சைவத் திருத்தலங்கள் 274 – திருநெல்வாயில் அரத்துறை

274

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருநெல்வாயில் அரத்துறை

  • திருத்தூங்காணை மாடத்தில் இருந்து நடந்தே சென்ற திருஞான சம்பந்தரின் கால்கள் நோகாமல் இருக்க அவருக்கு சிவன் முத்துச்சிவிகையும், முத்துக்குடையும், முத்துச்சின்னமும் அருளியத் தலம்
  • வெள்ளாறு நதியில் வெள்ளப்பெருக்கெடுத்த போது சேதம் உண்டாகாதிருக்க நந்தி தலையை திருப்பி பார்த்து வெள்ளம் வடிந்ததால் சற்று திரும்பியுள்ள நந்தியின் தலை
  • ஏழு துறைகளில்(அரத்துறை , ஆதித்துறை ( காரியனூர் ) , திருவாலந்துறை , திருமாந்துறை , ஆடுதுறை , திருவதிட்டத்துறை ( திட்டக்குடி ) , திருக்கைத்துறை) சப்தரிஷிகள் ஈசனை வழிபட்ட தலம்
  • செவ்வாயும், சனியும் தங்கள் தோஷம் நீங்க இத்தலத்தில் சிவ பூஜை செய்து வழிபட்ட தலம்.

 

தலம் திருநெல்வாயில் அரத்துறை
பிற பெயர்கள் தீர்த்தபுரி,திருவரத்துறை , திருவட்டுறை, திருவட்டத்துறை,  நெல்வாயில் அருத்துறை, சிவபுரி
இறைவன் தீர்த்தபுரீஸ்வரர், ஆனந்தீஸ்வரர் , அரத்துறைநாதர்
இறைவி திரிபுரசுந்தரி, ஆனந்தநாயகி , அரத்துறைநாயகி
தல விருட்சம் ஆலமரம்
தீர்த்தம் நீலமலர்ப்பொய்கை , நிவாநதி (வடவெள்ளாறு நதி)
விழாக்கள் மகாசிவராத்திரி , மார்கழி திருவாதிரை , பங்குனி உத்திரம்
மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை,

மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

 

அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் (அரத்துறைநாதர்) திருக்கோவில்

திருவட்டுறை அஞ்சல்

திட்டக்குடி வட்டம்

கடலூர் மாவட்டம்

PIN – 606111

04143-246303, 04143-246467

வழிபட்டவர்கள் மகாவிஷ்ணு, ஆதிசேஷன், சனி, செவ்வாய், வால்மிகி முனிவர், அரவான்,சனகர், ஆதி சங்கரர், குகை நமச்சிவாயர், இராமலிங்க அடிகள்,சேர, சோழ, பாண்டியர்கள்
பாடியவர்கள் திருநாவுக்கரசர் 1 பதிகம் , திருஞானசம்பந்தர் 1 பதிகம் , சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம் திருப்பெண்ணாகடதிற்குத் தென்மேற்கே 7-கி. மீ. தூரம். விருதாச்சலம் தொழுதூர் சாலையில் கொடிகளம் என்னும் இடத்தில் இறங்கி, தெற்கே 1-கி. மீ. தூரம்
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 191  வது தலம்

நடு நாட்டுத் தலங்களில்  1   வது தலம்.

அருள்மிகு திரிபுரசுந்தரி உடனாகிய தீர்த்தபுரீஸ்வரர் 

combined

புகைப்படம் : தினமலர்

பாடியவர்                                          திருநாவுக்கரசர்

திருமுறை                                       5

பதிக எண்                                          3

திருமுறை எண்                            9

 

பாடல்

 

காழி யானைக் கனவிடை யூருமெய்

வாழி யானைவல் லோருமென் றின்னவர்

ஆழி யான்பிர மற்கும ரத்துறை

ஊழி யானைக்கண் டீர்நாந் தொழுவதே.

 

பொருள்

 

சீகாழிப்பதியில் உறைபவரும், பெருமையை உடைய இடப வாகனத்தில் செல்லும் நித்தத் திருமேனி உள்ளவரும், பிறரால் ‘வல்லோர்கள்’ என்று கூறப்படுவோராகிய திருமால் மற்றும் பிரமனும் ஊழிக் காலத்தில் ஒடுங்கும் இடமாகக் கூடியவரும் அரத்துறை மேவும் பரமனே, நாம் தொழுகின்ற இறைவனாகிய நம் சிவபெருமான் ஆவார்.

 

கருத்து

 

திருமாலும் பிரமனும் வணங்க, ஊழிதோறும் விளங்கும் அரத்துறை எனும் பொருள் பிரித்து அறிவார்களும் உளர்.

 

 

பாடியவர்                          சுந்தரர்

திருமுறை                       7

பதிக எண்                          3

திருமுறை எண்            8

 

பாடல்

 

திண்டேர்நெடு வீதி யிலங்கையர்கோன்

திரள்தோள்இரு பஃதும்நெ ரித்தருளி

ஞெண்டாடுநெ டுவயல் சூழ்புறவின்

நெல்வாயி லரத்துறை நின்மலனே

பண்டேமிக நான்செய்த பாக்கியத்தாற்

பரஞ்சோதிநின் நாமம் பயிலப்பெற்றேன்

அண்டாஅம ரர்க்கம ரர்பெருமான்

அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.

 

 

பொருள்

 

வலிமை மிக்க தோள்கள் இருபதையும் நெரித்து பின் (அவன் கர்வம் அழிந்தப்பின்) அவனுக்கு அருளி, நண்டுகள் உலாவுகின்ற நீண்ட வயல் சூழ்ந்த, முல்லை நிலத்தையுடைய திருநெல்வாயில் அரத்துறையின் கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே,  மேலான ஒளி வடிவினனே, தேவனே, தேவர்க்குத் தேவராய் உள்ளார்க்குத் தலைவனே, நான் முற்பிறவிகளில் செய்த நல்வினையினால் உனது பெயரைப் பல காலமும் சொல்லும் பேற்றினைப் பெற்றேன்; இனி, அடியேன், உலகியலினின்றும் பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.

 

கருத்து

தேவர்க்குத் தேவர், காரணக் கடவுளர் –  அயனும், மாலும்

நாமமாவது – திருவைந்தெழுத்து

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply