
பாடல்
அண்டர்கள் முனிவர் ஏனோர் அகிலமும் காட்டி அண்ணல்
கொண்டிடு படிவ முற்றும் குறித்தி யார் தெரிதற் பாலார்
எண்டரு விழிகள் யாக்கை எங்கணும் படைத்தோர்க்கு ஏனும்
கண்டிட அநந்த கோடி கற்பமும் கடக்கும் அன்றே
கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்
கருத்து – சூரபன்மன், மாயை நீக்கம் பெற்ற பின் முருகப் பெருமான் பல பிரம்மாக்களை கண்ட திறம் பற்றி உரைத்தப் பாடல்.
பதவுரை
தேவர்களும், முனிவர்களும் மற்றைய அகிலங்கள் அனைத்தும் (தன்னில்) காட்டி அவைகள் வாழ்ந்தற்கான எச்சங்களும் காட்டிய பாலனானவன், இயல்பின் இருந்து மீறிய கண்கள், உடல் மற்றும் எங்களையும் படைத்திட்ட பிரம்மனும் கண்டிடுமாறு கடவுள் தன்மை கொண்டு பிரமனுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் ஆகிய நானூற்று முப்பத்திரண்டுகோடி வருடம் கொண்ட பிரமனது ஒருநாள் கடந்து பல பிரம்மன்களைக் கண்டவனாகவும், எவரும் எளிதில் அறிய இயலாதவனாகவும் தோன்றினான்.
விளக்க உரை
- யுத்த காண்டம் , சூரபன்மன் வதைப் படலத்தில் வரும் பாடல்
- கற்பம் – இருத்தற்கு ஏற்படுத்தப் பட்ட இடம், நானூற்று முப்பத்திரண்டுகோடி வருடம் கொண்ட பிரமனது ஒருநாள், பிரமனுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள், இந்திரன் முதலிய தேவர்க்குரிய வாழ்நாளளவு, ஆயுளை நீடிக்கச் செய்யும் மருந்து, இலக்ஷங்கோடி, தேவர் உலகம், பசுவின் சாணத் தைக் கையாலேந்தி ஆகமப்படி உண்டாக்கிய திருநீறு, கற்பகம்
- பல பிரம்மன்களைக் கண்ட பின்னும் இன்னும் பாலனாகவே இருக்கிறான் என்பது வியப்பு
- அண்டர் – தேவர், இடையர், பகைவர்
- அநந்தன் – கடவுள், ஆதிஷேஷன்