பாடல்
தவ்வலி யொன்ற னாகித் தனதொரு பெருமை யாலே
மெய்வ்வலி யுடைய னென்று மிகப்பெருந் தேரை யூர்ந்து
செவ்வலி கூர்வி ழி ( ய் ) யாற் சிரம்பத்தா லெடுக்குற் றானை
அவ்வலி தீர்க்க வல்லா ரவளிவ ணல்லூ ராரே.
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
குறைந்த வலிமையை உடையவனாய் இருந்தும், செருக்கு அடைந்து அதனால் ‘தன்னை உண்மையான வலிமை உடையவன்’ என்று கருதி மிகப் பெரிய தேரில் ஏறிச் சென்று, கோபம் காரணமாக சிவந்த, கொடிய கூர்மையான விழிகளால் கயிலையை, தன் பத்துத் தலைகள் கொண்டு அதனைத் தூக்க முற்பட்டவனாகிய இராவணனுடைய செருக்கினை அழித்து, வலியைப் போக்கிய பெருமான் திருஅவளிவணல்லூரில் உறைகின்றார்.
விளக்க உரை
- ஊர்தல் – நகருதல், பரவுதல், தினவுறுதல், நெருங்குதல், வடிதல், ஏறிச் செல்லுதல், கழலுதல், ஏறுதல்
- தவ்வுதல் – ஒடுங்குதல், குறைதல்
- தவ்வலி – ஒடுங்கும் வலி, குறைந்த வன்மை
- ஒன்றன் – தன் வலி ஒன்றினையே துணையாக உடையவன்
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
வாமதேய மந்திரத்தால் செய்யும் தொழில் என்ன?
திதி எனும் காத்தல்