பாடல்
நிலனே நீர்வளிதீ நெடுவானக மாகிநின்ற
புலனே புண்டரிகத் தயன்மாலவன் போற்றிசெய்யும்
கனலே கற்பகமே திருக்கற்குடி மன்னிநின்ற
அனல்சேர் கையினனே அடியேனையும் அஞ்சலென்னே.
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
தீ ஏந்திய கையை கொண்டு, திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளி உள்ளவனே, நிலம், நீர், தீ, காற்று, நீண்டவானம் எனும் ஆகாயம் என்னும் ஐந்துமாகி உள்ளவனே, தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் மற்றும் மாயோன் ஆகிய திருமால் இருவரும் போற்றி நின்ற பொழுதில் நெருப்பாகி தோன்றியவனே, கற்பகத் தரு போன்றவனே, அடியேனையும், `அஞ்சதே` என்று சொல்லி அருள் புரிவாயாக.
விளக்க உரை
- இத்தலத்தில் இறைவர் ‘கற்பகநாதர்’ ஆதலின் ‘கற்பகமே` எனும் சொற்றொடர். ஆறாம் திருமுறையில் ‘கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே’ என்றும் பாங்கோடு வைத்து சிந்திக்கத் தக்கது.
- அஞ்சலென்னே என்பதை `அஞ்சாதி` என்று சொல்லி அருள் புரிவாயாக என்று சில இடங்களில் விளக்கப்பட்டுளது. ‘அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன …அஞ்சாதி யாதி அகம்புக லாமே’ எனும் திருமந்திரப் பாடலின் படி அஞ்செழுத்து சிவன் இருப்பிடம் இத்தலம் ஆகவே அஞ்செழுத்தாக சிவன் இத்தலத்தில் உறைகின்றான் என்றும் பொருள் தோன்றும். கற்றறிந்தோர் பொருள் கொண்டு உய்க.