அமுதமொழி – விளம்பி – ஆவணி – 25 (2018)

பாடல்

நஞ்செய லற்றிருந்த நாமற்ற பின்நாதன்
தன்செயல் தானேயென் றுந்தீபற
தன்னையே தந்தானென் றுந்தீபற

திருநெறி 5 – திருவுந்தியார்

பதவுரை

தன்னில் தான் விலகி, கண்ணுக்கு புலப்படிவதாகிய ஸ்தூல உடலும், புலனாகாத சூட்சம உடலும் தனித் தனி என்று அறிந்து இது நாம் அல்ல எனும் அறிவு பெற்று, இது நாதன் செயல் தானே என்று உந்தி பற; இவ்வாறான அறிவு பெறுவதற்கு தன்னையே தந்தான் என்று உந்தி பற.

விளக்க உரை

  • உந்தி பற – ஆடும் மகளிர், பறவையைப் போல நிலத்தில் இருபாதங்கள் மட்டும் படிய, இருகைகளையும் மடக்கி இருந்து, பின் விரைவாக எழுந்து,தன்  இருகைகளையும் இருபக்கங்களில் சிறகுபோல நீட்டி,  பறவைகள் பறப்பதுபோலப் பாவனை செய்து ஓடி, வேறோர் இடத்தில் முன் போல அமர்ந்து, பின்னும் அவ்வாறே ஆடும் விளையாட்டு.
  • தோழியராய் ஒத்த நிலையில் இருக்கும் மகளிர் தம்மில் இவ்வாறு அழைத்துப் பாடியும், மற்றவர் அக்கருத்து ஒத்து ஆடுவர். இறைவனை விளிப்பவனாகவும், தன்னை ஆடுபவனாகவும் கொண்டு இயற்றப்பட்ட பாடல்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 23 (2018)

பாடல்

பூணொ ணாததொ ரன்பு பூண்டு
     பொருந்தி நாள்தொறும் போற்றவும்
நாணொ ணாததொர் நாணம் எய்தி
     நடுக்கட லுள்அ ழுந்திநான்
பேணொ ணாதபெ ருந்து றைப்பெருந்
     தோணி பற்றி யுகைத்தலுங்
காணொ ணாத்திருக் கோலம் நீவந்து
    காட்டி னாய்க்கழுக் குன்றிலே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

உன்னுடைய அன்பர்கள் உன்னிடத்தில் என் தரத்திற்கு மேற்பட்ட ஓர் அன்பு கொண்டு அந்த அன்பிலே நித்தமும் நிலைபெற்று உன்னைப் போற்றி வணங்குவதைக் கண்டு, `யான் உன்னிடத்தில் பேரன்பு உடையேனாய் இருந்தும் உன்னொடு வரும் பேற்றினைப் பெறாததால், அப்பேற்றினைப் பெற்றோர் செய்யும்  எள்ளலுக்குப் பெருநாணங்கொண்டு, அந்தநிலை நீங்குதற்கு நீதிருப்பெருந்துறையில் இருந்து, தில்லைக்கு வருகஎன்று அருளிச் செய்த திருவருளையே பற்றுக்கோடாகக் கொண்டு பல தலங்களிலும் சென்று உன்னை வணங்கிவர, துன்பக் கடலில் அழுந்தி, மிக்க மதிக்கத்தக்கதும், போற்றத் தக்கதும் எளிதில் பாதுகாத்துக் கொள்ளுதற்கு இயலாத திருப்பெருந்துறையில் கிடைத்த திருவருளாகிய பெருந்தெப்பத்தைப் பற்றிச் செலுத்தியும்திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, எவராலும் எளிதில் காணமுடியாத உன் திருக்கோலத்தை எனக்குக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?

விளக்க உரை

  • திருக்கழுக்குன்றத்தில் உனது அரிய திருக்காட்சியை எனக்குக் காட்டியருளினாய்` என்பது இதன் பொருள்.
  • உகைத்தல் – செலுத்துதல், எழுப்புதல், பதித்தல், எழுதல், உயரவெழும்புதல்,அம்பு முதலியவற்றை விடல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 20 (2018)

பாடல்

ஏன எயிறு ஆடு அரவொடு என்பு வரி ஆமை இவை பூண்டு இளைஞராய்
கானவரி நீடுழுவை அதளுடைய படர் சடையர் காணியெனலாம்
ஆனபுகழ் வேதியர்கள் ஆகுதியின் மீதுபுகை போகியழகார்
வானமுறு சோலை மிசை மாசு பட மூசும் மயிலாடுதுறையே

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

சிவபெருமான், பன்றியின் கொம்பும், படமெடுத்து ஆடும் பாம்பும், எலும்பும், வரிகளையுடைய ஆமையோடும் அணிந்து, இளைஞராய், காட்டில் வாழும் வரிகளையுடைய புலித் தோலை ஆடையாக உடுத்தவர்; படர்ந்து விரிந்த சடையினை உடைய அச்சிவபெருமானைக் கண்டு தரிசிப்பதற்குரிய இடம், சிறந்த புகழையுடைய அந்தணர்கள் வளர்க்கும் வேள்வியிலிருந்து எழும்புகை, மேல் சென்றுஅழகு மிகுந்த தேவலோகத்திலுள்ள கற்பகச்சோலை மீது அழுக்குப்படப் படி செய்யும் திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும்.

விளக்க உரை

  • ஏன எயிறு – பன்றியின் கொம்பு
  • இளைஞர் – வாலிபர் (சதாசிவமூர்த்தத் தியானம் பதினாறு வயதினராகப் பாவிக்கச் சொல்வது காண்க.)
  • உழுவை அதள் – புலித்தோலை.
  • காணி – உரிய இடம்
  • மூசு – மூடுகின்ற மயிலாடுதுறை.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 19 (2018)

பாடல்

முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்லென்றாற் சொல்லுமா றெங்ஙனே

பத்தாம் திருமுறை -திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

நல்ல அறிவும், சிறந்த இல்லற பண்பும், மக்கட்பேறும் உடைய ஒரு தாயானவள் தன் காதல் கணவனுடன் பெற்ற இன்பத்தை மகள் சொல் என்று  கேட்டால் அந்த தாயால் அதை எப்படி சொல்ல விளக்க முடியாதோ அது போல புறத்தில் பொருளின் வடிவினை முகக்கண் கொண்டு பார்க்க முடியும்; ஆனால் அறிவுக் கண்ணால் மெய் அறிவு கொண்டு காணப்படும் அம்மெய்ப்பொருளை அகக்கண்ணாகிய அறிவுக் கண்ணால் மட்டும் காண இயலும்.அத்தகைய பொய்யில்லாத  மெய்யான இன்பத்தினைத் தமக்குத் தாமே தம்மில் உணர்தல் அன்றி சொல்லி உணரச் செய்வது என்பது எவர்க்கும் ஒல்லாது.

விளக்க உரை

  • மெய்ப் பொருளை புறக்கண்ணால் காணலாம் என்று கூறுபவர் மூடராவர். புறக்கண்,  சிவத்தினை உணரத் துணை செய்யும் போது  திருவடிப் பேரின்பம் அகத்துக் கண்ணாகிய அறிவுக் கண்ணால் நேரும். அதுவே அழிவிலாத பேரின்பம், எல்லையிலாத நல்லின்பம்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 18 (2018)

பாடல்

பாசமான களைவார் பரிவார்க்கமுதம் அனையார்
ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல்விடைமேல் வருவார்
காசைமலர்போல் மிடற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார்
பேசவருவார் ஒருவர் அவர்எம்பெருமான் அடிகளே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

ஐந்து மலங்களான ஆணவம், மாயை, கன்மம் இவற்றுடன் மாயேயம், திரோதான சத்தி ஆகிய மலங்களை  அடியோடு போக்குபவரும், அன்பர்களுக்கு அமுதம் போல இனிப்பவரும், மூன்று விதமான ஆசைகள் ஆகிய மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை ஆகியவைகள் அகலுமாறு அருள் கொடுப்பவரும், மாலையணிந்த விடைமீது வருபவரும், காயாமலர்போலும் மிடற்றினை உடையவரும், கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவரும், அவரது புகழைப் பலரும் பேசி வணங்குமானவரும், ஒப்பற்றவரும் ஆன அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார்.

விளக்க உரை

  • பரிவார்க்கு-அன்பர்க்கு.
  • அமுதம் அனையார்-அமிர்தத்தைப் போல்பவர்.
  • அலங்கல்-மாலை.
  • காசை மலர்-காயாம்பூ.
  • பெத்தான்மாக்களுக்குள்ள ஆசைகள் தீருமாறு போகப் பொருள்களைப் பலகாலமும் கொடுத்து, அவர்களது ஆசைகள் தீருமாறு கூட்டுவித்து வினைகளை அனுபவிக்கச் செய்தல்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 17 (2018)

 

பாடல்

காண்கின்ற தோர்பொருளைக் காண்கின்ற யோகிகளே
காண்கின்றார் காட்சியறக் கண்ணுதலைக் – காண்கின்றார்
காண்பானுங் காணப் படும்பொருளும் இன்றியே
காண்கையினாற் கண்டனரே காண்

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார்

பதவுரை

அறிதல் எனும் பொருள்தரும் காணுதல் தொழிலையுடையதும், அறிவிக்க அறியும் தன்மை உடையதுமான ஆன்மாவைத் அகத்தில் தரிசித்த பெரியோர்களே சிவனைக் காணாமல் காண்கின்றோம் என்ற சுட்டறிவு நீங்கச் சிவனைக் காண்பார்கள். காணாமல் காண்பது எவ்வாறு எனில், காண்பவன் ஆகிய ஆன்மா, காண்கின்றவனால் காணப்பட்ட பொருள்களாகிய சிவம் என்கிற இரண்டு தன்மையும் இல்லாமல் இரண்டும் சிவத்துடன் ஒன்றாகி ஞான அறிவாகிய மெய்ப்பொருளை உள்ளவாறு காண்கையினாலே  கண்டவர்கள்  என்று அறிவாயாக.

விளக்க உரை

  • காண்கின்ற பொருள் என்பது  சத்து, அசத்து என்னும் இருதிறப்பொருள்கள்.
  • நிலைபெற்ற சத்தாக உள்ள ஆன்ம நாட்டத்தின் இறையோனாகிய சிவபரம்பொருளை காணுதல். அஃதாவது தற்போதம் கெடத் திருவருளோடு உடனின்று ஒன்றியுணர்தல்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 16 (2018)

பாடல்

பாராதி விண்ணனைத்தும் நீயாச் சிந்தை
     பரியமட லாவெழுதிப் பார்த்துப் பார்த்து
வாராயோ என்ப்ராண நாதா என்பேன்
     வளைத்துவளைத் தெனைநீயா வைத்துக் கொண்டு
பூராய மாமேலொன் றறியா வண்ணம்
     புண்ணாளர் போல்நெஞ்சம் புலம்பி யுள்ளே
நீராள மாயுருகிக் கண்ணீர் சோர
     நெட்டுயிர்த்து மெய்ம்மறந்தோர் நிலையாய் நிற்பேன்

தாயுமானவர்

பதவுரை

முதலும் முடிவாகி இருப்பது போன்றும், நிலம், நீர், தீ, காற்று மற்றும் ஆகாயம் ஈறாக உள்ள ஆக்கப்பாடுகளைத் திருவருள் துணையால் நிகழ்த்தப்படுகின்றன என எண்ணுபவர்களுக்கு மெய்ப்பொருளாகிய சிவன் தோற்றம் ஒன்று மட்டுமே காணப்படும்; அதனால் முதல்வனே, அடியேன் விருப்பம் கொள்ளும் சிந்தையினைப் பெரிய பனை ஏடாகக் கொண்டு அதில் எண் குணங்களைக் கொண்டு  நிற்கும் நின் பொதுநிலையினை மறவாத நினைவால் எழுதிய தன்மை கண்டும், அடியேனைத் தடுத்துத் வைத்துக்கொண்டு முதலும் முடிவுமாக உன் அருள் அல்லாமல் மேலொன்றும் அறிய முடியாதவனாகி, புண்பட்ட உள்ளம் போன்று உன்னையே நினைந்து வருந்திமிகமிகப் புலம்பி, உள்ளமானது வெள்ளம் போல உருகி, அவ்வெள்ளப் பெருக்கால் கண்ணீர் சேர, நினைந்தது நினைத்த பொழுதே கிட்டாமையால் ஏற்படும் பெருமூச்சினை விட்டு மெய்ம்மறந்து நிற்போர் நிலையாய்ச் செய்வதறியாது நிற்பேன்.

விளக்க உரை

  • பார் – நிலம்
  • விண் – விசும்பு
  • மடல் – பனைஏடு
  • பூராயம் – முதலும்முடிவும்
  • எண்குணங்கள் – தன் வயம் உடைமை, தூய உடம்பு உடைமை, இயற்கை உணர்வு உடைமை, முற்றுணர்வு உடைமை, இயல்பாகவே பாசமின்மை, பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 13 (2018)

பாடல்

திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச்செப் பினர் மறைந்தார்

விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர்

பதவுரை

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பத்துமுறை என இரு மாதங்கள் நாள்தோறும் முறையாகப் பாராயணம் செய்து வந்தால், அரசர்களும் வசியம் ஆவார்கள்; தினமும் இருபத்தோரு முறைகள் பாராயணம் செய்தால் குழந்தைச் செல்வம், கல்விச் செல்வம் போன்ற சகல செல்வங்களும் வந்துசேரும் என்று விநாயகர் காசியப்பருக்கு அருளி மறைந்தார்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 12 (2018)

பாடல்

தாணு ஈன்றருள் செல்வமே தணிகையில் சாமியே நினையேத்திக்
காணு வேனிலை அருளிவன் புன்மையில் காலங்கள் கழிக்கிறேன்
மாணு மன்பர்கள் என்சொலார் ஐயநீ வந்தெனக் கருள்வாயேல்
நாணு வேன் அலன் நடுங்கலன் ஒடுங்கலன் நாயினும் கடையேனே

திருஅருட்பா – ஐந்தாம் திருமுறை – வள்ளலார்

பதவுரை

தணிகை மலையில் வீற்றிருப்பவனே, உன்னை நினைத்து புகழ்ந்து உன்னைக் காணவில்லை;  அருள் இல்லாமையால் சிறுமை கொண்டும், இழி செயல்கள் செய்து கொண்டும் காலங்களை கழிக்கின்றேன். நீ வந்து எனக்கு அருள்வாய் எனில் நாயினும் கடையவன் ஆகிய நான் அஞ்சவோ, நடுங்கவோ, ஒடுங்கவோ மாட்டேன்ஆதலின் பெருமை உடைய அன்பர்கள் என்ன சொல்லப் போகிறார்கள். ஆகவே எனக்கு நிலைப் பேற்றினை எனக்கு அருள் செய்வாயாக;

விளக்க உரை

  • தாணு – சிவன், குற்றி, தூண், நிலைபேறு, மலை, பற்றுக்கோடு, செவ்வழி யாழ்த்திறவகை,
  • தாவரம்
  • புன்மை – சிறுமை, இழிவு, இழிசெயல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 11 (2018)

பாடல்

மகத்தில் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய்; மைந்தனே! மணியே! மணவாளா!
அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால், “அழையேல், போ, குருடா!” எனத் தரியேன்;
முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன்? முக்கணா! முறையோ? மறை ஓதீ!
உகைக்கும் தண் கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

வேதங்களை அருளிச் செய்தவனே, விலைமதிப்புடைய பொருள்களை கரையிடத்துக் கொண்டு வந்து சேர்க்கும் குளிர்ச்சியும் அருளும் நிறைந்தும்  கடல் அலைகள் வந்தும் உலவுகின்ற ஒற்றியூர்என்னும் ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே, என்றும் வலிமையாய் உள்ளவனே, மணி போன்றவனே, அழகுடையவனே, நீ எனக்கு, ‘மகம்என்னும் விண்மீன் கீழ் வந்த, ‘சனிஎன்னும் கோள் போன்றவன் ஆயினேன் ஆதலால் எனது குருட்டுத் தன்மை பற்றி காரியம் சொல்ல   அகத்தில் உள்ள பெண்டுகளை அழைத்தால் கண்ணிலியே நீ என்ன அறிவாய்போஎன்று சொல்வதை நான் பொறுக்கமாட்டேன்; மூன்று கண்களையுடையவனே, முகத்தில் கண் இல்லாமல் நான் எவ்வாறு வாழ்வேன்இது முறையோ!

விளக்க உரை

  • சுந்தரர், உலகியர் முன்வைத்து தம் மனைவியர் இங்குக் கூறியது போலக் கூறியது
  • சனிக்கிர சஞ்சாரம் மக நட்சத்திரத்தில் வரும்போது, நாட்டிற்கும், மக்களுக்கும் தீங்குவரும் என்பது ஜோதிட சாத்திரம்.
  • நீ மூன்று கண்களோடு இருக்கிறாய், நான் கண்கள் இழந்து துன்புறுகிறேன் என்பதைக் குறிப்பிடுகிறார்; துன்பம் அதிகம் உடையவர் என்பதாலும், இறைவனை இவ்வாறு வைது கூறினும் அவன் தன் அடியார்கள் இடத்தில் அனைத்தையும் பொறுக்கும் அருளாலன் என்பதையும் விளக்க இப்பாடல்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 10 (2018)

பாடல்

தானே அமைந்தஅம் முப்புரந் தன்னிடைத்
தானான மூவுரு ஓருருத் தன்மையள்
தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள் கல்வி
தானான போகமும் முத்தியும் நல்குமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

சத்தியானவள், எங்கும் நிறைந்தவளாகவும்உருத்திர லோகம், விஷ்ணுலோகம், ப்ரம்மலோகம் ஆகியவற்றிற்கு  தலைமையாக இருக்கும்  இருக்கும் உருத்திரன், விஷ்ணு, பிரமன் ஆகியவர்களை தோற்றம் ஒடுக்கம் செய்பவர்களாக இருந்து அது தாண்டியதான நான்காவது வடிவமாக நிற்பாள்; அவள் ஓருத்தியே பொன்னிறம் கொண்ட சத்தியாக  நின்று முத்தியையும், செந்நிறம் கொண்ட திருமகளாய் நின்று செல்வத்தையும், வெண்ணிறம் கொண்ட கலைமகளாய் நின்று கல்வியையும் தருவாள்.

விளக்க உரை

  • மூவுரு ஓர் உரு – மூவுன்று உருவத்தையும் அடக்கி உள்ள ஓர் உரு.
  • இதனால், ஒருத்தியே மூவராய் நின்று முத்தொழில் செய்பவளாகவும், ஐவராய் இருந்து ஐந்தொழில் இயற்றி அதன்படி நின்றொழுகும் முதன்மையானவர்கள் அனைவர்க்கும் தலைவியாய் உயிர்கட்குப் போக மோட்சங்களைத் தந்து நிற்கும் திறன் பெறப்படும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 9 (2018)

பாடல்

சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
   தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
   மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
   ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
   அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

தேவி இலட்சுமியால் வரமாக அருளப்பட்டதும்,  தேவலோகத்தில் இந்திரனுக்கு கிடைக்கப்பெற்றதும், நவநிதிகளில் இருப்பதும், சக்தியை குறிப்பதும்  அதன் மூலம் ஞானத்தினை பெற்று நவநிதிகளில் இருப்பதும், சக்தியை குறிப்பதும்  அதன் மூலம் ஞானத்தினை பெற்று தரவல்லதும், தோல்வியை என்றும் தராததும் ஆன சங்க நிதியினையும், தரித்துக் கொண்ட ஒரு வீரனை எவர் ஒருவராலும் தோற்கடிக்க முடியாத பதும நிதியினையும் தந்து, ஆட்சி செய்யப் பூமியையும், மற்றும் வானுலகையும் தருபவராக இருப்பினும் தேவர்களுக்கு தலைவனாகிய சிவபெருமானிடத்தில்  அன்பில்லாதவர்களாய் நிலையில்லாமல் அழிபவர்களாகிய அவர்களது செல்வத்தை யாம் ஒருபொருளாக மதிக்க மாட்டோம். உறுப்புக்கள் எல்லாம் அழுகிக் குறைந்து அழுகும் தொழுநோய் உடையவர்களாகவும்,  பசுவை உரித்துத் தின்று அதன் காரணம் பற்ரிய வினை கொண்டு திரியும் புலையர்கள் ஆயினும் கங்கையை நீண்ட சடையில் கொண்ட சிவபெருமானுக்கு அன்பராக இருப்பவர்கள் எவரோ அவரே நாம் வணங்கும் கடவுள் ஆவார்.

விளக்க உரை

  • இத் திருத்தாண்டகம், உலகியல் பொருள்களைப் பற்றாது, மெய் நெறியையே பற்றி நிற்கும் தமது நிலையை அருளிச்செய்தது.
  • புலையர் – கீழ் செயல்கள் உடையோர். (வடமொழி -‘சண்டாளர்’)

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 7 (2018)

பாடல்

சடையானைச் சந்திர னோடுசெங் கண்ணரா
உடையானை யுடைதலை யிற்பலி கொண்டூரும்
விடையானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியை
உடையானை யல்லதுள் காதென துள்ளமே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

திருச்சடையின்மேல் பிறை ஆகிய சந்திரனையும், சிவந்த கண்களை உடைய பாம்பையும் உடையவனாகவும், உடைந்த தலை ஓடு ஆகிய மண்டையோட்டில் உணவு ஏற்று, ஊர்ந்து செல்லும் விடைமீது ஏறி வருபவனாகவும், தேவர்களால் வணங்கப்படும் திருவெண்ணி என்னும் தலத்தைத் தனக்கு ஊராக உடையவனாகவும் இருக்கும் அவனையன்றிப் பிறரை நினைக்காது எனது உள்ளம்.

விளக்க உரை

  • உள்காது – நினையாது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 6 (2018)

பாடல்

நான்எனவும் நீஎனவும் இரு தன்மை
நாடாமல், நடுவே சும்மா
தான் அமரும் நிலை இதுவே சத்தியம் சத்-
தியம் என, நீ தமியனேற்கு
மோனகுரு ஆகியும், கை கட்டினையே,
திரும்பவும் நான் முளைத்துத் தோன்றி,
மானத மார்க்கம் புரிந்து இங்கு அலைந்தேனே,
பரந்தேனே, வஞ்சனேனே.

தாயுமானவர்

பதவுரை

நான் என்னும் நிலையும், நீ என்னும் நிலையும் கொண்டு அதை நான் நாடாமல், மௌனத்தில் அந்த இருநிலைகளுக்கும் இல்லாமல்  நடுநிலை கொண்டு ஏகத்துவம் ஆகியதும், இறை கூட்டுவிக்க தானே அமரும் நிலையானதும் ஆன இந்த நிலையே உண்மை இது சத்தியம், சத்தியம் என்று எனக்கு மௌன குருவாகி என்னை கட்டினாய்; ஆனால் நான் திரும்பவும் இங்கு பிறப்பு கொண்டு குற்றம் புரிவதானதும், மனம் போன மார்க்கமாகமான மானக்கேடாகவும் உள்ள மார்கமாக வஞ்சகம் உடையவனாகி, அலைந்து இங்கு வந்து  பரந்து விரிகின்றேன்.

விளக்க உரை

  • சத்தியம் உரைக்கும் கால் அதுவே இறுதி என்பதை உரைக்க இருமுறை உரைத்தல் மரபு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 5 (2018)

பாடல்

ஆதிக்கண் நான்முகத்தி லொன்று சென்று
   அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளால்
சேதித்த திருவடியைச் செல்ல நல்ல
   சிவலோக நெறிவகுத்துக் காட்டு வானை
மாதிமைய மாதொருகூ றாயி னானை
   மாமலர்மே லயனோடு மாலுங் காணா
நாதியை நம்பியை நள்ளாற் றானை
   நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

ஆதி காலத்தினை உடைய அந்தணன் எனப்படும் பிரம தேவனுடைய முகங்களில் ஒன்று உண்மை அல்லாத சொல்லினைக் கூற, அந்த முகத்தைத் தன் கையில் இருக்கும் வாளைக் கொண்டு அந்தத் தலையை போக்கிய வயிரவனாய் உள்ளவனும், அடியார்கள் அடைவதற்கு மேம்பட்டதாகிய சிவலோகம் அடையும் வழியைக் காட்டுபவனாய் உள்ளவனும், பெருமையுடைய பார்வதி பாகனாய் உள்ளவனும், தாமரை மலர் மேல் உள்ள பிரமனும், திருமாலும் காண முடியாத தலைவனாக உள்ளவனும், குண பூரணனாக திருநள்ளாற்றில் உகந்து எழுந்து அருளியிருக்கும் பெருமானை அடியேனாகிய நான் நினைந்து துன்பங்களிலிருந்து நீங்கப் பெற்றேன்.

விளக்க உரை

  • ‘சிவலோக நெறி’ –  தானே முதல்வன் என உணர்த்தியும், அவ்வாறு உணரும் நெறி தானே சிவபிரானை அடையும் நெறி என்பதும் குறித்தது
  • மாதிமைய – பெருமையுடைய
  • பிரமன் ஐந்துதலை உடையனாய் இருந்தபொழுது,’ தானே முதல்வன்’ எனச் செருக்குக் கொண்டு திருமாலுடன் கலகம் விளைத்தார். சிவபிரான் வயிரவரை அனுப்பிய போது அவரைக்கண்டு ,  ‘வா, என் மகனே’ எனப் பிரமன் அகங்காரத்துடன் அழைத்த போது வயிரவர் அவனது தலையைக் கிள்ளினார்; பின்பு பிரமனது செருக்கு நீங்கியபொழுது , சிவபெருமான் அவனுக்கு நல்வரம் அருளினார். (திருநாவுக்கரசர் காலத்தின் படி இப்பொருள் உரைக்கப்பட்டது)
  • ‘பிரம னார்சிரம் உகிரினிற் பேதுறக் கொய்தாய்’ – பிரமன் வருந்த அவனது சிரத்தை நகத்தினால் கொய்தவன் என்பது காஞ்சிப் புராணம்  வயிரவேசப்படலம் காட்டும் வரலாறு.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 31 (2018)

பாடல்

நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்
நாளும் கழுவினும் அதன் நாற்றம் போமோ
கூறும் உடல் பல நதியாடிக் கொண்டதால்
கொண்ட மலம் நீங்காதென்று ஆடுபாம்பே

பாம்பாட்டி சித்தர்

பதவுரை

நாற்றம் உடைய மீனைப் பல தரம் நல்ல தண்ணீர் கொண்டுக் கழுவினாலும் அதனது இயல்பான நாற்றம் போகாது; அது போல அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் ஆகிய பல கூறுகளை கொண்டு உடலால் ஆக்கப்பட்ட மனிதர்கள் என்னதான் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேடினாலும் அதன் குற்றம் நீங்காது என்று ஆடு பாம்பே.

விளக்க உரை

  • எத்தனை புனித நீராடினாலும் செய்த பாவங்கள் தண்டனைக்குரியவை என்றும், அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு என்று கூறும் பாடல்

 

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 30 (2018)

 

பாடல்

வேவத் திரிபுரம் செற்றவில்லி
   வேடுவ னாய்க்கடி நாய்கள்சூழ
ஏவற் செயல்செய்யுந் தேவர்முன்னே
   எம்பெரு மான்தான் இயங்குகாட்டில்
ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன்
   எந்தை பெருந்துறை ஆதிஅன்று
கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த
   கிடப்பறிவார் எம்பிரா னாவாரே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றினால் ஆன கோட்டைகளை அமைத்துக் கொண்டு கொடுமை செய்த அரக்கர்களான வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் ஆகியவர்களின் முப்புரத்தினையும் புன்னகை செய்து தீயினால் வெந்து அழியுமாறு செய்த வில்லை உடையவனும் எமது தந்தையும் ஆகிய திருப்பெருந்துறை முதல்வன், தாம் இட்ட பணியைச் செய்யும் தேவர்களது முன்னிலையில், கடிக்கின்ற நாய்கள் சூழ்ந்து வர, தான் வேடுவனாகிச் சென்ற காட்டிலே, அம்பு தைக்கப்பட்டு இறந்த தாய்ப் பன்றிக்குத் திருவுளம் இரங்கி அக்காலத்தில் அற்ப செயலாகிய தாய்ப்பன்றியாகி அதன் குட்டிகளுக்குப் பால்கொடுத்த திருஉளப் பாங்கை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவர் ஆவார்கள்.

விளக்க உரை

  • ‘வேவ’  முதல், “இயங்கு காட்டில்“ என்றது வரை, சிவபெருமான் அர்ச்சுனன் பொருட்டுப் பன்றியின் பின் வேடனாய்ச் சென்ற வரலாற்றைக் குறிப்பது.(பாசுபதாஸ்திரம் வழங்கிய காதை). அக்காலத்தில் தேவர்கள் ஏவல் செய்யும் வேடுவராய் வந்தனர் என்பதும் வரலாறு.
  • கேழல் – பன்றி
  • இறைவன் பன்றிக் குட்டிகளுக்குப் பால் கொடுத்த திருவிளையாடல்

 

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 29 (2018)

பாடல்

இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும்.

விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர்

பதவுரை

மேலே கூறப்பட்ட விநாயகர் அஷ்டகம் எனும் தோத்திரப் பாடல்களை தொடர்ந்து மூன்று தினங்கள் காலையும் மாலையும் சந்திக்கும் நேரமான சந்தியா நேரத்தில் யார் பாராயணம் செய்கின்றார்களோ, அவர்கள் செய்யும் காரியங்களில் வெற்றிபெறுவார்கள்; தொடர்ந்து எட்டு தினங்கள் படித்தால் மனம் மகிழும் படியான நலம் பெறுவார்கள்; சதுர்த்தியன்று நல்ல சிந்தையுடன் எட்டுத் தடவவைகள் பாராயணம் செய்தால் அணிமா, கரிமா, இலஹிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசீதை எனும் எட்டு வகையான அட்டமாசித்திகளையும் பெறுவார்கள்.

விளக்க உரை

  • சந்தியாக்காலம் என்பது திரேதா யுகத்திற்கும் துவாபர யுகத்திற்கும் இடையிலான  பயங்கரமான பஞ்சக்காலம் என்பதும் அக்காலகட்டத்தில் அரசமுனியான விஷ்வாமித்திரர் நாயிறைச்சி உண்டு வாழ்ந்தார் என்ற குறிப்புகளும் சில இடங்களில் காணப்படுகின்றன. இப்பாடல்கள் வறுமையை விலக்கி பஞ்சத்தினை போக்குபவைகள் என்றும் கொள்ளலாம்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 27 (2018)

பாடல்

அருட்டிரட் செம்பொற் சோதி
   யம்பலத் தாடு கின்ற
இருட்டிரட் கண்டத் தெம்மான்
   இன்பருக் கன்பு செய்யா
அரட்டரை அரட்டுப் பேசும்
   அழுக்கரைக் கழுக்க ளாய
பிரட்டரைக் காணா கண்வாய்
   பேசாதப் பேய்க ளோடே

ஒன்பதாம் திருமுறை – திருமாளிகைத் தேவர்

பதவுரை

அருள் திரண்டு, செம்பொன் போன்ற நிறமுடைய ஒளியை கொண்ட சிற்றம்பலத்தில் ஆனந்தக் கூத்தாடும் நீலகண்டனாகிய எம்பெருமானுடைய அடியவர்கள் மீது அன்பு செலுத்தாமல் துடுக்கு உடையவர்களையும், துடுக்கான வார்த்தைகளைப் பேசும் குற்றம் உடையவர்களையும், கழுகுகள் போன்று பிறர் பொருளை நயவஞ்சமாகப் பறித்து உண்ணும் நெறி தவறியவர்களையும் என் கண்கள் காணது; என் வாய் அப்பேய்களோடு உரையாடாது.

விளக்க உரை

  • `அருளினது திரளாகிய அம்பலம்` எனவும், `இருளினது திரளாகிய கண்டம்` எனவும் மாற்றி உரைக்க.
  • அரட்டர் – துடுக்குடையவர்.
  • பிரட்டர் – புரட்டர் (வடமொழி பிரஷ்டர்) – நெறிதவறியவர். ஒதுக்கப்பட்டவர், வஞ்சகர்

 

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 26 (2018)

பாடல்

காண்டல் வாயில் மனம்தன்வே தனையோ(டு) யோகக் காட்சியென
ஈண்டு நான்காம் அனுமானம் தனக்கும் பிறர்க்கு மென்றிரண்டாம்
மாண்ட உரைதந்த் ரமந்த்தரத்தோ டுபதே சச்சொல் லெனமூன்றாம்
பூண்ட அளவைக் கெதிர்புலன்தன் னியல்பு பொதுவென் றிரண்டாமே

திருநெறி 2 – சிவஞானசித்தியார்

பதவுரை

பொருளை அறிவதற்குக் கண்ணால் காணுகின்ற நிலையைக் கருவியாக்கிப் பொருளை அறிவதை குறிப்பிடும் பிரத்தியட்ச பிரமாணம் என்றும் காண்டல் அளவை என்றும் குறிக்கப் பெறும் காட்சியளவை வாயிற்காட்சி, மானதக்காட்சி, தன்வேதனைக்காட்சி, யோகக்காட்சி என நான்கு வகைப்படும்; கருதலளவை தன்பொருட்டு எனவும், பிறர் பொருட்டெனவும் இருவகைப்படும்; உரையளவை தந்திரகலை, மந்திரக்கலை, உபதேசக்கலை என மூன்று வகைப்படும்; இதுவே பிரமாணங்கள் என்று அறியப்படும். பிரமேயங்கள் சிறப்பியல்பு, பொதுவியல்பு என இருவகைப்படும்.

விளக்க உரை

  • காட்சி அளவை, கருதல் அளவை மற்றும் உரையளவை ஆகியவற்றின் பாகுபாடுகள் பற்றி கூறப்பட்டது

 

சமூக ஊடகங்கள்