பாடல்
பொடிஎடுக்கப் போய்அதனை மறந்துமடி
எடுத்துரையில் புனைவேன் சில்லோர்
தடிஎடுக்கக் காணில்அதற் குளங்கலங்கி
ஓடுவனித் தரத்தேன் இங்கே
முடிஎடுக்க வல்லேனோ இறைவாநின்
அருள்இலதேல் முன்னே வைத்த
அடிஎடுக்க முடியாதே அந்தோஇச்
சிறியேனால் ஆவ தென்னே
ஆறாம் திருமுறை – திருஅருட்பா – வள்ளலார்
பதவுரை
திருநீற்றுப் பொடியை எடுத்து அணியச் சென்று, அந்தக் காரணத்தை மறந்து, பின் வெறும் மடியைத் தட்டிப் பார்த்து, இல்லாமையை உணர்ந்து அதற்காக இறங்கி, அவ்வாறு இல்லாமல் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் கடையனானவனும், சிலர் கையில் தடி எடுத்து வரக்கண்டு, அதனால் அச்சம் உண்டாகி , மனம் கலங்கி வேறிடம் நாடி விரைந்தோடுவோனும் ஆகிய முடிவெடுக்க இயலாத யான், இவ்வுலகில் நினது திரு அருள் துணை இல்லையாயின் முடிவெடுப்பதும் தலை நிமிர வல்லவனும் ஆவேனோ? முன் வைத்த காலைத் தான் எடுக்க வல்லவன் ஆவேனோ?? ஐயோ, சிறியவனாகிய என்னால் யாது செய்ய முடியும்?
விளக்க உரை
- திருவருளின்றி ஒரு செயலும் செய்ய இயலாது என்பதை தெரிவிக்கும் பாடல்
- பொடி – திருநீற்று வெண் பொடி.
- மடி – அரையில் உடுத்த ஆடையின் மடித்த கூறு.
- ‘பொடி எடுக்கப் போய் அதனை மறந்து மடி எடுத்து அரையிற் புனைவேன்’ – கொண்ட சிந்தையில் நிலைத்தன்மையும், மன வலிமையும், வினையும் உடையவன் அல்ல என்பதை உரைத்தல்.
- ‘உளம் கலங்கி யோடுவேன்’ – தம் வழியில் செல்லும் சிலர் கையில் தடி ஏந்தி செல்வது கண்டால் தம்மை அடிப்பரென அஞ்சி ஒதுக்கிடம் நாடி ஓடும் கீழ்மைப் பண்புடையவன்
- சிறியேன் – குணம் அறிவு செயல்களில் சிறுமையுடையவன்.