‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – களித்தல்
பொருள்
- மகிழ்தல்
- மதங்கொள்ளுதல்
- செருக்கடைதல்
- நுகர்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
அறிந்திலை யோஎன் பாடெலாம் என்றே
அழைத்தனன் அப்பனே என்னை
எறிந்திடா திந்தத் தருணமே வந்தாய்
எடுத்தணைத் தஞ்சிடேல் மகனே
பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில்
பெருந்திறல் சித்திகள் எல்லாம்
சிறந்திட உனக்கே தந்தனம் எனஎன்
சென்னிதொட் டுரைத்தனை களித்தே.
ஆறாம் திருமுறை – திருஅருட்பா – வள்ளலார்
கருத்து உரை
நான் பட்ட துயரங்களை எல்லாம் நீ அறியாமாட்டாயா என்று முறையிட்டு உன்னை அழைத்த போது என்னுடைய அப்பனாகிய பெருமானே! நீயும் என்னை எடுத்து எறிதலைப் போல் புறக்கணிக்காமல் அழைத்த தருணத்தில் வந்தாய்; வந்து பின் என்னை எடுத்து மார்போடு அணைத்து, மகனே, இனி “நீ அஞ்ச வேண்டா; உன்னை விட்டு இவ்வுலகில் சிறிது போதும் பிரிய மாட்டோம்; பெரிய சித்திகள் யாவும் உனக்கு கிடைக்குமாறு அருள் செய்துள்ளோம்” என்று என் தலைமேல் கை வைத்து உவகையுடன் உரைத்து அருளினாய்.
விளக்க உரை
- இனி எனக்கு ஒருகுறையும் இல்லை என்ற பொருள் பற்றியதும், பெரும் சித்திகள் பெற்றதையும் தானே விளக்கிக் கூறும் பாடல்