ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – அளி
வார்த்தை : அளி
பொருள்
- அருள்
- இரக்கம்
- பரிவு
- கண்ணோட்டம்
- வண்டு
- கொடு
- தானம் செய்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
அளி புண் அகத்து, புறம் தோல் மூடி, அடியேன் உடை யாக்கை,
புளியம்பழம் ஒத்து இருந்தேன்; இருந்தும், விடையாய்! பொடி ஆடீ!
எளிவந்து, என்னை ஆண்டுகொண்ட என் ஆர் அமுதே! ஓ!
`அளியேன்’ என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!
திருவாசகம் – 8ம் திருமுறை – மாணிக்க வாசகர்
கருத்து உரை
தலைவனே இடப வாகனனே, திருவெண்ணீறு அணிவோனே, புறத்தில் தோலால் மூடப்பெற்று புளியம்பழத்தைப் போல என்னுடைய உடம்பு உள்ளே காயம் உடையதாக இருக்கிறது. அவ்வாறு இருக்கும் அதன்கண் பற்றுக்கொண்டு இருந்தேன் அவ்வாறு இருந்தும் எளிமையாய் வந்து என்னை ஆட்கொண்டு அருளினாய். எனது அருமையான அமுதமே எனது ஓலம் கண்டு இனி நீ ‘இவன் இரங்கத்தக்கவன்’ என்று சொல்லி அழைக்க நான் விரும்பினேன்.
விளக்கம்
- ‘எனது தகுதியின்மை தெரிந்தும் முன்பே வந்து ஆட்கொண்டது போலவே இனியும் என்னை உன்பால் அழைத்துக்கொள்ள வேண்டும்’
- இதனால், சிறியோரையும் இரங்கி ஆட்கொள்பவன் இறைவன் என்பது பொருள்