சைவத் திருத்தலங்கள் 274 – திருநாவலூர்

274

தல வரலாறு(சுருக்கம்) / சிறப்புகள் – திருநாவலூர்

  • மூலவர் சற்று உயரமான பாணத்துடன் சிறிய கருவறையில் கிழக்கு நோக்கி திருக்காட்சி
  • பார்வதி சிவனாரை வழிபட்டு அவரை மணந்துகொண்ட தலம்.
  • உமையன்னை உடன் வந்த சூலினி என்ற சக்தி தனது  சூலாயுதத்தால் நிலத்தில் ஊன்றி உண்டாக்கப்பட்ட தீர்த்தம். பாதாளகங்கை வெளிப்பட்டது சாம்பூநத தீர்த்தம். முருகப்பெருமான் தனது வேற்படையால் ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். இதுவே சக்தி பில தீர்த்தமாகும். சாம்பூநத தீர்த்தமும் விநாயகர் அளித்த மலர்களையும் பயன்படுத்தி மகாசிவராத்திரியன்று முதலிரண்டு ஜாமங்களில் அபிஷேக ஆராதனைகள், பில தீர்த்த நீர் கொண்டு அடுத்த இரண்டு காலங்களிலும் உமை பூஜை செய்த தலம்.
  • சடையனாரும் , இசைஞானியாரும் (சுந்தரரின் தாய்) வாழ்ந்து முக்திபெற்ற தலம்
  • சுந்தரர் பிறந்த தலம்
  • இரு மனைவியர் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் சூழ, எதிரில் வெள்ளையானை நிற்க, சுந்தரர் கையில் தாளமேந்தி திருக்காட்சி
  • கோயிலுக்குப் பக்கத்தில் சுந்தரர் மடாலயத்தில் சுந்தரர் கையில் செண்டுடன் காட்சி
  • சுந்தரரை ஆட்கொள்ள சிவனார் முதியவர் வேடத்தில் வந்தபோது அணிந்திருந்த பாதுகைகள் – இப்பொழுதும் பாதுகாப்புடன். குருபூசை நாள் : ஆடி – சுவாதி.
  • சுக்கிரன் வழிபட்ட தலம்
  • சூரியன் திசைமாறி மூலவரை பார்த்தவாறு அமைப்பு. சுக்கிரனுக்கு எதிரில் அவர் வழிபட்ட சுக்கிரலிங்கம்
  • தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் ரிஷபத்தின் முன்னால் நின்று வலக்கையை ரிஷபத்தின் மீது ஊன்றி, மறுகையில் சுவடியேந்தி நிற்கும் கோலத்தில் காட்சி
  • திருமால் ஈசனை வழிபட்டு நரசிம்ம அவதாரம் எடுக்கும் ஆற்றலை பெற்ற தலம்
  • திருமாலின் யோக அக்னி தாக்கி, ஆதி சேஷன் விஷம் வெளிப்பட கருமை நிறமாக மாறிய கருடன். பின் அவர் சாம்பூநத தீர்த்தத்தில் நீராடி அவரது மேனியில் கருமை நீங்கி வெண்ணிறமும் புத்தொளியும் ஏற்பட்ட தலம். இதனால் கருடனுக்கு காலாந்தகன் என்றும் பெயர்
  • பங்குனிமாதம் 23 – 27 நாட்களில் சூரிய ஈசனின் மேல்வழிபாடு
  • கிருதயுகத்தில் திருமாலும், திரேதாயுகத்தில் சண்டிகேஸ்வரரும், திரேதாயுகத்தில்  சண்டிகேஸ்வரரும், துவாபரயுகத்தில் பிரம்மனும், கலியுகத்தில் சுந்தரரும் வழிப்பட்ட தலம்
  • திரேதாயுகத்தில் வன்னிவனமாக விளங்கிய இப்பகுதியில் ஒரு பசு இங்கு தோன்றியிருந்த லிங்கத்தின் மீது பரிவு கொன்டு ஆறு காலம் பாலாபிஷேகம் செய்து பூசித்தது. புலியால் கொல்லப்பட இருந்த பசுவை காப்பாற்றியதால் ஈசனார் பசுபதி
  • கருவறை சுவற்றில் சண்டிகேஸ்வரர் வாழ்க்கை வரலாற்றுச் சிற்பங்கள்
தலம் திருநாவலூர்
பிற பெயர்கள் ஜம்புநாதபுரி , திருநாமநல்லூர்
இறைவன் பக்தஜனேஸ்வரர், திருநாவலேஸ்வரர் , ஜம்புநாதேஸ்வரர்
இறைவி மனோன்மணியம்மை, நாவலாம்பிகை , சுந்தரநாயகி , சுந்தராம்பிகை
தல விருட்சம் நாவல் மரம்
தீர்த்தம் கோமுகி தீர்த்தம் , கருட நதி
விழாக்கள் ஆவணி உத்திர நட்சத்திர நாளில் சுந்தரர் ஜனனவிழா, ஆடி சுவாதி நட்சத்திரத்தன்று சுந்தரர் குருபூஜை, சித்திரைத்தேர்விழா, தமிழ்புத்தாண்டு பஞ்சமூர்த்திகள் மற்றும் சுந்தரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், ஆடிப்பூரம்,
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு பக்த ஜனேஸ்வரர் திருக்கோவில்
திருநாவலூர் அஞ்சல்
உளுந்தூர்பேட்டை வட்டம்
விழுப்புரம் மாவட்டம் – 607204
முத்துசாமி சிவம் : 94433 82945
செந்தில் குருக்கள் : 9486150809
வழிபட்டவர்கள் பிரம்மன் , சண்டிகேஸ்வரர் , இந்திரன் , அஷ்டதிக்பாலகர்கள் , சூரியன் , சப்தரிஷிகள்
பாடியவர்கள் சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம் உளுந்தூர்பேட்டையில் இருந்து சுமார் 14 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 198 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 8 வது தலம்.

பக்தஜனேஸ்வரர்

பக்தஜனேஸ்வரர்

மனோன்மணியம்மை

மனோன்மணியம்மை

புகைப்படங்கள் : தினமலர்

பாடியவர்           சுந்தரர்
திருமுறை          7ம் திருமுறை
பதிக எண்           17
திருமுறை எண்  5

பாடல்

உம்பரார் கோனைத்திண் தோள்முரித்தார்உரித் தார்களிற்றைச்
செம்பொனார் தீவண்ணர் தூவண்ணநீற்றர்ஓர் ஆவணத்தால்
எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில்வைத்தெனை ஆளுங்கொண்ட
நம்பிரா னார்க்கிடம் ஆவதுநந்திரு நாவலூரே.

பொருள்

தேவர்கட்கு அரசனாகிய இந்திரனைத் தோள் முரித்தவரும், யானையை உரித்தவரும், சிவந்த பொன்போன்றதும் , நெருப்புப்போன்றதும் ஆகிய நிறத்தை உடையவரும் , தூய வெள்ளை நிறத்தையுடைய நீற்றை அணிந்தவரும், என்போலும் அடியவர்கட்குத் தலைவரும், ஓர் ஆவணத்தினால் என்னைத் திருவெண்ணெய் நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்ட நம் அனைவர்க்கும் தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாயிருப்பது நமது திருநாவலூரேயாகும்.

பாடியவர்           சுந்தரர்
திருமுறை          7ம் திருமுறை
பதிக எண்           17
திருமுறை எண்  10

பாடல்

மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத்தான்வலி யைநெரித்தார்
அடக்கங்கொண் டாவணங் காட்டிநல்வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்
தடுக்கஒண் ணாததோர் வேழத்தினையுரித் திட்டுமையை
நடுக்கங்கண் டார்க்கிடம் ஆவதுநந்திரு நாவலூரே.

பொருள்

தனக்கு வலிமை உண்டு என்று செருக்கி விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்த்தவனாகிய இராவணனது வலிமையை நெரித்து அழித்தவரும், மூல ஆவணத்தை மறைவாக வைத்திருந்து அதனை நடுவுநிலையாளர் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் காட்டி என்னை அடிமையும் கொண்டவரும், தடுக்க வொண்ணாத வலிமையுடைய யானை ஒன்றினை உரித்து உமையையும் நடுங்கச் செய்தவருமாகிய இறைவற்கு இடமாயிருப்பது நமது திருநாவலூரேயாகும்.

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply