அமுதமொழி – விளம்பி – சித்திரை – 26 (2018)

பாடல்

அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
     அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
     திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
     கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
     பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

தேவாரம் -ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

புறப்பொருளை அறியும் கருவி மட்டும் கொண்டு, தன்னையறியும் உயிரறிவு துணையுடன் தன் முயற்சியால் அறிந்து அணுவதற்கு அரியவன் ஆனவனும், ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகிய அறுதொழில்களை செய்யும் தில்லைவாழ் அந்தணர்களின் உள்ளத்தில் உள்ளவனும், வீடுபேறு அளிக்கும் அறிய பெரிய வேதங்களின் உட்பொருளாக இருப்பவனும், மிகவும் சிறிதானதும், நுண்ணியதுமான அணு அளவில் உள்ளவனும், யாரும் தம் முயற்சியால் உணரமுடியாத மெய்ப்பொருள் ஆகியவனும், தேனும் பாலும் போன்று இனியவனும், தானே விளங்கும் சுயம்பிரகாசம் ஆகிய நிலைபெற்ற அறிவே ஆன ஒளிவடிவினனும், எல்லா வகையிலும் மேம்பட்டவனும், வியாக்கிரபாதர் என்னும் புலிக்கால் முனிவனுக்கு உறைவிடமாகிய தில்லையில் எழுந்தருளும் அப்பெருமானுடைய உண்மையான புகழைப் பற்றி பேசாத நாள்கள் எல்லாம் பயன் அற்ற நாள்களே.

விளக்க உரை

  • பெரும்பற்றப் புலியூரானை – புலி கால் முனிவர் பூசித்த திருப்பாதிரிப் புலியூரில் உள்ளவனை என்று சில இடங்களில் விளக்கப்பட்டுளது. அந்தணர் என்று தில்லை வாழ் அந்தணர் குறித்த செய்தியாலும்,  புலிக்கால் முனிவர் பற்றிய செய்தியாலும், ஆறாம் திருமுறையில் முதல் தலம் மற்றும்  கோயில் எனப்படுவதும், சைவர்களால் குறிக்கப்படுவதும் ஆன ‘கோயில்’  என்று விளக்கி இருப்பதாலும் இப்பொருள் கொண்டு விளக்கப்பட்டிருக்கிறது. பிழை இருப்பின் ஆன்றோர்கள் மன்னிக்க.
  • ‘அணு’ என்றதனால் நுண்மையும், ‘பெரியான்’ என்றதனால் அளவின்மையும் அருளியது குறித்து  ஒப்பு நோக்கி  சிந்திக்கத் தக்கது.
  • ‘பிறவாநாள்’ – பிறவி பயனின்றி ஒழிந்த நாளாதல் பற்றி. அறம், பொருள், இன்பங்கள் நிலையற்ற உலகியல் இன்பம் தருவதான சிறுமை தரும் என்பது பற்றியும், இறை இன்பமான பெரும் பயன் தராது எனும் நோக்கில்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *