மெய்ப் பொருளை புறக்கண்ணால் காணலாம் என்று கூறுபவர் மூடராவர். புறக்கண், சிவத்தினை உணரத் துணை செய்யும் போது திருவடிப் பேரின்பம் அகத்துக் கண்ணாகிய அறிவுக் கண்ணால் நேரும். அதுவே அழிவிலாத பேரின்பம், எல்லையிலாத நல்லின்பம்.
மூலவர் சதுர வடிவ ஆவுடையார். சற்று சாய்ந்த கோலத்தில் திருக்காட்சி. சிவலிங்கத் திருமேனியின் இருபுறமும் பசுவின் குளம்புபட்டது போன்ற பள்ளங்கள் போன்ற தோற்றம்.
இரண்டுஅம்பாள் சந்நிதிகள். 1. பழமையான கிழக்கு நோக்கியுள்ள அலங்காரநாயகி அம்மை 2. புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட சௌந்தரநாயகி அம்மை
காமதேனு இறைவனை வணங்கி, தானும் சிருஷ்டி ரகசியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டி தவம் இருந்த தலம்.
தைப்பூச தினத்தன்று சிவனாருடன் ஐக்கியமான கருவூர்த் தேவரின் சமாதிக் கோயில் தனியாக தெற்குப் பிரகாரத்தில்
பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சூரிய ஒளி லிங்கத்தின் மீது படும்படியாக கோவில் அமைப்பு
எறிபத்த நாயனார் பட்டத்து யானையை வெட்டி வீழ்த்தியது கோயில் சந்நிதி வீதிக்கு கிழக்கில் நான்கு வீதிகள் கூடுமிடத்தில்
புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டத் தலம்
எறிபத்த நாயனார் பிறந்த தலம்
சிவகாமியா அம்மாள் வாழ்ந்து தொண்டு செய்தத் தலம்
திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவர் பிறந்ததலம்
கருங்கல்லால் ஆன கொடிமரம்
திருக்கருவூர் தலச்சிறப்பை சொல்லி செய்த நூல் கருவூர் மான்மியம். இது யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி மகாவித்துவான் நா. கதிரவேற்பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டது.
வில்வமரம் , சீந்தில் கொடி, ஆகாச வல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகா மூலி என்று அழைக்கப்படும் வஞ்சி மரம்.
தீர்த்தம்
பிரம்மதீர்த்தம் , அமராவதி ( ஆம்பிரவதி ) ஆறு
விழாக்கள்
பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம், மார்கழித் திருவாதிரை உற்சவம்
மாவட்டம்
கரூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6:00 மணிமுதல் மதியம் 11:00 மணிவரை
மாலை 4:00 மணிமுதல் இரவு 8:00 மணிவரைஅருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில்
கரூர், கரூர் மாவட்டம். PIN – 639001
04324-262010 , 99940-12617
வழிபட்டவர்கள்
வியாசர், தேவர்கள், சுக்கிரன், , பிரம்மன், திக்குப்பாலர்கள், காலவமுனிவர், முசுகுந்த சோழ மன்னன்
ஆகாயத்தில் உலாவும் மதியைச் சூடியவராகவும். வேத கானம் எனப்படும் சாமகான இசையாக விளங்குபவராகவும். மேலான எண்குண பண்பை உடையவராகவும், உயிர்களுக்குக் கண்ணாயிருப்பவராகவும், அடியவர்கட்கு நல்லவர் எனும் திருப்பெயருடன் விளங்குபவராகவும். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர்.
கடுத்த வாளரக் கன்க யிலையை எடுத்த வன்றலை தோளுந் தாளினால் அடர்த்த வன்கரு வூரு ளானிலை கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே
பொருள்
கருவூர் ஆனிலையில் விளங்கும் ஈசன், பெரியவனாகவும், வாளோடு சினந்து வந்து கயிலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனின் தலை, தோள் ஆகியவற்றைத் தன் திருத்தாளினால் அழுந்தும்படி செய்து அவன் வருந்துமாறு செய்து பின் அவனுக்கு அருள் கொடுத்தவனாகவும், கூத்தனாக விளங்குபவன்.
விளக்கஉரை
கடுத்த – கோபித்த
தாள் – திருவடி
அடர்த்தல் – நெருக்குதல், அமுக்குதல், வருத்துதல், போர் புரிதல், தாக்குதல்
கொல்லுதல், கெடுத்தல்
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
இது 1201 பதிவு. (பதிவு செய்யப்பட்டவை மட்டும்) மொத்த பார்வையாளர்கள் 2,06,000 த்திற்கும் மேல்.
வாசிப்பு மிகப் பெரிய அனுபவமாக இருக்கிறது. மிகுந்த சிரமங்களுக்கு இடையில் பாடலைப் படித்து கருத்துக்களை உள்வாங்கி, அதை பதம் பிரித்து எழுதுவது என்பது பகிர முடியா அனுபவமாகவே இருக்கிறது.
ஒவ்வொரு தேடலும் மிகப் பெரிய அனுபங்களை வழங்கிச் செல்கிறது. ‘இப்படிக் கூட யோசிக்க முடியுமா’ என்றும், ‘இத்தனை அழகாக நமக்காக ஏற்கனவே எழுதி இருக்கிறார்களே’ என்றும் பல பிரமிப்புகளை வழங்கிச் செல்கிறது. சில நாட்களுக்கு 5 மணி நேரங்களுக்கு மேல் தேவைப்பட்டிருக்கிறது.
உணரப்படவேண்டியவை என்பது எதிரே கடல் போலவும், நிஜத்திலே கடற்கரை ஓரத்தில் வேடிக்கை பார்ப்பவனுமான அனுபவமாகவே இருக்கிறது.
‘என் செயல் யாதொன்றுமிலை எனப் பெற்றேன்’ என்பதே நிஜம். இத்தனையும் என் குரு நாதர் அருளினால் மட்டுமே நடக்கிறது என்பதும் நிஜம். அவர் இத் தேகத்தை கருவியாக ஆக்கவில்லை எனில் இந்த மொழி ஆக்கங்களும், வெளிப்பாடுகளும் நிகழ்ந்து இருக்கா.
வாசிக்கும் அனைவருக்கும் நன்றிகள். குரு அருளும், திருஅருளும் நம்மைக் காக்கட்டும்.
பாடல்
சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க! உண்பாய் நீயென்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து முத்துப் போலன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும் தித்திக்குந் தேனாமிர்தம் என் கண்ணம்மா! தின்றுகளைப் பாரேனோ!
அழுகணிச் சித்தர்
பதவுரை
அரிசி வகைகளில் மிக உயர்ந்த சம்பா அரிசியை நன்கு சமைத்து அதனுடன் நெய் சேர்த்து முத்து முத்தாக உண்ணுதற்கு வைப்பது போல் எண்பத்தி நான்காயிரம் யோனிப் பிறப்புகளில் உயர்ந்ததான மானுடப் பிறப்பை நல்ல சாதனைகள் சேர்த்து அர்ப்பணித்தலுக்கு தயாராக வைக்க அதை ஏற்று முப்பழத்துடன் சர்க்கரை சேர்த்துப் படைத்து மானிடர்களால் தேனமிர்தம் என்றறியப் படுவதை மிகுந்த சுவையுடைய சகஸ்ராரத்தினின்று வடிந்து அண்ணாக்கினால் சுவைக்கப் படும் அமிர்தத்தை சுவைத்து செயல்களொழித்து சும்மா இருக்கும் நிலை வேண்டுகிறார்.
விளக்கஉரை
ஊட்டி வளர்க்கும் இவ்வுடல் ஓர் மாயை என்று உணர்ந்த சித்தர் பெருமக்கள் இவ்வூணெடுத்த காரணம் இதை சகஸ்ராரத்தில் சுடராய் விளங்கும் வாலையன்னைக்கு அர்ப்பணித்தலே என்ற உண்மையை தெளிவாக அறிந்திருந்தனர். இதில் அர்ப்பணிப்பு என்பது உடல் தன்னது என்ற மாயை விலக்குதலே ஆகும். இந்தக் கருத்தை ஒற்றியே அழகணி சித்தர் இப்பாடலை இயற்றியிருக்க வேண்டும்.
இதையே ஶ்ரீ ரமண மகரிஷி அவர்களும் சாப்பாடுனையே சார்ந்துணவாவேன் சாந்தமாய் போவென் அருணாசலா என்று பாடியுள்ளார்.
பாடல் எளிதாக தோன்றினாலும் அதன் உட்பொருளை உரைத்த மதனா அண்ணா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
மகத்தில் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய்; மைந்தனே! மணியே! மணவாளா! அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால், “அழையேல், போ, குருடா!” எனத் தரியேன்; முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன்? முக்கணா! முறையோ? மறை ஓதீ! உகைக்கும் தண் கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
வேதங்களை அருளிச் செய்தவனே, விலைமதிப்புடைய பொருள்களை கரையிடத்துக் கொண்டு வந்து சேர்க்கும் குளிர்ச்சியும் அருளும் நிறைந்தும் கடல் அலைகள் வந்தும் உலவுகின்ற ‘ஒற்றியூர்‘ என்னும் ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே, என்றும் வலிமையாய் உள்ளவனே, மணி போன்றவனே, அழகுடையவனே, நீ எனக்கு, ‘மகம்‘ என்னும் விண்மீன் கீழ் வந்த, ‘சனி‘ என்னும் கோள் போன்றவன் ஆயினேன் ஆதலால் எனது குருட்டுத் தன்மை பற்றி காரியம் சொல்ல அகத்தில் உள்ள பெண்டுகளை அழைத்தால் ‘கண்ணிலியே நீ என்ன அறிவாய்; போ‘ என்று சொல்வதை நான் பொறுக்கமாட்டேன்; மூன்று கண்களையுடையவனே, முகத்தில் கண் இல்லாமல் நான் எவ்வாறு வாழ்வேன்? இது முறையோ!
விளக்கஉரை
சுந்தரர், உலகியர் முன்வைத்து தம் மனைவியர் இங்குக் கூறியது போலக் கூறியது
சனிக்கிர சஞ்சாரம் மக நட்சத்திரத்தில் வரும்போது, நாட்டிற்கும், மக்களுக்கும் தீங்குவரும் என்பது ஜோதிட சாத்திரம்.
நீ மூன்று கண்களோடு இருக்கிறாய், நான் கண்கள் இழந்து துன்புறுகிறேன் என்பதைக் குறிப்பிடுகிறார்; துன்பம் அதிகம் உடையவர் என்பதாலும், இறைவனை இவ்வாறு வைது கூறினும் அவன் தன் அடியார்கள் இடத்தில் அனைத்தையும் பொறுக்கும் அருளாலன் என்பதையும் விளக்க இப்பாடல்.
தானே அமைந்தஅம் முப்புரந் தன்னிடைத் தானான மூவுரு ஓருருத் தன்மையள் தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள் கல்வி தானான போகமும் முத்தியும் நல்குமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
சத்தியானவள், எங்கும் நிறைந்தவளாகவும், உருத்திர லோகம், விஷ்ணுலோகம், ப்ரம்மலோகம் ஆகியவற்றிற்கு தலைமையாக இருக்கும் இருக்கும் உருத்திரன், விஷ்ணு, பிரமன் ஆகியவர்களை தோற்றம் ஒடுக்கம் செய்பவர்களாக இருந்து அது தாண்டியதான நான்காவது வடிவமாக நிற்பாள்; அவள் ஓருத்தியே பொன்னிறம் கொண்ட சத்தியாக நின்று முத்தியையும், செந்நிறம் கொண்ட திருமகளாய் நின்று செல்வத்தையும், வெண்ணிறம் கொண்ட கலைமகளாய் நின்று கல்வியையும் தருவாள்.
விளக்கஉரை
மூவுரு ஓர் உரு – மூவுன்று உருவத்தையும் அடக்கி உள்ள ஓர் உரு.
இதனால், ஒருத்தியே மூவராய் நின்று முத்தொழில் செய்பவளாகவும், ஐவராய் இருந்து ஐந்தொழில் இயற்றி அதன்படி நின்றொழுகும் முதன்மையானவர்கள் அனைவர்க்கும் தலைவியாய் உயிர்கட்குப் போக மோட்சங்களைத் தந்து நிற்கும் திறன் பெறப்படும்.
தங்கும் அடியார் இதயமதில் தழைத்த மணியே தவமணியே தரணிக் கொளியாய் இரவுபகல் தானே வளர்ந்த தளிர்மணியே
மங்குங் கருத்தை நிலைநிறுத்தி வதன வெளியில் படர்மணியே மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத்தாயே
அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்
பதவுரை
பிரபஞ்சம் எங்கும் நிறைந்து அருளைப் பொழியும் அருள் மணியாகவும், உருத்திராக்கம் என்றும் கண்டமணி என்றும் பொருளாகி கழுத்தில் கட்டி இருக்கும் ஏகமணியாக இருப்பவளும் (நீலகண்ட வடிவம்) ஆக்கினை அடிப்படையாகக் கொண்டு ஒளிரும் மணியாகவும், இறைவனிடத்தில் நடனமிடும் இமைய மணியாகவும், சைலபுத்ரீ, பிரம்மசாரிணி, சந்திரகண்டா, கூஷ்மாந்தா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காலராத்ரி, மகா கவுரி, சித்திதாத்ரீஎன்ற அம்பாளின் பல்வேறு வடிவங்களாக இருப்பவளாகவும், இரவு, பகல் ஆகி ஆகாச வெளியில் பிரபஞ்ச சக்தியான 32 கலையில், உடல் கலை 28 போக மீதமிருக்கும் பயன்பாடு இல்லாத கலையாகிய நான்கு கலையையும் சேர்த்துக் கொண்டு பிறவா நிலை அருளும் திருமணியாகவும், காட்சியினை அருளும் கண்ணின் மணியாகவும், பொன்னால் ஆன அணிகலன் கொண்டவளாகவும், தாமரை மலரில் வீற்றிருந்து சூரியனின் ஒளிக்கிரணங்களைக் கொண்டவளாகவும், உன்னை மனதில் கொண்ட அடியார்களது இதயத்தில் உயர்ந்த பொன்னால் திறம்பட அமைத்துக் கட்டப்பட்ட மணி போன்றவளாகவும், இரவு பகல் என்று இல்லாமல் தானே வளரும் சுய ஒளி விளக்காகி என்றும் இளமையாகிய மணியாகவும், மாயைக்கு உட்பட்டு மனம் அதன் வழியில் செல்லாமல் அதை நிலை நிறுத்தி முக்கோணத்தின் மேற்கோண்ட வெளியில் படரும் மணியாகவும், மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவள் விளங்குகிறாள்.
விளக்கஉரை
1ஆக்கினை
2சிவசக்தி நடன சொரூபக் காட்சி
3கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து,புட்பராகம், வைடூரியம், வைரம் ஆகிய ஒன்பது வகை மணிகள் என்று பொருந்தாமையால் இவ்விளக்கம் விலக்கப்படுகிறது.
4விளக்கு சுடர்விட்டப் பிறகு சுடர் குறையும்; அது குறையாமல் இருப்பவள் என்பதால் தளிர்மணி என்ற சொற்சொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஐசுவரியம் உயைவன் எனவும் உயிர்களாகிய அறிவுடைப் பொருள்களை அடிமைகளாகவும், ஏனை அறிவிலாப் பொருள்களை உடைமைகளாகவும் உடையவனும், முழு முதல் தலைவனும் ஆன ஈசன் அல்லாது பிற தெய்வம் இல்லை எனத் துணிந்து, தம்மையும் தான் அல்லாத ஏனையோரையும் முதன்மையானவர்களாக எண்ணிக் கொள்வதற்கு வெட்கப்பட்டு, அவனையே மனத்தில் வைத்திருந்து, மறவாமல் அவன் புகழ் பேசுபவர்களை, ஒருபோதும் பிறவித் தளையில் சிக்கவிடாமல் காப்பவர் நம் இறைவன்.
விளக்கஉரை
சிவனை நினைந்து, அவனை மறவாது நினைவாரை அவன் பிறவி வராமல் காப்பான்` என்பதை விளக்கும் பாடல்.
சஞ்சலமும், சலனமும், குழப்பமும் பின்னிப் பிணைந்து இருக்கும் மனித வாழ்க்கையை புறந்தள்ளி வெற்றி அடையச் செய்பவளாகவும், வளர்பிறை ஏகாதசி திதிக்கும் தேய்பிறை பஞ்சமி திதிக்கும் அதிதேவதை ஆகியவளும் ஐந்து திருமுகம் கொண்டவளும் ஆன ஸ்ரீ நீலபதாகா நித்யா எனும் தேவி ஆனவளும், ஒன்பது எனும் எண்ணிக்கையை குறிக்கும் நவ வகையான சக்தியாக ஆகி பூரணமாக இருப்பவளும், தவ வாழ்வினை நிறைவு செய்யும் பாதத் தாமரைகளை உடையவளும், உலக உயிர்களை காப்பதற்காக காவல் மேடையில் வீற்றிருப்பவளும், பரமேஸ்வரின் வாம பாகமாக இருக்கும் பரமேஸ்வரியாக இருப்பவளும், ஈஸ்வரனின் அங்கமாக இருக்கும் ஈஸ்வரியாக இருப்பவளும், பஞ்சாட்சரமாக இருப்பவளும், தாமரையில் வீற்றிருப்பவளும், எண்சாண் உடம்பில் இருக்கும் தொண்ணூற்று ஆறு தத்துவங்களும் ஒன்றாக இணைந்து புலப்படுத்தும் ஏக தத்துவ முகம் உடையவளாகவும், இறைவன் இடத்தில் நடனம் இடும் இமைக்காதவர்கள் எனும் பெயர் பெற்ற தேவர்களுக்கு தலைவியாகவும் இருப்பவளேஅண்ட வெளி ஆகிய ஆகாயத்தில் கைத்தாளம் இட்டு நிலையாக இருப்பவளும், அருள், கருணை ஆகியவற்றை எப்பொழுதும் கொண்டு அதில் உறைபவளும், கரும்பு வில்லையும், மன்மதனுக்குரிய ஐந்து அம்புகளாகிய தாமரை மலர், அசோக மலர், குவளை மலர், மாம்பூ, முல்லை மலர் ஆகியவற்றை கொண்டவளும், அன்னமய கோசம், பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம், மனோமயகோசம், ஆனந்தமய கோசம் என்பதை நீங்கிய அடியார்கள் மனதில் உறையும் அருள் கடவுளாகவும் மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவள் விளங்குகிறாள்.
விளக்கஉரை
அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’ என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
1ஐந்து முகங்களுக்கும் ஐந்து ஆபரணங்கள் எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது.
2நவ சக்தி பீடங்களில் வசிப்பவள் என்றும் பொருள் கொள்ளலாம்.
3தாமரை போன்ற ஆயுதம் கொண்டவள் என்றும் கூறலாம்.
4கஞ்சம் என்பது கைத்தாளம் எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது.
அம்மையை பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே தொடக்கமும் முடிவும் இல்லாமல் போவதால் இயன்ற அளவில் பதம் பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது.
குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குரு அருள்.
சுருண்ட, சிவந்த சடையை கொண்டு திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள ஆதி ஆகிய எங்கள் முதற்கடவுளே, தெளிவுபெற்ற சிலந்தி ஒன்று, தனது வாயினின்று உண்டாகும் நூலால் உறுதியான அழகிய பந்தல் ஆக்க முற்பட்ட அச் சிலந்தியை, சோழனாய்ப் பிறக்கச் செய்த திருவருளை அறிந்து, அடியேன் பழவினையாகிய சஞ்சிதம் தொலையப் பெற்றாரையும் வந்து பற்றும் வன்மையுடைய ஆகிய ஆகாமியம் எனவும் எதிர்வினை எனவும் ஆகிய இனிச் செய்யப்படும் வினை குறித்து அஞ்சி, உனது அழகிய மலர்போன்ற திருவடியில் விழுந்து புரண்டு, `போற்றி! போற்றி!` என்று துதித்து, உன்னை வந்து அடைந்தேன்! என்னை ஏற்று கொண்டு அருள்.
விளக்கஉரை
சிலந்திக்குச் செய்த திருவருளை எடுத்து இயம்பும் பாடல்.
சிலந்தி, கோச்செங்கட் சோழ நாயனார் ஆக பிறந்து வந்த வரலாற்றை பெரிய புராணத்துள் கண்டு உணர்க.
தேனாகவும், பாலாகவும், இனிப்பான சர்க்கரையாகவும், செறிவு உடைய அமுதமாகவும், கற்கண்டாகவும், மா, பலா மற்றும் வாழை இவற்றை சர்க்கரையுடன் பழச் சாற்றில் சேர்த்து செய்த ரசமாகவும், செம்பொன்மலை போன்றவளாகவும், மான் போன்றவளாகவும், வாழை மடல் போன்றவளாகவும், கொடி போன்றவளாகவும், வனத்தில் வசிப்பவளாகவும், மயில் போன்ற வதனம் உடையவளாகவும், குயில் போன்ற குரல் உடையவளாகவும், அன்பர்களுக்கு எல்லாச் செல்வங்களையும் வாரிச் சொரிபவளாகவும், இந்த ஊனைப் படைத்தவளாகவும், அதனுள் உறையும் உயிருக்கு உயிராகி விளங்குபவளாகவும், அகத்திலும் புறத்திலும் ஒன்றான மொழியினை உடையவளாகவும், ஒளி வீசக்கூடிய தங்க நிறமான கற்பத்தினை போன்றவளாகவும், அக இருளை நீக்கும் ஒளி வடிவமாகவும், உணவாகவும், ஆகாயமாக இருப்பவளாகவும், வானில் தோன்றும் கனல் காற்றாக இருப்பவளாகவும், வனத்தில் இருப்பவளாகவும் *, இமவான் மகளாகவும், மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவள் விளங்குகிறாள்.
விளக்கஉரை
அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’ என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
* வனத்தில் இருப்பவளும் – வன தேவதைகள் சூழ இருப்பவளும் என்றும் கொள்ளலாம்.
மனமே, தன்னிடத்துக் குற்றமின்றி நிற்கும் மனத்தை அடையாமல், தவத்தொழிலைச் செய்து, பயனில்லாத சொற்களைப் பேசி பின்னுதல் உடைய சடைகளைச் சேர்த்துக் கட்டிக்கொண்டும், எலும்பினை அணிந்து கொள்ளுதலாகிய வேடத்தைப் பூண்டு கொண்டு மட்டுமே மக்கள் பிறவியாகிய கடலை முற்றிலும் கடந்துவிடுதல்என்பது இயலாது; ஆதலின், அந்நிலையில் இருந்து வேறுபட்டு நிற்க நீ தேவர்களுக்குத் தேவனாய் உள்ளவனும் பெருந்தேவனாகியும் ஆனவனும் கொண்டு செந்நெற் பயிர்கள் நிறைந்த வயல்களையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற நன்மையின் மேல் எல்லையாய் உள்ள பெருமானை அணுகச் சென்று இவனே தொன்மையான முழுமுதற் கடவுள் என்று துணிந்து அடைவாயாக.
காலத்தால் முற்பட்ட மறையின் முடிவாக இருந்து அதன் விளைவாக பழுத்த பழமாகவும், அடியவர்களுக்கு அருளை வழங்கும் அருட்பழமாகவும், முதிர்ச்சி உடைய பக்தர்கள் நெஞ்சில் படர்ந்த பழமாகவும், புதுமையாக சூடப்பட்ட முடி மேல் என்றும் கனிந்திருக்கும் மேன்மை பொருந்திய பழமாகவும், இமைத்தலை செய்யா தேவர்கள் தேடித் தேடியும் காண இயலாமல் அவர்களுக்கு எட்டாத பழமாகவும், தன்னைத் தானே உணர்ந்தவர்கள் கண்டு புசிக்கும் பழமாகவும், பக்தர்களுக்கு வேண்டியதை அருளுவதால் கருணைப் பழமாகவும்! சிவ சக்தி ரூபமாக் இருப்பதால் சிவப் பழமாகவும், கயிலாயத்தில் வீற்றிருக்கும் சிவன் முடிமேல் இருக்கும் கனிந்த பழமாகவும், அருளை வாரி வழங்கி நல் கதிக்கு அழைத்துச் செல்வதால் கதிப்பழமாகவும், சிதம்பரத்துள் உள்ள கனகசபை தனில் மணம்வீசிக் கொண்டிருக்கும் அடியவர்களுக்கும், மாபெரும் யோகியர்களுக்கும் உதவி நிற்கக் கூடிய அருள் பொழியும் மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவள் ஆகிறாய்.
விளக்கஉரை
அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’ என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
அருட்பழமாக அன்னையை கண்டு வியத்தல் பற்றியது இப்பாடல்
‘பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங் கண்டாரு மில்லை’ எனும் மாணிக்கவாசகரின் திருவாசக வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
‘இம்மணியா லிழைத்துநவ முடிசூட்டி யிச்சிங்க விளவெ றன்ன’ எனும் திருவிளையாடற் புராண வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது. சில இடங்களில் ‘நவமணியால்’ இழைத்தது எனவும் பொருள் விளக்கப்படுகிறது.
‘நவமுடிமேல் என்றுங் கனிந்த திருப்பழமே’ என்றும் ‘கயிலா யத்தில் அரன்முடிமேல் கனிந்த பழமே’ என்பதும் ஒன்று போலவே தோன்றும். பொருள் விளக்கத்தில் அதன் தன்மையை அழுத்தி கூறுமிடத்து அவ்வாறு இருமுறை கூறுதல் மரபு. அன்றியும் அம்மையைக் கண்டதும் தன்நிலை மறந்து புத்தி பேதலித்து இருந்த அவர் வாழ்வியல் முறை வைத்தும் இரு முறை வந்திருக்கலாம்.
காட்டில் புதியதாக மலர்ந்திருக்கும் கொன்றை மலரின் வீசுதலை உடையவனே, மான் போன்ற மெல்லிய பார்வை உடைய உமை அஞ்சும்படி பெரியதான யானைத் தோலைப் போர்த்தியவனே, ஞானக்கண்ணாய் விளங்குபவனே ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, கீழ்மை நிலையில் இருக்கும் யான் அதுபற்றி உணர்வு எதுவும் இல்லாமல் உடம்பு வளர்க்கும் காரணம் பற்றி உன்னை நினையாது ஒழிந்தேன்.
விளக்கஉரை
செடியேன் உணர்வில்லேன் – செடி போன்றவைகள் ஓரறிவு உயிர்கள். எனவே உன்னை நினைத்தல் என்பது பற்றி உண்ர்வு கூட இல்லை.
குறை உடைய உயிர்களின் நிலை அறிய அவைகளின் அனைத்து வினைகளைப் பற்றியும் அறிய அறிவு வேண்டும். அதனை காண ஞானக் கண் அவசியமாகிறது. உயிரின் வினைகளைக் களைபவன் என்பதனால் அவன் ஞானக் கண் உடையவனாகிறான்.
செங்கயல் எனும் ஒரு மீன்வகையான கயல்மீன்கள் துள்ளுகின்ற வயல்களை உடைய திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, மாற்றம் இல்லாத, நிலையான பெரிய தவத்தினால், வேள்வித் தீயினியில் இருந்து தோன்றிய சிங்கமும், மிகப் பெரியதான புலியும், திருமாலின் நிறம் ஒத்த பருத்த பெரிய யானையும் கதறி ஒடும்படி செய்தும், அழியும்படி செய்வதுமான மிக்க போரைச் செய்து கிழித்து, அவற்றினின் தோலை உரித்தும், அத்தோலைப் போர்த்தியும் செய்தற்குக் காரணம் யாது?
விளக்கஉரை
‘உன்னை உணரும் உணர்வில்லாதோர்க்கும் உணர்வு உண்டாக்குதல்’ என்பது பற்றிய பாடல்.
தவம் – தாருகாவன முனிவர்களுடையது. அட்ட வீரட்டான செயல்களில் ஒன்றான இவ்வரலாற்றினை வழுவூர் திருத்தல பெருமை கொண்டு அறிக.
வச்ரக் கிளியே நவபீட வாசற் கிளியே அருள் அமையும் மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத்தாயே
அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்
பதவுரை
பேச்சுத் திறமை, ஐஸ்வரியம், ஆத்ம ஞானம் ஆகியவற்றின் குறியீடாக விளங்கும் கிளி போன்றவளே, அருளை வழங்கும் அருள்கிளியே, அடியவர்களின் உணர்வுக்கு உணர்வாகவும், அவர்களின் உயிருக்கு உயிராகவும் தோன்றிய கிளியே, நமசிவய எனும் எழுத்துக்களாகி ஆகாயத்தில் விளக்கும் ஒளிவடிவமான பழத்தை த்யானித்து இனிய மொழி பேசும் கிளியே, தன்னுடைய பரிவார தேவதைகளுடன் பரதேவதையாக இருக்கும் சிந்தாமணிக் க்ரகம் எனும் திருக்கோயிலைச் சுற்றி இருக்கும் மணித்வீபம் என்று அழைக்கப்பெறும் தீவாகிய கதம்பவனத்தில் வாழும் சிவசக்தி வடிவமான கிளியே, மாயையை விலக்கை ஞானத்தை அருளும் ஞானக் கிளியே, வேதங்களால் சூழ்ந்த வனம் எனப்படும் மறைவனத்தில் நடனம் ஆடும் கிளியே, சிவக்கிளியே, அடியார்களின் எண்ணங்களில் படர்ந்து அவர்களின் உயிர் செல்லும் வழியில் செல்லும் கிளியே, வேண்டும் வரங்களை வேண்டியவாறு அருளும் நிதிக் கிளியே, பவழக் கிளியே, சிவசக்தி வடிவமாக இறைவனோடு இருக்கும் பதிக்கிளியே, யோகத்தில் ஒன்றாக இருக்கும் வச்சிரம் போன்று இருக்கும் வச்ரக் கிளியே,(நீ) நவ கோணங்களின் பீடத்தின் வாசலில் வீற்றிருந்து அருள் பொழியும் மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனபடும் அபயாம்பிகை தாயானவள் ஆவாய்.
விளக்கஉரை
அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’ என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
விடிவ தறியார் வெளிகாண மாட்டார் விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார் கடியதோர் ஊன்இமை கட்டுமின் காண்மின் விடியாமை காக்கும் விளக்கது வாமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
புறப் பொருளைக் காணும் கண் இல்லாதவர்கள் இருளிலும், விடி காலை புலர்ந்தாலும், விடிந்தப் பின்னும் அதை அறியாமல் இருப்பதோடு விடிந்தபிறகும் ஒளியில் பொருள்களை கண்டு பயன்பாடு கொள்ளவும் மாட்டார்கள். அதுபோலத் திருவருளை உணரும் பக்குவம் இல்லாதவர்கள், தமக்குத் திருவருள் முன்னின்று அருளுதலை உணரமாட்டாமல் இருந்து, அவ்வாறு அருளிய பின்னும் அந்த அருள் நலத்தை நுகரவும் மாட்டார்கள். ஆதலினான் நீங்கள் ஊனக் கண்ணை விலக்கி, நுண்ணிதாகிய ஞானக் கண்ணைத் திறந்து திருவருளைக் காண்டால், அத்திருவருளே அறியாமையாகிய இருள் வாராதபடிக் காக்கின்ற ஒளியாகி முன் நிற்கும்.
விளக்கஉரை
இருளில் அழுத்துவதாகிய அபக்குவம் நீங்குமாறு முயல வேண்டும் என்பது பற்றிய பாடல்.
‘திருவருளே விளக்கு’ – நீங்கள் அவ்விளக்கையே உமக்குக் காட்டாகக் கொள்ளுதல் வேண்டும்` எனும் பொருளில்.
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனபடும் அபயாம்பிகை தாயானவள், ஈசனைப் போல் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் மகேஷ்வரியாகி ஐந்து முகம் கொண்டவள்; வாமை, சேட்டை, ரௌத்திரி, காளி, பலவிகரணி, பலபிரமதனி, சர்வபூததமனி, சக்தி, மனோன்மணி ஆகிய ஒன்பது நவ சக்தியானவள்; கௌமாரி வடிவத்துடன் ஆறு முகம் கொண்டவள்; பிராமி நிலையில் நான்கு முகம் கொண்டவள்; அலையில் துயிலும் திருமால் போன்று வைஷ்ணவியானவள்; உதயகாலத்து சூரியனைப்போல் செந்நிறமும், ஆகாய வடிவமாகவும் இருப்பவள்; வெண் மேகம் போன்ற நிறத்தினை உடையவள்; ஒன்றுக்குஒன்றுமேலாக இருந்து முக்தி தர வல்லவள்; அவினாபாவசத்தி ஆகிய சிவத்தில் இருந்து பிரியா ஆற்றல் கொண்ட சிவரூபம் கொண்டவள்; மங்கள வடிவமானவள்; பஞ்சாட்ரத்தின் பொருளாக விளங்குபவள்; கால்களில் பரிபுரம் எனும் சிலம்பு அணிந்தவள்; தன் திருக்கரங்களில் பாசத்தினை வைத்து இருப்பவள்; அகிலத்திற்கு நடு நாயமாக இருக்கும் இமயமலையை இருப்பிடமாக கொண்டவள்; தாமரை மலர் மீது அமர்ந்து இருப்பவள்; சிவபுரத்தினை ஆட்சி செய்பவள்; உலகிற்கு அன்னையாக இருப்பதால் கனத்த தனத்தை உடையவள்; சத்துவம், இராசதம், தாமதம் எனும் மூவகைக் குணங்கள் கொண்ட பல்வேறு தேவி வடிவங்களாகி இருப்பவள்; தாமரை போன்ற முகம் கொண்டவள்; கற்பக விருட்சமாக இருப்பவள்; கருணை எனும் அபத்தினை திருக்கரத்தில் கொண்டவள்; தவ குணம் உடையவள்; கயிலாசனத்தில் வீற்றிருப்பவள்; அன்பு, இனிமை, உண்மை, நன்மை, மென்மை, சிந்தனை, காலம், சபை, மவுனம் ஆகிய ஒன்பது குணங்கள் கொண்டவள்; காந்தள் மலர் போல் நான்கு கரம் கொண்டவள்.
விளக்கஉரை
அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’ என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
பதவுரை
பட்டை என்னும் ஆபரத்தின் ஒரு உறுப்பினை அணிந்தவனே, சட்டையப்பனே, வடுகனே, காழிப்பதியில் உறையும் ஆபதுதாரணனே, பெரும் காட்டினைப் போன்றதும், திசைகள் அற்றதாகவும் செய்யும் இனிய சொல்லைச் கூறும் மாதர்கள் மேல் மயக்கம் கொண்டு யான் இளைத்து விட்டேன். காலங்களால் அளவிடமுடியாததான முற்காலத்தில் திருமாலாலும், பிரம்மனாலும் காண இயலாதவாறு நெடிய அளவில் வளர்ந்தும், வேதம் எனப்படும் மறைகளாலும் காண இயலா திருவடியை நீ அருள்வாய்.
விளக்கஉரை
பட்டை – மரத்தோல்; வாழைப் பட்டை; பொற்சரிகைப்பட்டி; கழுத்துப் பட்டை; பனம் பட்டை; போதிகை; மணியைத் துலக்கும்பட்டை; அணிகலனின் ஓர் உறுப்பு (யாழ்); நீர் இறைக்கும் கூடை; மரவுரி; தகடு; பனங்கை ( ‘நிர்வாணம் சுனவாகனம்’ என பைரவர் த்யான ஸ்லோகத்தில் இருப்பதாலும் மர உரி தரித்தவர் எனும் கருத்து விலக்கப்படுகிறது)
பண்டு – பழமை; முற்காலம்; முன்; தகாச்சொல்; நிதி ( குறிப்பு : பண்டிருவர் காணாப் படியார் போலும் – பண்டு மாலும் அயனும் காண இயலாத நிலையினரும் (6.89.3))
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயே! பாதங்களில் சிறிய சதங்கை, அந்த பாதங்களை பணிந்து வணங்குவதான சிலம்பு, கிங்கிணி, காலிலே படந்து இருப்பது போன்ற மணி ஓசை எழுப்பும் பாடகம், தண்டை, அதில் படிந்திருப்பது போல் தோற்றம் ஏற்படுத்தும் கொலுசு, துவள்வது போன்ற இடையில் பட்டு, பெருமாள் அணிந்திருக்கக்கூடியது போன்ற பீதாம்பரம், விட்டுப் பிரியாத அரைஞாண் மாலைகள், இரு புயங்கள், அவற்றுடன் ஒட்டி இருக்கும் மார்பினில் கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், வைடூரியம், வைரம் இவற்றுடன் முத்துக்கள் பதிக்கப்பட்டதான ஒன்பது வகை மணிகள் கூடிய மாலையை அணிந்து, மீன்களை ஒத்த கண்கள் கொண்டவளாகி, தாமரை மலர் போன்ற நெற்றி, பொன் போன்ற பிரகாசம் உடைய கூந்தல், சந்திரனை ஒத்த முகம் கொண்டு ஐயனோடு வாதாடுவதில் பேரன்பு கொண்டவளாகி அடியார்களுக்கு பேரின்ப ரசத்தினை வழங்கும் கொடியைப் போன்றவளாகி இருக்கிறாய்! நீ ஏற்றதால் உன்னிடத்தில் பொருந்தி நின்றேன்.
விளக்கஉரை
அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’ என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது