
ஓவியம் : இணையம்
தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருவெண்ணைநல்லுர்
- ஈசன் நஞ்சுண்ட காலத்தில் அது அவரை துன்புறுத்தாமலிருக்க உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணெயால் கோட்டை கட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிலிருந்து தவம் செய்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய்நல்லூர்
- மறைகளும் , தாருகாவனத்து முனிவர்களும் தவஞ்செய்து அருள்பெற்ற தலம்
- சுந்தரர், இறைவனை ‘பித்தன்’ என்று வசைவு பொழிய, காரணங்களை விளக்கியப்பின் இறைவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு “பித்தனென்றே பாடுவாயென” மொழிய, சுந்தரமூர்த்தி சுவாமிகள் ‘பித்தாபிறைசூடீ’ எனப் முதல் தேவாரப்பதிகம் பாடி ஆட்கொள்ளப்பட்டு அருள்வாழ்வு பெற்ற தலம்
- கோவில் உள்ளே – சுந்தரர் வழக்கு நடந்த ‘வழக்கு தீர்த்த மண்டபம்’
- சிவனார் முதியவர் வடிவில் வந்து சுந்தரரை தடுத்தாட்கொள்ள வந்த போது அணிந்திருந்த பாதுகைகள் இன்றும் இக்கோயிலில் பாதுகாப்பாக இருக்கின்றன.
- இத்தலத்திற்கு மிக அருகில் சுந்தரரின் திருமணம் நின்ற இடமான மணம் தவிர்ந்த புத்தூர் (மணப்பந்தூர்)
- சடையப்ப வள்ளல் வாழ்ந்த தலம். அவர், கம்பரைக் கொண்டு ராமாயணம் பாடுவித்தத் தலம்.
- அர்ஜுனனுக்கு குழந்தைவரம் அளித்த விஜயலிங்க சிவனாருக்கு சந்நிதி
- நவக்கிரகங்கள் வழிபட்ட ஜோதிலிங்கம் தனிச்சன்னதி
- இந்திரன் வழிபட்ட சுந்தரலிங்கர் சந்நிதி
- மகாவிஷ்ணு வழிபட்ட சங்கரலிங்கர் சந்நிதி
- அர்ஜுனன் தனது பாவங்களைப் போக்கிக்கொண்ட தலம்
- சைவசமய சந்தனாசாரியராகிய மெய்கண்டதேவர் வாழ்ந்து உபதேசம் பெற்ற தலம்(அருள் செய்த மூர்த்தி பொல்லாப் பிள்ளையார்)
- ஐப்பசி சுவாதியில் மெய்கண்டார் குருபூஜை (வடக்கு வீதியின் கோடி)
| தலம் | திருவெண்ணைநல்லுர் |
| பிற பெயர்கள் | திருவருள்துறை, திருவருட்டுறை, திருவெண்ணெய்நல்லூர் |
| இறைவன் | கிருபாபுரீஸ்வரர் ( வேணுபுரீஸ்வரர், அருட்டுறைநாதர், தடுத்தாட்கொண்டநாதர், அருட்கொண்டநாதர், ஆட்கொண்டநாதர் ) |
| இறைவி | மங்களாம்பிகை ( வேற்கண்ணியம்மை ) |
| தல விருட்சம் | மூங்கில் |
|
தீர்த்தம் |
தண்டுத்தீர்த்தம்,(சிவனாற்கேணி), பெண்ணை நதி தீர்த்தம், நீலி தீர்த்தம், சிவகங்கா தீர்த்தம், காம தீர்த்தம், அருட்டுறைத் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், வைகுண்ட தீர்த்தம், வேத தீர்த்தம் |
| விழாக்கள் | பங்குனி உத்திரம் , ஆடி சுவாதி, ஆருத்ரா தரிசனம் , ஆவணி மூல புட்டு உற்சவம் , கந்தசஷ்டி |
| மாவட்டம் | விழுப்புரம் |
| திறந்திருக்கும் நேரம் / முகவரி | காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரைஅருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோவில் திருவெண்ணைநல்லூர் அஞ்சல் திருக்கோயிலூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம் PIN – 607203 04153-234548, 99942-70882, 93456-60711, 94424-22197 ( மெய்கண்டார் கோயில்) |
| வழிபட்டவர்கள் | நவக்கிரகங்கள், இந்திரன், மகாவிஷ்ணு,அர்ஜுனன் |
| பாடியவர்கள் | சுந்தரர், அருணகிரிநாதர் |
| நிர்வாகம் | |
| இருப்பிடம் |
திருக்கோவிலூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 20 கி.மி. தொலைவு, விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ தொலைவு |
| இதர குறிப்புகள் | தேவாரத் தலங்களில் 200 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 14 வது தலம். |
பாடியவர் சுந்தரர்
திருமுறை ஏழாம்
பதிக எண் 1
திருமுறை எண் 1
பாடல்
பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாய்இனி அல்லேனென லாமே.
பொருள்
பித்தனே, சந்திர பிறையைக் தலையில் சூடிய பெருமை உடையவனே, அருளாலனே, பெண்ணையாற்றின் தென் கரையில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் சார்ந்ததான `அருட்டுறை` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்து அருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகிய என்னை, இப்பொழுது, `உனக்கு அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேச வைத்தது பொருந்துமோ!
பாடியவர் சுந்தரர்
திருமுறை ஏழாம்
பதிக எண் 1
திருமுறை எண் 4
பாடல்
முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ
கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ
செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அடிகேள்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே.
பொருள்
இடபத்தை ஊர்தியாக உடையவனே, ஒளி நிறைந்த பெண்ணையாற்றின் தென் கரையில் உள்ள உள்ள திருவெண்ணெய்நல்லூர் சார்ந்ததான `அருட்டுறை` என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! அவ்வாறான பொருந்தாமையை அகற்றி என்னை நீ தெளிவித்து அருளியதால், இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில் வாழ்ந்து மூப்படைந்து வருந்தவும் ஆன துன்பங்களை அறுத்தேன். நெறி கெட்டவனாகி பொய்ம்மைகள் பலவற்றையே பேசுவேனாகிய என்னை நீ வெறுக்காமல் ஏற்றறு அருள்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
![]()




















