அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 17 (2021)


பாடல்

ஆரிடம் பாடில ரடிகள் காடலால்
ஓரிடங் குறைவில ருடையர் கோவணம்
நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும்
பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துசிவபெருமானின் தோற்றத்தையும் குணங்களையும் உரைத்து, அவர் உறையும் இடம் திருப்பைஞ்ஞீலி என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

சிவபெருமான் இருடிகள் எனப்படும் முனிவர்களுக்காக வேதத்தை அருளிச் செய்தவர். அவரது இருப்பிடம்சுடுகாடு என்றாலும் அதனால் ஒரு குறையும் இல்லாதவர். அவர் அணிவது கோவண ஆடை.  சடைமுடியில் கங்கையைத் தாங்கியவர். இடபத்தை வாகனமாக கொண்டவர். தினந்தோறும் பூதகணங்கள் சூழ்ந்து நின்று பணிசெய்ய திருப்பைஞ்ஞீலியில் வீற்றிருந்து அருளுகின்றார்.

விளக்க உரை

  • பாடிலர் – பாடலாகவுடையவர்.
  • காடு அலால் – புறங்காடு அல்லாமல்
  • பாரிடம் – பூதம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 22 (2021)


பாடல்

அயிலாரு மம்பத னாற்புர மூன்றெய்து
குயிலாரு மென்மொழி யாளொரு கூறாகி
மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே

இரண்டாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துஅன்னையினை பாகம் கொண்டு எழுந்து அருளும் திருமணஞ்சேரி திருத்தலம் பற்றி உரைக்கும்  பாடல்.

பதவுரை

கூர்மையாக முப்புரங்களையும் அழித்தும், குயில் போலும் இனிய மென்மையான மொழிபேசும் உமை அம்மையை தன்னுடைய ஒரு பாகத்தில் உடையவனாகியும், மயில்கள் வாழும் நிறைந்த சோலைகள் சூழ்ந்ததும் ஆன திருமணஞ்சேரியில் எழுந்து அருளும் இறைவனைப் பற்றி நின்றவர்களுக்கு பாவம் இல்லை.

விளக்க உரை

  • அயில் – கூர்மை
  • குயில் வாய்மொழியம்மை – அம்பிகை திருநாமம்
  • பயில்வான் – கோயில்கொண்டு இருப்பவன்
  • பற்றி நிற்றல் – பற்று விடுமாறு பற்றி வழிபடல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 22 (2021)


பாடல்

உரமன் உயர்கோட்டு உலறுகூகை அலறும் மயானத்தில்
இரவில் பூதம் பாடஆடி, எழிலார் அலர்மேலைப்
பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான், எமை ஆளும்
பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே

முதலாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துதிருப்பழனம் திருத்தலத்தில் உறையும் இறைவனின் பெருமைகளையும் தோற்றத்தையும் உரைக்கும்  பாடல்.

பதவுரை

எம்மை ஆளும் பரமர் ஆனவரும், பகவன் ஆனவரும், பரமேச்சுவரன் எனும் பெயரினை உடையவரும், திருப்பழன நகரின் உறைபவரான இறைவன் நள்ளிருளில் பூதங்கள் பாடியும் ஆடியும் இருப்பதும், வலிமை பொருந்திய உயரமான வற்றிய மரக்கிளைகளில் அமர்ந்து ஒலி செய்யும் கூகை எனப்படும் ஆந்தைகள் அலறும் மயானத்தில் அழகிய தாமரை மலர்மேல் உறையும் பிரமனது தலையோட்டில் பலியேற்றும் திருவிளையாடல் புரியும் பெருமான் ஆவார்.

விளக்க உரை

  • உரம் – வலிமை.
  • உலறு கோட்டு – வற்றிய கிளை
  • கூகை – கோட்டான்
  • அலர் மேலைப் பிரமன் – தாமரை மலர்மேல் உள்ள பிரமன். நறவம் – கள். தேன்; 
  • பரமன் – உயர்ந்தவற்றிற்கு எல்லாம் உயர்ந்தவன்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 21 (2021)


பாடல்

கலையிலங் கும்மழு கட்டங்கங் கண்டிகை குண்டலம்
விலையிலங் கும்மணி மாடத்தர் வீழி மிழலையார்
தலையிலங் கும்பிறை தாழ்வடஞ் சூலந் தமருகம்
அலையிலங் கும்புன லேற்றவர்க் கும்மடி யார்க்குமே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துதிருவீழிமிழலை இறைவனின் தோற்ற சிறப்புகளை உரைத்து, அவரின் குணங்களையும் உரைக்கும்  பாடல்.

பதவுரை

மான், ஒளிரும் தன்மை உடைய மழுப்படை, யோகதண்டம், உருத்திராக்கம், குண்டலம் முதலியவற்றைக் கொண்டு  விலைமதிப்பு கூற இயலாத மணிகளால் அலங்கரிக்கப்பட்ட மாடங்களையுடைய திருவீழிமிழலையில்  வீற்றிருந்து அருளும் இறைவனானவர் தலையிலே பிறைச் சந்திரனைச் சூடி, கழுத்திலே எலும்புமாலை விளங்குமாறு, கையில் சூலம், உடுக்கை ஆகியவற்றைக் கொண்டு அலையினை உடைய கங்கையை ஏற்று, இடபக்கொடி கொண்டு இருப்பவர்; யோகநெறி நின்று தம்மைத் தொழும் அடியவர்களும் தம்மைப் போன்றே  சாரூப பதவி பெறச் செய்பவர்.

விளக்க உரை

  • கலை – மான்
  • இலங்கும் மழு – ஒளிரும் மழு ஆயுதம்
  • கட்டங்கம் – யோகதண்டம்
  • கண்டிகை – உருத்திராட்சக் கண்டிகை
  • தலை தாழ்வடம்
  • தமருகம் – உடுக்கை
  • அலை இலங்குபுனல் – அலையினால் விளங்குகின்ற கங்கை
  • ஏற்றவர் – இடபக்கொடி யுடையவர் .
  • நகுவெண்டலை – கையிலேந்திய கபாலம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 7 (2021)


பாடல்

பதிதா னிடுகா டுபைங்கொன் றைதொங்கல்
மதிதா னதுசூ டியமைந் தனுந்தான்
விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும்
நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே

இரண்டாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து – நெல்லிக்கா எனும் திருத்தலத்தில் எழுந்தருளிய இறைவனின் சிறப்புகளையும், திருமேனியில் இடம் பெறும் பொருள்களின் சிறப்புகளையும் கூறும் பாடல்.

பதவுரை

நெல்லிக்கா எனும் திருத்தலத்தில் எழுந்தருளிய இறைவன் இடுகாட்டை வாழும் இடமாகவும், கொன்றைமலரைத் தான் விரும்பும் மாலையாகவும் கொண்டவனாகவும், சந்திரனை சூடிய வீரனாக இருப்பவனாகவும், விதியாகவும் வினையாகவும் மேன்மையளிக்கும் நிதியாகவும் விளங்குபவன் ஆவான்.

விளக்கஉரை

  • தொங்கல் – (மாலை) கொன்றை
  • மதி – பிறை
  • மைந்தன் – வலியன். வீரன். விதியும் வினையும் நிதியும் எல்லாம் அவனன்றி வேறில்லை எனும் பொருள் பற்றியது
  • விழுப்பம் – மேன்மை.
  • விழுப்பம் பயக்கும் நெதி – திருவருளே தனக்கு மேலே ஒன்றில்லாச் செல்வம் என்பது பற்றியது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 5 (2021)


பாடல்

குருந்தவன் குருகவன் கூர்மையவன்
பெருந்தகை பெண்ணவ னாணுமவன்
கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும்
மருந்தவன் வளநகர் மாற்பேறே

முதல் திருமுறை  – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து – சிவனின் பெருமைகளை உரைத்து அவன் மாற்பேறு திருத்தலத்தில் உறைகின்றான் எனக் கூறும் பாடல்.

பதவுரை

குருந்த மரத்தடியில் இருந்து குருவாக அருளுபவனும், குருகவன் எனும் வைர வகைகளில் ஒன்றாக இருப்பதைப் போன்றவனும், கூர்மை உடையவனாக இருப்பவனும், பண்புகளில் மேன்மை உடையதான பெண், ஆண் எனும் வடிவங்களாக விளங்குபவனும், தடாகத்தில் பூக்கும் கருநீல மலர் போன்ற கண்களை உடைய உமை அம்மையால் விரும்பப்படுபவனும், துன்பம் கொள்ளூம் உயிர்களுக்கு மருந்தாக இருப்பவனும் ஆன சிவபெருமானது தலம் வளமை பொருந்திய மாற்பேறு ஆகும்.

விளக்கஉரை

  • குருந்தவன் – குருத்தாக, தளிராக, மொட்டு, காய் ஆதியனவாக விளங்குபவன் எனும் பொருளில் ஏறக்குறைய அனைத்து இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. அனைத்து நிலைகளிலும் உடன் இருப்பவன் எனும் பொருள்பற்றி விளக்கினாலும் குருவாக இருந்து அருளுபவன் என்பது பொருந்துவதால் இக்கருத்து விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • மருந்து – அமுதம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆவணி- 21 (2020)


பாடல்

சிரங்கை யினிலேந் தியிரந்த
பரங்கொள் பரமேட் டிவரையால்
அரங்கவ் வரக்கன் வலிசெற்ற
வரங்கொண் மயிலா டுதுறையே

முதலாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துதிருமயிலாடுதுறை திருத்தலத்தின் பெருமைகளைக் கூறும்  பாடல்.

பதவுரை

ஆணவம் கொண்ட பிரம்மனின் கர்வத்தினை அழிக்க அவன் தலையினைக் கொய்து  அந்த பிரமகபாலத்தைக் கையில் ஏந்திப் பலருடைய இல்லங்களிலும் சென்று யாசித்து உண்ணும் மேன்மை கொண்டவன் சிவபிரான். கயிலை மலையால் இராவணனின் தோள்கள் நெரியுமாறு அடர்த்த நன்மை தருபவனாகிய அப்பெருமானை அடியவர் வணங்கி நன்மைகளைப் பெறும் தலம் திருமயிலாடுதுறை.

விளக்க உரை

  • பரம்கொள் பரமேட்டி – மேன்மையைக் கொண்ட சிவன்
  • வரையால் அரங்க – கைலையால் நசுங்க

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 16 (2020)


பாடல்

விண்டார் புரமூன்று மெரித்த விமலன்
இண்டார் புறங்காட் டிடைநின்றெரி யாடி
வண்டார் கருமென் குழன்மங் கையொர்பாகம்
கொண்டா னகர்போல் குரங்கா டுதுறையே

இரண்டாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துஈசனின் பெருமைகளை உரைத்து, ஈசன் அவ்வாறான உறையும் இடம் குரங்காடுதுறை எனக் கூறும் பாடல்.

பதவுரை

தன்னோடு பகை பூண்டவர்கள் ஆகிய தாரகாஷன், கமலாக்ஷன், வித்துன்மாலி ஆகிய அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த குற்றம் இல்லாதவனும், புலிதொடக்கிக்கொடி எனும் தொட்டாற்சிணுங்கி கொடிகள் படர்ந்த சுடுகாட்டில் நின்று எரியாடுபவனும், வண்டுகள் மொய்க்கக் கூடிய கருமையானதும் மெல்லியதும் ஆன கூந்தலை உடையவளாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது இருப்பிடம் குரங்காடுதுறை.

விளக்க உரை

  • தலம்- தென்குரங்காடுதுறை
  • விண்டார் – பகைவர்
  • விமலன் – மலமில்லாதவன்.
  • இண்டு – கொடி வகை, தொட்டாற் சுருங்கி, செடிவகை, புலிதொடக்கி.
  • கொண்டான் – கொண்ட சிவபிரான்.

திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – இண்டு

புகைப்படம் : தினகரன்

தோற்றமும் தன்மையும்

  • வேலிகளில் தானாகவே வளரும் ஏறுகொடியினம்.
  • சிறகு போன்று இருக்கும் இலைகள் கூட்டமைப்பு
  • செடி முழுவதும் வளைந்த கூர்மையான முட்கள் நிறைந்தது
  • காலையில் பூக்கும் தன்மை கொண்ட இதன் பூக்கள் சிறிய அளவில் வேப்பம்பூவைப்போல் வெண்மையான நிறத்தில் பூக்கும்.
  • வெள்ளை நிற தண்டுப்பகுதியில் பட்டையான காய்கள் காய்த்திருக்கும்.

மருத்துவ குணங்கள்

  • இருமல் நோய், மூச்சுவாங்குதல், முக்கு நீரேற்றம், மண்டைக்குடைச்சல், முகத்தில் எற்படும் வலி, சூதக வாயு, ஈளை, சூலை ஆகிய நோய்களை நீக்கும்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 29 (2020)


பாடல்

சேவுயருந் திண்கொடியான் றிருவடியே சரணென்று சிறந்தவன்பால்
நாவியலு மங்கையொடு நான்முகன்றான் வழிபட்ட நலங்கொள்கோயில்
வாவிதொறும் வண்கமல முகங்காட்டச் செங்குமுதம் வாய்கள்காட்டக்
காவியிருங் கருங்குவளை கருநெய்தல் கண்காட்டுங் கழுமலமே 

முதலாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து – திருக்கழுமலம் எனும் திருத்தலத்தின் இயற்கை வருணனைகளையும் அதில் உறையும் ஈசனின் சிறப்புகளையும் உரைக்கும் பாடல்.

பதவுரை

தடாகம் எனும் நீர்நிலைகளில் இருக்கும் தாமரை மலர்கள் மகளிர்தம் முகங்களையும், செம்மை நிறமுடைய குமுத மலர்கள் வாய்களையும், காவி மலர்கள், கருங்குவளை மலர்கள், கரிய நெய்தல் மலர்கள் ஆகியன கண்களையும் போலத் தோன்றி மலரும் திருத்தலமான திருக்கழுமலம் எனும் திருத்தலமானது விடை எனும் காளை வடிவம் பொறிக்கப்பட்டதானதும் உயர்ந்த வலிமையானதும் ஆன கொடியை உடைய சிவபிரானின் திருவடிகளே நமக்குச் சரண் என்று  செங்காந்தல் மலர் போன்ற மங்கை ஆகிய கலைமகளோடு  நான்முகனாகிய பிரம்மன் சிறந்த அன்போடு வழிபட்ட அழகிய கோயில் ஆகும்.

விளக்க உரை

  • நாவியம் – காந்தள்மலர்
  • வாவி – தடாகம்; நீர்நிலை, நடைக்கிணறு, ஆற்றிலோடை
  • சே – இடபம்
  • நா இயலும் மங்கை – சரஸ்வதி

திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – அல்லி

புகைப்படம் / செய்திகள் - விக்கிபீடியா
  • ஆழமற்ற ஏரிகள் மற்றும் குளங்களில் வளரும்
  • பூக்காம்பின் நடுவில் இருக்கும் ஐந்து பெருந்துளைகள் காற்றை நிரப்பி வைத்துக்கொண்டு இலையையும் பூவையும் நீர்ப்பரப்பிற்கு மேலே கொண்டு வந்து மிதக்கத் துணை செய்கின்றன.
  • தமிழ் நாட்டில் வெண்ணிற மலரையுடைய வெள்ளாம்பலும், நீலநிற மலரையுடைய நீல ஆம்பலும், செந்நிற மலரையுடைய அரக்காம்பலும் (செவ்வல்லி) காணக் கிடைக்கின்றன
  • அல்லிக் கிழங்கு குளிர்ச்சி தரும். பூ குருதிக்கசிவைத் தடுக்கும். புண்களை ஆற்றும்; சிறுநீர் சம்மந்தப்பட்ட வியாதிகளை நீக்கும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 22 (2020)

பாடல்

மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட
குரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண்கொடுங் குன்றம்
அரவத்தொடு மிளவெண்பிறை விரவும்மலர்க் கொன்றை
நிரவச்சடை முடிமேலுடன் வைத்தானெடு நகரே

முதலாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து – திருக்கொடுங்குன்றம் எனும் திருத்தலத்தினையும் அதில் உறையும் ஈசனின் சிறப்புகளையும் உரைக்கும் பாடல்.

பதவுரை

பாம்பு, வெள்ளிக்கம்பி போன்று மின்னக்கூடியதான இளம்பிறை, மணம் பரப்பக்கூடியதான கொன்றை மலர் ஆகியவற்றை சமமாக தன் முடிமேல் அணிந்துள்ள சிவபிரானது நெடுநகரம் எதுவெனில் கடம்பு, குருக்கத்தி, பிரிந்தும் நீண்டும் இருக்கக் கூடியதுமான மரமல்லிகை ஆகியவற்றின் அரும்புகளும், குரவமலர்களும் மணம் பொருந்தி வானம் வரை நீண்டு இருக்கக் கூடியதானதும், குளிர்ச்சியும் அருளும் நிரம்பியதுமானதும், சோலைகள் சூழ்ந்ததுமானது  திருக்கொடுங்குன்றம் எனும் திருத்தலம் ஆகும்.

விளக்க உரை

  • விண்டுதல் = பிளத்தல், பிரித்தல்
  • மரவம் – கடம்பு. மாதவி – குருக்கத்தி.
  • நிரவ – நிரம்ப

திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – அடும்பு

புகைப்படம் : இணையம்
செய்தி : விக்கிப்பீடியா
  • தற்போதைய பெயர் மவ்வல், மரமல்லி, மரமல்லிகை, பன்னீர்ப் பூ
  • குறிஞ்சி நில மகளிர் பயன்படுத்தியது.
  • இரவில் பூக்கும் இதன் மலர்கள் மிகுந்த வாசனையைக் கொண்டவை.
  • வீட்டில் நட்டு வளர்க்கும் மௌவலையின் வேறு பெயர் ‘மனைநொச்சி’

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 8 (2020)


பாடல்

தொடைத்தலை மலைத்திதழி துன்னிய வெருக்கலரி வன்னிமுடியின்
சடைத்தலை மிலைச்சியத போதனனெ மாதிபயில் கின்றபதியாம்
படைத்தலை பிடித்துமற வாளரொடு வேடர்கள் பயின்றுகுழுமிக்
குடைத்தலை நதிப்படிய நின்றுபழி தீரநல்கு கோகரணமே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து –  திருக்கோகரணம் எனும் திருத்தலத்தில் உறையும் சிவனின் பெருமைகளைக் கூறும் பாடல்.

பதவுரை

அலைகளை உடைய புனித நதியில் குடைந்து மூழ்கி வணங்கத் தக்கவரான சிவபெருமான் அழிக்கப்பட்டதான தலைமாலை அணிந்தவர்; திருச்சடையில் கொன்றை, எருக்கு, அலரி, வன்னிப்பத்திரங்கள் ஆகியவற்றால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவர்; அவர் வீற்றிருந்து அருளுகின்ற இடமானது வெற்றி பொருந்திய வாளாயுதத்தை ஏந்திய வீரர்களுடன் வேடர்கள் நட்புக் கொண்டு கூடி இருக்கக் கூடியதும், பழிபாவத்தை நீக்கி அருள்புரியும் தலமான திருக்கோகரணம் எனும் திருத் தலமாகும்.

விளக்க உரை

  • தொடை – துடைத்தல் – தடவிப்போக்குதல், பெருக்கித் தள்ளுதல், அழித்தல், துவட்டுதல், கொல்லுதல், தீற்றுதல், காலியாக்குதல், நீக்குதல், கைவிடுதல், ஒப்பமிடுதல்
  • தொடைத்தலை மலைத்து – தலைமாலையை அணிந்து
  • இதழி – கொன்றைமலர்
  • வன்னி – வன்னிப் பத்திரங்கள்
  • மிலைச்சிய – அணிந்த
  • படைத்தலைபிடித்து – ஆயுதங்களின் அடிப்பாகங்களைப் பற்றி
  • மறம் – வெற்றி பொருந்திய
  • அலைநதி – அலைகளையுடைய நதியில்
  • பாடிய – முழுகி வணங்க

திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள்அலரி

புகைப்படம் : திரைப்பட இயக்குனர் திரு.ஐயப்ப மாதவன்
செய்தி : இணையம்
  • வகைகள் – ஒற்றை அலரி, அடுக்கு அலரி
  • வண்ணங்கள் தற்காலப் பெயர் – அரளி
  • வகைகள் – மஞ்சள், வெள்ளை, சிவப்பு, குங்கும வண்ணம்
  • மருத்துவ குணங்கள் – ஆறாத புண்களை ஆற்றும், அக்கியை போக்கும், ரத்தத்தை சுத்தப்படுத்தும்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 23 (2019)


பாடல்

இலகும் முடிபத் துடையானை
அலல்கண் டருள்செய் தவெம்மண்ணல்
உலகில் லுயிர்நீர் நிலமற்றும்
பலகண் டவனூர் பனையூரே

முதலாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து – இராவணனுக்கு அருளியவனும், பஞ்ச பூதங்களைப் படைத்தவனும் ஆகிய ஈசன் உறையும் இடம் பனையூர் எனும் திருத்தலம் என்பதை கூறும் பாடல்.

பதவுரை

எளிதாக விளங்கக் கூடியதான  முடியினை கொண்ட பத்து தலைகளை உடைய இராவணனுக்கு துன்பம் வருமாறு செய்து, பின் அவன்படும் அல்லல் கண்டு அவனுக்கு அருள் செய்த எம் அண்ணலும், உலகின் உள்ள உயிர்கட்கு நீர் நிலம் முதலான பலவற்றையும் படைத்து அளித்தவனும் ஆகிய சிவபெருமானனின் ஊர் திருப்பனையூர் எனும் திருத்தலமாகும்.

விளக்க உரை

  • ஐம்பூதங்களையும் ஆக்கிய இறைவனின் ஊர் பனையூர் என்கின்ற பொருள் கொண்டும் ‘மற்றும் பல’ என்றமையான் நுண்பூதங்களும், தன்மாத்திரைகளும் ஆகிய அனைத்தையும் படைத்துக் கண்டவன் எனும் பொருளாகவும் விரியும்.  உலகினையும், உலக பொருள்களையும் படைத்தவன் சிவன் எனும் சைவ சித்தாந்த பொருளுடன் ஒப்பு நோக்கி உணர்க.
  • அலல் – துன்பம்; அல்லல் என்பதன் திரிபு.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 3 (2019)


பாடல்

இயலுமாறெனக் கியம்புமின்னிறை வன்னுமாய்நிறை செய்கையைக்
கயனெடுங்கண்ணி னார்கள்தாம்பொலி கண்டியூருறை வீரட்டன்
புயல்பொழிந்திழி வானுளோர்களுக் காகஅன்றயன் பொய்ச்சிரம்
அயனகவ்வ தரிந்துமற்றதில் ஊணுகந்த வருத்தியே

மூன்றாம் திருமுறை –  தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துஉலகமாகவும், உலகப் பொருள்கள்கள் அனைத்திலும் உறையும் ஈசன் ப்ரமன் தலை கொய்து மண்டையோட்டில் யாசித்து உண்ணுவதை பழிப்பது போல் சிறப்பித்துக் கூறியது.

