அமுதமொழி – விளம்பி – ஆனி – 2 (2018)

பாடல்

தென்னவன் மலையெ டுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன் விரலா லூன்ற மணிமுடி நெரிய வாயாற்
கன்னலின் கீதம் பாடக் கேட்டவர் காஞ்சி தன்னுள்
இன்னவற் கருளிச் செய்தார் இலங்குமேற் றளிய னாரே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

காஞ்சித் திருத்தலத்தில் உறையும் மேற்றளி ஆனவர், தெற்குப் பகுதியை ஆண்ட இராவணன், தனது கர்வத்தால் கயிலாய மலையைப் பெயர்த்து எடுக்க முற்பட்ட போது, சிறந்த அழகான ஆபரணங்களை அணிந்த பெண்ணாகிய  பார்வதி  நடுக்கம் கொண்டது கண்டு, நடுக்கம் நீக்குவதன் பொருட்டு தனது கால் விரல்களால் கயிலாய மலையை அழுத்த, அதனால் அவன் தலைகளை நெரியுமாறு செய்த போது, தன் தவற்றை உணர்ந்து, கரும்பு போன்று இனிய கீதங்களைப் பாடியதால் அவன் தவற்றினை மன்னித்து  அதனால் அவனுக்கு அருள் செய்தவர் ஆவார்.

விளக்க உரை

 

  • தென்னவன் –  இராவணன்
  • சேயிழை – கல் இழைத்துச் செய்யப்பட்ட அணிகளைப் பூண்டவள். இழை நூலிழையாகக் கொண்டு தாலி எனலும் கூடும்
  • மன்னவன் – என்றும் நிலையாயிருப்பவன்.(கயிலைத் தலைவன்)
  • நெரிய – நொறுங்க
  • கன்னலின் – கரும்பினைப் போலும் இனிமை தரும்
  • கீதம் – சாமகானம்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply