ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – ஈதல்
பொருள்
- தானம் கொடுத்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
நாயேன் துன்பக் கடல்வீழ்ந்து நலிதல் அழகோ நல்லோர்க்கிங்
கீயேன் ஒன்றும் இல்லேன்நான் என்செய் கேனோ என்னுடைய
தாயே அனையாய் சிறிதென்மேல் தயவு புரிந்தால் ஆகாதோ
சேயேன் தன்னை விடுப்பாயோ விடுத்தால் உலகஞ் சிரியாதோ.
திருவருட்பா – இரண்டாம் திருமுறை – இராமலிங்க அடிகள் (வள்ளலார்)
கருத்து உரை
நாய் போன்றவனாகிய யான் துன்பக்கடலில் வீழ்ந்து வருந்துதல் அழகோ, நல்லவர்களுக்கு தானம் ஒன்றும் கொடுக்கவில்லை, யாதொன்றும் இல்லாதவன் என் செய்வேன். என்னுடைய அன்னையை போன்றவனே, சிறிதளவு என் மேல் கருணை காட்டினால் ஆகாதா, குழந்தை போன்ற என்னை விட்டு விடுவாயா, விட்டு விட்டால் உலகம் சிரிக்காதோ!
விளக்க உரை
- கருணை கொண்டவன் என்பதால் நீ விட்டுவிட மாட்டாய் என்பது மறைபொருள்
- அருளாளர்கள் பெரும்பாலும் தன்னை நாயுடன் ஒப்பிட்டு சொல்வார்கள். நாய் பொதுவாக நன்றி உடைய தன்மை கொண்டு இருக்கும். ‘ உன் அருள் கிடைத்தும் நான் நன்றி அற்றவனாக இருக்கிறேன்’ எனும் பொருளில் ஒப்பீடு செய்வார்கள்.