பாடல்
நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்
சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில்
செவ்வைஒத்து நின்றதே சிவாயநம அஞ்செழுத்துமே
சிவவாக்கியர்
பதவுரை
நம்பிக்கைத் தரும் ‘ந’ எனும் எழுத்தாகிய நகாரம் இடுப்பிலிருந்து கால்கள் வரையிலாகவும், ‘ம’ எனும் எழுத்தாகிய மகாரம் வயிற்றுப்பகுதியாகவும், ‘சி’ எனும் எழுத்தாகிய சிகாரமானது நெஞ்சில் இருந்து இரண்டு தோள்களாகவும், சிறந்ததான ‘வ’ எனும் எழுத்தை குறிக்கும் வகரம் வாயாகவும், ‘ய’ எனும் எழுத்தை குறிக்கும் யகரம் இரண்டு கண்களாகவும் தூலத்தில் அமைந்துள்ள ஐந்தெழுத்து, சூட்சமத்தில் மெய்ப்பொருளாக அதே பஞ்சாட்சரமாக ஒத்து இருப்பதை அறிந்து அதனை தியானித்து அச் சிவமே ஐந்தெழுத்தாக இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
விளக்க உரை
- ‘நமசிவய’ என்னும் மந்திரம்தான் இந்த உடல். அதனுள்தான் இறை ஆகிய சிவம் உள்ளது. யோக முறையில் வழிமுறை தெரிந்து உடலின் உள்ளே செல்ல சிவத்தை உணரலாம்.