பாடல்
ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா
அரைக்கணமும் நினைப்பிரிந்தே இனித்தரிக்க மாட்டேன்
கோணைநிலத் தவர்பேசக் கேட்டதுபோல் இன்னும்
குறும்புமொழி செவிகள்உறக் கொண்டிடவும் மாட்டேன்
ஊனைஉறக் கத்தையும்நான் விடுகின்றேன் நீதான்
உவந்துவராய் எனில்என்றன் உயிரையும்விட் டிடுவேன்
மாணைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்நீ எனது
மனம்அறிவாய் இனம்உனக்கு வகுத்துரைப்ப தென்னே.
திருஅருட்பா – வள்ளலார்
பதவுரை
நீ மனம் மகிழ்ந்து என்னிடம் வராமல் இருப்பின் என் உயிரையும் விட்டுவிடுவேன்; அரைக்கண நேரமும் நின்னைப் பிரிந்து யான் (உடல்/உயிர்) தரித்திருக்க மாட்டேன்; இதனையும் உன் மேல் ஆணையாக உரைக்கின்றேன். தீய நெறியினை உடையவர்கள் பேசுவதை இன்றுவரை கேட்டதுபோல் இனியும் அவர்களுடைய பயனில்லாத துன்பம் தரும் சொற்களை அவர்கள் அருகினில் இருந்து கேட்டு அவற்றை ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன்; உணவு மற்றும் உறக்கங்களையும் நான் இனி விட்டொழிக்கின்றேன்; நீ, என்னுடைய மன இயல்பை நன்கு அறிந்ததால், மனத்தால் வரும் துன்பங்களையும், சொல்லால் வரும் துன்பங்களையும் உடம்பால் வரும் துன்பங்களையும் வகை செய்து எவ்வாறு விரித்துரைப்பது? அவ்வாறு உனக்கு வகுத்து உரைப்பது என்ன பயனைச் செய்யும்?
விளக்க உரை
- அருள் வழங்க இறைவன் வராவிட்டால் உயிர் விடுதல் உறுதி என எடுத்து இயம்பியது
- ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா – உன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணை ஐயா என்று மாற்றுக. சொற்றொடரை இருமுறைக்கு மேல் எழுதும் வழக்கம் தமிழ் மொழியில் இல்லாது இருப்பினும், தனது நிலையை அழுத்தமாக பதிவு செய்வதன் பொருட்டு மூன்று முறை ‘உன்மேல் ஆணை’ என்று பாடியிருக்கிறார்.
- அரைக்கணமும் நினைப் பிரிந்தே இனித் தரிக்க மாட்டேன் – திருவருட் சூழலில் நின்று அரை நொடிப்பொழுது பிரிந்தாலும், உலகியல் மாயை படர்ந்து அறிவை மயக்கி மாற்று நெறியில் செலுத்தும்.
- கோணை நிலத்தவர் பேசக் கேட்டதுபோல் இன்னும் குறும்பு மொழி செவிகளுறக் கொண்டிடவும் மாட்டேன் – உயிர் புற உணர்வோடு இருக்கும்போது உலகத்தவர் பேசும் பேச்சுக்களைக் கேட்டு, மனம் மாயா மயக்கிற்கு உள்ளாகும் என்பது பற்றியது.
- கோணை – கோணல், வளைவு, கொடுமை, தொல்லை, வலிமை, அழிவின்மை, பீடை
- மாணை – மாண்பு
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
சிவனுக்கு ஈசான மந்திரம் எந்த உறுப்பு?
சிரசு