அமுதமொழி – விளம்பி – வைகாசி – 1 (2018)

பாடல்

திங்களை முடித்தார் கண்டாய் திரிகூடச் செல்வர் கண்டாய்
எங்குள சித்துக் கெல்லாம் இறையவர் இவரே என்று
நங்கைமார் பலரும் கூறும் நன்மொழித் தேறல் மாந்தி
மங்கையாம் வசந்தவல்லி மனங்கொண்டாள் மயல்கொண் டாளே

திருகுற்றாலக் குறவஞ்சி – திரிகூடராசப்பக் கவிராயர்

பதவுரை

இளம்பிறையை ஆகிய சந்திரனை சடையில் முடித்திருப்பதைப் கண்டாய்; இவரே திரிகூடநாதர் ஆவர் என்று அறிவாயாக; எல்லா இடங்களிலும், எல்லா வகையான மாயை எனும் சித்து வித்தைகளுக்கும் இவரே தலைவர் என்று பெண்கள் பலரும் சொல்கின்ற நல்ல தேன் ஒத்த சொல்லை பருகி, மங்கையான வசந்தவல்லி மனத்தில் அச்சொற்களை கொண்டவளாகி, திரிகூடநாதர் மீது மயக்கம் கொண்டவளானாள்.

விளக்க உரை

  • தோழியார், திருக்குற்றாலநாதர் புகழைக் கூறக் கேட்டு வசந்தவல்லி காதல் கொள்ளுதல்
  • உற்றார் ஆருளரோ-உயிர் கொண்டு போம்பொழுது

குற்றா லத்துறை கூத்தன்அல் லால்நமக்கு உற்றார் ஆருளரோ

எனும் திருநாவுக்கரசர்  சுவாமிகள் அருளிச்செய்த திருஅங்கமாலையும்

  • குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே

                எனும் மாணிக்கவாசகரின் திருப்புலம்பலும் ஒப்பு நோக்கி குற்றால நாதர்                      ஆகிய கூத்தன் பெருமை உணர்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 31 (2018)

பாடல்

பிறையுடை யான்பெரி யோர்கள்பெம்மான் பெய்கழ னாடொறும் பேணியேத்த
மறையுடை யான்மழு வாளுடையான் வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட
கறையுடை யான்கன லாடுகண்ணாற் காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக்
குறையுடை யான்குறட் பூதச்செல்வன் குரைகழ லேகைகள் கூப்பினோமே.

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

தலையில் சந்திரனை பிறையாக அணிந்தவனும், பெருமை மிக்க செயல்களைச் செய்கிறவர்களும், நல்ல பண்புடையவர்களாக விளங்குகின்றவர்களும், புகழ்ச்சியை விரும்பாதவர்களும், உலகியல் நோக்கத்தினை பிரதானமாக கொண்டு செயல்படுவர்களும் ஆன பெரியோர்களின் தலைவனும், வேத வடிவங்களாகி அதன் தலைவனாக இருப்பவனும், மழுவாகிய வாளை உடையவனும், மால் துயிலுகின்ற கடலாகிற பாற்கடலிலே தோன்றிய நஞ்சினை உண்டு அதனால் ஏற்பட்ட கண்டத்தை உடையவனும், கோபம் கொண்டு கனல் சேர்ந்த விழிகளால் காமனைக் எரித்தவனும், சிவபெருமான் தம் திருநடனத்தைப் புலப்படும்படிக் காட்டியருளும் செல்வனுமாகிய காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தை உறைவிடமாக கொண்டவனாகிய இறைவன் திருவடிகளை நாள்தோறும் விரும்பி ஏத்தி அத்திருவடிகளையே கை கூப்பினோம்.

விளக்க உரை

  • காட்டுப்பள்ளிக் குறையுடை யான் – அன்பர்களின் குறைகளைக் கேட்டறிபவனும் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. பொருள் பொருந்தாமையால் இவ்விளக்கம் விலக்கப்பட்டுளது. ஆன்றோர்கள் ஆய்ந்து அறிக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 30 (2018)

பாடல்

அனாதி சிவனுடைமை யால்எவையும் ஆங்கே
அனாதியெனப் பெற்ற அணுவை – அனாதியே
ஆர்த்த துயரகல அம்பிகையோ(டு) எவ்விடத்தும்
காத்தல் அவன்கடனே காண்

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்

பதவுரை

எல்லா மும்மல ஆன்மாக்களும் அனாதி காலம் தொட்டு சிவனுக்கு உடைமை ஆகையால், சிவனைப்போல அனாதித்தன்மை பெற்ற அணுவான அந்த மும்மல ஆன்மாவை, அனாதி காலம் தொட்டுவரும் ஆணவம், மாயை, கன்மம் என்கிற துன்பங்கள் முற்றிலும் நீங்கும்படி அகலச் செய்து சிவசக்தி சொருபமாக இருந்து காத்தல் தொழில் செய்தல் சிவனுக்கு கடமை என்று அறிவாயாக.

விளக்க உரை

  • இருத்தலிலும், முத்தியிலும் ஆன்மாவுக்குச் செயலில்லை என்பது பெறப்படும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 29 (2018)

பாடல்

மூலம்

காயத்தே ரேறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தே ரேறி மயங்கு மவையுணர்
நேயத்தே ரேறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத்தே ரேறி யவனிவ னாமே

பகுப்பு

காயத்தேர் ஏறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தேர் ஏறி மயங்கும் அவை உணர்
நேயத்தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத்தேர் ஏறி அவன்இவன் ஆகுமே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

உடம்பு ஆகிய நிலையில்லாத தேரின்மேல் ஏறி, மனமாகிய பாகன் தன் கையைப் பொருத்தி,  கண்ட இடங்களில் செலுத்துதலினால் வழியறியாது மாயைக்கு உட்பட்டு மயங்குகின்ற உயிர்கள், சிறிதே உணர்வு பெற்றுச் தூயவனாகிய சிவன் மேல்  அன்பாகிய தேரில் ஏறிச்சென்று அவனது அருளைப்பெற்றால்,  ஆயத்தேர் எனும் சமாதி யோக வழியில்  சீவன் சிவனை அடைந்து அவனாகி விடும்.

விளக்க உரை

  • சிவன் அருள் பெற்று, சாயுஜ்யம் எனும் இறைத்தன்மையில் சிவமாவதற்கு முதலில் அன்பு வேண்டும் என்பதை வலியுறுத்தி எழுதப்பட்ட பாடல்.
  • உடம்பை தேராக உருவகம் செய்ததினால், அதன் இயல்யு ‘மாயத் தேர்’ ஆனது.
  • ‘கைகூட்டல்’ – கையைப் பொருத்தி ஓட்டுதலாகிய காரியம், அஃதாவது தேரினை செலுத்துதல்
  • நேயத்தேர் – இமயம் நியமம் முதலிய ஒழுக்கங்களைக் கைக்கொண்டு
  • ஆயத்தேர் – சமாதி யோகம், சிவனடியார் திருக்கூட்டம்
  • ஆயம் – கமுக்கம்; தோழியர்கூட்டம்; வருத்தம் மேகம் மல்லரிப்பறை; 34அங்குலஆழமுள்ளகுழி; வருவாய்; குடியிறை; கடமை; சூதுகருவி; சூதாட்டம் பசுத்திரள்; நீளம்; மக்கள்தொகுதி; பொன்

 

 

மதனா அண்ணா

எனக்குத் தோன்றிய விளக்கம்.

ஆத்மா ஓர் தேகம் அடைந்து சில காலம் பயணிப்பதை பயணம் என்று கவிதை நடையில் குறிப்பர். நம் ஆத்மாவானது காயம் எனும் தேர் ஏறி அதனை இயக்கும் மனம் எனும் பாகன் கைகொடுக்க மாயம் எனும் நிலையின்மையில் பயணிக்காது எது உண்மையென்று உணர்விக்கும் நேயம் எனும் மார்க்கம் பற்றி அதில் பயணித்தால் அழிவில்லாத மெய்ப்பொருளாகிய சர்வேஸ்வரனின் அருள் கிடைக்கப் பெற்றால் மட்டுமே அடைய இயலும் ஆய்தல் அதாவது உட்தேடல் எனும் கிட்டுதற்கறிய பாக்கியம் பெற்று அதன் மூலம் நான் எனும் நிலையறுத்து நானே அவன் எனும் மிக உயர்ந்த அஹம் பிரஹ்மாஸ்மி எனும் அத்வைத நிலை அல்லது ஒருமை நிலை அண்டும்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 28 (2018)

பாடல்

சக்கரமாய் மேலெழுந்து, சலந்திரனைக் கடிந்து
    தலையறுத்து யிரத்தமுண்டு நமஸ்கரித்த அப்பால்
அக்கணமே அறிந்து அரி சிவனைப் பூஜித்தான் 
    அம்புயக்கண் ணோடேஅர்ச் சித்தானப்பா
மிக்கசிவன் வெளிப்பட்டு வேண்டியதே தென்ன
    மெய்யான சக்கரந்தான் வேணு மென்றான்
முக்கியமாய்ச் சக்கரத்தை யீய்ந்தாரப்பா
    முன்னடந்த சிவன்பெருமை மொழியக்கேளே.

அகத்தியர் தத்துவம் 300

பதவுரை

சக்ர வடிவத்தில் மேலே எழுந்து, சலந்திரனை அழித்து, அவன் தலையை அறுத்து, அவன் ரத்தத்தினை அருந்திய தருணம் அறிந்து, தாமரை மலர் போன்ற கண்களை உடைய திருமால் சிவனை பூசித்தார்; அவ்வமயம் சிவன் வெளிப்பட்டு ‘வேண்டியது என்று’ கேட்க, உண்மையான ‘இச் சக்கரம் வேண்டும்’ என்றார்; காலத்தால் மாறாத பெருமை உடைய சிவன் இந்த முக்கியமான சக்கரத்தை திருமாலுக்கு ஈந்தார்.

விளக்க உரை

  • 25 மகேச மூர்த்தங்களில் ஒன்றான ‘சக்ரவரதர்’ இத்துடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • கடிதல் – விலக்குதல், ஓட்டுதல், அழித்தல், கண்டித்தல், அரிதல், அடக்குதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 27 (2018)

பாடல்

உரைப்பார் உரைப்பவை உள்க வல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்காடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
காரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

உன்னை இடையறாது நினைத்து, உன்னைப் பற்றி அறிந்து, அதன் உட்பொருளை பொருள் மாறாது உரைக்கும் அடியார்கள் தங்கள் தலை உச்சியாக இருப்பவனே, இடுப்பில் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே, எல்லா வகையிலும் முதலும் முடிவும் ஆனவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள `அவினாசி` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, காலனையும், முதலையையும், இக்குளக்கரையில் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள்.

விளக்க உரை

  • `காலனை முதலையிடத்தும், முதலையைக் கரையிடத்தும் தரச்சொல்லு ` என்ற பொருளில் சுந்தரர் இவ்வாறு இப்பாடலை அருளிச்செய்து முடிக்குமுன்பே, நீரில்லா மடுவில் நீர் நிறைந்திட முதலை அங்கு வந்து, சுந்தரரிடம் ஐந்து வயது பாலகனாக உண்ட சிறுவனை  பத்து வயதுப் பையனாகவே உயிருடன் உமிழ்ந்துவிட்டுச் சென்றது வரலாறு
  • உள்குதல் – உள்ளுதல், நினைதல், ஆராய்தல், நன்கு மதித்தல், மீண்டும் நினைத்தல், இடைவிடாது நினைத்தல்
  • ‘உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே’ எனும் பொருளில் பல இடங்களில் விளக்கப்பட்டுளது. இறைவன் புகழ் சொல்லை விரும்பாதவன் எனும் பொருளிலும், உரைப்பார், உரைப்பவை உரைப்பார், உள்கி உரைப்பவை உரைப்பார் எனும் பொருளிலும் இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  • தங்கள் உச்சியாய் – யோக தொடர்புள்ளவர்கள் குரு மூலமாக அறிக

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 26 (2018)

பாடல்

அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
     அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
     திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
     கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
     பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

தேவாரம் -ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

புறப்பொருளை அறியும் கருவி மட்டும் கொண்டு, தன்னையறியும் உயிரறிவு துணையுடன் தன் முயற்சியால் அறிந்து அணுவதற்கு அரியவன் ஆனவனும், ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகிய அறுதொழில்களை செய்யும் தில்லைவாழ் அந்தணர்களின் உள்ளத்தில் உள்ளவனும், வீடுபேறு அளிக்கும் அறிய பெரிய வேதங்களின் உட்பொருளாக இருப்பவனும், மிகவும் சிறிதானதும், நுண்ணியதுமான அணு அளவில் உள்ளவனும், யாரும் தம் முயற்சியால் உணரமுடியாத மெய்ப்பொருள் ஆகியவனும், தேனும் பாலும் போன்று இனியவனும், தானே விளங்கும் சுயம்பிரகாசம் ஆகிய நிலைபெற்ற அறிவே ஆன ஒளிவடிவினனும், எல்லா வகையிலும் மேம்பட்டவனும், வியாக்கிரபாதர் என்னும் புலிக்கால் முனிவனுக்கு உறைவிடமாகிய தில்லையில் எழுந்தருளும் அப்பெருமானுடைய உண்மையான புகழைப் பற்றி பேசாத நாள்கள் எல்லாம் பயன் அற்ற நாள்களே.

விளக்க உரை

  • பெரும்பற்றப் புலியூரானை – புலி கால் முனிவர் பூசித்த திருப்பாதிரிப் புலியூரில் உள்ளவனை என்று சில இடங்களில் விளக்கப்பட்டுளது. அந்தணர் என்று தில்லை வாழ் அந்தணர் குறித்த செய்தியாலும்,  புலிக்கால் முனிவர் பற்றிய செய்தியாலும், ஆறாம் திருமுறையில் முதல் தலம் மற்றும்  கோயில் எனப்படுவதும், சைவர்களால் குறிக்கப்படுவதும் ஆன ‘கோயில்’  என்று விளக்கி இருப்பதாலும் இப்பொருள் கொண்டு விளக்கப்பட்டிருக்கிறது. பிழை இருப்பின் ஆன்றோர்கள் மன்னிக்க.
  • ‘அணு’ என்றதனால் நுண்மையும், ‘பெரியான்’ என்றதனால் அளவின்மையும் அருளியது குறித்து  ஒப்பு நோக்கி  சிந்திக்கத் தக்கது.
  • ‘பிறவாநாள்’ – பிறவி பயனின்றி ஒழிந்த நாளாதல் பற்றி. அறம், பொருள், இன்பங்கள் நிலையற்ற உலகியல் இன்பம் தருவதான சிறுமை தரும் என்பது பற்றியும், இறை இன்பமான பெரும் பயன் தராது எனும் நோக்கில்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 25 (2018)

பாடல்

தந்தை தாயுநீ என்னுயிர்த் துணையுநீ சஞ்சல மதுதீர்க்க
வந்த தேசிக வடிவுநீ உனையலால் மற்றொரு துணைகாணேன்
அந்தம் ஆதியும் அளப்பருஞ் சோதியே ஆதியே அடியார்தஞ்
சிந்தை மேவிய தாயுமா னவனெனுஞ் சிரகிரிப் பெருமானே.

தாயுமானவர்

பதவுரை

திருவடியையும் திருமுடியையும் முறையே அரியும் அயனும் தேடிய பொழுது அவர்கள் அறியமுடியாதபடி அழலாக நின்ற பெரும் சுடர்ப் பிழம்பே! உண்மையான அடியார்களுடைய  தூய உள்ளத்தில்  பொருந்தியும், தாயுமானவன் எனும் தனிப்பெயர் வாய்ந்த சிரகிரிப் பெருமானே, அடியேனுக்கு  தந்தையும் நீயே, தாயும் நீயே, எளியேனுடைய உயிர் ஈடேறத் துணைபுரிய வந்த உயிரினுக்கு உயிரான துணையும் நீயே; உள்ளத்தில் தோன்றும் கவலைகளை நீக்கி, ஆட்கொண்டு அருளும்படி எழுந்து அருள வந்த சிவகுருவும் நீயே;

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 23 (2018)

பாடல்

தவ்வலி யொன்ற னாகித் தனதொரு பெருமை யாலே
மெய்வ்வலி யுடைய னென்று மிகப்பெருந் தேரை யூர்ந்து
செவ்வலி கூர்வி ழி ( ய் ) யாற் சிரம்பத்தா லெடுக்குற் றானை
அவ்வலி தீர்க்க வல்லா ரவளிவ ணல்லூ ராரே.

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

குறைந்த வலிமையை உடையவனாய் இருந்தும், செருக்கு அடைந்து அதனால் ‘தன்னை உண்மையான வலிமை உடையவன்’ என்று கருதி மிகப் பெரிய தேரில் ஏறிச் சென்று, கோபம் காரணமாக சிவந்த, கொடிய கூர்மையான விழிகளால் கயிலையை, தன் பத்துத் தலைகள் கொண்டு அதனைத் தூக்க முற்பட்டவனாகிய இராவணனுடைய செருக்கினை அழித்து, வலியைப் போக்கிய பெருமான் திருஅவளிவணல்லூரில் உறைகின்றார்.

விளக்க உரை

  • ஊர்தல் – நகருதல், பரவுதல், தினவுறுதல், நெருங்குதல், வடிதல், ஏறிச் செல்லுதல், கழலுதல், ஏறுதல்
  • தவ்வுதல் – ஒடுங்குதல், குறைதல்
  • தவ்வலி – ஒடுங்கும் வலி, குறைந்த வன்மை
  • ஒன்றன் – தன் வலி ஒன்றினையே துணையாக உடையவன்

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

வாமதேய மந்திரத்தால் செய்யும் தொழில் என்ன?
திதி எனும் காத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 22 (2018)

பாடல்

எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் எவ்வுருவும்

பதினொன்றாம் திருமுறை – சேரமான்பெருமாள் நாயனார் – திருக்கயிலாய ஞானஉலா

பதவுரை

(அவரவர் வினைப்பயன் கொண்டு) எவர் எந்த உருவத்தில் வைத்து உள்ளத்தில் இடை விடாது நினைக்க்கின்றார்களோ, அவர்களுக்கு அந்த நினைப்பு உருவமாய்த் தோன்றி அந்த வழியில் அருள் ஈந்து ஆட்கொள்ளும் தன்மை உடையவன் சிவபெருமான்.

