அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இரத்தல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  இரத்தல் 

பொருள்

  • பிச்சைகேட்டல்
  • வேண்டுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

புரமவை எரிதர வளைந்தவில் லினனவன்
மரவுரி புலியதள் அரைமிசை மருவினன்
அரவுரி நிரந்தயல் இரந்துண விரும்பிநின்
றிரவெரி யாடிதன் இடம்வலம் புரமே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

திரிபுரங்கள் எரியுமாறு செய்தவனும், வளைந்த வில்லை உடையவனும், மரவுரியையும் புலித்தோலையும் இடையில் அணிந்தவனும், வேண்டுகோளுக்கு இணங்க பாம்பினை அணிந்தவனும், யாசித்து உண்ண விரும்புபவனும், இரவில் தீயில் நின்று ஆடுபவனும் ஆகிய இறைவனது இடம் `திருவலம்புரம்` என்னும் தலமே.

விளக்க உரை

  • ‘அரவுரி நிரந்தயல் இரந்துண விரும்பிநின்’ என்று பாடலிலும் ‘பாம்பின் தோல் பொருந்தப்பட்டவனும்’ பல இணையபதிப்புகளில் காணப்படுகிறது. ‘அரவுரி யிரந்தவன்’ என்றே மூலத்தில் காணப்படுவதால் விளக்கம் மூலத்தின் பொருட்டே தரப்பட்டுள்ளது.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

சைவ சித்தாந்தத்தின் மூன்று உட்பொருள்கள்
பதி, பசு, பாசம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தண்ணளி

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  தண்ணளி 

பொருள்

  • கருணை
  • குளிர்ந்தஅருள்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முக்தி வீடும் அன்றோ
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே

அபிராமி அந்தாதி

கருத்து உரை

இசையின் அடைப்படையாகிய சொற்களைக் கூறும் நறுமணம் வீசும் ஈசனின் தோழியான பைங்கிளியே அபிராமி அன்னையே, உன்னுடைய குளிர்ச்சி பொருந்திய திருவருளை பெறுவதற்காக மிகுந்த முயற்சியுடன் பல கோடி தவங்கள் செயவார்கள்; அவர்கள் இந்த மண்ணுலகம் கொடுக்கும் செல்வங்களை மட்டுமா பெறுவார்? வானவர்கள் விண்ணுலகம் தன்னில் வாழ்ந்து அனுபவிக்கும் செல்வமும், என்றும் அழியாத இன்பம் தரும் முக்தி எனும் வீடு பேறும் பெறுவார் அன்றோ!

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

சித்தர் சிவப்பிரகாசரின் மாணவர் யார்?
நமச்சியாய மூர்த்திகள் எனும் திருவாடுதுறை ஆதீன ஸ்தாபகர்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பவயோகம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பவயோகம் 

பொருள்

  • பிறப்புக்கு காரணமாகிய பேதைமை முதலிய குற்றங்களின் சேர்க்கை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சிவயோக சந்திதரும் தேவிஉல குடையாள்
   சிவகாம வல்லியொடுஞ் செம்பொன்மணிப் பொதுவில்
நவயோக உருமுடிக்கண் விளங்கியநின் வடிவை
   நாய்க்கடையேன் நான்நினைத்த நாள்எனக்கே மனமும்
பவயோக இந்தியமும் இன்பமய மான
   படிஎன்றால் மெய்யறிவிற் பழுத்தபெருங் குணத்துத்
தவயோகர் கண்டவிடத் தவர்க்கிருந்த வண்ணம்
   தன்னைஇந்த வண்ணம்என என்னை உரைப்பதுவே

திருவருட்பா – ஐந்தாம் திருமுறை – வள்ளலார்

கருத்து உரை

முக்திக்கு உரித்தான சிவயோகங்களை முயல்பவர்களுக்கு அந்த பயனைக் கூட்டுவிக்கும் தேவியும், உலகுகளை உடைமையாக உடையவளுமாகிய சிவகாம வல்லி என்னும் உமாதேவியுடன் செம்பொன்னால் வேயப்பட்ட மணியொளிரும் அம்பலத்தின்கண் அறிய இயலா புதியதொரு யோக வகையில் எய்தும் காட்சி முடிவில் விளங்குவதாகிய நின்னுடைய திருஉருவை நாயினும் கடைப்பட்ட யான் நினைக்கிறபோது எனக்கே மனமும், கண் முதலிய இந்திரியங்களும் இன்பமாகின்றன என்றால், உண்மை ஞானமும் பெரிய நற்குணமும் கொண்ட தவயோகியர் காட்சிக்குத் தோன்றிய ஞானத் திருவுரு நலத்தை வாயால் எவ்வாறு உரைக்க இயலும்?

விளக்க உரை

  • ‘நவயோகம் நந்தி நமக்களித் தானே’ எனும் திருமந்திரப்பாடல் இங்கு சிந்திக்கத் தக்கது
  • பவயோக இந்தியம் (இந்திரியம்) – பிறவிப் பிணிக்கு கண் முதலியவை  வாயில்கள்
  • “மெய்யறிவில் பழுத்த பெருங்குணத்துத் தவயோகர்’ – சிவஞான யோகிகளுக்கு உண்மை உணர்வும் உயர்குணங்களும் இன்றியமையாதவை என்பதை முன்னிட்டு

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

அருள்நமச்சிவாயரின் மாணவர் யார்?
சித்தர் சிவப்பிரகாசர்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தைவம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  தைவம்

பொருள்

  • உடைமை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தன்னை யறிவித்துத் தான்றானாச் செய்தானைப்
பின்னை மறத்தல் பிழையலது முன்னவனே
தானேதா னாச்செய்துந் தைவமென்றுந் தைவமே
மானே தொழுகை வலி.

சிவஞான போதம் – மெய்கண்ட தேவர்

கருத்து உரை

தன்னை அறிவித்து, எண்குணத்தானாகிய தன்னை அவன் போலவே செய்தானைப் பின்னை மறத்தல் குற்றம் எனும் உண்மையை அறியமாட்டாது குருடாய்க் கிடந்த உயிர்களுக்கு பலவகையிலும் அதனைத் தெரியப்படுத்தி அவ்வுண்மையை உணர்த்தி வினைகளை முன்னிறுத்தி எளியதாக இருக்கும் அந்த உயிரினை அத்தனை அரியதாக செய்து அளித்த பேருதவியை மறந்து போதல் பரிகாரம் செய்யமுடியா பெரும் குற்றம் ஆகும். முதல்வன், அவ்வுயிரினை அதன் தன்மை அறிந்து சுதந்திரமாக செயல்பட அனுமதி செய்தாலும் அது சுதந்திரமாகி விடாது; அவனுக்கு என்றும் அடிமையாகவே நிற்கும்.  எனவே குருவாகி வந்து நிற்கும் அருளிய பெரியோனை வழிபடுதலே சிற்றுயிர்க்கு சிறப்பு தருவதாகும்.

துக்கடா சைவ சித்தாந்தம் வினா விடை

உமாபதிசிவத்தின் மாணவர் யார்?
அருள்நமச்சிவாயம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பெட்ட

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பெட்ட

பொருள்

  • வறிய

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாதே
பெட்டப் பிணமென்று பேரிட்டுக் – கட்டி
எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை. -திருவெண்பா. 8

11-ம் திருமுறை – சேத்திரத் திருவெண்பா – ஐயடிகள் காடவர்கோன்

கருத்து உரை

கைகளால் தொட்டுப் பார்த்தும், நெஞ்சினை தடவியும் நாடியின் துடிப்பு ஒரு சிறிதும் காணாததால் வறிய பிணம் என்று அவ்வுடலுக்கு பேர் சூட்டி,  ‘கட்டி எடுங்கள் என்று சொல்வதற்கு கூட உறுதுணையில்லாத மடநெஞ்சமே, திருநெடுங்களத்தில் எழுந்தருளியுள்ள இறைவனது திருவடிகளை நினை.

விளக்க உரை

  • தொட்டு – கை நாடியின் துடிப்புப் பார்த்தல்
  • துடிப்பொன்றும் – இரத்த ஓட்டம் நிற்கும் போது இதயத் துடிப்பும் நிற்கும்
  • பெட்டப் பிணம் – வெறும் பிணம் என்பதை குறிப்பால் உணர்த்துதல். ‘பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு’ எனும் திருமந்திரம் சிந்திக்கத் தக்கது
  • கட்டுதல் – உடலை பாடையில் வைத்துக் கட்டுதல்

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – உண்ணீர்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  உண்ணீர்

பொருள்

  • குடிநீர்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறிய ரென்றிருக்க வேண்டா-கடல்பெரிது
மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல்
உண்ணீரு மாகி விடும்.

மூதுரை – ஔவையார்

கருத்து உரை

இதழ்களின் அளவினாலே தாழம்பூ பெரிதாக இருக்கிறது, மகிழம்பூ இதழ்களின் அளவினாலே சிறிதாயினும் மணத்திலே தாழம்பூவினை விடவும் இனிதாக இருக்கிறது, சமுத்திரம் பெரிதாக இருக்கிறது, ஆயினும் அதிலுள்ள நீர் (உடல்) கழுவுவதற்குத் தக்க நீராக ஆகாது; அதன் பக்கத்தே சிறிய மணல் குழியில் சுரக்கும் ஊற்றுநீர், குடிக்கத்தக்க நீராக ஆகும்; எனவே ஒருவரை உருவத்தினாலே சிறியவரென்று மதியாமல் இருக்கவேண்டா.

விளக்க உரை

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் எனும் பொருள் பற்றிய பாடல்

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

மறைஞானசம்பந்தரின் மாணாக்கர் யார்?
உமாபதி சிவம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பந்தனை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பந்தனை

பொருள்

  • கட்டுகை
  • கட்டு
  • பற்று
  • ஆணவாதி குற்றங்கள்
  • பாலாரிஷ்டம்
  • மகள்

வாக்கிய பயன்பாடு

பொண்ணு பந்தனை இன்னும் வுடல ஓய்! விட்டு இருந்தா உசிரு என்னைக்கோ போயியிருக்குமே, அதாலதான் நீ இப்டி பேசற.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சிந்தனை செய்ய மனம் அமைத்தேன் செப்ப நா அமைத்தேன்
வந்தனை செய்யத் தலை அமைத்தேன் கை தொழ அமைத்தேன்
பந்தனை செய்வதற்கு அன்பமைத்தேன் மெய் அரும்ப வைத்தேன்
வெந்த வெண்ணீறணி ஈசற்கு இவை யான் விதித்தனவே

பதினொன்றாம் திருமுறை – பொன் வண்ணத்து அந்தாதி – சேரமான் பெருமாள் நாயனார்

கருத்து உரை

சுட்ட வெண்ணீற்றை அணியும் எம்பெருமானாகிய ஈசன் எனக்கு நிர்ணயித்தவாறும் சிந்தனை செய்வதற்கு தக்கவாறும் மனத்தை அமைத்தேன். அவரை துதி செய்ய நாவை அமைத்தேன். எம்பெருமானாகிய ஈசனை வழிபாடு செய்யத் தலையை அமைத்தேன். அவரை வணங்குவதற்காக கையை அமைத்தேன். ஊள்ளத்தில் ஈசனை கட்டுவதற்கு அன்பை அமைத்தேன்  மலர்ச்சி பெறுவதற்காக உடம்பை வைத்தேன்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

அருணந்தி சிவத்தின் மாணாக்கர் யார்?
மறைஞானசம்பந்தர்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – குந்திநடத்தல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  குந்திநடத்தல்

பொருள்

  • நெடுக நடந்துபோக இயலாமல் இடையிடையே அமர்ந்து அமர்ந்து எழுந்து நடத்தல்

வாக்கிய பயன்பாடு

ஏன், இவ்வளவு லேட்டு?
என்னா செய்யிறது வயசாயிடுச்சி, குந்தி குந்தி நடந்து வாரேன். மூச்சு வாங்குது.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி,
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை .

11 ம் திருமுறை – சேத்திர வெண்பா – ஐயாறுஅடிகள் காடவர் கோன் நாயனார்

கருத்து உரை

நடக்க இயலாமல் அமர்ந்து அமர்ந்து நடந்து,  உடல் வளம் குறைந்து முதுகு வளைந்து ஒரு கையில் கோல் ஊன்றி, வலியால் நொந்து இருமி, மூச்சு விட ஏங்கி, வாந்தி அல்லது எச்சில் வாயில் இருந்து ஆறாகப் பெருகி வெளியே தள்ளும் முன்னும் ஐயாறு எனும் திருவையாறு ஊரில் உள்ள சிவனை அல்லது அந்த ஊரின் பெயரையே வாயால் அழை.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

மெய்கண்டாரின் மாணவர்களில் முக்கியமானவர்கள் யார்?
அருணந்தி சிவம், மனவாசகம் கடந்தார்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வைத்துாறு

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  வைத்துாறு

பொருள்

  • வைக்கோல் குவியல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஒத்துறு புணர்ச்சியின் உருக்கள்பல வாகும்
வைத்துறு கடாதிபல மண்ணின்வரு மாபோற்
புத்திகுண நற்பொறி புலன்களிவை யெல்லாம்
இத்தில்வரும் நீரினில் எழுங்குமிழி ஒத்தே.

சிவஞானசித்தியார்

கருத்து உரை

ஒரே மண்ணில் இருந்து திரித்து பல குடங்கள் செய்தலைப் போல,  நீரினில் இருந்து வெளிப்படும் நீர்குமிழி போல,  பூதங்களின் சொரூபங்களும், குணங்களும்  ஒன்றாக கூடுகின்ற பொழுது அவைகளின் தன்மைக்கு ஏற்றவாறு அதன் புத்தி, குணங்கள் ஒத்து ஞானேந்திரியமாகிய பொறிபுலன்கள் இவ்வுருவில்  வடிவு  பெறும்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

திருவியலூர் உய்ய வந்த தேவநாயனார் செய்த நூல்
திருவுந்தியார்

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 20

 

உமை

‘ஒருவன் இறந்ததும் பிறந்ததாக நினைக்கப்படுகிறான். அப்படிப் பிறக்கையில் ஆத்மா எப்படி இருக்கும்? கர்ப்பம் ஆரம்பிக்கும் போதே ஆத்மா சேருகிறதா?

சிவன்

வேறு ஒர் ஆத்மா கர்ப்பத்தில் சேர மனிதன் இறக்கிறான். மற்றொரு ஆத்மா கர்பத்தில் சேர பூமியில் பிறக்கிறான். இவ்வுணமை எவருக்கும் தெரியாது. தெய்வத்தினால் அது உண்டாகும். பிராணிகளுக்கு தெரியாமல் இருப்பதற்காகவும், பெற்றவளுக்காகவும் அவ்விரண்டு ஆத்மாக்களும் சமமான கர்மம் செய்திருப்பதாலும் அவ்வாறு நடக்கிறது என்று நீ அறிந்துகொள். சிலர் நரகம் அனுபவித்தப்பின் ஜன்மத்தை விரும்பி அடைகின்றனர். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் ஸாம்யாமிகை எனும் மாயை இருக்கிறது. (இறந்த சரீரத்தில் இருந்த ஆத்மாவை மற்றொரு சரீரத்தில் பிறக்கச் செய்வது).

உமை

கர்மங்களை அனுபவிக்கும் ஆத்மா என்பது இல்லை. இறப்பவை பிறப்பது இல்லை; செடியில் காய் உண்டாவது போல், கடலில் அலைகள் தோன்றுவது போல் உலகில் உருவங்கள் தோன்றுகின்றன. ஆகவே தவ, தானம் முதலிய கருமங்கள் பயனற்றவைகள், எனவே மறுபிறப்பு என்பது இல்லை  என்று சிலர் கருதுகின்றனர். மற்றும் சிலர் தாம் பார்க்காதவற்றை சொல்லக் கேட்டும், தம் கண்களால் பார்க்க இயலா காரணத்தால் இவை எல்லாம் இல்லை என்றும் தீர்மானிக்கின்றனர். இது பற்றி சொல்லக் கடவீர்

சிவன்

நாஸ்திகர்கள் எதைச் சொல்கிறார்களோ அது உலகில் இல்லை. இதுதான் சாபத்தினால் கெட்டு சாஸ்திரங்களை பழிப்பவரின் மதம். சாஸ்திரத்தில் சொல்லப்படவை அனைத்தும் கண்ணால் காணப்பட்டவையே. மனிதர்கள் சாஸ்திரங்களை  உறுதி என்று கொண்டு வைராக்கியம் எனும் கத்தியினால் விருப்பங்களை விலக்கி ஸ்வர்கத்திற்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். எனவே உலகில் சிரத்தையின் பலன் பரலோகத்தில் மிகவும் பெரியது. தம்முடைய நன்மையக் கருதுபவர்களுக்கு புத்தி, சிரத்தை, அடக்கம் ஆகியவை காரணங்கள். இம்மூன்று காரணங்களாலும் ஒருங்கே அமையப் பெற்றவர்களே சொர்க்கம் செல்கின்றனர். மற்றவர்கள் இக் காரணங்கள் ஒன்று சேராமையினால் நாத்திக எண்ணம் கொண்டவராக ஆகின்றனர்.  அனுட்டானம் இல்லாமல் இருத்தல்,  பிடிவாத குணம், சாத்திரத்தில் நம்பிக்கை இல்லாமல் பகைத்தல் போன்றவற்றால் அவர்களது அன்னம் யாராலும் உண்ணப்படாமல் தாழ்ந்த நிலைக்கு செல்கின்றனர். இந்த விஷயத்தில் மிக்க அறிவுள்ளவர்களும் மயங்குகின்றனர். எத்தனை வாதம் செய்தாலும் அதனை அறிய இயலாது. இது பிரம்மாவால் உண்டாக்கப்பட்ட மாயை. இது தேவர், அசுரர் போன்றவர்களால் கூட அறிய இயலாது எனில் மனிதர்கள் எம்மாத்திரம். மனதில் சிரத்தை கொண்ட மனிதர்களால் மட்டும் சாஸ்திரங்களில் சொல்லி இருப்பது உள்ளது என்று அறியப்படும். அதனால் நன்மை பெறலாம். தனக்கு நன்மையை விரும்புகிறவன் நாத்திகர்களின் வாக்கினைக் கேட்கும் பொழுது தனக்கு காது கேளாதவன் போல் நடந்து கொள்ளவேண்டும்.

உமை

‘எம தண்டனைகள் எப்படிப்பட்டவை? எம தூதர்கள் எப்படிப்பட்டவர்? இறந்த பிராணிகள் எம லோகத்திற்கு போது எவ்வாறு? யமனுடைய இருப்பிடம் எப்படிப்பட்டது? அவன் எவ்வாறு தண்டிக்கிறான்’ இவைகளை நான் கேட்க விரும்புகிறேன்.

சிவன்

எமனது இருப்பிடம் தென் திசையில் இருக்கிறது. அது அழகானதும், நிறைய பொருட்கள் நிரம்பியதுமாகவும், பித்ரு தேவதைகள்,  பிரேத கூட்டங்கள், யம தூதர்கள், கர்மங்களினால் அகப்பட்ட பல பிராணிக் கூடங்களால் நிரம்பியதுமாக இருக்கிறது.

உலக நன்மையில் ஊக்கமுள்ள எமன் பிராணிகளின் நல்வினை, தீயவினைகளை அறிந்து எப்பொழுதும் மற்றவர்களை தண்டித்துக் கொண்டு இருக்கிறான். அவன் அந்த இடத்தில் இருந்தே பிராணிக் கூட்டங்களை கொன்று கொண்டு இருக்கிறான். அவன் மாயா ரூபங்களை தேவர், அசுரர் போன்றவர்களால் கூட அறிய இயலாது எனில மனிதன் எவ்வாறு அறிவான்? கர்மம் முடிந்த உயிர்களை தூதர்கள் பிடித்துச் செல்கின்றனர். உலகினில் தாம் செய்யும் கர்மங்களால் உயிர்கள் உத்தமானவர்களாகவும், அதர்மமானவர்களாகவும், மத்தியமானவர்களாகவும் இருக்கின்றன.

தர்மத்தில் செல்பவர்கள் உத்தமர்கள். கர்மங்களால் மூன்று உலகங்களிலும் பிறப்பவர்கள் மத்தியமர். நரகம் போகிற பாதையில் சென்று பிறப்பவர்கள் அதர்மர்கள்.

  • ரமணீயம் – செடி கொடிகளால் நிரம்பி, அழகிய பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, தூபங்கள் காட்டப்பட்டு அப்பாதையில் செல்பவர்களின் மனதை கவர்வதாகவும், இனிமையான காற்று உள்ளதாகவும் இருக்கும்.
  • நிராபாதம் – ஒளி பொருந்தியதாக இருக்கும்.
  • துர்த்தர்சம் – இருள் நிரம்பியதாக, துர்வாசனைகளுடன், புழு பூச்சி நிறைந்ததாக கடக்க கடினமான பாதையாக இருக்கும்.

ரமணீயம் எனும் மார்கத்தில் செல்பவர்களை மட்டும் யமதூதர்கள் சிறந்த துணிகளை எடுத்து வந்து சுகமாக அழைத்துச் செல்வர்.

உமை

தேகம் விட்டதும், ஒன்றிலும் பற்றில்லாதும், காட்சிக்கு அகப்படாததுமான ஆத்மாவை எடுத்து எமன் அருகில் கொண்டு செல்வது எப்படி?

தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மூலநாடி

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  மூலநாடி

பொருள்

  • நடுநாடி
  • சுழுமுனை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாலு நாழி உம்முளே நாடியே இருந்த பின்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலமுண்ட கண்டர் ஆணை அம்மை ஆணை உண்மையே.

சிவவாக்கியர்

கருத்து உரை

மூலநாடியான சுழுமுனையை பற்றி வாசியோகம் செய்து அங்கே தோன்றி எழும் சோதியில் உள்முகமாக மனம் பொருத்தி நான்கு நாழிகை நேரம் (தோராயமாக- 1.30 மணி நேரம்) தியானம் செய்து தவம் புரியும் யோக  சாதகர்கள், அதன் பலனாய் என்றும் மாறாத இளமைத் தோற்றம் உடையவர்களாகி,  அவர்களே பரப்பிரமமாய் ஆவார்கள் என ஆலகால விஷம் உண்ட நீலகண்டர் மீதும், அம்மையான உமையவள் மீது ஆணையிட்டு சத்தியம் செய்து சொல்கிறேன்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனார் செய்த நூல்
திருக்களிற்றுப்படியார்

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தாதை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  தாதை

பொருள்

  • தந்தை
  • பாட்டன்
  • படைக்கும் கடவுள் – பிரமன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதிதீ தொத்ததே.

கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்

கருத்து உரை

‘திதத்த ததித்த’ என்னும் தாளமானங்களை திருநடத்தால் காக்கின்ற உன்னுடைய தந்தையாகிய சிவபெருமானும், பிரமாவும், இடைச்சேரியில் தயிரை உண்டு பாற்கடலையும் ஆசிசேடனையும் பாயாக் கொண்ட திருமாலும் வணங்குகிற முதல்வனை! தெய்வயானை தாசனே! ஜனன மரணத்துக்கு இடமாய், எலும்பு முதலிய தாதுக்கள் மூடிய  பொல்லாத பையாகிய  இந்த உடம்பை, தீயில் வேகும் போது, உன்னைத் துதிக்கும் என் புத்தியை உன் அடி இணைக்கு ஆட்படுத்த வேண்டும்.

விளக்க உரை

  • புலமை விளையாட்டு / சொல்விளையாட்டு – செய்யுள் இயற்றுவோர் தம் சொல்லாண்மையைக் காட்டக் கையாளும் ஒரு வகை உத்தி.
  • இந்த பாட்டிற்கு உரை / பொருள் கூற முடியாமல் வில்லிபுத்தூரார் அருணகிரியாரிடம் தோல்வியுற்றதாக வரலாறு.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

மெய்கண்டார் செய்த நூல்
சிவஞான போதம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – விமலம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  விமலம்

பொருள்

  • அழுக்கின்மை
  • பரிசுத்தம்
  • தெளிவு
  • சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஆயிர கோடி காமர்
  அழகெலாந் திரண்டொன் றாகி
மேயின எனினுஞ் செவ்வேள்
  விமலமாஞ்சரணந் தன்னில்
தூயநல் எழிலுக் காற்றா
  தென்றிடின் இனைய தொல்லோன்
மாயிரு வடிவிற் கெல்லாம்
  உவமையார் வகுக்க வல்லார்?

கந்தபுராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்து உரை

ஆயிரம் கோடி மன்மதன்கள் இந்த உலகில் பிறந்து, அவர்கள் எல்லாருடைய அழகையும் ஒன்றாகத் திரட்டி ஓர் உருவம் செய்து இருந்தால்கூட, சிவந்த மேனி உடைய இந்த முருகனுடைய தூய்மையான பாதத்தின் அழகுக்கு முன்னே அது நிற்காது!  தொன்மையான புகழைக் கொண்ட இந்த அழகிய வடிவத்துக்கு உவமை சொல்ல யாரால் இயலும்?

விளக்க உரை

  • சூரபத்மன் முருகன் அழகைப் கண்ட மாத்திரத்திலேயே தன் கையிலிருந்த ஆயுதங்களையெல்லாம் நழுவவிட்டு தன் ஞானக் கண்களால் முருகன் அழகை முழுதும் பருகி வியந்து நிற்கிறான்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

அருணந்திசிவம் செய்த நூல்கள்
சிவஞானசித்தியார், இருபா இருபஃது

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பேதகம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பேதகம்

பொருள்

  • மனவேறுபாடு
  • தன்மை வேறுபாடு
  • வஞ்சனை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஆதலின் நமது சத்தி அறுமுகன், அவனும் யாமும்
பேதகம் அன்றால், நம்பொற் பிரிவிலன் யாண்டும் நின்றான்
ஏதமில் குழவி போல்வான், யாவையும் உணர்ந்தான், சீரும்
போதமும் அழிவில் வீடும் போற்றினர்க் கருள வல்லான்

கந்தபுராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்து உரை

ஆகையினால் நம்முடைய சக்தியே அறுமுகன்; அவனும் யாம் போல் மனவேறுபாடு தன்மை இல்லாமல் நம்மைப் போல் எப்பொழுதும் எவ்விடத்திலும் பிரிவு இல்லாதவனாகி நிற்கும் குணம் உடையவன்; குற்றம் இல்லாத குழந்தையைப் போன்றவன்; எல்லாப் பொருள்களையும் அதன் தன்மைகளையும் உணர்ந்தவன்; தன்னைப் போற்றுபவர்களுக்கு பெருமை, புகழ், ஞானம் அறிவு, அழியாத வீடு பேறு ஆகியவற்றை அளிக்க வல்லவன்.

விளக்க உரை

  • ‘பேதகம் அன்றால் நம்போல் பிறப்பிலன் யாண்டும் உள்ளான்’ – என்று பல இணைய பதிப்புகளில் உள்ளன. மூலத்தில் ‘நின்றான்’ என்பது இருப்பதால் ‘நின்றான்’ எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது. ‘நின்றான்’ என்பது இறந்த காலத்தை குறிப்பதால் ‘உள்ளான்’ எனும் நிகழ் காலத்திற்கு வார்த்தை மாற்றப்பட்டிருக்கலாம். கால வரையறைக்கு உட்படாதவன் என்பதாலும், ‘உணர்ந்தான்’ எனும் சொல் அடுத்து வரும் வரிகளில் வருவதாலும்  ‘நின்றான்’ என்பதே சரியான சொல்லாகும்.  எனவே அவ்வாறு வார்த்தை மாறுதல் தேவை இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.
  • அன்றேல் – அல்லதேல்.
  • யாண்டும் – எப்பொழுதும், எவ்விடத்தும்
  • குழவி – குழந்தை
  • ஏதம் – துன்பம், குற்றம், கேடு, தீமை
  • போதம் – ஞானம், அறிவு

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

மனவாசகம் கடந்தார் செய்த நூல்
உண்மை விளக்கம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – முருகு

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  முருகு

பொருள்

  • மணம்
  • இளமை
  • கடவுள்
  • தன்மை
  • அழகு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அருவமு முருவு மாகி அநாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்க ளாறுங் கரங்கள்பன் னிரண்டுங் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலக முய்ய.

