பாடல்
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாட லுகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
வானில் உள்ள தேவர்கள் போற்றும் அமுதமாய், வந்து என் உள்ளம் புகுந்தவனாய், உயிர்களின் பிறப்பிற்கு காரணமான குறையைப் போக்கும் அருள் உருவம் உடையவனாய், ஓங்கித் தீப்பிழம்பாய் உயர்ந்தவனாய், தேன் போல தெளிவாக தோன்றுபவனே, தேவர்களுக்கும் தேவனாய் நின்றவனே , சுடுகாட்டுத் தீயில் கூத்தாடுதலை விரும்பி செய்பவனாய் உள்ள கயிலை மலையானே! உன்னை போற்றுகிறேன்.
விளக்க உரை
- மருந்து – அமுதம்
- வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி – தன் முயற்சி இல்லாமல் இறைவன் தானே வந்து ஆட்கொண்டு அருள் புரிந்த விதம் பற்றிய குறிப்பு.
- ‘தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி கானத்தீ யாட லுகந்தாய் போற்றி’ – தேவ லோகத்தையும், சுடு காட்டையும் சமமாக பாவிப்பவன் எனும் பொருள் பற்றியது