வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 20

 

உமை

‘ஒருவன் இறந்ததும் பிறந்ததாக நினைக்கப்படுகிறான். அப்படிப் பிறக்கையில் ஆத்மா எப்படி இருக்கும்? கர்ப்பம் ஆரம்பிக்கும் போதே ஆத்மா சேருகிறதா?

சிவன்

வேறு ஒர் ஆத்மா கர்ப்பத்தில் சேர மனிதன் இறக்கிறான். மற்றொரு ஆத்மா கர்பத்தில் சேர பூமியில் பிறக்கிறான். இவ்வுணமை எவருக்கும் தெரியாது. தெய்வத்தினால் அது உண்டாகும். பிராணிகளுக்கு தெரியாமல் இருப்பதற்காகவும், பெற்றவளுக்காகவும் அவ்விரண்டு ஆத்மாக்களும் சமமான கர்மம் செய்திருப்பதாலும் அவ்வாறு நடக்கிறது என்று நீ அறிந்துகொள். சிலர் நரகம் அனுபவித்தப்பின் ஜன்மத்தை விரும்பி அடைகின்றனர். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் ஸாம்யாமிகை எனும் மாயை இருக்கிறது. (இறந்த சரீரத்தில் இருந்த ஆத்மாவை மற்றொரு சரீரத்தில் பிறக்கச் செய்வது).

உமை

கர்மங்களை அனுபவிக்கும் ஆத்மா என்பது இல்லை. இறப்பவை பிறப்பது இல்லை; செடியில் காய் உண்டாவது போல், கடலில் அலைகள் தோன்றுவது போல் உலகில் உருவங்கள் தோன்றுகின்றன. ஆகவே தவ, தானம் முதலிய கருமங்கள் பயனற்றவைகள், எனவே மறுபிறப்பு என்பது இல்லை  என்று சிலர் கருதுகின்றனர். மற்றும் சிலர் தாம் பார்க்காதவற்றை சொல்லக் கேட்டும், தம் கண்களால் பார்க்க இயலா காரணத்தால் இவை எல்லாம் இல்லை என்றும் தீர்மானிக்கின்றனர். இது பற்றி சொல்லக் கடவீர்

சிவன்

நாஸ்திகர்கள் எதைச் சொல்கிறார்களோ அது உலகில் இல்லை. இதுதான் சாபத்தினால் கெட்டு சாஸ்திரங்களை பழிப்பவரின் மதம். சாஸ்திரத்தில் சொல்லப்படவை அனைத்தும் கண்ணால் காணப்பட்டவையே. மனிதர்கள் சாஸ்திரங்களை  உறுதி என்று கொண்டு வைராக்கியம் எனும் கத்தியினால் விருப்பங்களை விலக்கி ஸ்வர்கத்திற்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். எனவே உலகில் சிரத்தையின் பலன் பரலோகத்தில் மிகவும் பெரியது. தம்முடைய நன்மையக் கருதுபவர்களுக்கு புத்தி, சிரத்தை, அடக்கம் ஆகியவை காரணங்கள். இம்மூன்று காரணங்களாலும் ஒருங்கே அமையப் பெற்றவர்களே சொர்க்கம் செல்கின்றனர். மற்றவர்கள் இக் காரணங்கள் ஒன்று சேராமையினால் நாத்திக எண்ணம் கொண்டவராக ஆகின்றனர்.  அனுட்டானம் இல்லாமல் இருத்தல்,  பிடிவாத குணம், சாத்திரத்தில் நம்பிக்கை இல்லாமல் பகைத்தல் போன்றவற்றால் அவர்களது அன்னம் யாராலும் உண்ணப்படாமல் தாழ்ந்த நிலைக்கு செல்கின்றனர். இந்த விஷயத்தில் மிக்க அறிவுள்ளவர்களும் மயங்குகின்றனர். எத்தனை வாதம் செய்தாலும் அதனை அறிய இயலாது. இது பிரம்மாவால் உண்டாக்கப்பட்ட மாயை. இது தேவர், அசுரர் போன்றவர்களால் கூட அறிய இயலாது எனில் மனிதர்கள் எம்மாத்திரம். மனதில் சிரத்தை கொண்ட மனிதர்களால் மட்டும் சாஸ்திரங்களில் சொல்லி இருப்பது உள்ளது என்று அறியப்படும். அதனால் நன்மை பெறலாம். தனக்கு நன்மையை விரும்புகிறவன் நாத்திகர்களின் வாக்கினைக் கேட்கும் பொழுது தனக்கு காது கேளாதவன் போல் நடந்து கொள்ளவேண்டும்.

உமை

‘எம தண்டனைகள் எப்படிப்பட்டவை? எம தூதர்கள் எப்படிப்பட்டவர்? இறந்த பிராணிகள் எம லோகத்திற்கு போது எவ்வாறு? யமனுடைய இருப்பிடம் எப்படிப்பட்டது? அவன் எவ்வாறு தண்டிக்கிறான்’ இவைகளை நான் கேட்க விரும்புகிறேன்.

சிவன்

எமனது இருப்பிடம் தென் திசையில் இருக்கிறது. அது அழகானதும், நிறைய பொருட்கள் நிரம்பியதுமாகவும், பித்ரு தேவதைகள்,  பிரேத கூட்டங்கள், யம தூதர்கள், கர்மங்களினால் அகப்பட்ட பல பிராணிக் கூடங்களால் நிரம்பியதுமாக இருக்கிறது.

உலக நன்மையில் ஊக்கமுள்ள எமன் பிராணிகளின் நல்வினை, தீயவினைகளை அறிந்து எப்பொழுதும் மற்றவர்களை தண்டித்துக் கொண்டு இருக்கிறான். அவன் அந்த இடத்தில் இருந்தே பிராணிக் கூட்டங்களை கொன்று கொண்டு இருக்கிறான். அவன் மாயா ரூபங்களை தேவர், அசுரர் போன்றவர்களால் கூட அறிய இயலாது எனில மனிதன் எவ்வாறு அறிவான்? கர்மம் முடிந்த உயிர்களை தூதர்கள் பிடித்துச் செல்கின்றனர். உலகினில் தாம் செய்யும் கர்மங்களால் உயிர்கள் உத்தமானவர்களாகவும், அதர்மமானவர்களாகவும், மத்தியமானவர்களாகவும் இருக்கின்றன.

தர்மத்தில் செல்பவர்கள் உத்தமர்கள். கர்மங்களால் மூன்று உலகங்களிலும் பிறப்பவர்கள் மத்தியமர். நரகம் போகிற பாதையில் சென்று பிறப்பவர்கள் அதர்மர்கள்.

  • ரமணீயம் – செடி கொடிகளால் நிரம்பி, அழகிய பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, தூபங்கள் காட்டப்பட்டு அப்பாதையில் செல்பவர்களின் மனதை கவர்வதாகவும், இனிமையான காற்று உள்ளதாகவும் இருக்கும்.
  • நிராபாதம் – ஒளி பொருந்தியதாக இருக்கும்.
  • துர்த்தர்சம் – இருள் நிரம்பியதாக, துர்வாசனைகளுடன், புழு பூச்சி நிறைந்ததாக கடக்க கடினமான பாதையாக இருக்கும்.

ரமணீயம் எனும் மார்கத்தில் செல்பவர்களை மட்டும் யமதூதர்கள் சிறந்த துணிகளை எடுத்து வந்து சுகமாக அழைத்துச் செல்வர்.

உமை

தேகம் விட்டதும், ஒன்றிலும் பற்றில்லாதும், காட்சிக்கு அகப்படாததுமான ஆத்மாவை எடுத்து எமன் அருகில் கொண்டு செல்வது எப்படி?

தொடரும்..

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply