அமுதமொழி – விளம்பி – ஆனி – 31 (2018)

பாடல்

தங்கிய மாதவத்தின் தழல்
வேள்வியி னின்றெழுந்த
சிங்கமும் நீள்புலியுஞ் செழு
மால்கரி யோடலறப்
பொங்கிய போர்புரிந்து பிளந்
தீருரி போர்த்ததென்னே
செங்கயல் பாய்கழனித் திரு
நாகேச் சரத்தானே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

செங்கயல் எனும் ஒரு மீன்வகையான கயல்மீன்கள் துள்ளுகின்ற வயல்களை உடைய திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, மாற்றம் இல்லாத, நிலையான பெரிய தவத்தினால், வேள்வித் தீயினியில்  இருந்து தோன்றிய சிங்கமும், மிகப் பெரியதான புலியும், திருமாலின் நிறம் ஒத்த பருத்த பெரிய யானையும் கதறி ஒடும்படி செய்தும், அழியும்படி செய்வதுமான மிக்க போரைச் செய்து கிழித்து, அவற்றினின் தோலை உரித்தும், அத்தோலைப் போர்த்தியும் செய்தற்குக் காரணம் யாது?

விளக்க உரை

  • ‘உன்னை உணரும் உணர்வில்லாதோர்க்கும் உணர்வு உண்டாக்குதல்’ என்பது பற்றிய பாடல்.
  • தவம் – தாருகாவன முனிவர்களுடையது. அட்ட வீரட்டான செயல்களில் ஒன்றான இவ்வரலாற்றினை வழுவூர் திருத்தல பெருமை கொண்டு அறிக.
  • போர்த்தல் – மறைத்தல் என்னும் பொருளில்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *