அமுதமொழி – விளம்பி – சித்திரை – 29 (2018)

பாடல்

மூலம்

காயத்தே ரேறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தே ரேறி மயங்கு மவையுணர்
நேயத்தே ரேறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத்தே ரேறி யவனிவ னாமே

பகுப்பு

காயத்தேர் ஏறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தேர் ஏறி மயங்கும் அவை உணர்
நேயத்தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத்தேர் ஏறி அவன்இவன் ஆகுமே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

உடம்பு ஆகிய நிலையில்லாத தேரின்மேல் ஏறி, மனமாகிய பாகன் தன் கையைப் பொருத்தி,  கண்ட இடங்களில் செலுத்துதலினால் வழியறியாது மாயைக்கு உட்பட்டு மயங்குகின்ற உயிர்கள், சிறிதே உணர்வு பெற்றுச் தூயவனாகிய சிவன் மேல்  அன்பாகிய தேரில் ஏறிச்சென்று அவனது அருளைப்பெற்றால்,  ஆயத்தேர் எனும் சமாதி யோக வழியில்  சீவன் சிவனை அடைந்து அவனாகி விடும்.

விளக்க உரை

  • சிவன் அருள் பெற்று, சாயுஜ்யம் எனும் இறைத்தன்மையில் சிவமாவதற்கு முதலில் அன்பு வேண்டும் என்பதை வலியுறுத்தி எழுதப்பட்ட பாடல்.
  • உடம்பை தேராக உருவகம் செய்ததினால், அதன் இயல்யு ‘மாயத் தேர்’ ஆனது.
  • ‘கைகூட்டல்’ – கையைப் பொருத்தி ஓட்டுதலாகிய காரியம், அஃதாவது தேரினை செலுத்துதல்
  • நேயத்தேர் – இமயம் நியமம் முதலிய ஒழுக்கங்களைக் கைக்கொண்டு
  • ஆயத்தேர் – சமாதி யோகம், சிவனடியார் திருக்கூட்டம்
  • ஆயம் – கமுக்கம்; தோழியர்கூட்டம்; வருத்தம் மேகம் மல்லரிப்பறை; 34அங்குலஆழமுள்ளகுழி; வருவாய்; குடியிறை; கடமை; சூதுகருவி; சூதாட்டம் பசுத்திரள்; நீளம்; மக்கள்தொகுதி; பொன்

 

 

மதனா அண்ணா

எனக்குத் தோன்றிய விளக்கம்.

ஆத்மா ஓர் தேகம் அடைந்து சில காலம் பயணிப்பதை பயணம் என்று கவிதை நடையில் குறிப்பர். நம் ஆத்மாவானது காயம் எனும் தேர் ஏறி அதனை இயக்கும் மனம் எனும் பாகன் கைகொடுக்க மாயம் எனும் நிலையின்மையில் பயணிக்காது எது உண்மையென்று உணர்விக்கும் நேயம் எனும் மார்க்கம் பற்றி அதில் பயணித்தால் அழிவில்லாத மெய்ப்பொருளாகிய சர்வேஸ்வரனின் அருள் கிடைக்கப் பெற்றால் மட்டுமே அடைய இயலும் ஆய்தல் அதாவது உட்தேடல் எனும் கிட்டுதற்கறிய பாக்கியம் பெற்று அதன் மூலம் நான் எனும் நிலையறுத்து நானே அவன் எனும் மிக உயர்ந்த அஹம் பிரஹ்மாஸ்மி எனும் அத்வைத நிலை அல்லது ஒருமை நிலை அண்டும்.

 

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *