நாயேன் துன்பக் கடல்வீழ்ந்து நலிதல் அழகோ நல்லோர்க்கிங் கீயேன் ஒன்றும் இல்லேன்நான் என்செய் கேனோ என்னுடைய தாயே அனையாய் சிறிதென்மேல் தயவு புரிந்தால் ஆகாதோ சேயேன் தன்னை விடுப்பாயோ விடுத்தால் உலகஞ் சிரியாதோ.
திருவருட்பா – இரண்டாம் திருமுறை – இராமலிங்க அடிகள் (வள்ளலார்)
கருத்துஉரை
நாய் போன்றவனாகிய யான் துன்பக்கடலில் வீழ்ந்து வருந்துதல் அழகோ, நல்லவர்களுக்கு தானம் ஒன்றும் கொடுக்கவில்லை, யாதொன்றும் இல்லாதவன் என் செய்வேன். என்னுடைய அன்னையை போன்றவனே, சிறிதளவு என் மேல் கருணை காட்டினால் ஆகாதா, குழந்தை போன்ற என்னை விட்டு விடுவாயா, விட்டு விட்டால் உலகம் சிரிக்காதோ!
விளக்கஉரை
கருணை கொண்டவன் என்பதால் நீ விட்டுவிட மாட்டாய் என்பது மறைபொருள்
அருளாளர்கள் பெரும்பாலும் தன்னை நாயுடன் ஒப்பிட்டு சொல்வார்கள். நாய் பொதுவாக நன்றி உடைய தன்மை கொண்டு இருக்கும். ‘ உன் அருள் கிடைத்தும் நான் நன்றி அற்றவனாக இருக்கிறேன்’ எனும் பொருளில் ஒப்பீடு செய்வார்கள்.
அரசு முதலிய சமித்துக்கள், பசுவின் சாணம் பொருந்தப்பட்ட சிவாக்கினியில் வெந்து தனது முந்தைய வடிவத்தை இழந்து உரு மாறிய, அந்தத் திருநீற்றை உடல் முழுவதும் நிரம்ப பூசித் தூய்மையை அடைந்த நல்லோரது உடம்பே பிரம ஞானத்தை அடையும் உயர்ந்த குலத்து உடம்பாகும்.
தூல பஞ்சாட்சரம், சூக்கும பஞ்சாட்சரம், அதிசூக்கும பஞ்சாட்சரம், சூட்சுமாசூட்சும பஞ்சாட்சரமென்று நான்கு வகையான முறையில் ஐந்தெழுத்தாகவும், ஓம் ஆம் ஒளம் சிவாயநம என்கிற எட்டெழுத்தாகவும், பஞ்சாட்சரத்துடன் ஓம் சேர்ந்து ஆறெழுத்தாகவும், ஓம் சிவாய என்கிற நாலெழுத்தாகவும் தனக்கு விதிக்கப்பட்ட விதிப்படியே உச்சரித்து விதிப்படி அதன் உச்சரிக்கிற முறைமையால் பஞ்சாட்சரத்தினுடைய சொரூபத்தை அறிந்து பிஞ்செழுத்தாகிய வகாரமாகிய பராசத்தியையும், பெருவெழுத்தாகிய சிகாரமாகிய சிவத்தையும் என்னுடைய இருதயத்திலே வைத்து பேசும் எழுத்தாகிய வகாரமாகிய சத்தி பேசா எழுத்தாகிய சிகாரமாகிய சிவத்தை இரண்டற அழுத்துவிக்கக் கொடி கட்டினேன்.
விளக்கஉரை
பஞ்சாட்சரத்தினுடைய சுபாவ மறிந்து – சிகாரம் சிவம், வகாரம் சத்தி, யகாரம் ஆன்மா, நகாரம் திரோதம், மகாரம் மலம் ஆக இந்த முறைமையை அறிந்து
ஞான நடனமாகிய சிகார வகாரத்தைப் பொருந்தி – சிவ சக்தி வடிவமாக (சிவ), சக்தி சிவ வடிவமாக (வசி) உபாசனை செய்ய அத்தன்மை உண்டாக்கும்.
பார்வையென மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம் போர்வையெனக் காணார் புவி.
திருநெறி 8 – திருவருட்பயன்- உமாபதி சிவாச்சாரியார்
கருத்துஉரை
மானைக் காட்டி மானைப் பிடித்தல் போல், பக்குவப்பட்ட ஆன்மாக்களை முன் நிற்கச் செய்து தன்வசமாக்கிக் கொள்வதற்காக மானிட தேகம் எனும் சட்டையை சாத்திக்கொண்டு ஆசாரியமூர்த்தமாக எழுந்தருளி வந்ததென்று ஆன்மாக்கள் அறியச் செய்வார்கள்.
அரை + அணி – பாறை + அழகு – பாறையில் அழகாக அமர்ந்திருப்பவர்
தனிச்சன்னிதியில், திருஞானசம்பந்தர் தாளமேந்தி நின்ற கோலத்தில்
சமணர்கள் இக்கோயில் கதவை அடைத்து திருஞானசம்பந்தரை நுழைய விடாமல் தடுத்த போது, அவர் பதிகம் பாடி கதவை திறந்த தலம்.
சம்பந்தர் சிவனாரை தரிசிக்க வசதியாக பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும், அதிகார நந்தி இடதுபுறமாகவும் சற்று சாய்ந்த அமைப்பு
சம்பந்தர் இங்கிருந்தே திருவண்ணாமலையை தரிசித்த தலம். (அடையாளமாக கொடிமரத்தின் அருகே 3 அடி உயர பீடத்தில் சம்பந்தரின் பாதம் )
ரமண மகரிஷியை திருவண்ணாமலைக்கு வருமாறு அம்பாள் ஆணையிட்ட தலம்
திருக்கோயிலூர் ஸ்ரீஞானானந்த சுவாமி இங்குள்ள கோபுரத்தில் அமர்ந்து தவஞ்செய்து அருள்பெற்ற தலம்
சனீஸ்வரர், காகத்தின் மீது காலை ஊன்றிய கோலம் , நின்ற கோலம் என இரு வடிவங்களில் காட்சி
பீமன் குளம் – கோயிலுக்கு வெளியில் பாறைகளுக்கு இடையில்
மூர்த்தங்கள் அற்று ராஜகோபுரத்தின் அடிவாயிலில் குடைவரைக்கோயில்களாக ஐந்து அறைகள்
மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி சன்னதி – ஸ்ரீதேவி கையில் முத்திரை பதித்த தண்டம் , இடப்புறத்தில் பெண், வலப்புறத்தில் விலங்கு முகம் கொண்ட ஆண்.
தலம்
திருஅறையணிநல்லூர்
பிற பெயர்கள்
அறையணி நல்லூர், அரகண்ட நல்லூர்
இறைவன்
அதுல்யநாதேஸ்வரர், ஒப்பிலாமணீஸ்வரர் , அறையணிநாதர்
இறைவி
சௌந்தர்ய கனகாம்பிகை , அருள் நாயகி , அழகிய பொன்னம்மை
தல விருட்சம்
வில்வமரம்
தீர்த்தம்
தென்பெண்ணையாறு
விழாக்கள்
வைகாசியில் 1௦ நாட்கள் பிரம்மோற்சவம், மகாசிவராத்திரி , திருக்கார்த்திகை தீபம்
மாவட்டம்
விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரைஅருள்மிகு ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர் திருக்கோவில்
ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர் கோவில் தேவஸ்தானம்
அரகண்டநல்லூர் அஞ்சல்,
திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம், PIN – 605752
04153-224745, 93456-60711, 99651-44849
தீப்போல விளங்கும் செம்மேனி உடைவயனே! தேவர்களால் தொழப்பெறும் தேவனாக நீயே ஆனவன்! கொன்றை மலர் அணிந்தவனே! அனலைக் கையில் ஏந்தியவனே! அறையணிநல்லூரை அடைந்து வழிபடுபவரின் பழவினைகளைத் தீர்ப்பவனே! கொடிய காலனைக் அழித்தவனே! ஒலிக்கும் கழலணிந்தவனே! பரமனே உன் திருவடிகளைப் பணிகின்றேன்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
நேர்மையான (தவமுனிவருக்கும்) மான் ஈன்ற புதல்வியாகிய வள்ளியம்மையாரை வள்ளி புனத்தில் இருந்து கவர்ந்து சென்ற கள்வனும், பெருமானும், பிறப்பும் இறப்பும் இல்லாதவனும் ஆகிய முருகன், சொல் ஒழித்து மெய்ஞான உணர்வு பெற்று மோன நிலை அடைந்து ”பேசாத மவுன நிலையில் சொற்களை விலக்கி சும்மா இருப்பாயாக!”, என்று உபதேசித்தவுடன், அவனை அன்றி வேறு ஒரு உலகம் ஒன்றையும் அறியாது இவ்வுலகப் பொருள் எல்லாம் மறைந்து போனது!
விளக்கஉரை
பொதுவாக வள்ளி, முருகன், தெய்வானை என்பது சக்தியின் வடிவம்.(முறையே இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி).
ஞான நிலை வாய்க்கப் பெற்ற முருகன் இச்சைகளை விலக்க ஆணையிட்ட உடன் ஞானம் கிடைத்துவிட்டது என்கிறார்.
பிறவான் இறவான் – பிறப்பிலி; பிறப்பு இறப்பு அற்றவன்
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய் வடநூல் கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே.
சகலகலாவல்லி மாலை – குமரகுருபரர்
கருத்துஉரை
கடல் போன்ற வடமொழி நூல்களின் கருத்துக்களையும் செழுமை மிகுந்த செல்வமாகிய தமிழ்நூல்களின் கருத்துக்களும் அடியார்களின் நல்ல நாவினின்று எக்காலத்திலும் நீங்காது காத்து அருளும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! அனைவரும் விரும்பும் வண்ணம் சிறப்புடைய பாடல்களை இயற்றும் திறனும் எல்லாத்துறைகளிலும் ஆளுமைதருகின்ற கல்வியும் சொற்சுவை நிரம்பிய வாக்கும் பெருகி வளர்ந்திடு நிலைக்கு எளியேனை ஆளாக்கி அருள்வாயாக
விளக்கஉரை
*இன்று குமரகுருபரர் குருபூசை*. இவர் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெருந் தமிழ்ப் புலவர்.
இவர் தமிழ்நாட்டுத் திருநெல்வேலி மாவட்டத்தில், சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாகப் பிறந்தார். பிறவியில் ஊமையாகப் பிறந்த இவருக்கு ஐந்து வயதுக்குப் பின்னரே பேசும் திறன் பெற்றார்.
இவர் எழுதிய நூல்கள்
கந்தர் கலிவெண்பா
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
மதுரைக் கலம்பகம்
நீதிநெறி விளக்கம்
திருவாரூர் நான்மணிமாலை
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
சிதம்பர மும்மணிக்கோவை
சிதம்பரச் செய்யுட்கோவை
பண்டார மும்மணிக் கோவை
காசிக் கலம்பகம்
சகலகலாவல்லி மாலை
மதுரை மீனாட்சியம்மை குறம்|மதுரை மீனாட்சி அம்மை குறம்
திரிமலத்தார் ஒன்றதனிற் சென்றார்கள் அன்றி ஒருமலத்தார் ஆயும் உளர்.
திருநெறி 8 – உமாபதி சிவாச்சாரியார்
கருத்துஉரை
மூன்று மலம் உடையவர்கள் திரிமலத்தார். ஆணவம் காமியம் மாயை என்கிற மூன்று மலத்தினையுமுடைய ஆன்மாக்கள் சகலரென்றும், ஆணவம், கன்மம் என்னும் இரண்டினையுடைய ஆன்மாக்கள் பிரளயாகலர் என்றும், ஆணவமலம் மட்டும் உள்ள ஆன்மாக்கள் விஞ்ஞானகலர் ஆகிய மூன்று விதமான ஆன்மாக்களாக இருக்கும்.
