அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அகை

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  அகை

பொருள்

  • கிளை
  • எரிதல்
  • மலர்
  • தளர்ச்சி
  • தகை
  • தடை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

திகையெட்டும் தேர்எட்டும் தேவதை யெட்டும்
அகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை
வகையெட்டும் நான்கும்மற் றாங்கே நிறைந்து
முகையெட்டி னுள்நின் றுதிக்கின்ற வாறே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம்(அட்ட தள கமல முக்குண அவத்தை) – திருமூலர்

கருத்து உரை

தன் வயம் உடைமை,  தூய உடம்பு உடைமை,  இயற்கை உணர்வு உடைமை,  முற்றுணர்வு உடைமை,  இயல்பாகவே பாசமின்மை,  பேரருள் உடைமை,  முடிவில் ஆற்றல் உடைமை,  வரம்பில் இன்பம் உடைமை ஆகிய எட்டு நிலைகளில் நிறைந்து, எட்டு இதழ் தாமரையாகிய இதய கமலத்திலும் பொருந்தி வெளிப்படச் செய்கின்ற முறை, திசை எட்டு, அவற்றைக் காக்கின்ற தேவர் எண்மர், அவர்தம் ஊர்தி முதலியனவும், ஐம்பெரும்பூதம், இருசுடர், உயிர் ஆகிய எட்டுப் பொருள்களும் ஆகிய அனைத்தும்  முதல்வனாகிய சிவபிரானை வெளிப்படச் செய்யும் முறையே ஆகும்.

விளக்க உரை

  • `தியானப் பொருள் சிவனே` என்னும் பொருள் உரைக்கும் பாடல்
  • `யோகத்தின் எட்டுறுப்புக்களில், `தியானம்` ஏதேனும் ஒன்றைத் தியானிப்பது அல்ல; சிவனைத் தியானிப்பதே` என்பது பற்றிய பாடல்
  • வகையெட்டும் நான்கும்மற் றாங்கே‘ எனும் பொழுது தியானப் பொருளானது அகாரம், உகாரம்,  மகாரம்,  விந்து எனும் தூல விந்து, அருத்த சந்திரன், சூக்கும விந்து எனும்  நிரோதினி, அதிசூக்கும விந்து எனும்  நாதம், தூலநாதம் எனும்  நாதாந்தம்,  சூக்கும நாதம் எனும்  சத்தி, அதிசூக்கும நாதம், வியாபினி, சுத்த மாயை  அல்லது ஆகிய  காரிய நிலை எனும்  சமனை, சுத்த மாயையின் சூக்கும காரண நிலை ஆகிய  உன்மனை ஆகிய  பிராசாத கலைகள் பன்னிரண்டு எனும் பொருளிலும் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *