பாடல்
அந்தமு மாதியு மாகிநின் றீர்அண்ட
மெண்டிசையும்
பந்தமும் வீடும் பரப்புகின் றீர்பசு
வேற்றுகந்தீர்
வெந்தழ லோம்பு மிழலையுள் ளீர்என்னைத்
தென்றிசைக்கே
உந்திடும் போது மறக்கினு மென்னைக்
குறிக்கொண்மினே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
அறிவுடைப் பொருளாகிய சேதனம், அறிவற்ற பொருளாகிய அசேதனம் ஆகியவற்றின் தொடக்கமாக இருப்பவரும், அவ்வாறான சேதனம், அசேதனம் பொருள்களுக்கு முடிவாக நின்று இருப்பவரும், பிரபஞ்சத்தின் எட்டுத் திசைகளிலும் பற்றினை ஏற்படுத்துபவரும், அப்பற்றினை விலக்கி வீடு பேற்றினை உயிர்களுக்கு அளிப்பவரும், விடையேறுதலை விரும்பி செய்பவரும், சிவந்து எரியும் தீயை போற்றி காத்து வரும் அந்தணர்கள் வாழும் மிழலை நகரில் உள்ளவரே! அடியேனைக் காலன் தென் திசையில் செலுத்தும் போது, யான் தங்களை மறந்தாலும் தாங்கள் அடியேனை மனத்தில் குறித்து வைத்துக் கொண்டு காப்பாற்ற வேண்டும்.