நெஞ்சே! கொள்ளியில் இருந்து உண்டாகும் வெவ்விய தழலைவீசி நின்று ஆடுபவரும், ஒளிரும் பூதகணங்கள் சூழ்பவரும், உமையை ஒரு பாகத்தில் கொண்டவரும், வெண்மையான திருவெண்ணீற்றினை அணிந்தவரும், அகோர முகத்தை உடையவரும், ஐயிராவதம் என்ற யானைக்குரியவரும், விடையேறியவரும் ஆன பெருமானுக்கு உரிய திருவெண்காட்டை அடைந்து வழிபாடு செய்வாயாக.
‘நற்செயலுக்கு ஆகாதென நீக்கப்படும் காலத்திலும் தானம் கொடுக்கும் கைகளை உடையை கர்ணனே, பாரியைப் போன்ற கொடை வள்ளலே’ என்று அவ்வாறு தகுதி இல்லாத பலரிடமும் பேசி என்னை உழல வைக்கும் வறுமையாகிய இருளை பிளக்கக்கூடிய ஞான சூரியனே, ‘கர்ணபூரம்’ என்ற ஆபரணத்தைத் தரித்திருக்கும் வள்ளி நாயகியை பெருமிதத்துடன் தழுவும் மார்பை உடையவனே, மாலைப் பொழுதின் நிறத்தை உடைய சிவபெருமானின் காதில் இனிமையாக பிரணவத்தை உபதேசம் செய்தவனே, எமன் என் உயிரை கொள்ளை கொள்ளாதபடி காப்பாற்றுவதற்காக வலிய வேலாயுதத்தை ஏந்தி வந்தும் என்னுடைய இருதயத்தில் நீ வீற்றிருந்தும் அருள வேண்டும்.
விளக்க உரை
‘பகல் பொழுதில் தானம் கொடுக்கும், கையை உடையை கர்ணனே’ என பல இடங்களில் விளக்கப்பட்டாலும் பொருள் பொருந்தாமையால் அவ்விளக்கம் இங்கு பயன்படுத்தப்படவில்லை.
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்தாள் – – – – – – செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை மறு இல் கற்பின் வாள்நுதல் கணவன் … ” – – – – – –
திருமுருகாற்றுப்படை – நக்கீரர்
கருத்துஉரை
தம்மைச் சார்ந்தவர்களாகிய அடியார்களையும், பக்தர்களையும் தாங்கிக் காத்தது அருளும், அழகும் வலிமையும் பொருந்திய திருவடிகளை உடையவரும், பகைவர்களை அழிக்கின்ற, இடியை ஒத்த பெருமை சார்ந்த திருக்கரங்களையும் உடையவரும் ஆன திருமுருகப்பெருமான், குற்றம் சிறிதும் அற்ற கற்பினையும் ஒளி பொருந்திய நெற்றியினையும் உடைய தெய்வயானையின் கணவன் ஆவார்.
செறிவுடைய சோலைகள் சூழ்ந்த திருக்கோழம்பத்தைத் தன் ஊராகக் கொண்டு அதன்கண் உறைபவனாகிய ஈசன், மேகமாக இருந்து மழையாக பொழிபவன். மணம் கமழும் கொன்றை மலரால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவன். மகிழ்வோடு உமையம்மையை ஒருபாகத்தில் கொண்டு விளங்கும் புகழ் உடையவன். உம்முடைய இடர்கள் நீங்க அவனை துதியுங்கள்.
பத்தாம் திருமுறை – திருமந்திரம்(அட்ட தள கமல முக்குண அவத்தை) – திருமூலர்
கருத்துஉரை
தன் வயம் உடைமை, தூய உடம்பு உடைமை, இயற்கை உணர்வு உடைமை, முற்றுணர்வு உடைமை, இயல்பாகவே பாசமின்மை, பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகிய எட்டு நிலைகளில் நிறைந்து, எட்டு இதழ் தாமரையாகிய இதய கமலத்திலும் பொருந்தி வெளிப்படச் செய்கின்ற முறை, திசை எட்டு, அவற்றைக் காக்கின்ற தேவர் எண்மர், அவர்தம் ஊர்தி முதலியனவும், ஐம்பெரும்பூதம், இருசுடர், உயிர் ஆகிய எட்டுப் பொருள்களும் ஆகிய அனைத்தும் முதல்வனாகிய சிவபிரானை வெளிப்படச் செய்யும் முறையே ஆகும்.