விளக்க உரை

  • உள்குதல் – உள்ளுதல், நினைத்தல், உள்ளழிதல், மடிதல், நினைதல், ஆராய்தல், நன்கு மதித்தல், மீண்டும் நினைத்தல், இடைவிடாது நினைத்தல்.
  • எந்த உருவத்தையும் தனது உருவமாகவே கொண்டு அருள்புரிகின்ற சிவபெருமான் பிறர், இவ்வாறு அந்த உருவமாய் நிற்பதை எவரும் காணத நிலையை உடையவன்.
  • எனவே உயிர்வர்க்கத்தினர் அனைவரும் ‘பசு’ எனவும், சிவபெருமானே அனைவர்க்கும் தலைவனாகிய ‘பதி’ எனவும் விளக்கம் பெறப்படும்

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

சிவனுக்கு உரிய வாமதேயம் எந்த உறுப்பு?
உந்தி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 21 (2018)

பாடல்

இழைஎலாம் விளங்கும் அம்மை
     இடங்கொள்நின் கருணை என்னும்
மழைஎலாம் பொழிந்தென் உள்ள
     மயக்கெலாம் தவிர்த்து நான்செய்
பிழைஎலாம் பொறுத்த உன்றன்
     பெருமைக்கென் புரிவேன் அந்தோ
உழைஎலாம் இலங்குஞ் சோதி
     உயர்மணி மன்று ளானே

ஆறாம் திருமுறை – திருஅருட்பா –  வள்ளலார்

பதவுரை

நின்னுடைய கருணை என்னும் மழையை முற்றிலுமாக பொழிந்து, என் உள்ளத்தில் படிந்து இருக்கின்ற மயக்கம் எல்லாம் போக்கியனும்,  மிக நெருக்கமாக உமை அம்மையை இடப்பாகத்தே கொண்ட பெருமானானவனும், தான் இருக்கும் இடம் எல்லாம் ஒளிர்தலை உடைய உயர்ந்த மணிகள் இழைத்த தில்லையம்பலத்துள் எழுந்து அருளுகின்றவனும்  ஆன கூத்தப் பெருமானே, நான் செய்த எல்லாப் பிழையையும் பொறுத்து  அருளிய உன்னுடைய பெருந்தன்மைக்கு யான் என்ன கைம்மாறு செய்வேன்!

விளக்க உரை

  • சிவபெருமானுடைய திருவருள் பெருமையை வியந்து கைம்மாறு செய்ய மாட்டாத தமது எளிமையை வெளிப்படுத்தியவாறு.
  • உழை – உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றில் அல்லது ஒரு செயலில் ஈடுபடுத்துவது, முயற்சி செய்வது, உதவு, பணம், பொருள் முதலியன ஈட்டு, சம்பாதி, இடம், பக்கம், அண்மை, கலைமான், (ஆண்மான்), உப்புமண், உவர்மண், யாழின் ஒரு நரம்பு, ஏழிசைச் சுரங்களில் நான்காவதாக வரும் சுரம் உழை, பூவிதழ்
  • ‘இழையெலாம் விளங்கும் அம்மை’ –  உயரிய அணிகல வகைகள் அனைத்தையும் குறைவற அணிந்தவள் ஆகிய உமாதேவியை என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. சிவ சக்தி சொரூபமான காட்சி என்பது பற்றி மேலே குறிப்பிட்டவாறு விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் கொண்டு உய்க.
  • என் புரிவேன் –  என்ன கைம்மாறு செய்வேன் என்னும் பொருளில்

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

அகோர மந்திரத்தால் செய்யும் தொழில் என்ன?
சங்காரம் எனும் அழித்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 20 (2018)

பாடல்

செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யி இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்

விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர்

பதவுரை

வினைகளின் பயனாக செய்யப்படும் தொடக்கச் செயல்களாகவும், அவ்வாறு  செய்யப்படும் எல்லாப் பொருள்களிலும் சந்தேகம் இல்லாமல் நிறைந்திருப்பவரும், அவ்வாறு நாம் செய்யும் வினைகளின் கருமப் பயனாக இருப்பவரும், அதன் பலனாக பெறப்படும் வினைகளின் கருமப் பயன்களில் இருந்து  நம்மை விடுப்பவரும்  ஆன பொய் என்று உரைக்க இயலாத மெய்யான  இறையாகிய கணபதியை  நாம் சரண் அடைகின்றோம்.

விளக்க உரை

  • ஊட்டி – பறவை,விலங்குகளின் உணவு, உணவு, குரல்வளை, மழை; ‘ஊட்டி விடுப்பான்’ – மழை எவரையும் எதிர்பாராமல் பொழிவது போல் வினைகளை நீங்குபவர்

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

அகோர மந்திரத்திற்கான உறுப்பு எது?
இதயம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 19 (2018)

பாடல்

போந்தனை தரியாமே நமன்றமர் புகுந்தென்னை
நோந்தனை செய்தாலும் நுன்னல தறியேன்நான்
சாந்தனை வருமேலுந் தவிர்த்தென்னை யாட்கொண்ட
வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

 பதவுரை

இறக்கும் நிலையை  நீக்கி என்னை ஆட்கொண்ட தலைவனே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, எனது துன்பத்தைச் சிறிதும் பொறாமல் அதை நீக்குதலுக்கு தகுதியானவன் நீயே அன்றோ! ஆதலினால் எமனுக்கு ஏவலராய் உள்ள தூதர்கள் வந்து எனக்கு துன்புறும் செயல்களைச் செய்யினும், யான் உன்னை அன்றி வேறொருவரைத் துணையாக அறியமாட்டேன்.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

தத்புருட மந்திரத்தால் செய்யும் தொழில் என்ன?
திரோபவம் எனும் மறைத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 18 (2018)

பாடல்

உருமேனி தரித்துக் கொண்ட தென்றலும் உருவி றந்த
அருமேனி யதுவுங் கண்டோம் அருவுரு வான போது
திருமேனி உபயம் பெற்றோம் செப்பிய மூன்றும் நந்தங்
கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே

திருநெறி 2 – சிவஞான சித்தியார்

பதவுரை

காட்சிப் பொருளாகிய உருவத் திருமேனி, உருவம் இல்லாத நுட்பத்தினை குறிக்கும் அருவத் திருமேனி ஆகியவற்றையும் கண்டோம். இவை இரண்டும் கண்டதால் அரு உருவத் திருமேனி என்பது பெறப்படும். இவ்வாறாக சொல்லப்பட்ட மூன்று வடிவங்கள் ஆகிய மூன்று நிலைகளும் ஆன்மாக்கள் உய்ய வேண்டும் என்பதற்காக இறைவன் கொண்ட நிலை என்று காண்பாயாக.

விளக்க உரை

  • இறைவன் ஒன்பது பேதங்களில் கலந்து நின்று, ஆன்மாக்கள் உய்ய, நான்முகன், திருமால், உருத்திரன், மகேசன் எனும்  உருவத் திருமேனி வடிவமாகவும், விந்து, நாதம், சத்தி, சிவம் எனும் அருவத் திருமேனி வடிவமாகவும், சதாசிவம் எனும்  அருவுருவ வடிவமாகவும் இருந்து ஐந்தொழில் நடத்தி தன்னை உணர்த்துவான்.
  • கருமேனி – கரியவுடல், பருவுடல், தூலஉடம்பு. (வினைத்தொகை முன்வைத்து அழியும் உடல்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 17 (2018)

பாடல்

வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
     வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
     ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
     தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாட லுகந்தாய் போற்றி
     கயிலை மலையானே போற்றி போற்றி

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

வானில் உள்ள தேவர்கள் போற்றும் அமுதமாய், வந்து என் உள்ளம் புகுந்தவனாய், உயிர்களின் பிறப்பிற்கு காரணமான குறையைப் போக்கும் அருள் உருவம் உடையவனாய், ஓங்கித் தீப்பிழம்பாய் உயர்ந்தவனாய், தேன் போல தெளிவாக தோன்றுபவனே, தேவர்களுக்கும் தேவனாய் நின்றவனே , சுடுகாட்டுத் தீயில் கூத்தாடுதலை விரும்பி செய்பவனாய் உள்ள கயிலை மலையானே! உன்னை போற்றுகிறேன்.

விளக்க உரை

  • மருந்து – அமுதம்
  • வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி – தன் முயற்சி இல்லாமல் இறைவன் தானே வந்து ஆட்கொண்டு அருள் புரிந்த விதம் பற்றிய குறிப்பு.
  • ‘தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி கானத்தீ யாட லுகந்தாய் போற்றி’ – தேவ லோகத்தையும், சுடு காட்டையும் சமமாக பாவிப்பவன் எனும் பொருள் பற்றியது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 16 (2018)

பாடல்

தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச் சரமமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கடம் மட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

பூம்பாவாய்! பராக்கிரமும், கோபமும் தன் இயல்பாக உடைய இராவணனின் தோள்களை நெரித்து உகந்த திருவடிகளை உடையவனாய், கண்களுக்கு நிறைவு தரும் மயிலை எனும் கபாலீச்சரத்தில் அமர்ந்து உள்ளவனுக்கு, இடை வடிவமான பண்ணோடு பாடும் சப்தரிஷிகள் & வாலகில்யர்கள், தேவர்கள், அரம்பையர்கள், அசுரர்கள், தானவர்கள், தைத்தியர்கள், நாகர்கள், கருடர்கள், கிண்ணரர்கள், கிம்புருசர்கள், யட்சர்கள் / யட்சினிகள், வித்தியாதரர்கள், அரக்கர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், சாரணர்கள், பூத கணங்கள், பிசாசர்கள் ஆகிய பதினெண் கணத்தினரும் ஏத்தும் வகையில் சித்திரை அட்டமியில் நிகழும் விழாவைக் கண்ணாரக் கண்டு மகிழாமல் செல்வது முறையோ?

விளக்க உரை

  • தண்ணா – வெம்மையைச் செய்யும்; ‘தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானை’ – குளிர்ச்சி பொருந்திய, தமிழை வளர்க்கிற பாண்டி நாட்டையுடையவனும் எனும் வரிகளுடன் மாற்றுப் பொருள் கொண்டு சிந்திக்கத் தக்கது.
  • கண்ணார் – பகைவர்
  • தேவர்கள், சித்தர்கள், அசுரர், தைத்தியர்கள், கருடர்கள், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தர்வர், இயக்கர்கள், விஞ்சையர், பூத கணங்கள், பிசாசர்கள், அந்தரர், முனிவர்கள், உரகர்கள், ஆகாய வாசியர், போக பூமியர் ஆகியோர் பதினெண் கணத்தினர் என்று மற்றொரு குறிப்பில் காணப்படுகின்றது.
  • முன் காலத்தது விழா – அட்டமிநாள் விழா; தற்காலத்தில் சித்திரைப் பௌர்ணமி; ‘கடம் மட்டமிநாள்’ – அடர் அட்டமி நாள் – அடர் எனும் சொல் பூவிதழ் எனும் பொருளோடு இணைந்து எனக் கொண்டால் முழுமை பெற்ற (இரண்டு) அட்டமி நாள்; ஆக மொத்தம் 16 எனவே சித்திரை பௌர்ணமி எனவும் கொள்ளலாம்; கடலாடுதல் சித்திரை நிலவில் நிகழும் என்பதாலும், அவ்விழா குறித்து எழுதப்பட்டதாகவும் இருக்கலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 15 (2018)

பாடல்

அடியார் சிலர்உன் அருள்பெற்றார்
     ஆர்வங் கூர யான்அவமே
முடையார் பிணத்தின் முடிவின்றி
     முனிவால் அடியேன் மூக்கின்றேன்
கடியே னுடைய கடுவினையைக்
     களைந்துன் கருணைக் கடல்பொங்க
உடையாய் அடியேன் உள்ளத்தே
     ஓவா துருக அருளாயே

தேவாரம் – எட்டாம் திருமுறை – மாணிக்கவாசகர்

பதவுரை

உடையவனே! உன் அடியார்களில் சிலர் உன்னிடத்தில் இருந்து உன்னுடைய அருளைப் பெற்றார்கள். அடியவனாகிய நானோ அழிவில்லா துர்நாற்றமுடைய பிணத்தைப் போன்று வெறுப்பினால்  வீணே  மூப்படைகின்றேன். அவ்வாறு இருந்தும் இளகாத மனம் உடையவனாகிய என்னுடைய கொடுமையான வினைகளை நீக்கி, அடியேனுடைய உள்ளத்தில் உன்னுடைய கருணையாகிய கடல்  பொங்கும் வண்ணம் இடைவிடாது உருகும்படி அருள் புரிவாயாக.

விளக்க உரை

  • பிணத்தின் – வெறுப்புக் காரணமாக உடம்பை பற்றிய சொல் ‘பிணம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 14 (2018)

பாடல்

காணும் பொருளும் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்
ஊணும் உணர்வும் உறக்கமும் தானாகக்
காணுங் கனகமும் காரிகை யாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

ஐம்புல நுகர்ச்சியின் காரணமாக உலகில் காணப்படுகின்ற பல பொருள்கள், கருத்தில் முற்றுப் பெற்று நினைக்கின்ற பலதெய்வங்களை வழிபடுதல், பிறரால் போற்றப்படுகின்ற திவ்ய தலங்களில் வாழ்தல், பெருகி ஓடும் நதி முதலிய புண்ணிய தீர்த்தங்களில் மூழ்குதல் மற்றும் அவற்றால் வரும் பயன்களுடன் நுகர்ச்சி, உண்ணும் உணவு, உணரும் உணர்வு, உறங்கும் உறக்கம், கருதப்படும் அளவான பொன் முதலிய செல்வங்கள் ஆகியவை திருவருள் அம்மையாகிய சாம்பவி மண்டலச் சக்கர வழிபாட்டினால் கிடைக்கும்.

