ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – நலிதல்
பொருள்
- சரிதல்
- மெலிதல்
- வருந்தல்
- அழிதல்
- நெருக்கல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
நாளார் வந்தணுகி நலியாமுனம் நின்றனக்கே
ஆளா வந்தடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள்நீ
மாளா நாளருளும் மழபாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
தேவாரம் – 7ம் திருமுறை – சுந்தரர்
கருத்து உரை
அடியவர்கட்கு முடிவில்லாத வாழ்நாளைக் கொடுக்கின்ற (அமரத்தன்மை) திருமழபாடியில் திகழ்கின்ற மாணிக்கம் போன்றவனே, உனக்கு என்று நான் ஆளாயினபின், உன்னை அல்லாது வேறு யாரை நினைப்பேன்? என்னுடைய இறுதிநாள் வந்து நெருங்கித் துன்புறுத்துவதற்கு முன்பே உனக்கு நான் ஆளாதல் பொருட்டு வந்து உன்னை அடைந்தேனாதலின், அடியேனையும் உனக்கு உரியவனாக நீ ஏற்றுக் கொண்டருள்.
விளக்க உரை
- நலிதல் எதிர்பதம் நலியா (வருந்தாமல், துன்பம் வராமல்)
- நாள் – கடை நாள்.இழிதல் காட்டுதல் பொருட்டு நாளார்
- `எனக்கும் இறுதி நாள் வாராமல் காப்பாய் ` என்பது மறை பொருள்