ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – முருகு
பொருள்
- மணம்
- இளமை
- கடவுள்
- தன்மை
- அழகு
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
அருவமு முருவு மாகி அநாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்க ளாறுங் கரங்கள்பன் னிரண்டுங் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலக முய்ய.
கந்தபுராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்
கருத்து உரை
இந்த உலகம் பிழைப்பதன் பொருட்டு, சிவபெருமானின் மூன்று நிலைகளாகிய அருவம், உருவம் மற்றும் அரு உருவம் எனும் நிலைகளில், அநாதிக் பொருளாகி, பலவாகி, ஒன்றாகி, ஐந்து வடிவங்களாகிய ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம். சத்யோஜாதம் ஆகியவற்றுடன் கூடிய அதோமுகம் எனும் ஆறு முகங்களின் அம்சமாக ஜோதி வடிவமாக நிற்கும் ஈசனாகிய பிரமத்தின் மேனி வடிவம் கொண்டு கருணை பொழியும் முகங்கள் ஆறு, பன்னிரண்டு கைகள் கொண்டு முருகன் வந்து உதித்தான்.
விளக்க உரை
- சிவம் வேறு, முருகன் வேறு என்று எண்ணுபவர்களுக்காக சிவ அம்சமாக முருகனின் பிறப்பு என்பது பற்றி இப்பாடல்.
- இயற்கை மணமும், மாறா இளமையும், எல்லாப் பொருளையும் கடந்து ஒளிரும் தன்மையும், அழியா அழகும் இறைவனிடத்தில் இருப்பதால் முருகன்.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
உமாபதி சிவம் அருளிய எட்டு நூல்களின் தொகுப்பு
சித்தாந்த அட்டகம்