கந்தபுராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்து உரை

இந்த உலகம் பிழைப்பதன் பொருட்டு, சிவபெருமானின் மூன்று நிலைகளாகிய அருவம், உருவம் மற்றும் அரு உருவம் எனும் நிலைகளில், அநாதிக் பொருளாகி, பலவாகி, ஒன்றாகி, ஐந்து வடிவங்களாகிய ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம். சத்யோஜாதம் ஆகியவற்றுடன் கூடிய அதோமுகம் எனும் ஆறு முகங்களின் அம்சமாக ஜோதி வடிவமாக  நிற்கும் ஈசனாகிய பிரமத்தின் மேனி வடிவம் கொண்டு கருணை பொழியும் முகங்கள் ஆறு, பன்னிரண்டு கைகள் கொண்டு முருகன் வந்து உதித்தான்.

விளக்க உரை

  • சிவம் வேறு, முருகன் வேறு என்று எண்ணுபவர்களுக்காக சிவ அம்சமாக முருகனின் பிறப்பு என்பது பற்றி இப்பாடல்.
  • இயற்கை மணமும், மாறா இளமையும், எல்லாப் பொருளையும் கடந்து ஒளிரும் தன்மையும், அழியா அழகும் இறைவனிடத்தில் இருப்பதால் முருகன்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

உமாபதி சிவம் அருளிய எட்டு நூல்களின் தொகுப்பு
சித்தாந்த அட்டகம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பண்டு

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பண்டு

பொருள்

  • பழமை
  • முற்காலம்
  • முன்
  • தகாச்சொல்
  • நிதி (வட்டார வழக்கு)

விளக்க உரை

ஏங்க, புள்ளைங்க முன்னால பண்டு சொல் சொல்றீங்க. நாளைக்கு அப்படியே பேசும்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட்செய்மின் குழாம்புகுந்
தண்டங்கடந்த பொருள்அள வில்லதோர்ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே

ஒன்பதாம் திருமுறை – திருவிசைபா – திருப்பல்லாண்டு – திருமாளிகைத் தேவர்

கருத்து உரை

எம் பெருமான் திறத்து உருகாத மனமுடையவர்கள் எங்களை விடுத்து நீங்குங்கள். உண்மை அடியவர்கள் விரைந்து வாருங்கள். நம்மை அடக்கியாளும் இறைவன்பால் அவனுடைய திருவருளைக் கொண்டும் நம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அவனுக்கு வழங்கியும் எல்லாக்குடிகளில் உள்ளவர்களும் அடிமை செய்யுங்கள். கூட்டமாகத் திருவம்பலத்துக்குச் சென்று, `உலகங் களைக் கடந்தபொருள், எல்லையற்ற ஆனந்தப் பெருக்காகிய பொருள், பண்டும் இன்றும் என்றும் உள்ள காலம் கடந்தபொருள் ஆகிய நம் பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

சிவப்பிரகாசத்தை அருளியவர்
உமாபதி சிவம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மிண்டு

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  மிண்டு

பொருள்

  • வலிமை
  • முட்டு
  • தைரியம்
  • அறிந்து செய்யும் குற்றம்
  • துடுக்கு
  • இடக்கர்ப் பேச்சு
  • செருக்கிக் கூறும் மொழி

விளக்க உரை

அவன் மிண்டு பேச்சு பேசுறான், அவனோட சேராத.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ இலரோ அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே

அபிராமி அந்தாதி

கருத்து உரை

அபிராமி அன்னையே, உனக்கும் உன் அடியார்களுக்கும் தொண்டு செய்யாமல், உன் திருப்பாதங்களை வணங்காமல், துணிவுடன் தங்கள் மனத்தில் பட்டதையே சரி என  பழங்காலத்தில் செய்தவர்கள் இப்பொழுதும் இருக்கிறார்களோ இல்லையோ தெரியாது;  அவர்களைக் கண்டு அடியேனும் அதன்படி நடந்தால் அது சரியோ அல்லது தவறோ என்பதும் அறியேன். ஆயினும் நான் தவறே செய்தாலும் என்னை வெறுக்காமல் பொறுத்தருள்.

