அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அநாதி

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  அநாதி

வார்த்தை :  அநாதி

பொருள்

  • திசைகள் அற்றவன்
  • மிகப்பழமையான
  • புராதனமான
  • நீண்டநெடுங்காலமாக

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஒருவனோ டொருத்தி ஒன்றென் றுரைத்திடும் உலக மெல்லாம்
வருமுறை வந்து நின்று போவதும் ஆத லாலே
தருபவன் ஒருவன் வேண்டும் தான்முதல் ஈறு மாகி
மருவிடும் அநாதி முத்த சித்துரு மன்னி நின்றே.

திருநெறி 2 – சிவஞான சித்தியார் – பிரமாணவியல்

கருத்து உரை

சற்காரிய முறையில் தோன்றி நின்று அவன் அவள் அது என்னும் படி பகுப்புடையதாகிய பிரபஞ்சம், தோன்றுதற்குரியதும் அழிதலுடைமையும் கொண்டு அது தன்னைத் தோற்றுவிப்பானின்  வினை முதலை கொண்டு நிற்கும்; ஆகலால், இவ்வுலகம் ஒடுங்குதற்கு ஏதுவாய் நின்ற சங்கார காரணனே அஃது ஒடுங்கிய பின்னும் அநாதி சித்துருவாய் நிலைபெற்று நின்று அவ்வுலகத்தை முன் போல தோற்றுவிக்கும்;  இவ்வாறு பிரஞ்ச தோற்றத்திற்கு முன் உள்ளவனும், பிரபஞ்ச ஒடுக்கத்திற்கும் பின்னும் உள்ள அந்த சங்கார காரணனே உலகிற்கு முதற் கடவுள்.

விளக்க உரை

சைவ சித்தாந்த கருத்துக்கள்

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – நறவு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  நறவு

வார்த்தை :  நறவு

பொருள்

  • தேன்
  • கள்
  • நறை
  • மணம்
  • மணக்கொடிவகை
  • ஈண்டுப் பிச்சையேற்ற உணவு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கோடெ லாநிறை யக்குவ ளைம்மல ருங்குழி
மாடெ லாமலி நீர்மண நாறும்வ லஞ்சுழிச்
சேடெ லாமுடை யீர்சிறு மான்மறி யீர்சொலீர்
நாடெ லாமறி யத்தலை யில்நற வேற்றதே.

தேவாரம் – 2ம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

கரைகளெல்லாம் நிறையுமாறு அங்கு இருக்கும் குளங்களில் பூத்த குவளை மலர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்து அங்குள்ள நீர் குவளை மலரின் மணத்தை வீசுகின்றது. அவ்வாறு குவளை மலர் மணம் வீசும் திருவலஞ்சுழியில் விளங்கும் பெருமைகள் எல்லாம் உடையவரே! சிறிய மான் கன்றைக் கையில் ஏந்தியவரே! நாடறியத் தலையோட்டில் பிச்சை ஏற்றல் ஏனோ? சொல் வீராக.

விளக்க உரை

கோடு – கரைகள்
மாடு – பக்கம்
சேடு – பெருமை

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கபாலம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  கபாலம்

வார்த்தை :  கபாலம்

பொருள்

  • மண்டையோடு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மறையும் ஓதுவர் மான்மறிக் கையினர்
கறைகொள் கண்ட முடைய கபாலியார்
துறையும் போகுவர் தூயவெண் ணீற்றினர்
பிறையுஞ் சூடுவர் பேரெயி லாளரே.

தேவாரம் – 5ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

பேரெயில் தலத்து இறைவர், மறையை ஓதுவர்; மான்  ஏந்திய கையினை உடையவர் ; திருநீலகண்டர்; கபாலத்தைக் கொண்ட கையினர்; எத்துறையும் போகுவர்; தூய வெண்ணீற்றினர்; பிறையும் சூடுபவர் .

விளக்க உரை

  • கறைகொள்கண்டம் – முதல்வனும் பேரருள் உடைமையினையும், யாரையும் எவற்றையும் தன்வயப்படுத்தும் செம்பொருட்டன்மையினையும் குறிக்கும்.
  • கபாலியார் – பிரமகபாலம் ஏந்தியவர் . இஃது உயிர்களுக்கு உள்ள யான் எனது என்னும் செருக்கு அறுத்து இனிமை ஊட்ட வல்லான் என்பதைக் குறிக்கும்.
  • துறை போதல் – கரையைச் சென்று அடைதல்,. எனவே , முதல்வன் எக்கலைக்கும் முதற் கருத்தாவாய் இயற்கை முற்றுணர்வு உடையன் என்பதைக் குறித்தபடி.
  • பிறை சூடுதல் உயிர்களின் அக இருளைப் போக்கும் தூய நல்லுணர்வைத் தன் பக்கம் உடையன் என்பதைக் குறிக்கும் .
  • துறையும் போகுவர் – எக்கலைக்கும் முதல்வன் ( சிவபிரான் )

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மருட்டுதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  மருட்டுதல்

வார்த்தை :  மருட்டுதல்

பொருள்

  • மயக்குதல்
  • பயமுறுத்துதல்
  • மாறுபடச்செய்தல்
  • ஒத்தல்
  • மனங்கவியச்செய்தல்
  • ஏமாற்றுதல்
  • மறக்கச்செய்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

இருட்டறை மூலை யிருந்த கிழவி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி அவனை மணம்புணர்ந் தாளே.

10ம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

இருட்டரையில் மூலையில் இருந்த கிழவி, குருடாக இருக்கும் கிழவனை கூடலுக்கு (அழைத்து விளக்கி)  அவனது குருட்டினை நீக்கி அவனுக்கான குணங்களைக் காட்டி அவனை மணம் புரிந்து அவனுடன் கலந்திருந்தாள்.

விளக்க உரை

  • ‘இருட்டறை மூலை யிருந்த குமரி’ என்று பல இடங்களில் பாடல் திருத்தப்பட்டிருக்கிறது. அவ்வாறே விளக்கமும் அளிக்கப்பட்டிருக்கிறது. ‘கிழவி’ என்பதே மூலத்தில் இருப்பதால் அவ்வாறே இங்கு எடுத்தாளப்பட்டிருக்கிறது.
  • பிரகிருதி என்பது பெண் தன்மை கொண்ட இறை நிலை. புருஷார்த்தம் என்பது ஆன்மா. ஜீவ ஆத்மா. இறை உணர்த்த ஆன்மா தன்னை அறியும் என்பது ஒரு விளக்கம். பிரகிருதி புருஷனுடன் இணைந்து இந்திரியங்கள் உண்டாகி, முக்குணங்கள் உண்டாகி குணங்கள் கடந்து ஜீவன் முக்தி ஏற்படும்.
  • குண்டலி எனும் மஹாசக்தி மூலாதரத்தில் உறங்கிக் கொண்டு இருக்கிறது. அவள் இருப்பது தெரியாமல் அனைவரும் குருட்டுநிலையில் உலகில் உழன்று கொண்டு இருக்கிறார்கள். உடலை காட்டிலும் அவள் எப்பொழுதும் இளமையானவள். உயிர்கள் உய்வதின் பொருட்டு (கிழவி — சத்தியின் உச்ச நிலை; அநாதியான அருட்சக்தி) என்றாவது ஒருநாள் அவள் பல சித்துக்களை நமக்கு காட்டி தன்பால் வசமாக்கி நமது அறியாமையை நீக்கி அருளுவாள்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மஞ்சு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  மஞ்சு

வார்த்தை :  மஞ்சு

பொருள்

  • மேகம்.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மஞ்சுண்டமா லைமதி சூடுசென்னி
மலையான்மடந் தைமண வாளநம்பி
பஞ்சுண்டவல் குற்பணை மென்முலையா
ளொடுநீருமொன் றாயிருத் தல்லொழியீர்
நஞ்சுண்டுதே வர்க்கமு தங்கொடுத்த
நலமொன்றறி யோம்உங்கை நாகமதற்
கஞ்சுண்டுப டம்மது போகவிடீர்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.

தேவாரம் – 7ம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

இறைவரே, மேகம் சூழ்ந்த மாலைப் பொழுதில் தோன்றும் பிறையைச் சூடிய முடியினையுடைய, மலைமகளாகிய நங்கைக்கு மணவாள நம்பியாகிய நீர், துகில் சூழ்ந்த புறத்தினையும், தனங்களையும் உடைய அவளும் நீரும் ஒன்றாய் இருத்தலை ஒரு பொழுதும் ஒழிகின்றிலீர். நீங்கள் நஞ்சினை உண்டு, தேவர்கட்கு அமுதம் ஈந்த நற்செயலை நாங்கள் சிறிதும் அறிந்திலோம்: உமது கையில் உள்ள பாம்பிற்கோ படங்கள் ஐந்து உள்ளன. அந்த பாம்பினை ஒரு பொழுதும் அப்பாற்போக விடுகின்றிலீர்; அடியோங்கள் உம்மை அணுகி உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பாந்தள்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  பாந்தள்

வார்த்தை :  பாந்தள்

பொருள்

  • பாம்பு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பாந்தள்பூ ணாரம் பரிகலங் கபாலம்
  பட்டவர்த் தனம்எரு தன்பர்
வார்ந்தகண் ணருவி மஞ்சன சாலை
  மலைமகள் மகிழ்பெருந் தேவி
சாந்தமும் திருநீ றருமறை கீதம்
  சடைமுடி சாட்டியக் குடியார்
ஏந்தெழில் இதயங் கோயில் மா ளிகைஏழ்
  இருக்கையுள் இருந்தஈ சனுக்கே.

9ம் திருமுறை – திருவிசைபா – கருவூர்த் தேவர் – திருச்சாட்டியக்குடி

கருத்து உரை

சாட்டியக்குடி, அடியாருடைய அன்பின் மிக்க எழுச்சியை உடைய இதயமே ஈசன் கோயில். அக்கோயிலில் அமைந்த எழுநிலை விமானத்தை உடைய கருவறையில் இருக்கும் பெருமானுக்குப் பாம்புகளே அணியும் மாலைகள். உண்ணும் பாத்திரம் மண்டையோடு. அவர் செலுத்தும் எருதே பெருமையை உடைய யானை வாகனம். அடியார்களின் இடையறாது ஒழுகும் கண்ணீரை உடைய கண்களே அவர் குளிக்கும் இடம். பார்வதியே அவர் மகிழ்கின்ற பெரிய தேவி. திருநீறே அவர் அணியும் சந்தனம். அவர்பாடும் பாடல் சிறந்த வேதங்களே. சடையே அவர் கிரீடம்.

விளக்க உரை

பரிகலம் – உண்கலம்.
கபாலம் – பிரமனது தலைஓடு.
பட்டவர்த்தனம் – அரச விருது; பெருமையுடைத்தாகிய யானையையே பட்டவர்த்தனமாகக் கொள்ளுதல் உலக இயல்பு.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அளி

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  அளி

வார்த்தை :  அளி

பொருள்

  • அருள்
  • இரக்கம்
  • பரிவு
  • கண்ணோட்டம்
  • வண்டு
  • கொடு
  • தானம் செய்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அளி புண் அகத்து, புறம் தோல் மூடி, அடியேன் உடை யாக்கை,
புளியம்பழம் ஒத்து இருந்தேன்; இருந்தும், விடையாய்! பொடி ஆடீ!
எளிவந்து, என்னை ஆண்டுகொண்ட என் ஆர் அமுதே! ஓ!
`அளியேன்’ என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

திருவாசகம் – 8ம் திருமுறை – மாணிக்க வாசகர்

கருத்து உரை

தலைவனே இடப வாகனனே, திருவெண்ணீறு அணிவோனே, புறத்தில் தோலால் மூடப்பெற்று புளியம்பழத்தைப் போல என்னுடைய உடம்பு உள்ளே காயம் உடையதாக இருக்கிறது. அவ்வாறு இருக்கும் அதன்கண் பற்றுக்கொண்டு இருந்தேன் அவ்வாறு இருந்தும் எளிமையாய் வந்து என்னை ஆட்கொண்டு அருளினாய். எனது அருமையான அமுதமே எனது ஓலம் கண்டு இனி நீ ‘இவன் இரங்கத்தக்கவன்’ என்று சொல்லி அழைக்க நான் விரும்பினேன்.

விளக்கம்

  • ‘எனது தகுதியின்மை தெரிந்தும் முன்பே வந்து ஆட்கொண்டது போலவே இனியும் என்னை உன்பால் அழைத்துக்கொள்ள வேண்டும்’
  • இதனால், சிறியோரையும் இரங்கி ஆட்கொள்பவன் இறைவன் என்பது பொருள்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – துளைக்கை

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  துளைக்கை

வார்த்தை :  துளைக்கை

பொருள்

  • தும்பிக்கை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

துளைக்கை வேழத்து உரி உடல் போர்த்தவர்;
வளைக்கை யாளை ஓர்பாகம் மகிழ்வு எய்தி
திளைக்கும் திங்கள் சடையின்திசைமுழுது
அளக்கும் சிந்தையர் போலும்-ஆரூரரே.

தேவாரம் – 5 ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

திருவாரூர்ப் பெருமான், துதிக்கை உடைய யானையின் தோலை உரித்தப் ஆடையாக அணிந்து கொண்டவர். வளையணிந்த கைகளை உடைய உமையம்மையை ஒருபாகமாக மகிழ்ந்து ஏற்றுக் கொண்டவர். அவர் தமது பிறை பொருந்திய சடையினால், எட்டுத் திசைகளையும் அளந்தறியும் சிந்தை உடையவர் போலும்.

விளக்கம்

எட்டுத் திசைகளையும் அளந்தறியும் சிந்தை உடையவர் – விச்சுவரூபி

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கொட்டில்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  கொட்டில்

வார்த்தை :  கொட்டில்

பொருள்

  • தொழுவம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஊற்றைச்சரீரத்தை ஆபாசக் கொட்டிலை ஊன்பொதிந்த
பீற்றற் றுத்தியைச் சோறிடுந்தோற்பையைப் பேசரிய
காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல்செய்தே
ஏற்றுத் திரிந்து விட்டேன் இறைவாகச்சி ஏகம்பனே.

பட்டினத்தார்

கருத்து உரை

காஞ்சியில் உறையும் கச்சி ஏகம்பனே! மனித உடம்பாகிய இந்த துர்நாற்றமடிக்கும் உடலை, ஆபாசம் நிறைந்த தொழுவம் போன்ற உடலை, சதை பொதிந்த கந்தலான உடம்பை, தினமும் சோறு இடும் தோலாலான பையாகிய இந்த உடம்பை, என்றாவது ஒருநாள் அழிந்து போகும் நிலையில்லாத பாத்திரமாகிய காற்று சூழ்ந்த இந்த உடம்பை நான் இதுவரை நிலை என்று நம்பி அதன் மேல் அன்பு கொண்டு அதைக் காப்பதிலேயே என் காலத்தைக் கழித்துவிட்டேனே.

விளக்கம்

நான் எங்கனம் கரை ஏறுவேன் என்பது மறை பொருள்

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஒப்பு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஒப்பு

வார்த்தை :  ஒப்பு

பொருள்

  • ஏற்பு
  • சம்மதம்
  • இணை
  • ஒப்பீடு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மைப் படிந்த கண்ணாளும் தானும் கச்சி-மயானத்தான்,
   வார்சடையான்” என்னின், அல்லான்;
ஒப்பு உடையன் அல்லன்; ஒருவன் அல்லன்; ஓர்
   ஊரன் அல்லன்; ஓர் உவமன் இ(ல்)லி;
அப் படியும் அந் நிறமும் அவ் வண்ண(ம்)மும் அவன்
   அருளே கண் ஆகக் காணின் அல்லால்,
“இப் படியன், இந் நிறத்தன், இவ் வண்ணத்தன், இவன்
   இறைவன்” என்று எழுதிக் காட்ட ஒணாதே.

தேவாரம் – 6ம் திருமுறை  – திருநாவுக்கரசர் 

கருத்து உரை

இறைவன் மைபூசிய கண்களை  உடைய உமையுடன்  தானுமாகிக் கச்சி மயானத்து வாழ்பவனும். நீண்ட சடையினனும் ஆவான்” என்று கூறின் அவன் அவ்வளவே ஆம் தன்மையன் அல்லன். அவன் எப்பொருளையும் தன்பொருட்டு ஏற்க விரும்புதலை உடையான் அல்லன். உலகப் பொருள்களில் ஒருவன் அல்லன்; ஓர்  ஊருக்கே மட்டும் உரியவன் அல்லன். யாதொரு பொருளும் தனக்கு உவமையாதல் இல்லாதவன். அதனால் அவனுடைய அந்தத் தன்மையையும் அந்த நிறத்தையும் அந்த வடிவத்தையும் அவன் திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காணலாமேயல்லாமல் மற்றைப் பொருள்கள் போலப் பிறரொருவர் இன்னவகையுட்பட்டவன், இன்ன நிறத்தையுடையவன், இன்ன வடிவத்தை உடையவன் என்று இவனைச் சொல்லோவியமாகவோ எழுத்தோவியமாகவோ எழுதிக் காட்டல் இயலாது.

விளக்க உரை

வார்சடை – நீண்டசடை.
அல்லான் – அத்தன்மையன் அல்லன்;
அதுவே முற்றிலும் அவனுடைய இயல்பு அன்று; அஃது அவனது பொதுவியல்பே என்றபடி

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கமை

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  கமை

வார்த்தை :  கமை

பொருள்

  • பொறுமை.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு
சமயங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி
யமையறிந் தோமென்ப ராதிப் பிரானுங்
கமையறிந் தாருட் கலந்துநின் றானே

திருமூலர் – திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம்

கருத்து உரை

(தனது வைராக்கியத்தினால்) இமையமலைபோன்று அசைவற நின்ற தேவர்கள் அவர்கள் நிலைமைக்கேற்றவாறு ஆறு சமயங்கள் பெற்றனர். அவற்றிற்குரிய சாத்திரங்களாகிய பொருள் நூல்களை ஓதி, அடையக் கூடியதாக அமைந்த நிலையினை அறிந்தோம் என்பர். ஆதிப்பிரானாகிய சிவபெருமானும் பிழைபொறுக்கும் தன்மை உடையவராகி பொறுமையுடன் அவ்வாறு ஒழுகுவாருடன் கலந்து நின்று அருள் செய்வான்.

விளக்க உரை

‘அடையக் கூடியதாக அமைந்த நிலையினை அறிந்தோம்’ என்பது ஆணவ மாயையினை குறிக்கும்.  இவ்வாறு குற்றம் இருப்பினும் பிழைபொறுக்கும் தன்மை உடையவன் ஈசன்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பத்து

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – பத்து

வார்த்தை : பத்து

பொருள்

  • சோற்றுப் பருக்கை
  • வயல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பத்துக் கொடுத்தும், பதி இருந்து, வாழ்வு இனிதே;
*வித்துக்* குற்று உண்ணா விழுப்பம் மிக இனிதே;
பற்பல நாளும் பழுது இன்றிப் பாங்கு உடைய
கற்றலின் காழ் இனியது இல்.

இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்

கருத்து உரை

துன்புறும் காலங்களில் தனக்கென  இருக்கும் வயல் காட்டை கொடுத்தாயினும் உள்ளூரிலிருந்து வாழ்தல் இனிது. விதைக்கென வைத்த தானியத்தை உண்ணாதிருத்தல் இனிது. பல நாட்களுக்கு நன்மையைச் சொல்லும் நூல்களைக் கற்பதைப்போல இனிதான செயல் வேறு ஒன்று இல்லை.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – நொந்துதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  நொந்துதல்

வார்த்தை :  நொந்துதல்

பொருள்

  • அழிதல்
  • தூண்டுதல்.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை *நொந்தக்கால்*
எய்த வருமோ இருநிதியம்-வையத்து
அறும்பாவம் என்னவறிந்து அன்றிடார்க் கின்று
வெறும்பானை பொங்குமோ மேல்

நல்வழி  –  ஒளவையார் (தீவினையே வறுமைக்கு வித்து)

கருத்து உரை

வெறும் பானையை  (அடுப்பிலே வைத்து எரித்தால்) மேலே பொங்குமோ; (பொங்காது.) அது போல  பூமியிலே (அறஞ்செய்தலினாலே) பாவம் நீங்கும் என்று உணர்ந்து,  அக்காலத்திலே  அறம்  செய்யாதவருக்கு ,  செய்த அப்பாவம் (வறுமைக்கு வித்தாய்) இருக்கும் ;   இப்பொழுது கடவுளை வெறுத்தால், பெரிய திரவியம் பொருந்த வருமோ? (வராது.) 

விளக்கம்

வறியவர் அவ்வறுமைக்கு வித்தாகிய தீவினையைச் செய்த தம்மை நோவாது, தெய்வத்தை நோதலிற் பயன் இல்லை

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இரங்குதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  இரங்குதல்

வார்த்தை :  இரங்குதல்

பொருள்

  • கூறுதல்
  • ஈடுபடுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

எழுதியவா றேகாண் *இரங்குமட* நெஞ்சே
கருதியவா றாமோ கருமம்-கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காயீந்ததேல்
முற்பவத்திற் செய்த வினை.

ஊழின் வலிமை – மூதுரை – ஒளவையார்

கருத்து உரை

நற் பயனைப் பெறலாமென்று நினைத்துப் போய் கற்பகத்தருவை அடைந்தவர்க்கு,  அது எட்டிக்காயைக் கொடுக்குமாயின் அதற்குக் காரணம் அவர் முற்பிறப்பிற் செய்த தீவினையாகும்; வருந்துகின்ற அறியாமை பொருந்திய மனமே, செய்தொழில்கள் (நீ) நினைத்தபடியே ஆகுமோ?

விளக்கம்

செய்தொழில்கள் ஊழின்படி யன்றி அவரவர் நினைத்தபடி முடியா

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கொழுவு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  கொழுவு

வார்த்தை :  கொழுவு

பொருள்

  • கோபப்படல்
  • மாட்டி வைத்தல்
  • இணைத்து வைத்தல்
  • சண்டை பிடித்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அழகிய உடல்மேல் சாம்பலைப் பூசி
அருவருப் பாக்கலும், மகளிர்
கொழுவிய குழலை மொட்டையாய் மழித்துக்
குரங்கெனத் தோன்றலும், அறியா
மழலையர் கையிலுட் காவடி கொடுத்து
மலையின் மேல் ஏற்றலும், இவைதாம்
வழிபடு முறையோ? இதுகொலோ சமயம்?
மடமைகண் டிரங்குமென் நெஞ்சே.

தடங்கண் சித்தர்

கருத்து உரை

அழகிய உடல் மேல் சாம்பலைப் பூசி அருவறுக்கத்தக்க வகையினில்  உடலினை ஆக்கிக் கொள்வார்கள்; மகளிருக்கு  என தலையுடன் இணைந்து இருக்கும் முடியினை நீக்கி  மொட்டையாக மழித்து அவர்களை குரங்கு போன்ற தோற்றத்தை உண்டாக்கியும்; என்ன என்று அறியாத சிறுவர்கள் கையில் காவடி கொடுத்தும்  அவர்களை மலை  எறச்செய்தும்  இவ்வாறான  செய்கைகள் உடையது தான் வழிபாட்டு முறையா? இதற்கான நேரமா  இது? இவ்வாறான மூடத்தனங்களை கண்டு அவர்களுக்குக்காக  இறங்குவாய் என் மட நெஞ்சே!

விளக்கம்

புற வழிபாட்டு முறைகளை நீக்க வலியுறுத்துல்  பொருட்டு

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அவிழ்தல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  அவிழ்தல்

வார்த்தை :  அவிழ்தல்

பொருள்

  • மலர்தல்
  • உதிர்தல்
  • சொட்டுதல்
  • இளகுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அவிழ இருக்கும் அறிவுடன் நின்றவர்க்(கு)
அவிழுமிவ் வல்லலென் றுந்தீபற
அன்றி அவிழாதென் றுந்தீபற.

திருநெறி 5 – திருவுந்தியார்

கருத்து உரை

(வினைக்கு உட்பட்டு) பிரபஞ்சத்திலே இருப்பினும் அதிலே பந்தமில்லாமலிருந்து திருவருளுடனே கூடி நிற்கின்றவர்களுக்கு இந்தப் பிரபஞ்சத்திலேயுள்ள துன்பங்களெல்லாம் நீங்கும்.

விளக்க உரை
திருவருளுடனே கூடினால் ஒழிய துன்பங்கள் நீங்காது.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஓரி

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஓரி

வார்த்தை :  ஓரி

பொருள்

  • கிழநரி
  • ஆண்நரி
  • ஆண்முசு
  • ஆண் விலங்குகள் (பொதுவாக)
  • ஆண்மயிர்
  • புறமயிர்
  • காளிவாகனம்
  • கொல்லிமலையை ஆண்ட கொடைவள்ளல்களில் ஒருவரான ஓரி என்ற மன்னன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

முதுவாய் ஓரி கதற முதுகாட்
   டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்
   மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
   கண்டால் அடியார் கவலாரே
அதுவே யாமா றிதுவோ கச்சூர்
   ஆலக் கோயில் அம்மானே.

தேவாரம் – 7ம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

பெரிய வாயை உடைய நரிகள் ஊளையிடும் இடத்திற்கு அருகினில் புறங் காட்டில் தீயை ஏந்தி ஆடுதலைச் செய்பவனே, கொன்றை பூவினில் இருந்து தேன் ஒழுகுகின்ற புதிய பூவைச் சூடுகின்ற  மலையான் மகள் மணவாளனே, திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, நீ சென்று  முரிந்த வாயையுடைய ஓட்டில் பிச்சை ஏற்றலைக் கண்டால் உன் அடியவர் கவலைகொள்ளாரோ?

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அடும்பு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  அடும்பு

வார்த்தை :  அடும்பு

பொருள்

  • அடும்பு அல்லது அடம்பு – ஒருவகையான படரும் கொடி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நெடுங்காலம் வந்தார் நெறியின்மை கண்டு
நடுங்கிப் பெரிதும் நலிவார் பெரியர்
அடும்பார் அணிகானற் சேர்ப்ப கெடுமே
கொடும்பாடு உடையான் குடி.

பழமொழி நானூறு

கருத்து உரை

அடும்பின் மென்கொடிகள் நிறைந்து அழகு செய்கின்ற சோலைகள் சூழ்ந்த கடல் நாடனே! நெடுங்காலமாகவே தம்மோடுதொடர்பு கொண்டுவந்தவர்கள், தீயதன்மையிலே இருப்பக் கண்டு, பெரியோர்கள் தம் உள்ளம் நடுக்கமுற்றுப் பெரிதும் வருந்துவார்கள். அவர்கள் வருந்தியதும் கொடுஞ்செயலை உடைய அவனுடைய குடும்பமே அழிந்து போகும்.

விளக்க உரை

  • சான்றோர்களின் மனம் வருந்துமாறு செய்வது ஒருவனுடைய குடும்பத்தை வேருடன் அழித்துவிடும் என்பது கருத்து
  • கெடுமே கொடும்பாடு உடையான் குடி என்பது பழமொழி.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மாசுணம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  மாசுணம்

வார்த்தை : மாசுணம்

பொருள்

  • பெரும்பாம்பு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சந்திரனை மாகங்கை திரையால் மோதச்
சடாமகுடத் திருத்துமே சாம வேத
கந்தருவம் விரும்புமே கபால மேந்து
கையனே மெய்யனே கனக மேனிப்
பந்தணவு மெல்விரலாள் பாக னாமே
பசுவேறு மேபரம யோகி யாமே
ஐந்தலைய மாசுணங்கொண் டரையார்க் கும்மே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

தேவாரம் – 6ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

சந்திரனையும் பெரிய கங்கையும் தன் சிரசில் வைத்திருப்பதால் கங்கை தன் அலைகளால் மோதுமாறு சடை முடியில் தரித்துள்ளான். சாமவேதமாகிய இசையை விரும்புபவன். கபாலம் எனும் மண்டையோட்டை ஏந்திய கையினை உடையவன். பொன்னார் மேனியில், மெல்லிய விரல்களை உடைய பார்வதியின் பாகன். காளையை வாகனமாக உடையவன். மேம்பட்டயோகி ஆனவர். ஐந்தலைப் பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டியவன். இத்தகைய செயல்களையும் பண்புகளையும் உடைய பெருமான் திருவதிகை வீரட்டானத்தை உகந்தது அருளியிருப்பவன்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வௌவுதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  வௌவுதல்

வார்த்தை : வௌவுதல்
பொருள்

  • கைப்பற்றுதல்
  • திருடுதல்
  • கவர்தல்
  • பேய்முதலியனபற்றிக்கொள்ளுதல்
  • மேற்கொள்ளுதல்.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே;
மன்றக் கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே;
‘அன்று அறிவார் யார்?’ என்று அடைக்கலம் *வெளவாத*
நன்றியின், நன்கு இனியது இல்.

இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்

கருத்து உரை

ஒருவர் செய்த உதவியினை நினைத்து வாழ்தல் மிக இனிது. நீதி சபையில் நடுநிலை தவறாமல் இருத்தலின் பெருமை இனிது. யாருக்கும் தெரியாது என்று அடைக்கலமாய் வந்த பொருளை அபகரிக்காமல் இருத்தல் இனிதின் இனிது.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!