பாடல்
மூலம்
உருவமு முயிரு மாகி யோதிய வுலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியு மண்ணா மலையுளா யண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான் மற்றொரு மாடி லேனே
பதப் பிரிப்புடன்
உருவமும் உயிரும் ஆகி,
ஓதிய உலகுக்கு எல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய்
நின்றஎம் பெருமான், மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா
மலைஉளாய், அண்டர் கோவே,
மருவிநின் பாதம் அல்லால்
மற்றொரு மாடு இலேனே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
அசேதனப் ப்ரபஞ்சம் மற்றும் காரண மாயை என குறிக்கப் பெறும் சடமாகி, சேதனப் பிரபஞ்சம் எனக் குறிக்கப்படும் சித்தாகிய ஆன்மாக்களாகவும் ஆகியவனாய், அவ்வாறு குறிப்பிடப்படும் உயிர்களுக்கெல்லாம் மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும் ஏனைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளையும், பிராப்தம் ஆகிய நிகழ்கால வினைகளையும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகளையும் கொண்டு ஏற்படும் பிறப்பும் பெற்று கர்மங்கள் விடுத்தப் பின் ஏற்படும் வீடு பேற்றிற்கு காரணமாகவும் நின்ற எம் பெருமானே! அருவி போன்று பொன்னைச் சொரியும் அழகிய அண்ணாமலையில் உள்ள தேவர்களின் தலைவனே! உன் திருவடிகளைப் பொருந்தி நிற்றல் தவிர வேறு செல்வம் இல்லாதேன் ஆவேன்.
விளக்க உரை
- ‘மலையுளாய்’ என்றது கண்டது உரைப்பது பற்றியதால் அருளுரை எனவே பொய்யாகாது.
- ‘நீர் மிகுந்த அருவிகள் பொன்னைச் சொரியும்’ என சில இடங்களில் விளக்கப்பட்டுளது. பொருள் பொருந்தாமையால் விலக்கப்பட்டுள்ளது.