ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – பிஞ்செழுத்து
பொருள்
- திரு ஐந்தெழுத்தில் சத்தியைக் குறிக்கும் ‘வ’ என்னும் எழுத்து.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
அஞ்செழுத்தும் எட்டெழுத்தும் ஆறெழுத்தும் நாலெழுத்தும்
பிஞ்செழுத்தும் மேலைப் பெருவெழுத்தும் – நெஞ்சழுத்திப்
பேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையும்
கூசாமற் காட்டக் கொடி.
திருநெறி 11 – கொடிக்கவி – உமாபதி சிவாச்சாரியார்
கருத்து உரை
தூல பஞ்சாட்சரம், சூக்கும பஞ்சாட்சரம், அதிசூக்கும பஞ்சாட்சரம், சூட்சுமாசூட்சும பஞ்சாட்சரமென்று நான்கு வகையான முறையில் ஐந்தெழுத்தாகவும், ஓம் ஆம் ஒளம் சிவாயநம என்கிற எட்டெழுத்தாகவும், பஞ்சாட்சரத்துடன் ஓம் சேர்ந்து ஆறெழுத்தாகவும், ஓம் சிவாய என்கிற நாலெழுத்தாகவும் தனக்கு விதிக்கப்பட்ட விதிப்படியே உச்சரித்து விதிப்படி அதன் உச்சரிக்கிற முறைமையால் பஞ்சாட்சரத்தினுடைய சொரூபத்தை அறிந்து பிஞ்செழுத்தாகிய வகாரமாகிய பராசத்தியையும், பெருவெழுத்தாகிய சிகாரமாகிய சிவத்தையும் என்னுடைய இருதயத்திலே வைத்து பேசும் எழுத்தாகிய வகாரமாகிய சத்தி பேசா எழுத்தாகிய சிகாரமாகிய சிவத்தை இரண்டற அழுத்துவிக்கக் கொடி கட்டினேன்.
விளக்க உரை
- பஞ்சாட்சரத்தினுடைய சுபாவ மறிந்து – சிகாரம் சிவம், வகாரம் சத்தி, யகாரம் ஆன்மா, நகாரம் திரோதம், மகாரம் மலம் ஆக இந்த முறைமையை அறிந்து
- ஞான நடனமாகிய சிகார வகாரத்தைப் பொருந்தி – சிவ சக்தி வடிவமாக (சிவ), சக்தி சிவ வடிவமாக (வசி) உபாசனை செய்ய அத்தன்மை உண்டாக்கும்.