விளக்க உரை

  • கைதவம் – தவறு அல்லது அநீதி
  • செய்தவம் – நீதி
  • இச்சையே பண்டு செய்தார் – தன் விருப்பம் கொண்டு கர்ம வினைகளுக்கு உட்பட்டு அவற்றை செய்தார். (யான் அவ்வாறு அல்ல – மறை பொருள்)

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

உண்மை விளக்கத்தை அருளியவர்
திருவதிகை மனவாசகம் கடந்தார்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மன்னுதல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  மன்னுதல்

பொருள்

  • நிலைபெறுதல்
  • தங்குதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சொன்ன இத்தொழில்கள் என்ன காரணம் தோற்ற என்னில்
முன்னவன் விளையாட்டு என்று மொழிதலும் ஆம்; உயிர்க்கு
மன்னிய புத்தி முக்தி வழங்கவும், அருளான் முன்னே
நுன்னிய மலங்கள் எல்லாம் துடைப்பதும், சொல்லலாமே

சிவஞானசித்தியார்

கருத்து உரை

முத்தொழில்களும் செய்வது சிவனின் விளையாட்டு என்று கூறுவதும் உண்டு. ஆனால்  உயிர்களுக்கு நிலையான ஞானத்தையும், முக்தியை வழங்கவும்; ஆதி தொட்டு உயிரை சேர்ந்திருக்கும் உயிரை சேர்ந்திருக்கும் மலங்களை எல்லாம் நீக்குதலும் அவன் அருளால் முத்தொழில்களாக செய்யப்படுகின்றன என்று சொல்வது அன்றோ சிறப்பு அன்றோ.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

இருபா இருப்ஃதை அருளியவர்
அருணந்திசிவம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பெட்டு

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பெட்டு

பொருள்

  • விரும்பப்பட்டது – பெள் +டு

விளக்க உரை

அவன் நிச்சயமா ஜெயிப்பான், என்னா பெட்டு கட்ற.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பெட்டடித் தெங்கும் பிதற்றித் திரிவேனை
ஒட்டடித் துள்ளமர் மாசெலாம் வாங்கிப்பின்
தட்டொக்க மாறினான் தன்னையும் என்னையும்
வட்டம தொத்தது வாணிபம் வாய்த்ததே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – ஏழாம் தந்திரம் – திருமூலர்

கருத்து உரை

இந்த இடம், அந்த இடம் என்கின்ற பேதமின்றி, எல்லா இடங்களுக்கும் விரும்பிச் சென்று, அனுபவம் எதுவும் இல்லாமல் எனது பிடிவாதக் கொள்கையினால் வலிந்து  நான் விரும்பியபடி பிதற்றிக் கொண்டும், திரிந்து கொண்டும் இருந்த என்னை சிவகுரு எதிர்ப்பட்டு என்னிடம் உள்ள அகக் குற்றங்களை  எல்லாம் அகற்றி என்னைத் தூயவனாக்கி,  என்னையும் தன்னையும் தராசுத் தட்டுக்களில் உள்ள பொருட்களைப் போல  வைத்து கொடுத்தும், கொண்டும் மாற்றிக் கொண்டான். என்னிடம் உள்ள குற்றங்களை நீக்கியமையால், நாங்கள் இருவரும் ஒத்த வினையுடைய பொருளானோம். அதனால் கொடுத்துக் கொள்ளும் வாணிபம் தடையின்றி முடிந்தது.

விளக்க உரை

  • ஒக்க மாற்றினான் – ஒவ்வாதவனையும் மாற்றினான்
  • வாணிபம் வாய்தது – பொருந்தா வாணிபம்
  • வட்டமதொத்தது – அவ்வாறு இருப்பினும், குற்றம் நீங்கின்மையால் அது கொள்ளத்தக்கதது ஆயிற்று.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

சிவஞான சித்தியாரின் முதல் நூல்
சிவஞான போதம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – உன்னுதல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  உன்னுதல்

பொருள்

  • தியானித்தல்
  • நினைத்தல்
  • பேசவாயெடுத்தல்
  • எழும்புதல்
  • முன்னங்கால்விரலையூன்றி நிமிர்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத்
துன்னியசோதி யாகியவீசன் றொன்மறை
பன்னியபாட லாடலன்மேய பரங்குன்றை
உன்னியசிந்தை யுடையவர்க்கில்லை யுறுநோயே.

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

முறுக்கேறிய சடைமுடியில் பொன் நிறமுடைய கொன்றை மலர், ஒளி பொருந்திய பொறிகளை உடைய பாம்பு ஆகியவற்றை அணிந்து ஜோதி வடிவினனும், பழமையான வேதங்களில் அமைந்துள்ள பாடல்களைப் பாடிஆடுபவனுமாகிய ஈசன் எழுந்து அருளும் திருப்பரங்குன்றை எண்ணும் சிந்தை உடையவர்க்கு வருத்தம் தரும் நோய்கள் எவையும் இல்லை.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

சிவஞான போதத்தின் சார்பு நூல் எது?
சிவப்பிரகாசம்

Loading

சமூக ஊடகங்கள்