நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய் சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய் யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில் செவ்வைஒத்து நின்றதே சிவாயநம அஞ்செழுத்துமே
சிவவாக்கியர்
பதவுரை
நம்பிக்கைத் தரும் ‘ந’ எனும் எழுத்தாகிய நகாரம் இடுப்பிலிருந்து கால்கள் வரையிலாகவும், ‘ம’ எனும் எழுத்தாகிய மகாரம் வயிற்றுப்பகுதியாகவும், ‘சி’ எனும் எழுத்தாகிய சிகாரமானது நெஞ்சில் இருந்து இரண்டு தோள்களாகவும், சிறந்ததான ‘வ’ எனும் எழுத்தை குறிக்கும் வகரம் வாயாகவும், ‘ய’ எனும் எழுத்தை குறிக்கும் யகரம் இரண்டு கண்களாகவும் தூலத்தில் அமைந்துள்ள ஐந்தெழுத்து, சூட்சமத்தில் மெய்ப்பொருளாக அதே பஞ்சாட்சரமாக ஒத்து இருப்பதை அறிந்து அதனை தியானித்து அச் சிவமே ஐந்தெழுத்தாக இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
விளக்கஉரை
‘நமசிவய’ என்னும் மந்திரம்தான் இந்த உடல். அதனுள்தான் இறை ஆகிய சிவம் உள்ளது. யோக முறையில் வழிமுறை தெரிந்து உடலின் உள்ளே செல்ல சிவத்தை உணரலாம்.
அறிவுடைப் பொருளாகிய சேதனம், அறிவற்ற பொருளாகிய அசேதனம் ஆகியவற்றின் தொடக்கமாக இருப்பவரும், அவ்வாறான சேதனம், அசேதனம் பொருள்களுக்கு முடிவாக நின்று இருப்பவரும், பிரபஞ்சத்தின் எட்டுத் திசைகளிலும் பற்றினை ஏற்படுத்துபவரும், அப்பற்றினை விலக்கி வீடு பேற்றினை உயிர்களுக்கு அளிப்பவரும், விடையேறுதலை விரும்பி செய்பவரும், சிவந்து எரியும் தீயை போற்றி காத்து வரும் அந்தணர்கள் வாழும் மிழலை நகரில் உள்ளவரே! அடியேனைக் காலன் தென் திசையில் செலுத்தும் போது, யான் தங்களை மறந்தாலும் தாங்கள் அடியேனை மனத்தில் குறித்து வைத்துக் கொண்டு காப்பாற்ற வேண்டும்.
உருவமு முயிரு மாகி யோதிய வுலகுக் கெல்லாம் பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க அருவிபொன் சொரியு மண்ணா மலையுளா யண்டர் கோவே மருவிநின் பாத மல்லான் மற்றொரு மாடி லேனே
பதப் பிரிப்புடன்
உருவமும் உயிரும் ஆகி, ஓதிய உலகுக்கு எல்லாம் பெருவினை பிறப்பு வீடாய் நின்றஎம் பெருமான், மிக்க அருவிபொன் சொரியும் அண்ணா மலைஉளாய், அண்டர் கோவே, மருவிநின் பாதம் அல்லால் மற்றொரு மாடு இலேனே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
அசேதனப் ப்ரபஞ்சம் மற்றும் காரண மாயை என குறிக்கப் பெறும் சடமாகி, சேதனப் பிரபஞ்சம் எனக் குறிக்கப்படும் சித்தாகிய ஆன்மாக்களாகவும் ஆகியவனாய், அவ்வாறு குறிப்பிடப்படும் உயிர்களுக்கெல்லாம் மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும் ஏனைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளையும், பிராப்தம் ஆகிய நிகழ்கால வினைகளையும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகளையும் கொண்டு ஏற்படும் பிறப்பும் பெற்று கர்மங்கள் விடுத்தப் பின் ஏற்படும் வீடு பேற்றிற்கு காரணமாகவும் நின்ற எம் பெருமானே! அருவி போன்று பொன்னைச் சொரியும் அழகிய அண்ணாமலையில் உள்ள தேவர்களின் தலைவனே! உன் திருவடிகளைப் பொருந்தி நிற்றல் தவிர வேறு செல்வம் இல்லாதேன் ஆவேன்.
விளக்கஉரை
‘மலையுளாய்’ என்றது கண்டது உரைப்பது பற்றியதால் அருளுரை எனவே பொய்யாகாது.
‘நீர் மிகுந்த அருவிகள் பொன்னைச் சொரியும்’ என சில இடங்களில் விளக்கப்பட்டுளது. பொருள் பொருந்தாமையால் விலக்கப்பட்டுள்ளது.
திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்
பதவுரை
அனாதி காலம் தொட்டு கர்த்தாவுக்கு ஆளாகி திருவருளுடனே கூடிப் பின்பு அன்பு வழியுடன் பக்தி கொண்டு சென்றவர்களில் ஒருவரானாலும் சிவானுபவம் இப்படியிருந்ததென்று சொல்லக்கூடிய உவமை இதுவரையும் பொருந்தினதில்லை; ஆகையால் இப்போது இந்தச் சிவானுபத்தை இப்படியிருந்ததென்று எப்படிச் சொல்லப்போகிறேன் எனில் அந்தச் சிவானுபவம் போலவே இருந்தது.
விளக்கஉரை
சிவானுபவத்துக்கு வேறோர் உவமை சொல்லக்கூடாது
சிவானுபவம் என்பது அனுபவிக்க முடியுமே அன்றி எவ்வாறு இருந்ததென்று அளவிட்டுக் கூறமுடியாததாகும். அதற்கு ஒப்புமை எதுவும் கூற இயலாது
விடிவ தறியார் வெளிகாண மாட்டார் விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார் கடியதோர் ஊன்இமை கட்டுமின் காண்மின் விடியாமை காக்கும் விளக்கது வாமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
புறப் பொருளைக் காணும் கண் இல்லாதவர்கள் இருளிலும், விடி காலை புலர்ந்தாலும், விடிந்தப் பின்னும் அதை அறியாமல் இருப்பதோடு விடிந்தபிறகும் ஒளியில் பொருள்களை கண்டு பயன்பாடு கொள்ளவும் மாட்டார்கள். அதுபோலத் திருவருளை உணரும் பக்குவம் இல்லாதவர்கள், தமக்குத் திருவருள் முன்னின்று அருளுதலை உணரமாட்டாமல் இருந்து, அவ்வாறு அருளிய பின்னும் அந்த அருள் நலத்தை நுகரவும் மாட்டார்கள். ஆதலினான் நீங்கள் ஊனக் கண்ணை விலக்கி, நுண்ணிதாகிய ஞானக் கண்ணைத் திறந்து திருவருளைக் காண்டால், அத்திருவருளே அறியாமையாகிய இருள் வாராதபடிக் காக்கின்ற ஒளியாகி முன் நிற்கும்.
விளக்கஉரை
இருளில் அழுத்துவதாகிய அபக்குவம் நீங்குமாறு முயல வேண்டும் என்பது பற்றிய பாடல்.
‘திருவருளே விளக்கு’ – நீங்கள் அவ்விளக்கையே உமக்குக் காட்டாகக் கொள்ளுதல் வேண்டும்` எனும் பொருளில்.
