ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – மருட்டுதல்
வார்த்தை : மருட்டுதல்
பொருள்
- மயக்குதல்
- பயமுறுத்துதல்
- மாறுபடச்செய்தல்
- ஒத்தல்
- மனங்கவியச்செய்தல்
- ஏமாற்றுதல்
- மறக்கச்செய்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
இருட்டறை மூலை யிருந்த கிழவி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி அவனை மணம்புணர்ந் தாளே.
10ம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து உரை
இருட்டரையில் மூலையில் இருந்த கிழவி, குருடாக இருக்கும் கிழவனை கூடலுக்கு (அழைத்து விளக்கி) அவனது குருட்டினை நீக்கி அவனுக்கான குணங்களைக் காட்டி அவனை மணம் புரிந்து அவனுடன் கலந்திருந்தாள்.
விளக்க உரை
- ‘இருட்டறை மூலை யிருந்த குமரி’ என்று பல இடங்களில் பாடல் திருத்தப்பட்டிருக்கிறது. அவ்வாறே விளக்கமும் அளிக்கப்பட்டிருக்கிறது. ‘கிழவி’ என்பதே மூலத்தில் இருப்பதால் அவ்வாறே இங்கு எடுத்தாளப்பட்டிருக்கிறது.
- பிரகிருதி என்பது பெண் தன்மை கொண்ட இறை நிலை. புருஷார்த்தம் என்பது ஆன்மா. ஜீவ ஆத்மா. இறை உணர்த்த ஆன்மா தன்னை அறியும் என்பது ஒரு விளக்கம். பிரகிருதி புருஷனுடன் இணைந்து இந்திரியங்கள் உண்டாகி, முக்குணங்கள் உண்டாகி குணங்கள் கடந்து ஜீவன் முக்தி ஏற்படும்.
- குண்டலி எனும் மஹாசக்தி மூலாதரத்தில் உறங்கிக் கொண்டு இருக்கிறது. அவள் இருப்பது தெரியாமல் அனைவரும் குருட்டுநிலையில் உலகில் உழன்று கொண்டு இருக்கிறார்கள். உடலை காட்டிலும் அவள் எப்பொழுதும் இளமையானவள். உயிர்கள் உய்வதின் பொருட்டு (கிழவி — சத்தியின் உச்ச நிலை; அநாதியான அருட்சக்தி) என்றாவது ஒருநாள் அவள் பல சித்துக்களை நமக்கு காட்டி தன்பால் வசமாக்கி நமது அறியாமையை நீக்கி அருளுவாள்.