விளக்கஉரை
`தியானப் பொருள் சிவனே` என்னும் பொருள் உரைக்கும் பாடல்
`யோகத்தின் எட்டுறுப்புக்களில், `தியானம்` ஏதேனும் ஒன்றைத் தியானிப்பது அல்ல; சிவனைத் தியானிப்பதே` என்பது பற்றிய பாடல்
‘வகையெட்டும் நான்கும்மற் றாங்கே‘ எனும் பொழுது தியானப் பொருளானது அகாரம், உகாரம், மகாரம், விந்து எனும் தூல விந்து, அருத்த சந்திரன், சூக்கும விந்து எனும் நிரோதினி, அதிசூக்கும விந்து எனும் நாதம், தூலநாதம் எனும் நாதாந்தம், சூக்கும நாதம் எனும் சத்தி, அதிசூக்கும நாதம், வியாபினி, சுத்த மாயை அல்லது ஆகிய காரிய நிலை எனும் சமனை, சுத்த மாயையின் சூக்கும காரண நிலை ஆகிய உன்மனை ஆகிய பிராசாத கலைகள் பன்னிரண்டு எனும் பொருளிலும் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது.
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – உறுவித்தல்
பொருள்
பொருத்துதல்
நுகர்தல்
மிகுவித்தல்
அடைந்து நீராடச் செய்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
செறுவிப்பார் சிலையால் மதில் தீர்த்தங்கள் உறுவிப்பார் பல பத்தர்கள் ஊழ் வினை அறுவிப்பார் அது அன்றியும் நல்வினை பெறுவிப்பார் அவர் பேரெயில் ஆளரே
தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
மேரு மலையினை வில்லாக வளைத்த சிவபெருமான், அந்த வில்லினில் நாணேற்றப்பட்ட அம்பினைக் கொண்டு மூன்று கோட்டைகளையும் அழித்தவர். அவர் தனது அடியார்களை, பல புண்ணியத் தீர்த்தங்களில் நீராடச் செய்து அதன் காரணமாக நற்பயன்களை அடையுமாறு செய்து அவர்களது ஊழ்வினைகளை அறுப்பதோடு மட்டும் இன்றி சிவஞானத்தை அளிக்கும் நல்வினைகளை மேற்கொண்டு ஒழுகச் செய்து பின் அவர்கள் பல விதமான நன்மைகள் பெறுமாறு செய்கின்றார்; இத்தகைய பண்புகளை உடைய சிவபெருமான் பேரெயில் தலத்தின் தலைவராக விளங்குகிறார்.
புலைவிலைக் கடையில் தலைகுனித் தலைந்து பொறுக்கிய சுணங்கனேன் புரத்தில் தலைவிலை பிடித்துக் கடைவிலை படித்த தயவிலாச் சழக்கனேன் சழக்கர் உலைவிலை எனவே வியக்கவெந் தொழிலில் உழன்றுழன் றழன்றதோர் உளத்தேன் இலைவிலை எனக்கென் றகங்கரித் திருந்தேன் என்னினும் காத்தருள் எனையே.
திருஅருட்பா – வள்ளலார்
கருத்துஉரை
புலால் விற்கும் கடைகளில் தலையைத் தாழ்த்திக் கொண்டு, அலைந்து கொண்டு சிறு இறைச்சி துண்டங்களைப் பொறுக்கி உண்ணும் நாய் போன்றவனாகிய யான், பொருளை வாங்கி ஊருக்குள் கொண்டுவந்து விற்போருடைய உழைப்பையும் வாழ்வையும் எண்ணாது விலையை மதியாது இரக்கமின்றிக் குறைத்து விலை பேசி விலையை மட்டும் குறியாகக் கொண்டு இரக்கமில்லாத தீயவனாகவும், ‘இது கேடில்லை செய்க’ எனத் தீயவர் உடனிருந்து கூறிய கொடிய செயல்களை மேற்கொண்டு, பலகாலும் முயன்ற மனத்தவனாய், எனக்கு ஒப்பாரில்லை என்று அகம்பாவம் கொண்டிருந்த குற்றம் உடையவனாயினும் என்னைக் காத்தருள்க.
விளக்க உரை
புலைவிலைக் கடையில் தலை குனிந்து அலைந்து பொறுக்கிய சுணங்கன்” -. சிதறுண்டு ஒழியும் இழிபொருள்களையும் அலைந்து பெறும் கீழ்மக்கள் இயல்பை குறிப்பது
பசுக்கள், அரிசி கழுவிய நீராகிய கழுநீரை உண்டு பழகி விட்டால், பின்பு குளத்தில் உள்ள தூயநீரை நாடிச் செல்லாது; அக் கழுநீரையே விரும்பி ஏற்றுக் கொண்டு உடல் மெலியும். அத்தன்மையான அப்பசுக்கள் தம் இயல்பில் இருந்து மாறுவது இல்லை. வளமையுடைய பருகும் பொருள், சிவபெருமானது திருவடி இன்பமாகிய தேனே என்பதை அறியாதவர்கள் கள்ளின் சுவையை நினைத்துக் கள்ளுண்ணும் மக்கள் தம் இயல்பில் இருந்து நீங்கியவர்கள் ஆவார்.
விளக்கஉரை
‘கழுநீர் பெறிற்பின் கயந்தேரா தேரா’ எனும் வரிகளால் கள்ளுண்போர் மாக்களாதல் கூறப்பட்டது. மாக்களே, உண்ணப்படும் பொருளால் பின் விளைவதை அறியாது, கேடு பயக்கும் பொருளையும் உண்ணும்.
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – நிருத்தம்
பொருள்
நடனம்,
நிர்த்தம்
நிருத்தியம்
வரிக்கூத்துவகை
வாக்கிய பயன்பாடு
இந்த கோயில்ல என்னா விஷேசம் சாமி?
எல்லா இடத்தலையும் ஒவ்வொரு பேர்ல கணபதி இருப்பர், இங்க நிருத்த கணபதி, அழகா, ஆடுறவா எல்லாரையும் நான் ஆட்டிவைப்பேன்னு சொல்ற மாதிரி ஒரு கால தூக்கிவச்சிண்டு ஆடுற அழகே தனின்னா, போங்கோ, போய் சீக்கிரம் பாருங்கோ, நட சாத்தப்போறா.
உண்மைப் பொருளாகிய மெய்ஞ்ஞானத்தை உபதேசம் செய்யவல்ல குருமூர்த்தியே! ஓங்காரமாகிய சப்த வடிவிலே திகழ்பவனே! புதிய அமிர்தம் போன்றவனே! தினந்தோறும் எனக்கு நன்மையே செய்பவனே! என் வாழ்வின் நல்ல பெரும் செல்வமே! ஆடலில் வல்லோனும், அகில உலகிற்கும் பேரொளியாய் விளங்குவோனுமான பெருமாளே! இந்தப் பூமியில் இனி பிறக்காமலும், ஏமாற்றுபவர்களுடன் கூடிக்கலந்து கொள்ளாமலும், முத்தமிழை ஓதியும் அதன் பொருள் அறியாமல் தளர்ந்தும் இருக்கும் எனக்கு முக்திநிலையை தந்தருள வேண்டுகிறேன்.
விளக்க உரை
முத்தமிழை யோதித் …… தளராதே – இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் படித்துப் படித்துச் சோர்வடையாமலும் எனும் பொருளில் பல இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. இயல் தமிழ் அறிவால் அறியக்கூடியது என்றும், இசைத் தமிழ் அறிவு, செவி ஆகிய இரண்டால் அறியக்கூடியது என்றும், நாடகத் தமிழ் அறிவு, செவி மற்றும் விழி ஆகிய மூற்றாலும் அறியக்கூடியது என்றும் பொருள் தரவல்லது. அஃதாவது தமிழ்மொழி மந்திரத்துடன் தொடர்புடையது என்பதால் மேலே குறிப்பிட்டபடி ஒதாமல் உணரவேண்டும் எனும் பொருளில் இங்கு விளக்கப்பட்டிருக்கிறது.
தித்தித்தெய ஒத்த பரிபுர நிர்த்த பதம் வைத்து பயிரவி
திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆடஎனும் வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத்தக்கது.
உலகம் முழுதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருள் எவன் அவ் உலகிற் பிறங்கும் விவகாரங்கள் உறாத மேலாம் ஒளியாவன் உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டுங் களை கண் எவன் அந்த உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றாம்.
விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர் மூலம் – காஷ்யப முனிவர் வடமொழியில் இயற்றியது
கருத்துஉரை
இந்த உலகம் முழுவதும் இடைவெளி இல்லாது நீக்கமற நிறைந்திருக்கும் பொருளாக இருப்பவன் எவனோ, உலகில் உறையும் விகாரங்களாகிய காமம், குரோதம் லோபம், மதம், மாற்சரியம் என்னும் பஞ்சமா பாதங்கள் சேராத பேரொளியாக இருப்பவன் எவனோ, உலகில் செய்யப்படும் செயல்களினின் வினை பயன்களை பிரித்து நல்வினைப் பயன்களை அருள்பவனும், தீவினைப் பயன்களை களைபவன் எவனோ, உலகிற்கு ஆதி காரணமாக இருக்கும் முதல்வன் ஆன கணபதியை மனம் மகிழ்ந்து சரணம் எனத் துதிக்கின்றோம்.
வயல்களில் உள்ள சேற்றில் விளையாடும் கயல் மீன்களும், வாளைமீன்களும் தம்மோடு சண்டையிடுவதைக் கூர்ந்து நோக்கும் சிவந்த முகத்தையுடைய பெண்குரங்கோடு ஆண்குரங்கு கூடித் திரியும் அழகிய மலைச்சாரலை உடைய திருஇடைச்சுரத்தில், கங்கை நதியை தன் தலையில் ஏற்று அருளிய விரிந்த சடையை உடையவராகவும், அழகும் இளமையும் உடையவராகவும், கூற்றுவன் ஆகிய எமனின் உயிரை மாய்க்கும் பெருவிரல் உடையவராகவும், நள்ளிருளில் திருநடம்புரிபவராகவும், கொன்றை மலர்மாலை சூடியவராகவும் விளங்கும் இந்த இறைவர் தம்முடைய இயல்பு யாதோ?
விளக்க உரை
இத்திருத்தல பாசுரம் முழுவதும் இறைவனுடைய வீரம் முதலிய பல இயல்புகளை எடுத்துக்கூறி, இடைச்சுரம் மேவிய இவர் சிறப்புகள் என்னே என்று வினாவுவதாக அமைந்துள்ளது.
உயிர்கட்கு எல்லாம் தாயாய் நின்று பாலூட்டுதலை செய்வோனே! அவ்வாறு தாராவிடின் நாயேன், தாய் இருந்தும் அவள் பாலை உண்ணப் பெறாத பிள்ளை ஆகிய சவலையாய் வீணாய்ப் போவது முறையோ? அண்ணலே! இனியாவது அருளமாட்டாயா; உன்னைத் தாயே என்று கருதி உன் திருவடியை அடைந்தேன். நீ என்னிடத்து கருணையுடையவனாய் இல்லையா? நாய் போன்ற யான் அடிமையாக உன்னுடன் இருக்கும்படி முன்பு ஆண்டாய்; இப்பொழுது நான் வேண்டுவதில்லையோ?
சீட்டாட்டத்தில் எண்ணிக்கையில் சேர்க்கப்படாத சீட்டு
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழநல் திவள மாமணி மாடந் திகழ்தெளிச் சேரியீர் குவளை போற்கண்ணி துண்ணென வந்து குறுகிய கவள மால்கரி யெங்ஙன நீர்கையிற் காய்ந்ததே.
தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
கருத்துஉரை
வெண்மையான பிறையுடன் கூடியதும், இலையோடு கூடிய சிறு கொம்பு கொண்ட தாழ்வான சோலைகள் சூழ்ந்ததும், அசைகின்ற அழகிய ஒலியினையுடைய உடைய மணிகளால் இழைக்கப்பட்ட மாடவீடுகளுடன் திகழ்வதுமான திருத்தெளிச்சேரியில் உறையும் இறைவனே! குவளை மலர் போன்ற கண்களை உடைய உமை நடுங்குமாறு உம்மைக்கொல்ல வந்து அடைந்த கவளம் அளவு உண்ணும் மதமயக்கமும் துதிக்கையும் உடைய பெரிய யானையை எவ்வாறு நீர் சினந்து கைகளால் அதனை அழித்தீர்?
பதினோராம் திருமுறை – திருநாரையூர் பொல்லாபிள்ளையார் பற்றிய பாடல் – நம்பியாண்டார் நம்பி
கருத்துஉரை
நெஞ்சே! புதியதான மாங்கனியைப் பெற, பூங்கொம்பு போன்ற வள்ளியின் கணவனாகிய முருகன் உலகினை சுற்றி வந்து அடையும் முன்னரே, நாரையூர் நம்பன் தன் தாய் தந்தையரை வலம் வந்தார். உலகை வலம் வருதலை விட, இந்த வழியே சிறந்தது என்று தேர்ந்து எடுத்தார். தாய் தந்தையரை வலம் வந்து, தன் துதிக்கையை தாழ்த்தி துதித்து, மாங்கனியை பெற்றார். அந்த விநாயகரை சொல் நெஞ்சே! அவ்வாறு சொன்னால், நோய், வினைகள், மற்றும் அவலம் எனும் துன்பம் நம்மை என்ன செய்யும்?
விளக்க உரை
தன்னவலம் – உலகை வலம் வருதலை விட அன்னை தந்தையரை வலம் வருதல் எளிதாதல் பற்றியது
பார்வதியை ஒரு பாகம் உடையவராகவும், முருகனை மகனாகக் கொண்டவராகவும், மல்லிகை மற்றும் கொன்றை மாலையைச் சூடிவராகவும், கல்வியிலே கரை கண்ட சான்றோர் வாழும் காஞ்சி மாநகரிலே சூரியன் ஒளிற அவனொளிக்கு உள்ளொளியாய் மேற்றளியனார் விளங்கினார்.
கெடிலக் கரையில் உள்ள வீரட்டானத்துறை எனும் அதிகை அம்மானே! உம்மை வழிபடுபவர்களுடைய பாவங்களை அழிக்க வல்லவரே, தலையைச் சுற்றிலும் மண்டை ஓட்டினை மாலையாக கொண்டு அணிந்தவரே, இறந்துபட்டவருடைய மண்டை ஒட்டில் பிச்சை ஏற்றுத்திரிபவரே, உலகப்பற்றுக் கொண்டு இறந்தவர்களை எரித்த சாம்பலை உடலில் பூசிக் கொள்ள வல்ல பெருமானே, உலகப்பற்றுக் கொண்டு பிணி முதலியவற்றால் இறந்தவர்களை எரித்த சாம்பலை திருமேனியில் பூசிக் கொள்ள வல்ல பெருமானே, காளையை ஊர்தியாக் கொண்டு வலம்வர விரும்புகின்றவரே, உம்மையே பரம்பொருளாகத் துணிந்து உமக்கு அடிமை செய்து அடியேன் வாழக்கருதுவதால் எனை துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி எனக்கு அருளுவீராக.
செற்றை வரும் பழனம் சோலை இஞ்சி திகழ் வரை மேல் செல் தை வரும் பழநிக் கந்த, தேற்றிடு, நூற்றுவரை செற்று ஐவரும் பழநாடு ஆள நாடி கண் சேய் விடுத்த செற்றை வரும் பழமாம் கூடு வேம் அத்தினத்தில் வந்தே
கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்
கருத்துஉரை
செற்றை எனும் மீன்கள் நீந்தும் வயல்களும், பூஞ்சோலைகளும், மதில்களும் திகழ்கின்ற மலையின் மேல் மேகக் கூட்டம் தவழ்கின்ற பழநி மலை ஆண்டவனே, துரியோதனாதிகள் நூறு பேரையும் அழித்து, பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் புராதனமான ராஜ்ஜியத்தை ஆள வேண்டும் என மனதில் நினைத்து, அப்படியே செய்த கிருஷ்ணனின் நேத்திரம் எனும் (வல) கண்ணாகிய சூரியனின் மைந்தனாகிய எமன் அனுப்பிய தூதர் கூட்டம் வந்தடையும் இந்த உடலாகிய கூடு, அக்னியில் தகிக்கப் படுகின்ற அந்த கடைசி நாளில் எழுந்தருளி எனக்கு அபயம் கொடுத்து காப்பாற்று.
விளக்க உரை
செற்றை வரும்பழ – செற்றை வரும் / செல் தை வரும்/ செற்று ஐவரும் எனும் சொல் பிரிவுகளுடன் அதற்கான விளக்கமும் காண்க.
அறிவில்லாத ஏழையாகிய என்னை, நின் திருவடிக்கு அடிமையாகக் கொடுத்துவிட்டேன்; அவ்வாறு என்னை ஒப்புவித்தவுடன் இறவாமல் இருக்கும் பேரின்பம் எய்தி, நீண்ட காலம் வாழ்ந்தேன்; திருவருளால் பெறவேண்டியவை அனைத்தும் பெற்று கடைத்தேறினேன்; பிறவிப்பெருந்துன்பம் சிறிதுமின்றி நீங்கினேன்.
விளக்க உரை
அறிவில்லாத – நின் கருணையை உணர்த்தியும் அதை அறிய இயலாதவன் எனும் பொருளில் / கால தாமதாக உணர்ந்த பொருளில்
பாலை நிலம் நெய்தல் நிலமாகப் ஆகும்படி பாடிய திருஞானசம்பந்தர் தன்மையையும், பாம்பு விடந்தீரும்படிக்குப் பாடிய திருநாவுக்கரசர் தன்மையையும், முன்பு முதலை விழுங்கின சிறுபிள்ளையுடைய மரணத்தைப் பின்பு காலனையே வருவித்து தீர்த்த சுந்தரர் தன்மையையும் அறிந்து, அவர்கள் மானிட உருவத்தை உடையவர்களாக இருந்தாலும், அவர்களின் செயல்கள் யாவும் இறைவனின் திருவருள் பெற்றதால் இறை செயலால் நிகழ்ந்தவை ஆகும் என்பதைக் காண்.
விளக்க உரை
இப்பாடலின் மூலம் மூவர் முதலிகள் பாடல்கள் பசுகரணப் பாடல்கள் அல்ல, அவை பதிகரண நிலையில் இருந்து பாடப்பட்டவை என்பதை உணர முடியும். எனவே அப்பாடல்கள் வேதம் என்பது பெறப்படும்.
திருநனிபள்ளி – பாலை நிலம் நெய்தல் நிலமானது (திருஞானசம்பந்தர் பதிகம்), திங்களூர் – அப்பூதியடிகளின் மகன் அரவ நஞ்சு நீங்கியழிந்து பிழைத்தது (திருநாவுக்கரசர் பதிகம்), திருப்புக்கொளியூர் (அவினாசி) – முதலைவாய்ப்பட்ட சிறுவன் பல்லாண்டுகள் தாண்டி மீண்டது (சுந்தரர் பதிகம்) . அருளாலர்களின் செயல்கள் பல இருக்க இந்த வரலாற்றை எடுத்துக் கொள்ளக் காரணம் இயற்கைக்கு மாறானவைகள் இறை அருளால் நிகழ்த்தப்படும் என்பதை வெளிப்படுத்தவே.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
இறைவன் செய்யும் ஐந்தொழில்கள் யாவை? படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்
மந்திரம் ஒன்றறியேன் மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் சுந்தர வேடங்களால் துரி சேசெயுந் தொண்டன்எனை அந்தரமால்விசும்பில் அழ கானை யருள்புரிந்த துந்தர மோநெஞ்சமே நொடித் தான்மலை உத்தமனே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
கருத்துஉரை
நெஞ்சமே, அடியேன் ஆகிய யான், மந்திரங்களை ஓதுதல் செய்யாதவன்; இல்வாழ்க்கையில் மயங்கியவன்; அடியவர் வேடத்தை மேற்கொள்ளாது, அழகைத் தரும் வேடங்களால் அலங்கரித்துக் கொண்டவன்; இவ்வாறெல்லாம் பொருந்தாதனவற்றையே செய்து வாழும் ஒரு குற்றம் உடைய தொண்டன்; எனக்கு திருக்கயிலையில் வீற்றிருந்து அருளும் முதல்வன், வெளியாகிய பெரிய வானத்தில் செல்லும் அழகுடைய யானை ஊர்தியை அளித்தருளியதும் என் தரத்ததோ!