தாரா கணம் எனும் தாய்மார் அறுவர் தரும் முலைப்பால் ஆராது உமை முலைப்பால் உண்ட பாலன் அரையில் கட்டும் சீராவும் கையில் சிறுவாளும் வேலும் என் சிந்தையவே வாராது அகல், அந்தகா, வந்த போது உயிர் வாங்குவனே.
கந்தர் அலங்காரம்
கருத்துஉரை
நட்சத்திரக் கூட்டத்தில் பகுதி ஆகிய ஆறு தாய்கள் பேரும் தந்த முலைப் பாலை உண்டது போதாமல் உமாதேவியாரின் திருமுலைப் பாலையும் உண்டருளிய பாலகனாகிய திருமுருகப்பெருமானின் திருவரையில் கட்டிக் கொள்ளும் உடைவாளும், திருக்கரத்தில் ஏந்தியுள்ள சிறுவாளும் வேலாயுதமும் எனது சிந்தையில் குடி கொண்டிருக்கின்றன; ஆதலால், இயமனே, என்னிடம் வாராது நீங்கிப் போவாயாக, மீறி வந்தால் உன் உயிரை வாங்கிவிடுவேன்!
விளக்கஉரை
ஆறு ஆதாரக்களையும் தாண்டி யோக அப்யாசத்தால் துரியாதீத அப்யாசம் செய்யும் போது மரணமில்லா பிறவி வாய்க்கும்.
சவைதனைச் செய்து வாழ்வான் சலத்துளே யழுந்து கின்ற இவையொரு பொருளு மல்ல விறைவனை யேத்து மின்னோ அவைபுர மூன்று மெய்து மடியவர்க் கருளிச் செய்த சுவையினைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
தேவாரம் – 4ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
மக்களைப் பெற்று குடும்பத்தைப் பெருக்கி உயிர் வாழ்தலே அடிப்படை என வஞ்சனையிலே அழுந்திச் செய்யும் உங்களுடைய இச்செயல்கள் எல்லாம் குறிப்பிடத்தக்க நற்பயன் தருவன அல்ல. இதை அறிந்து எம் பெருமானையே துதியுங்கள் . மூன்று கோட்டைகள் உடைய மும்மதில்களையும் அம்பு எய்து அழித்து அடியார்களுக்கு அருள் செய்த சுவைப் பொருளாக உள்ள துருத்திப் பெருமானை அடியவனாகிய யான் தரிசித்துப் பெற்ற இன்பம் இருந்தவாறு என்னே !
அடியவர்கட்கு முடிவில்லாத வாழ்நாளைக் கொடுக்கின்ற (அமரத்தன்மை) திருமழபாடியில் திகழ்கின்ற மாணிக்கம் போன்றவனே, உனக்கு என்று நான் ஆளாயினபின், உன்னை அல்லாது வேறு யாரை நினைப்பேன்? என்னுடைய இறுதிநாள் வந்து நெருங்கித் துன்புறுத்துவதற்கு முன்பே உனக்கு நான் ஆளாதல் பொருட்டு வந்து உன்னை அடைந்தேனாதலின், அடியேனையும் உனக்கு உரியவனாக நீ ஏற்றுக் கொண்டருள்.
ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற் கேளாத தென்கொலோ கேள்ஆமை – நீள்ஆகம் செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம் எம்மையாட் கொண்ட இறை.
தேவாரம் – 11ம் திருமுறை – காரைக்காலம்மையார்
கருத்துஉரை
தொலைவில் இருந்து நோக்குகையில் அவன் திருமேனி சிவப்பாகத் தோன்றியும், அணுகிய போது கண்டம் வேறு நிறமாக (கருமையாக) இருப்பதைப் போலவே, பெருங் கருணை உடையவனைப் போல வலிய வந்து ஆண்டு கொண்டவன் என் அல்லலைத் தானாகவே அறிந்து போக்குவது முறையாக இருக்க, நான் பலமுறை முறையிட்டுக் கேளாமல் இருக்கிறான். (இன்னும் முறையிடல் வேண்டும் போலும் என்பது போல்.)
வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன் மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும் ஆதார சத்தியு மந்தச் சிவனொடுஞ் சாதா ரணமாஞ் சதாசிவந் தானே.
திருமந்திரம் – ஏழாம் தந்திரம் – திருமூலர்
கருத்துஉரை
சதாசிவம் தானே ஆதாரமாக நின்று ஒடுக்க முறையில் மேல் நோக்கி எண்ணப்படுகின்ற `அயன், மால், உருத்திரன், மகேசுரன்` என்னும் நால்வராயும், தனக்குமேல் முறையே நிற்கும் `விந்து, நாதம், சத்தி, சிவம்` என்னும் நால்வராயும் இருக்கும். அதனால் அனைத்து மூர்த்தங்கட்கும் இது பொது மூர்த்தமாகும்.
விளக்கஉரை
சிவபேதம் ஒன்பது. இவை நவந்தரு பேதம் எனப்படும்.
விந்து – பரவிந்து, நாதம் – பரநாதம் என தனித்தனியே இரண்டாகும். சிவாமங்களின் வேறுபாட்டுக்கு ஏற்ப சில இடங்களில் பரவிந்து பரநாதங்களை சக்தி, சிவம் என்றும், விந்து நாதங்களை சக்தி, சிவம் என்றும் கூறுவர்.
சதாசிவத்துக்கு மேல் உள்ள நான்கும் அருவம், கீழ் உள்ள நான்கும் உருவம். சதாசிவம் மட்டும் அருவம், உருவம் மற்றும் அருவுருவம். எனவே சதாசிவ மூர்த்தமே அனைத்து லிங்கமும் ஆகும். ஆகவே சதாசிவ மூர்த்தத்தை வழிபட சிவபேதம் அனைத்தையும் வழிபட்டது ஆகும்.
சிவன், தான் நேரே அருளுதல், குருமூர்த்தமாக நின்று அருளுதல் என்னும் இருவழிகளில் அருளுவார். இவ்வாறான ஆதி குரு மாணாக்கன்பால் மிகவும் அன்பு கொண்டு உபதேச மொழியால் எல்லாப் பொருள்களையும் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களில் அடக்கி உணரவைத்து, அந்த உணர்வினால், பக்குவப்படுத்தி, பாசத்தை நீக்கி முத்திக் காலத்தில் எல்லா நலங்களையும் அருளுவார்.
ஒருவனோ டொருத்தி ஒன்றென் றுரைத்திடும் உலக மெல்லாம் வருமுறை வந்து நின்று போவதும் ஆத லாலே தருபவன் ஒருவன் வேண்டும் தான்முதல் ஈறு மாகி மருவிடும் அநாதி முத்த சித்துரு மன்னி நின்றே.
திருநெறி 2 – சிவஞான சித்தியார் – பிரமாணவியல்
கருத்துஉரை
சற்காரிய முறையில் தோன்றி நின்று அவன் அவள் அது என்னும் படி பகுப்புடையதாகிய பிரபஞ்சம், தோன்றுதற்குரியதும் அழிதலுடைமையும் கொண்டு அது தன்னைத் தோற்றுவிப்பானின் வினை முதலை கொண்டு நிற்கும்; ஆகலால், இவ்வுலகம் ஒடுங்குதற்கு ஏதுவாய் நின்ற சங்கார காரணனே அஃது ஒடுங்கிய பின்னும் அநாதி சித்துருவாய் நிலைபெற்று நின்று அவ்வுலகத்தை முன் போல தோற்றுவிக்கும்; இவ்வாறு பிரஞ்ச தோற்றத்திற்கு முன் உள்ளவனும், பிரபஞ்ச ஒடுக்கத்திற்கும் பின்னும் உள்ள அந்த சங்கார காரணனே உலகிற்கு முதற் கடவுள்.
கரைகளெல்லாம் நிறையுமாறு அங்கு இருக்கும் குளங்களில் பூத்த குவளை மலர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்து அங்குள்ள நீர் குவளை மலரின் மணத்தை வீசுகின்றது. அவ்வாறு குவளை மலர் மணம் வீசும் திருவலஞ்சுழியில் விளங்கும் பெருமைகள் எல்லாம் உடையவரே! சிறிய மான் கன்றைக் கையில் ஏந்தியவரே! நாடறியத் தலையோட்டில் பிச்சை ஏற்றல் ஏனோ? சொல் வீராக.
இருட்டறை மூலை யிருந்த கிழவி குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக் குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி மருட்டி அவனை மணம்புணர்ந் தாளே.
10ம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்துஉரை
இருட்டரையில் மூலையில் இருந்த கிழவி, குருடாக இருக்கும் கிழவனை கூடலுக்கு (அழைத்து விளக்கி) அவனது குருட்டினை நீக்கி அவனுக்கான குணங்களைக் காட்டி அவனை மணம் புரிந்து அவனுடன் கலந்திருந்தாள்.
விளக்கஉரை
‘இருட்டறை மூலை யிருந்த குமரி’ என்று பல இடங்களில் பாடல் திருத்தப்பட்டிருக்கிறது. அவ்வாறே விளக்கமும் அளிக்கப்பட்டிருக்கிறது. ‘கிழவி’ என்பதே மூலத்தில் இருப்பதால் அவ்வாறே இங்கு எடுத்தாளப்பட்டிருக்கிறது.
பிரகிருதி என்பது பெண் தன்மை கொண்ட இறை நிலை. புருஷார்த்தம் என்பது ஆன்மா. ஜீவ ஆத்மா. இறை உணர்த்த ஆன்மா தன்னை அறியும் என்பது ஒரு விளக்கம். பிரகிருதி புருஷனுடன் இணைந்து இந்திரியங்கள் உண்டாகி, முக்குணங்கள் உண்டாகி குணங்கள் கடந்து ஜீவன் முக்தி ஏற்படும்.
குண்டலி எனும் மஹாசக்தி மூலாதரத்தில் உறங்கிக் கொண்டு இருக்கிறது. அவள் இருப்பது தெரியாமல் அனைவரும் குருட்டுநிலையில் உலகில் உழன்று கொண்டு இருக்கிறார்கள். உடலை காட்டிலும் அவள் எப்பொழுதும் இளமையானவள். உயிர்கள் உய்வதின் பொருட்டு (கிழவி — சத்தியின் உச்ச நிலை; அநாதியான அருட்சக்தி) என்றாவது ஒருநாள் அவள் பல சித்துக்களை நமக்கு காட்டி தன்பால் வசமாக்கி நமது அறியாமையை நீக்கி அருளுவாள்.
இறைவரே, மேகம் சூழ்ந்த மாலைப் பொழுதில் தோன்றும் பிறையைச் சூடிய முடியினையுடைய, மலைமகளாகிய நங்கைக்கு மணவாள நம்பியாகிய நீர், துகில் சூழ்ந்த புறத்தினையும், தனங்களையும் உடைய அவளும் நீரும் ஒன்றாய் இருத்தலை ஒரு பொழுதும் ஒழிகின்றிலீர். நீங்கள் நஞ்சினை உண்டு, தேவர்கட்கு அமுதம் ஈந்த நற்செயலை நாங்கள் சிறிதும் அறிந்திலோம்: உமது கையில் உள்ள பாம்பிற்கோ படங்கள் ஐந்து உள்ளன. அந்த பாம்பினை ஒரு பொழுதும் அப்பாற்போக விடுகின்றிலீர்; அடியோங்கள் உம்மை அணுகி உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.