விளக்க உரை

  • சாம்பவி சக்கர வழிபாடு எல்லாப்பயனையும் தருதல் பற்றி கூறப்பட்டப் பாடல்
  • தானாகக்காணும் கனகம் – பொன் பெற்றபிறகு அனைத்தும் உண்டாகும் என்பது பற்றி.
  • காரிகை – சாம்பவி

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

சிவனுக்குத் தத்புருட மந்திரம் எந்த உறுப்பாகும்?
முகம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 13 (2018)

பாடல்

நனவில் கலாதியா நால் ஒன்று அகன்று
தனி உற்ற கேவலம் தன்னில் தான் ஆகி
நினைவுற்று அகன்ற அதீதத்து உள் நேயம்
தனை உற்றிடத் தானே தற்பரம் ஆமே

பத்தாம் திருமுறை-  திருமந்திரம் – திருமூலர்

 பதவுரை

நனவுக் காலத்தே ஊழ், உழைப்பு, உணர்வு, உவப்பு, மருள்  என்னும் ஐந்தும் செய்படாது அகல ஆருயிர் தனித்து நிற்கும் தனிநிலை புலப்படும். அவ்வாறு தன்னில் தானாக நின்று அகன்ற அந்நிலையில் உணர்வுக்கு உணர்வாய் விளங்கப்படும் பொருளான சிவபெருமான் திருவடியினைத் திருவருள் நினைவால் கொள்ள அந்த உயிர் தற்பரசிவமாய்த் திகழும்.

விளக்க உரை

  • நாலொன்று – ஐந்து: கலை, வித்தை, அராகம், புருடன், மாயை.
  • நேயந்தனை – சிவத்தை.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

ஈசான மந்திரத்தால் செய்யும் தொழில் என்ன?
அருளல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 12 (2018)

பாடல்

ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா
     அரைக்கணமும் நினைப்பிரிந்தே இனித்தரிக்க மாட்டேன்
கோணைநிலத் தவர்பேசக் கேட்டதுபோல் இன்னும்
     குறும்புமொழி செவிகள்உறக் கொண்டிடவும் மாட்டேன்
ஊனைஉறக் கத்தையும்நான் விடுகின்றேன் நீதான்
     உவந்துவராய் எனில்என்றன் உயிரையும்விட் டிடுவேன்
மாணைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்நீ எனது
     மனம்அறிவாய் இனம்உனக்கு வகுத்துரைப்ப தென்னே.

திருஅருட்பா – வள்ளலார்

பதவுரை

நீ மனம் மகிழ்ந்து என்னிடம் வராமல் இருப்பின் என் உயிரையும் விட்டுவிடுவேன்; அரைக்கண நேரமும் நின்னைப் பிரிந்து  யான் (உடல்/உயிர்) தரித்திருக்க மாட்டேன்;  இதனையும் உன் மேல் ஆணையாக உரைக்கின்றேன். தீய நெறியினை உடையவர்கள் பேசுவதை இன்றுவரை கேட்டதுபோல் இனியும் அவர்களுடைய பயனில்லாத துன்பம் தரும் சொற்களை அவர்கள் அருகினில் இருந்து கேட்டு அவற்றை ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன்; உணவு மற்றும் உறக்கங்களையும் நான் இனி விட்டொழிக்கின்றேன்; நீ, என்னுடைய மன இயல்பை நன்கு அறிந்ததால், மனத்தால் வரும் துன்பங்களையும், சொல்லால் வரும் துன்பங்களையும் உடம்பால் வரும் துன்பங்களையும் வகை செய்து எவ்வாறு விரித்துரைப்பது? அவ்வாறு  உனக்கு வகுத்து உரைப்பது என்ன பயனைச் செய்யும்?

விளக்க உரை

  • அருள் வழங்க இறைவன் வராவிட்டால் உயிர் விடுதல் உறுதி என எடுத்து இயம்பியது
  • ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா – உன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணை ஐயா என்று மாற்றுக. சொற்றொடரை இருமுறைக்கு மேல் எழுதும் வழக்கம் தமிழ் மொழியில் இல்லாது இருப்பினும், தனது நிலையை அழுத்தமாக பதிவு செய்வதன் பொருட்டு மூன்று முறை  ‘உன்மேல் ஆணை’ என்று பாடியிருக்கிறார்.
  • அரைக்கணமும் நினைப் பிரிந்தே இனித் தரிக்க மாட்டேன் – திருவருட் சூழலில் நின்று அரை நொடிப்பொழுது பிரிந்தாலும், உலகியல் மாயை படர்ந்து அறிவை மயக்கி மாற்று நெறியில் செலுத்தும்.
  • கோணை நிலத்தவர் பேசக் கேட்டதுபோல் இன்னும் குறும்பு மொழி செவிகளுறக் கொண்டிடவும் மாட்டேன் –  உயிர் புற உணர்வோடு இருக்கும்போது உலகத்தவர் பேசும் பேச்சுக்களைக் கேட்டு, மனம் மாயா மயக்கிற்கு உள்ளாகும் என்பது பற்றியது.
  • கோணை – கோணல், வளைவு, கொடுமை, தொல்லை, வலிமை, அழிவின்மை, பீடை
  • மாணை – மாண்பு

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

சிவனுக்கு ஈசான மந்திரம் எந்த உறுப்பு?
சிரசு

Loading

சமூக ஊடகங்கள்