பாடல்
மூலம்
ஆவிக்கு மோசம் வருமா றறிந்துன் னருட்பதங்கள்
சேவிக்க என்று நினைக்கின்றி லேன்வினை தீர்த்தருளாய்
வாவித் தடவயல் சூழுந் திருத்தணி மாமலைவாழ்
சேவற் கொடியுடை யானே யமர சிகாமணியே
பதப்பிரிப்பு
ஆவிக்கு மோசம் வருமாறு அறிந்து உன் அருட்பதங்கள்
சேவிக்க என்று நினைக்கின்றிலேன் வினைதீர்த்து அருளாய்
வாவித் தடவயல் சூழும் திருத்தணி மாமலைவாழ்
சேவற் கொடியுடையானே அமர சிகாமணியே
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
கருத்து – இரு வினைபட்டு திருவடி வணங்கா தன்மையும், அதனை தீர்த்து அருள் புரிய வேண்டியும் முருகனிடம் விண்ணப்பித்தது.
பதவுரை
ஆறுகளும், தடாகங்களும் சூழ்ந்திருக்குமாறு அமையப்பெற்றதும், பரந்த வயல்கள் சூழ்ந்துள்ளதும், பெருமைக்குரியதும் ஆன திருத்தணி மலைமீது எழுந்தருளி சேவற்கொடியை உடையவரே, தேவர்களுக்கு முடிமணியாகத் திகழ்பவரே! இரு வினைகளின் விளைவாக வெளிப்பட்டு பிறவிநோய்க்கு காரணமான உயிருக்குக் கேடு உள்ளது என்பதை அறிந்த போதிலும் தேவரீருடைய அருளை வழங்கக் கூடியதான திருவடிகளை வணங்குவதை எக்காலமும் சிந்திக்கவில்லை. அவ்வாறான அடியேனுடைய வினைகளையும், அதன் விளைவையும் தீர்த்து அருள் புரிவீராக.
விளக்க உரை
- வாவி – தடாகம், நீர்நிலை, நடைக்கிணறு, ஆற்றிலோடை