருங்கினால் நெருங்கியவரை விட்டு ஒருநாளும் பிரியாதவனே! திருமுருகன்பூண்டி என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (வினைகளை களைவதன் பொருட்டு) உன்னைத் தொழுவது அவசியமென அறிந்து, பலமுறையும் பிரார்த்தித்து, எனது சுய அறிவினால் உன்னை உணர்ந்து ஆண்டுக்கு ஒரு நாளாவது தவ ஒழுக்கத்தையும், ஜெபம் மேற்கொண்டு, உள்ளம் கனிந்து, உனது திருவடிகளை மனத்தே தரிப்பதற்கு நீ அருள்வாயாக.
விளக்கஉரை
* நாரதர் ஒரு முறை யாகம் செய்த போது தோன்றிய ஒரு முரட்டு ஆட்டுக் கிடாவை வீரபாகுவை அனுப்பி அவர் மூலமாக பிடித்துவரச் செய்து, முருகன் அதனை அடக்கி வாகனமாகக் கொண்ட வரலாறு – கந்த புராணம்.