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனபடும் அபயாம்பிகை தாயானவள், ஈசனைப் போல் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் மகேஷ்வரியாகி ஐந்து முகம் கொண்டவள்; வாமை, சேட்டை, ரௌத்திரி, காளி, பலவிகரணி, பலபிரமதனி, சர்வபூததமனி, சக்தி, மனோன்மணி ஆகிய ஒன்பது நவ சக்தியானவள்; கௌமாரி வடிவத்துடன் ஆறு முகம் கொண்டவள்; பிராமி நிலையில் நான்கு முகம் கொண்டவள்; அலையில் துயிலும் திருமால் போன்று வைஷ்ணவியானவள்; உதயகாலத்து சூரியனைப்போல் செந்நிறமும், ஆகாய வடிவமாகவும் இருப்பவள்; வெண் மேகம் போன்ற நிறத்தினை உடையவள்; ஒன்றுக்குஒன்றுமேலாக இருந்து முக்தி தர வல்லவள்; அவினாபாவசத்தி ஆகிய சிவத்தில் இருந்து பிரியா ஆற்றல் கொண்ட சிவரூபம் கொண்டவள்; மங்கள வடிவமானவள்; பஞ்சாட்ரத்தின் பொருளாக விளங்குபவள்; கால்களில் பரிபுரம் எனும் சிலம்பு அணிந்தவள்; தன் திருக்கரங்களில் பாசத்தினை வைத்து இருப்பவள்; அகிலத்திற்கு நடு நாயமாக இருக்கும் இமயமலையை இருப்பிடமாக கொண்டவள்; தாமரை மலர் மீது அமர்ந்து இருப்பவள்; சிவபுரத்தினை ஆட்சி செய்பவள்; உலகிற்கு அன்னையாக இருப்பதால் கனத்த தனத்தை உடையவள்; சத்துவம், இராசதம், தாமதம் எனும் மூவகைக் குணங்கள் கொண்ட பல்வேறு தேவி வடிவங்களாகி இருப்பவள்; தாமரை போன்ற முகம் கொண்டவள்; கற்பக விருட்சமாக இருப்பவள்; கருணை எனும் அபத்தினை திருக்கரத்தில் கொண்டவள்; தவ குணம் உடையவள்; கயிலாசனத்தில் வீற்றிருப்பவள்; அன்பு, இனிமை, உண்மை, நன்மை, மென்மை, சிந்தனை, காலம், சபை, மவுனம் ஆகிய ஒன்பது குணங்கள் கொண்டவள்; காந்தள் மலர் போல் நான்கு கரம் கொண்டவள்.
விளக்கஉரை
அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’ என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
பதவுரை
பட்டை என்னும் ஆபரத்தின் ஒரு உறுப்பினை அணிந்தவனே, சட்டையப்பனே, வடுகனே, காழிப்பதியில் உறையும் ஆபதுதாரணனே, பெரும் காட்டினைப் போன்றதும், திசைகள் அற்றதாகவும் செய்யும் இனிய சொல்லைச் கூறும் மாதர்கள் மேல் மயக்கம் கொண்டு யான் இளைத்து விட்டேன். காலங்களால் அளவிடமுடியாததான முற்காலத்தில் திருமாலாலும், பிரம்மனாலும் காண இயலாதவாறு நெடிய அளவில் வளர்ந்தும், வேதம் எனப்படும் மறைகளாலும் காண இயலா திருவடியை நீ அருள்வாய்.
விளக்கஉரை
பட்டை – மரத்தோல்; வாழைப் பட்டை; பொற்சரிகைப்பட்டி; கழுத்துப் பட்டை; பனம் பட்டை; போதிகை; மணியைத் துலக்கும்பட்டை; அணிகலனின் ஓர் உறுப்பு (யாழ்); நீர் இறைக்கும் கூடை; மரவுரி; தகடு; பனங்கை ( ‘நிர்வாணம் சுனவாகனம்’ என பைரவர் த்யான ஸ்லோகத்தில் இருப்பதாலும் மர உரி தரித்தவர் எனும் கருத்து விலக்கப்படுகிறது)
பண்டு – பழமை; முற்காலம்; முன்; தகாச்சொல்; நிதி ( குறிப்பு : பண்டிருவர் காணாப் படியார் போலும் – பண்டு மாலும் அயனும் காண இயலாத நிலையினரும் (6.89.3))
குடவாயிலில் எனும் தலத்தில் நிலையாக விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய இறைவனானவன், அலைகள் ஏற்படுத்தும் கங்கையை அணிந்தவன்; அனலை ஏந்தியவன்; எண்குணத்துள் ஒன்றான மும்மலமில்லாதவன்; கபாலம் எனும் பிரமகபாலத்தில் யாசகம் பெறுபவன்; யகங்கள் கடந்தவன்; நடுங்கத்தக்க கொலைக்கருவியாகிய திரிசூலத்தையும், மழுவாயுதம் முதலியவற்றையும் ஏந்தியவன்.
விளக்கஉரை
சதுரன் – ‘மூவர்க்கும் முதல்வன்’ என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளன. திறமையுடையவன்; நகரவாசி; பேராசைக்காரன் போன்ற பொருள்களும் இருக்கின்றன. பொருத்தமின்மை காரணமாக இவைகள் விலக்கப்படுகின்றன.
இந்த உலகில் நீண்ட நெடுங் காலம் உயிர்வாழ்ந்து வாழும் காலத்தில் சிற்றின்ப நுகர்ச்சிகளைப் பொருந்தி இயமனுடைய ஏவலரால் கொல்லப்பட்டு அழிவதன் முன்னமே, குளிர்ந்த நீர் நிலைகளையும், தாளூன்றிய தாமரைப் பூக்களையுடைய பொய்கைகளையும் உடையதான அழகிய குளிர்ந்த கழிப்பாலைப் பெருமானுக்கு அடிமையாகி வலிமை உடையவர்களாகி யம பயத்திலிருந்து விடுபட்டோம்.
ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றின் சக்திகளை இறைவன், தன் ஆற்றலைக் கொண்டு தூண்டி அவை செயல்படுமாறு செய்து உயிர்களின் பந்தம் மெலிவடையச் செய்யும் மறைத்தல் தொழிலாகிய திரோதான சக்தி கொண்டு ஆன்மாவில் பதியும் படி செய்யும் திருப்பெருந்துறை இறைவன், வையத்து இருந்து தன் வேலை மடுத்து என் மனதில் நுழைந்து ஊடுறுவச் செய்தான். இதற்குக் காரணமாக நான் செய்த பிழையை அறிந்திலேன்; அவனது திருவடியையே கைத்தொழுது உய்யும் வகையின் உயிர்ப்பு நிலையையும் அறிந்திலேன்.
சங்ககால இலக்கியங்களுள் பரிபாடல் எட்டுத் தொகை என்ற பிரிவிற்குள் வருகிறது. தொல்காப்பியர் காலத்திற்கு முந்தைய பரிபாடல்கள் பெரும்பாலும் அகப்பாடல்களாாகவே இருந்துள்ளன. அதன் பின்னர் கிடைக்கபெற்ற பரிபாடல்கள் பெரும்பாலும் இறைவனை ஏற்றிப் பாடும் பாடல்களாகவே உள்ளன. வேதம் குறித்து, வேத முதல்வனான திருமால் குறித்தும் கூறும் பாடல்கள் முக்கியமானவை.
கடுவனிள எயினனார் என்ற ஒரு புலவர் பாடிய பரிபாடல் ஒன்றில் திருமாலை ஏற்றிக் கூறும்போது,” மாவிசும்பு ஒழுகு புனல் வறள அன்னச் செவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோய்,”என்று திருமாலைப் புகழ்கிறார். அதாவது ஒருமுறை கடும் புயலுடன் கூடிய மழை பொழிந்தபோது திருமால் ஒரு நெடிய அன்னச் சேவலாக வடிவெடுத்து தனது இரண்டு சிறகுகளையும் விரித்து இவ்வுலகை காத்ததாக ஒரு செய்தி கூறப்படுகிறது.
அப்படி ஒரு புராண கதை புராணங்களிலோ , பாகவதத்திலோ, மகாபாரதத்திலோ படித்த ஞாபகம் இல்லை.
தகவல் அறிந்தவர்கள் விளக்கவும்
விடை
அன்னச்சேவல் என்பது குதிரையை குறிக்க சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பரிமுகக் கடவுளாகி அவதாரம் எடுத்து காத்தவர் என்றும் பொருள் கொள்ளலாம். புனல் என நீர் நிலைகளைக் கொண்டாலும், வறளச் செய்து வேதங்களை காப்பாற்றியவன் என்பதாலும் இந்த நிலைப்பாடைக் கொள்ளலாம்.
யோக மரபில் சில இடங்களை வாசி வேகத்தை குதிரையுடன் ஒப்பிட்டுக் கூறுவார்கள். அட்டமா சித்தியில் ஒன்றான பிராப்தி என்பது தமது ஆற்றலால் வெயில் மழை முதலிய கால நிலைகளை மாறச் செய்தலைக் குறிக்கிறது. அவ்வாறு இருந்து கோவர்த்தன கிரியை குடையாக கொண்டதையும் குறிக்கலாம்.
காஞ்சித் திருத்தலத்தில் உறையும் மேற்றளி ஆனவர், தெற்குப் பகுதியை ஆண்ட இராவணன், தனது கர்வத்தால் கயிலாய மலையைப் பெயர்த்து எடுக்க முற்பட்ட போது, சிறந்த அழகான ஆபரணங்களை அணிந்த பெண்ணாகிய பார்வதி நடுக்கம் கொண்டது கண்டு, நடுக்கம் நீக்குவதன் பொருட்டு தனது கால் விரல்களால் கயிலாய மலையை அழுத்த, அதனால் அவன் தலைகளை நெரியுமாறு செய்த போது, தன் தவற்றை உணர்ந்து, கரும்பு போன்று இனிய கீதங்களைப் பாடியதால் அவன் தவற்றினை மன்னித்து அதனால் அவனுக்கு அருள் செய்தவர் ஆவார்.
விளக்க உரை
தென்னவன் – இராவணன்
சேயிழை – கல் இழைத்துச் செய்யப்பட்ட அணிகளைப் பூண்டவள். இழை நூலிழையாகக் கொண்டு தாலி எனலும் கூடும்
மன்னவன் – என்றும் நிலையாயிருப்பவன்.(கயிலைத் தலைவன்)
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்று. இலங்கையின் நான்கு திசைகளிலும் காவல் காத்ததாகக் கூறப்படும் நான்கு ஈச்சரங்கள் – 1. நகுலேச்சரம், 2. திருக்கோணேச்சரம், 3. திருக்கேதீச்சரம், 4. தொண்டேச்சரம்
கேது ஈசனை வழிபாட்டு அருள்பெற்ற தலம் திருக்கேதீஸ்வரம். கேது+ஈச்சரம்=கேதீச்சரம் (திருக்கேதிச்சரம்) 1
சூரபதுமனின் வழியில் வந்த துவட்டா, பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித் தீர்த்ததில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டு திருவருள் கைகூடி பிள்ளைப் பேறு பெற்றத் தலம். துவட்டா உருவாக்கியதால் துவட்டா, காலப் போக்கில் பெருநகரமாய் ஆனதால் மாதுவட்டா
மாந்தை என வழங்கப்பட்ட தமிழ்ப்பெயரின் பாளி மொழிபெயர்ப்பே மகாசித்தா..மகா – பெரிய, , தித்தா – இறங்குதுறை அல்லது துறைமுகம். பெரிய துறைமுகம்
இராமர் சிவபக்தனான இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரமகத்தி தோஷம் போக்க வெள்ளிலிங்கம் செய்து வழிபட்டத் தலம்
நாகர்கள் வழிபாடு செய்த திருத்தலமானதால் நாகநாதர்
பஞ்சபாண்டவர்களுள் ஒருவராகிய அர்ஜுனன், தீர்த்தியாத்திரையின் போது தென்னகத்தலங்களை வழிபட்டபின்னர் வழிபட்டத்தலம்.
உலகிலேயே மிகபெரிய வடிவிலான சோமாஸ்கந்தர் மூர்த்தம் உள்ள தலம்
‘பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர் கேதீச்சர மேவினார் கேதாரத்தார்..’ என்று திருநாவுக்கரசரால் பாடப்பெற்றத் திருத்தலம் (திருவீழிமிழலைப்பதிகம் – ஆறாம் திருமுறை)
‘..நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்..’ என்று அகநானூறிலும், ‘…புன்னாகச்சோலை புனற்றெங்கு சூழ் மாந்தை…’ என்று முத்தொள்ளாயிரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளத் தலம்.
‘ஆர்கலிசூழ் தென்னிலங்கை அழகமர் மண்டோதரிக்குப் பேரருள் இன்பமளித்த பெருந்துறை மேயபிரான்’ எனும் குயிற்பத்தில்(திருவாசகம்) உள்ள பெருந்துறை என்று மாந்தை நகரம் குறித்த வரிகள்.
கோயிலுக்கு அருகினில் உள்ள மடங்கள் – சம்மந்தர் மடம், சுந்தரர் மடம், மலேசியா மடம், அடியார் மடம், சிவபூஜை மடம், நாவலர் மடம்
காலை 7.00 மணி முதல் 1.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு திருக்கேதீஸ்வரர் திருக்கோயில், மாதோட்ட நகரம், மன்னார் மாவட்டம், இலங்கை
தென்னிலங்கை குலத்தலைவனாகவும் மன்னனாகவும் ஆன இராவணன் கயிலைமலையை நெருக்கி எடுத்தபோது அவன் முடி,வலிமை வாய்ந்த தோள்கள் ஆகியனவற்றை நெரித்து அவன் தலைக்கனம் அழித்துப் பின் அவனது பாடல்கேட்டு அவனுக்கு அருள் செய்த தலைவனான ஈசன், பொன், முத்து, மாணிக்கம், மணிகள் நிறைந்த மாதோட்ட நன்னகரில் அன்போடு அன்பர்கள் தியானித்து வழிபடும் கேதீச்சரத்தில் உள்ளார்.
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 80
திருமுறை எண் 8
அட்ட மூர்த்தங்களாகிய நிலம், நீர், தீ, காற்று, வானம், சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா ஆகிய எண் பொருள்களாக நிற்பவனாகிய திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தனது இடுப்பில் பாம்பினை கட்டிக்கொண்டு, வண்டுகள் தேனை உண்டு ஆரவாரம் செய்கின்ற சோலைகளையுடைய ‘மாதோட்டம்’ என்னும் நல்ல நகரத்தில், பட்டத்தை அணிந்த அழகிய நெற்றியை உடையவளோடு , பாலாவி ஆற்றின் கரைமேல் மேலானவனாயும், நம்மை ஆளுபவனாயும் இருக்கின்றான்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயே! பாதங்களில் சிறிய சதங்கை, அந்த பாதங்களை பணிந்து வணங்குவதான சிலம்பு, கிங்கிணி, காலிலே படந்து இருப்பது போன்ற மணி ஓசை எழுப்பும் பாடகம், தண்டை, அதில் படிந்திருப்பது போல் தோற்றம் ஏற்படுத்தும் கொலுசு, துவள்வது போன்ற இடையில் பட்டு, பெருமாள் அணிந்திருக்கக்கூடியது போன்ற பீதாம்பரம், விட்டுப் பிரியாத அரைஞாண் மாலைகள், இரு புயங்கள், அவற்றுடன் ஒட்டி இருக்கும் மார்பினில் கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், வைடூரியம், வைரம் இவற்றுடன் முத்துக்கள் பதிக்கப்பட்டதான ஒன்பது வகை மணிகள் கூடிய மாலையை அணிந்து, மீன்களை ஒத்த கண்கள் கொண்டவளாகி, தாமரை மலர் போன்ற நெற்றி, பொன் போன்ற பிரகாசம் உடைய கூந்தல், சந்திரனை ஒத்த முகம் கொண்டு ஐயனோடு வாதாடுவதில் பேரன்பு கொண்டவளாகி அடியார்களுக்கு பேரின்ப ரசத்தினை வழங்கும் கொடியைப் போன்றவளாகி இருக்கிறாய்! நீ ஏற்றதால் உன்னிடத்தில் பொருந்தி நின்றேன்.
விளக்கஉரை
அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’ என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
சிவபெருமான் முனிவர்களுக்காக பாடலாக உடைய வேதத்தை அருளிச் செய்தவர். புறங்காடு எனப்படும் சுடுகாட்டினை ஒரு இடமாகக் கொண்டு எவ்விதமான குறையும் இல்லாமல் வாழ்பவர். இடுப்பிற்கு கீழ் ஒற்றை ஆடையை அணிபவர். திருச்சடை முடியில் கங்கையைத் தாங்குபவர். இடபத்தினை வாகனமாகக் கொண்டவர். இவ்வாறான சிவபெருமான் திருப்பைஞ்ஞீலியில் தினந்தோறும் பூதகணங்கள் சூழ்ந்து நின்று பணிசெய்யது வீற்றிருந்து அருளுகின்றார்.
எட்டு திசைகளிலும் சென்று மார்க்கண்டேய முனிவரின் உயிரை கவருவதற்காக போராடிய காலனின் உயிரைக் கவர்ந்தவனும், இராவணனின் பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு திருவடியை ஊன்றியவனும் ஆகிய சிவன் விரும்பி உறையும் இடம் தேனீகளின் ஒலிப்பு சூழ்ந்துள்ளதுமான திருமாகாளமாகும்.
விளக்கஉரை
எட்டும் இருபத்திரண்டும் (8+22) – பத்துத் தலைகளும் இருபது கைகளுமாகிய முப்பதும்
திதத்தத் தத்தித்த திதி தாதை தாத துத்தி தத்தி (தா) தித தத்து அத்தி ததி தித்தித்ததே து துதித்து இதத்து (ஆ) தி தத்தத்து அத்தி தத்தை தாத திதே துதை தாது அதத்து (உ) தி தத்து அத்து அத்தி தித்தி தீ தீ திதி துதி தீ தொத்ததே.
அருணகிரிநாதர்
பதவுரை
‘திதத்த ததித்த’ என்னும் தாள வாத்திய இசைகளை தன்னுடைய திரு நடனத்தின் மூலம் நிலைபடுத்துமாறு செய்கின்ற உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும், மறைகளை முழுவதும் முதலில் அறிந்ததால் கிழவோனாகிய பிரம்மனும், புள்ளிகள் கொண்ட படம் விளங்குமாறு இருக்கும் பாம்பாகிய ஆதிசேஷனின் முதுகில் இருந்த இடத்திலேயே நிலைபெற்று, அலை வீசுகின்ற சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் தன்னுடைய இருப்பிடமாகக் கொண்டும், தயிர், மிகவும் இனிப்பாக இருப்பதாக சொல்லி அதை மிகவும் வாங்கி உண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் போற்றி வணங்குகின்ற பேரின்ப சொரூபியாகிய மூலப்பொருளே, பெரும் தந்தங்களை உடைய யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட கிளி போன்ற தேவயானையின் தாசனே, பல தீமைகள் நிறைந்ததும் தோல், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும், மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும், பல ஆபத்துக்கள் நிறைந்ததும் ஆன எலும்பை மூடி இருக்கும் தோல் பை ஆகிய இந்த உடம்பு, நெருப்பினால் தகிக்கப்படுவதாகிய எரியுட்டப்படும் அந்த அந்திம நாளில், உன்னை இத்தனை நாட்களாக துதித்து வந்த என்னுடைய சித்தத்தை உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.
விளக்கஉரை
புலமை விளையாட்டு / சொல்விளையாட்டு – செய்யுள் இயற்றுவோர் தம் சொல்லாண்மையைக் காட்டக் கையாளும் ஒரு வகை உத்தி.
இந்த பாட்டிற்கு உரை கூற முடியாமல் வில்லிபுத்தூரார் அருணகிரியாரிடம் தோல்வியுற்ற போது இனி போட்டி வைத்து எவர் காதையும் அறுக்கலாது எனக் கூறி, வில்லிபுத்தூராரை மன்னித்ததால் அதன் பின் மகாபாரதத்தைத் தமிழில் வில்லிபாரதமாக எழுதினார்
ஆக்கி ஒருபொருளா ஆதாரத் தப்பொருளை நோக்கி அணுவில் அணுநெகிழப் – பார்க்கில் இவனாகை தானொழிந்திட் டேகமாம் ஏகத்(து) அவனாகை ஆதார மாம்
திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார்
பதவுரை
தன்னிலே தன்னை விளங்குமாறு செய்து விசாரித்தினால், எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கும் பிரபஞ்சத்திலே உண்டான விஷயங்களை விசாரித்து அறிந்து இவையெல்லாம் பலப்பல மாயைகள் தான் என அறிந்து அவைகளை அன்னியமாக்கி அணுவிலும் அணுவானவற்றைக் காணும் போது, நம்முடைய ஞானத்தினாலே உயிர்வாழ்கிறோம் எனும் தன்மை கெட திருவருளோடு ஒன்றாவன் எனும் தன்மை இதற்கு ஆதாரமாக விளங்கும்.
இசை போன்று இனிய சொல்லை உடைய உமையினை ஒரு பாகத்தில் உடையவனே! உனக்கு என்று உரிமை ஆனவர்களுக்கு, உண்ணுதலுக்கு ஏற்ற அருமையான அமுதமே! உடையவனே! அடியேனை, மண் உலகில் பொருந்திய எல்லா பிறப்புகளையும் அறுத்து, ஆட்கொள்ளுதல் பொருட்டு ‘நீ வருக’ என்று அழைத்ததனால் உன் திருவடிகளைக் கண் கொண்டு அடியேன் உய்ந்த முறை ஏற்பட்டது.
விளக்கஉரை
மண்ணார்ந்த பிறப்பறுத்திட்டாள்வாய்நீ – எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதங்கள் – 1. தேவர் – 11,00,000 யோனி பேதம், 2. மனிதர்- 9,00,000 யோனி பேதம், 3. நாற்கால் விலங்கு – 10,00,000 யோனி பேதம்,
4. பறவை – 10,00,000 யோனி பேதம், 5. ஊர்வன – 15,00,000 யோனி பேதம், 6. நீர்வாழ்வன – 10,00,000 யோனி பேதம். 7. தாவரம் – 19,00,000 யோனி பேதம் ஆக மொத்தம் 84,00,000 யோனி பேதம். .அத்தனை யோனி பேதங்களும் மனித பிறப்பினை அடிப்படையாக கொண்டவை. ஒலி, தொடு உணர்வு, உருவம், சுவை, வாசனை ஆகியவை கொண்டு மண்ணின் தத்துவமாக கருத்தில் கொண்டு அது விரிந்து தொண்ணுற்று ஆறு தத்துவங்களையும் கடந்து நின்று வினை நீக்கி அருளுபவன் என்றும் கொள்ளலாம்.
உடையவன் – உரியவன், பொருளையுடையவன், கடவுள், செல்வன், தலைவன்