பதவுரை

கயல் மீன் போன்ற நீண்ட கண்களையுடைய மகளிர் வாழ்கின்ற திருத்தலம் ஆனதும், பொலிவு உடையதும் ஆன திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதனாகிய இறைவன் உலகினுக்கும், உயிருக்கும்  விரும்பியவற்றை அளிக்கும் தலைவனாய் இருப்பதோடு, உலகப்பொருள்களிலும், அனைத்து உயிர்களிடத்தும் அவைகளோடு கலந்து வியாபித்து நிற்கும் தன்மையை கொண்ட போதிலும் வானில் இருந்து உலகத்தில் மழை பொழியச் செய்து நலம்புரியும் தேவர்களுக்காகப் பிரமனுடைய பொய்யானதான ஐந்தாவது சிரத்தை அயலார்கள் பரிகசிக்கும்படி நகத்தால் அரிந்து, அந்த மண்டை ஓட்டில் பிச்சையேற்று உண்ணும் விருப்பம் கொண்டது என்ன காரணத்தால் என்று மெய்யடியார்களே எனக்கு இயன்ற அளவு இயம்புவீர்களாக.

விளக்க உரை

  • இறைவனுமாய் நிறைசெய்கையை – உலகினுக்கும் உயிருக்கும் தலைவனுமாய் நின்று, அவற்றுள் வியாபித்து நிறைந்து நின்ற செய்கையை பற்றியது.
  • புயல் – மேகம்.
  • பொழிந்து – மழைபோல் பெய்து
  • வானவர்களுக்காக அயன்தலையைக் கொய்தது – படைத்தலுக்கு உரித்தான கர்த்தாவின் தலையைப் கிள்ளி அதன் வலிமையின்மையையும், படைப்பவனான ப்ரமனை படைப்பவனாகிய பழையவன் இவனே என வானவர் தெளிவதற்காகவும் தலையை கொய்தது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 30 (2019)


பாடல்

திக்கமர் நான்முகன் மாலண்ட மண்டலந் தேடிட
மிக்கமர் தீத்திர ளாயவர் வீழி மிழலையார்
சொக்கம தாடியும் பாடியும் பாரிடஞ் சூழ்தரும்
நக்கர்தந் நாமந மச்சிவா யவ்வென்பார் நல்லரே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து –  பாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதுவார் துன்பத்தில் இருந்து நீங்குவார் என்பதைக் குறிக்கும் பாடல்

பதவுரை

திசைக்கு ஒன்றாக நான்கு திக்குகளையும் நோக்குகின்ற முகங்களையுடைய பிரமனும், திருமாலும் முறையே மேலுள்ள அண்டங்கள், கீழுள்ள அண்டங்கள் என முடி, அடி தேடி காணமுடியா வண்ணம், ஒன்றின் மேற்பட்டதாய் எழுந்து நிற்கும் தீப்பிழம்பாய் நின்றவர் திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் சிவபெருமான்; அவர் சொக்கு எனப்படுவதான ஒருவகைத் திருக்கூத்து ஆடியும், பாடியும் பூதகணங்கள் சூழ விளங்கும் திகம்பரர் ஆவார். அப்படிப்பட்டவராகிய சிவபெருமானின் திருநாமமாகிய நமச்சிவாய என்பதை ஓதவல்லவர்கள் சிவபுண்ணியம் செய்தவர்கள் ஆவார்.

விளக்க உரை

  • திக்கு அமர் நான்முகன் – திக்கைப் போல் பொருந்திய நான்கு முகங்களையுடைய பிரமன்
  • சொக்கம் – ஒரு கூத்து .
  • நக்கர் – ஆடையில்லாதவர்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 23 (2019)


பாடல்

மூலம்

நாவணங் கியல்பா மஞ்செழுத் தோதி நல்லராய் நல்லியல் பாகும்
கோவணம் பூதி சாதனங் கண்டாற் றொழுதெழு குலச்சிறை போற்ற
ஏவணங் கியல்பா மிராவணன் றிண்டோ ளிருபது நெரிதர வூன்றி
ஆவணங் கொண்ட சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே

பதப்பிரிப்பு

நாவணங்கு இயல்பாம் அஞ்செழுத்தோதி நல்லராய் நல் இயல்பு ஆகும்
கோவணம் பூதி சாதனம் கண்டால் தொழுது எழு குலச்சிறை போற்ற
ஏவணங்கு இயல்பாம் இராவணன் திண்தோள் இருபதும் நெரிதர ஊன்றி
ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து –  பாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதுவார் துன்பத்தில் இருந்து நீங்குவார் என்பதைக் குறிக்கும் பாடல்

பதவுரை

நாவினால் தொழக்கூடியதான இயல்பினை உடைய திருவைந்தெழுத்தை ஓதி, நல்லவராகவும், நல் இயல்புகளை அளிக்கும் பசுவிடம்  இருந்து பெறப்படுவதான விபூதி, உருத்திராக்கம் முதலிய சிவ சின்னங்கள் அணிந்தவர்களைக் கண்டால் வணங்கி மகிழ்பவருமான  குலச்சிறை நாயனார் வழிபாடு செய்யும் தலமும், இயல்பாகவே பகைவரது அம்புகள் பணிந்து அப்பால் செல்லும் பெருவலிமை படைத்த இராவணனின் இருபது தோள்களும் நெரியுமாறு தம் திருப்பாதவிரலை ஊன்றிப் பின் அவனைச் சிவ பக்தனாகும்படி செய்தருளிய திருச்சடைமுடியுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமும் ஆனது  திருஆலவாய் என்னும் திருத்தலம்.

விளக்க உரை

  • கோவணம் பூதி என்பதை கோவணம், விபூதி ஆகிய சிவச்சின்னங்களை அணிந்து என்று பல இடங்களில் பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விபூதி தயாரிப்பில் பசுவிடம் இருந்து பெறப்படுவதான விபூதி முதன்மையானது என்பதால்(கோ+வணம்)  கோவணம்  எனும் பொருள் விலக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 18 (2019)


பாடல்

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர் 

கருத்து –  பாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதுவார் எமனுடை துன்பத்தில் இருந்து நீங்குவார் என்பதைக் குறிக்கும் பாடல்

பதவுரை

உள்ளத்தினில் அன்பு கொண்டு மனதால் நெகிழ்ந்து அதன் காரணமாக கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்தி நெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம் ‘நமச்சிவாய’ என்ற திருவைந்தெழுத்தாகும்.

விளக்க உரை

  • காதல் – அன்பு
  • மல்கி – மிகுந்து
  • ஓதுதல் – சொல்லுதல், செபித்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 14 (2019)


பாடல்

துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து – பாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதுவார் எமனுடை துன்பத்தில் இருந்து நீங்குவார் என்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

ஈசனையே எக்காலத்திலும் நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்ததும், பல வழிகளில் திரிந்து செல்லும் வஞ்சக தன்மை உடையதும் ஆன மனதை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து ஒருமுகப்படுத்த செய்வதும் ஆன திருவைந்தெழுத்தே மனமானது உறங்கும் பொழுதும், மனம் உறங்காமல் விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருகி நாள்தோறும் நினைத்துப் போற்றுங்கள்.

விளக்க உரை

  • போழ்தின் என்ற சொல்லைத் துஞ்சல் என்பதோடு கூட்டித் துஞ்சும் பொழுதினும், துஞ்சுதல் இல்லாத போழ்தினும் என்றும் விளக்கம் பெறும்
  • நெஞ்சகம் – மனம்
  • நைந்து – உருகி
  • நெஞ்சக நைதல் – அன்பினால் குழைதல்
  • வஞ்சகம் – ஈசன் சிந்தனை விடுத்து சிந்தையை இடையே மாற்றி வினையைப் பிற இடங்களிள் செலுத்தி வஞ்சித்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 4 (2019)


பாடல்

என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து
முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடு மதனாலே

இரண்டாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர் 

கருத்து –  ஈசனை வழிபட பூர்வ புண்ணியம் வேண்டும் என்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

நெஞ்சே! குற்றமில்லாத மணிகளும் முத்துக்களும் நிறைந்ததும், அதனைக் கொண்டுவந்து சேர்க்கும் நிலையான  காவிரி ஆற்றினால் சூழப்பட்டதுமான திருவலஞ்சுழி இறைவனைப் போற்றி பாடியும் வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருப்பதால் கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் நாம் செய்த நல்வினைப் பயன்களில் நீ  எத்தகைய புண்ணியத்தைச் செய்துள்ளாய்.

விளக்க உரை

  • தரளம் – முத்து, உருட்சி, நடுக்கம்
  • வாயாரப் பன்னுதல் – பாடுதல் – வாக்கின் வினை
  • ஆதரித்தல் – மனத்தின் தொழில்
  • ஏத்துதல் – காயத்தின் செயல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 1 (2019)


பாடல்

மூலம்

இருநில னதுபுன லிடைமடி தரவெரி புகவெரி யதுமிகு
பெருவெளி யினிலவி தரவளி கெடவிய னிடைமுழு வதுகெட
இருவர்க ளுடல்பொறை யொடுதிரி யெழிலுரு வுடையவ னினமலர்
மருவிய வறுபத மிசைமுரன் மறைவன மமர்தரு பரமனே

பதப்பிரிப்பு

இருநிலனது புனலிடை மடிதர எரிபுக எரியது மிகு
பெருவளியினில் அவிதர வளிகெட வியனிடை முழுவதும் கெட
இருவர்கள் உடல் பொறையொடு திரியெழில் உருவுடையவன் இனமலர்
மருவிய அறுபதம் இசைமுரல் மறைவனம் அமர்தரு பரமனே

முதல் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர் 

கருத்து –  சிவனே சர்வ சங்காரத்திலும் இருப்பதை என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

சங்காரம் எனும் பேரூழிக்காலத்தில் பெரியதான இந்த நிலமாகிய மண் புனல் என்படும் நீரில் ஒடுங்க, நீரானது நெருப்பு எனும் எரியில் ஒடுங்க, நெருப்பு வளி எனும் காற்றில் ஒடுங்க, காற்று ஆகாயத்தில் ஒடுங்க பரந்துபட்டதான இந்த உலகமும் உலகப் பொருள்களும் அனைத்தும் அழிய, இறுதியில் மால் அயன் இவர்களுடைய உடலாகவும் இருந்து (அந்த தன்மைகள் எனவும் கொள்ளலாம்) திரிகின்ற இறைவன் முழு எலும்புக் கூட்டை அணிந்து, தான் ஒருவனே தலைவன் எனத் திரியும் அழகுடையவன்; வண்ண மலர்க் கூட்டங்களில் வண்டுகள் இசைக்கும் மறைவனம் எனும் தலத்தில் அமரும் பரமன் ஆவான்.

விளக்க உரை

  • பிரபஞ்ச உற்பத்தியில் முதலில் ஆகாயமும், பின் காற்றும், நெருப்பும், நீரும் கடைசியில் நிலமும் தோன்றுதல் என்பது சைவ சித்தாந்தத்திலும் இன்னும் பல சைவ ஆகமங்களிலும் விளக்கப்பட்டுள்ளது. சங்காரத்தில் இவை வரிசை மாறாமல் அதே வரிசையில் ஒடுங்கப்படுதல் நினைவு கூறத்தக்கது. பெரு வெடிப்பு கொள்கையினை (Big bang theory) முன்வைத்து பிரபஞ்சம் சுருங்கி விரிவடைவதை அறிவியல் கொண்டு ஒப்பு நோக்கி உணர்க.
  • இனமலர் – கூட்டமான மலர், அறுபதம் – வண்டு. ( மலரில் வண்டு ஒடுங்கும் ஒடுக்க முறை )
  • இருங்கடல் – இருமை = கருமை. இருள், இரவு/இரா, இருட்டு, இரும்பு, ஈரல் போன்ற கரியது இருங்கடல். காலாபாணி என்பர் வடமொழியில். காழ் = கருமை. காளபாணி/காலபாணி என்பது ‘மணிநீர்’. மணிநீர் = கரியநீர், பண்பாகுபெயராய் கடல். நல் வினை, தீவினை முன்வைத்து அந்தப் பதிவுகளே பிறப்பு எடுக்க வைக்கிறது; அதற்கு மண்ணில் தோன்ற வேண்டும் என்ற பொருளும் உரைக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 21 (2019)


பாடல்

கடுத்தவா ளரக்கன் கைலையன் றெடுத்த
     கரமுரஞ் சிரநெரிந் தலற
அடர்த்ததோர் விரலால் அஞ்செழுத் துரைக்க
     அருளினன் தடமிகு நெடுவாள்
படித்தநான் மறைகேட் டிருந்தபைங் கிளிகள்
     பதங்களை யோதப்பா டிருந்த
விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழி
     மிழலையா னெனவினை கெடுமே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துபாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதி இராவணன் தன்  துன்பத்தில் இருந்து நீங்கியது குறித்தப் பாடல்.

பதவுரை

கோபம் கொண்டவனும், வாளேந்தியவனும் அரக்கன் ஆனவனுமான இராவணன் முன்னொரு காலத்தில் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முற்பட்டபோது அவன் கரமும், சிரமும் நெரிபட்டு அலறும்படி தம் திருப்பாதவிரலை ஊன்றியவரான சிவபெருமான் இராவணன் தன் தவறு உணர்ந்து அஞ்செழுத்தை உரைத்து யாழில் மீட்ட நீண்ட வாளை அவனுக்குக் கொடுத்தருளினார்; அவ்வாறான சிவபெருமான் நான்மறைகளைக் கற்றுணர்ந்த வேதியர்களும் அவர்களுடன் வேதம் பயிலும் சிறுவர் குழாமும் ஓதும் மறைகளை ஓதக்கேட்ட கிளிகள் அப்பதங்களை ஓதும் படியும் விரிந்த சோலைகளையுடையதும் ஆன திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகிறார். அந்த திருத்தலத்து இறைவனின் திருநாமத்தை ஓத, வினையாவும் கெடும்.

விளக்க உரை

  • விடைக்குலம் – வேதம் பயிலும் சிறுவர் குழாம்
  • கடுத்த – சினத்த

சமூக ஊடகங்கள்