ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – கபாலம்
வார்த்தை : கபாலம்
பொருள்
- மண்டையோடு
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
மறையும் ஓதுவர் மான்மறிக் கையினர்
கறைகொள் கண்ட முடைய கபாலியார்
துறையும் போகுவர் தூயவெண் ணீற்றினர்
பிறையுஞ் சூடுவர் பேரெயி லாளரே.
தேவாரம் – 5ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து உரை
பேரெயில் தலத்து இறைவர், மறையை ஓதுவர்; மான் ஏந்திய கையினை உடையவர் ; திருநீலகண்டர்; கபாலத்தைக் கொண்ட கையினர்; எத்துறையும் போகுவர்; தூய வெண்ணீற்றினர்; பிறையும் சூடுபவர் .
விளக்க உரை
- கறைகொள்கண்டம் – முதல்வனும் பேரருள் உடைமையினையும், யாரையும் எவற்றையும் தன்வயப்படுத்தும் செம்பொருட்டன்மையினையும் குறிக்கும்.
- கபாலியார் – பிரமகபாலம் ஏந்தியவர் . இஃது உயிர்களுக்கு உள்ள யான் எனது என்னும் செருக்கு அறுத்து இனிமை ஊட்ட வல்லான் என்பதைக் குறிக்கும்.
- துறை போதல் – கரையைச் சென்று அடைதல்,. எனவே , முதல்வன் எக்கலைக்கும் முதற் கருத்தாவாய் இயற்கை முற்றுணர்வு உடையன் என்பதைக் குறித்தபடி.
- பிறை சூடுதல் உயிர்களின் அக இருளைப் போக்கும் தூய நல்லுணர்வைத் தன் பக்கம் உடையன் என்பதைக் குறிக்கும் .
- துறையும் போகுவர் – எக்கலைக்கும் முதல்வன் ( சிவபிரான் )