பாடல்
நாட்பட் டிருந்தின்ப மெய்தலுற் றிங்கு நமன்றமராற்
கோட்பட் டொழிவதன் முந்துற வேகுளி ரார் தடத்துத்
தாட்பட்ட தாமரைப் பொய்கையந் தண்கழிப் பாலையண்ணற்
காட்பட் டொழிந்தமன் றேவல்ல மாயிவ் வகலிடத்தே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
இந்த உலகில் நீண்ட நெடுங் காலம் உயிர்வாழ்ந்து வாழும் காலத்தில் சிற்றின்ப நுகர்ச்சிகளைப் பொருந்தி இயமனுடைய ஏவலரால் கொல்லப்பட்டு அழிவதன் முன்னமே, குளிர்ந்த நீர் நிலைகளையும், தாளூன்றிய தாமரைப் பூக்களையுடைய பொய்கைகளையும் உடையதான அழகிய குளிர்ந்த கழிப்பாலைப் பெருமானுக்கு அடிமையாகி வலிமை உடையவர்களாகி யம பயத்திலிருந்து விடுபட்டோம்.
விளக்க உரை
- வன்மை – நமன் தமரால் கொல்லப்பட்டு ஒழிவதன் முந்திச் சிவனடிமையாகி நின்ற திறம் குறித்தது
- நாள் பட்டிருத்தல் – நெடுங்காலம் வாழ்தல். இன்பம் எய்தல்
- உறுதல் – சிற்றின்பம் அடைய விரும்புதல்
- தமர் – எமதூதர்
- கோட்படுதல் – கொள்ளப்படுதல்
- முந்துறல் – முந்திக் கொள்ளல்