பாடல்
இழைஎலாம் விளங்கும் அம்மை
இடங்கொள்நின் கருணை என்னும்
மழைஎலாம் பொழிந்தென் உள்ள
மயக்கெலாம் தவிர்த்து நான்செய்
பிழைஎலாம் பொறுத்த உன்றன்
பெருமைக்கென் புரிவேன் அந்தோ
உழைஎலாம் இலங்குஞ் சோதி
உயர்மணி மன்று ளானே
ஆறாம் திருமுறை – திருஅருட்பா – வள்ளலார்
பதவுரை
நின்னுடைய கருணை என்னும் மழையை முற்றிலுமாக பொழிந்து, என் உள்ளத்தில் படிந்து இருக்கின்ற மயக்கம் எல்லாம் போக்கியனும், மிக நெருக்கமாக உமை அம்மையை இடப்பாகத்தே கொண்ட பெருமானானவனும், தான் இருக்கும் இடம் எல்லாம் ஒளிர்தலை உடைய உயர்ந்த மணிகள் இழைத்த தில்லையம்பலத்துள் எழுந்து அருளுகின்றவனும் ஆன கூத்தப் பெருமானே, நான் செய்த எல்லாப் பிழையையும் பொறுத்து அருளிய உன்னுடைய பெருந்தன்மைக்கு யான் என்ன கைம்மாறு செய்வேன்!
விளக்க உரை
- சிவபெருமானுடைய திருவருள் பெருமையை வியந்து கைம்மாறு செய்ய மாட்டாத தமது எளிமையை வெளிப்படுத்தியவாறு.
- உழை – உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றில் அல்லது ஒரு செயலில் ஈடுபடுத்துவது, முயற்சி செய்வது, உதவு, பணம், பொருள் முதலியன ஈட்டு, சம்பாதி, இடம், பக்கம், அண்மை, கலைமான், (ஆண்மான்), உப்புமண், உவர்மண், யாழின் ஒரு நரம்பு, ஏழிசைச் சுரங்களில் நான்காவதாக வரும் சுரம் உழை, பூவிதழ்
- ‘இழையெலாம் விளங்கும் அம்மை’ – உயரிய அணிகல வகைகள் அனைத்தையும் குறைவற அணிந்தவள் ஆகிய உமாதேவியை என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. சிவ சக்தி சொரூபமான காட்சி என்பது பற்றி மேலே குறிப்பிட்டவாறு விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் கொண்டு உய்க.
- என் புரிவேன் – என்ன கைம்மாறு செய்வேன் என்னும் பொருளில்
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
அகோர மந்திரத்தால் செய்யும் தொழில் என்ன?
சங்காரம் எனும் அழித்தல்